-வருணன்
 
ஒவ்வொரு வியாழக்கிழமையும் வெளியாகும் இந்த  கலை-இலக்கிய அறிமுகங்கள் பகுதியில் இவ்வாரம் ஒரு சிறுகதையை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். இந்தப் பகுதியின் அறிமுகக் கட்டுரையான ’வாசிப்பின் மகத்துவம்’ எழுதுகிற போதே என் மனதில் வந்து போன ஒரு சிறுகதையாக இது இருந்ததால் இதனையே இவ்வாரம் அறிமுகம் செய்ய வேண்டும் என்று தோன்றியது. ஒரே ஒரு சிறுகதையை மட்டும் தனித்து தேர்ந்தெடுத்து அதனை அறிமுகம் செய்கின்ற அளவிற்கு அது அவ்வளவு முக்கியமானதா என்று உங்களுக்குத் தோன்றலாம். அதற்கு என் பதில் ஆம் என்பதே.
 
Anton Chekhov
 
ஆண்டன் செகாவ் உலகப் புகழ் பெற்ற ரஷ்ய இலக்கிய ஆளுமை. உலகமெங்கும் சிறுகதை இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமையாக அறியப்படும் படைப்பாளி. 1889 ஆம் ஆண்டின் புத்தாண்டன்று வெளியான இந்தக் கதை தனது கருவாகக் கொண்டிருப்பது வாசிப்பின் மகத்துவத்தையே. ஒரு மனிதனின் ஆளுமையை வாசிப்பு எந்த அளவிற்கு மாற்றுகிறது என்பதையே இக்கதை முன்வைக்கிறது.
கதையின் நாயகன் ஒரு இருபத்தியைந்து வயது நிரம்பிய ஒரு வழக்கறிஞன். ஒரு வங்கி அதிகாரி தந்து சகாக்களுக்கு அளிக்கும் ஒரு கேளிக்கை விருந்தில் அவனும் கலந்து கொள்கிறான். அறிவுஜீவிகள் நிரம்பிய அந்த இடத்தில் விவாதங்களுக்குப் பஞ்சமில்லை. ஒரு கட்டத்தில் மரண தண்டனைகுறித்த விவாதத்தை விருந்தளிக்கும் அந்த அதிகாரி முன்னெடுக்கிறார். பலரும் தங்களது கருத்தை அதற்கு எதிராகவே பதிவு செய்கின்றனர். சிலரோ, உலகெங்கும் மரண தண்டனையானது, ஆயுள் முழுமைக்குமான சிறை தண்டனையாக மாற்றியமைக்கப்பட வேண்டுமெனும் கருதுகின்றனர். ஆனால் இவருடைய வாதமோ முற்றிலும் இவர்களது கோணத்திலிருந்து மாறுபட்டிருக்கிறது. அவர் அணு அணுவாக ஒருவனை அன்றாடம் கொல்லும் ஆயுள் தண்டனையைக் காட்டிலும் உடனடியாக ஒருவனைக் ஒரு முறை கொல்லும் மரண தண்டனை சிறந்ததே என வாதிடுகிறார்.
இன்னும் சிலரோ, இரண்டுமே நியாயமற்றவை எனவும், ஒரு மனித உயிரை வாங்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு என்கின்றனர். அக்கூட்டத்தில் 25 வயதான ஒரு இளம் வழக்கறிஞனும் இருக்கிறான். இவனது கருத்தை கூறும் முறை வந்ததும் அவன், இரண்டுமே மோசமானதே; ஆயினும் இதில் ஏதெனும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிர்பந்தம் ஏற்படின் தான் சிறை வாசத்தை ஏற்பேன் என்கிறான். சாவதை விடவும் எந்த நிலையாயினும் வாழ்வதென்பது சிறந்ததே என்பது அவனது கருத்தாக இருக்கிறது.
இதனை ஏற்றுக் கொள்ளாத அவரோ நாயகனை இரு பந்தயத்திற்கு வருமாறு அழைப்பு விடுகிறார். அவன் சொல்வது போல ஐந்து வருடங்கள் கடுமையான சிறை தண்டனையை அவன் ஏற்று அனுபவித்தால் தான் அதற்கு ஈடாக இடண்டு மில்லியன் பணம் தருவதாக எல்லோர் முன்னிலையிலும் சொல்கிறார். நாயகனோ அதிகாரி சொல்வது உண்மையெனில் தான் ஐந்தென்ன பதினைந்து வருடங்கள் கூட சிறையில் கிடக்கத் தயார் எனத் தெரிவிக்கிறான். ஆக அதிகாரி தனது பணத்தையும், நாயகன் தனது பதினைந்து வருட வாழ்க்கையையும் வைக்க பந்தயம் துவங்குகிறது.
 
The Bet
 
அதிகாரிக்கு சொந்தமான ஒரு தோட்ட வீட்டில் தனியறையில் கடுமையான வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறான் நாயகன். மனிதர்கள் யாரும் இல்லாத தனிமை. தினசரிகள் கூட கிடையாது. இசை கேட்கவும், புத்தகம் வாசிக்கவும் மட்டும் அனுமதி உண்டு. வாசிக்கும் பழக்கமே அதிகமில்லாத அவனோ துவக்கத்தில் பொழுதைக் கழிக்கவும், மனிதக் குரலற்ற வெறுமையை ஈடு செய்ய இசையைக் கேட்கிறான். நாளடைவில் அது அவனுக்கு சலிக்கத் துவங்க வேறு வழியின்றி வாசிக்கத் துவங்குகிறான். அவன் கேட்கும் நூல்களை எழுதித் தந்தால் போதும். அவை வருவிக்கப்பட்டு வழங்கப்படும். அப்படியானது ஏற்பாடு.
கதை வளர வளர அவன் துவக்கத்தின் பொழுதுபோக்கு வாசிப்பில் துவக்கி மெள்ள மெள்ள நாயகன் தீவிரமான எழுத்துக்களை வாசிக்கத் துவங்குகிறான். சிறை வாசத்தின் துவக்க நாட்களில் தனிமையின் குரூரத்தை தாங்க முடியாத அவன் அடிக்கடி ஓலமிட்டுக் கதறுகிறான். ஆனால் வாசிக்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் அவன் தனிமையை வாசிப்பு முழுமையாகப் போக்குகிறது. தான் வாசிக்கும் புத்தகங்களில் இருக்கும் கணக்கற்ற கதாப்பாத்திரங்கள் தன்னோடு இருப்பதாகவே அவனுக்குத் தோன்றுகிறது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவனும் புத்தங்களில் புனைவு உலகில் வசிக்கத் துவங்குகிறான். தனிமையாய் அவன் அதற்கப்புறம் உணர்வதே இல்லை.
நாளடைவில் அவனது அறையில் இருந்து சத்தமே வருவதில்லை. அவன் மிக அமைதியானவனாய் மாறிப் போகிறான். எல்லா துறைகளைச் சார்ந்த நூல்களையும் அவன் வாசிக்கத் துவங்குகிறான். வாரங்கள் மாதங்களாகி, வருடங்களாக வளர்கிறது. பந்தயம் கட்டிய அதிகாரியோ, ஆரம்ப நாட்களில் இவன் எப்படியும் ஓடிப் போய்விடுவான். தனது வாதத்தில் தான் வெல்லப் போவது உறுதி என்று திடமாக நம்புகிறார். காலப்போக்கில் அவனது உறுதியும் அமைதியும், அவரது நிம்மதியைக் குலைக்கிறது. கால ஓட்டத்தில் அவர் தனது சொத்துக்களை கொஞ்சம் கரைகிறது. இப்போது போட்டியின் இறுதி நாள் நெருங்குகிறது. வழக்கறிஞனோ தளர்வதாய்த் தெரியவில்லை. இவருக்கோ தோல்வி பயத்தில் நெஞ்சே அடைக்கிறது. அவனிடம் தோற்றால் தான் வாக்களித்திருக்கும் பணத்தை அவர் தர வேண்டும். அது அவரை ஒரே நாளில் அப்போதைய பொருளாதார நிலையில் அவரை நிச்சயம் தெருவிற்கே கொண்டு வந்து விடும். அதுவே அவரது கலக்கத்திற்கு காரணம்.
பந்தயம் முடிவதற்கு இன்னும் ஒரு நாளே இருக்கின்ற வேளையில், அவன் தன் அறையில் ஏதோ எழுதுவதை சாவி துவாரத்தின் வழியே பார்க்கிறார் அதிகாரி. இது அந்த அதிகாரியை குழப்பத்திற்கும், மகா ஆச்சரியத்திற்கும் உள்ளாக்குகிறது. அவன் உறங்கிச் சரிந்ததும் அந்த அறைக்குச் செல்லும் அவரை மேசையின் மீதுள்ள ஒரு கடிதம் வரவேற்கிறது. அவருக்காக அவன் எழுதியது.
அக்கடிதத்தில்,
“ நாளையுடன் எனது சுதந்திரம் இன்னிடமே திரும்பவும் கிடைக்க இருக்கிறது. இவ்வறையை விட்டு நான் வெளிச்சத்தைக் காணச் செல்லும் முன்னர் சில வார்த்தைகள். இவ்வாழ்க்கையும், இச்சுதந்திரமும், நீங்கள் எனக்களித்த எல்லா புத்தகங்களில் இருக்கும் எல்லா நல்ல விசயங்களும் ஒன்றுமே இல்லை. இப்பதினைந்து வருட வாழ்க்கையில் நான் உலக வாழ்வை ஊன்றிப் படித்தேன். நான் உலகையும் மனிதரையும் கண்ணார காணவில்லையே தவிர, புத்தகங்களில் நான் மனம் கமழும் ஒயினை அருந்தினேன், பாடல்கள் பாடினேன், காடுகளில் வேட்டையாடினேன், பெண்களோடு கூடியிருந்தேன்…
கவிஞர்களும் அறிவாளிகளும் உருவாக்கிய மேகத்தைப் போல மென்மையான கவிதைகளையும், கதைகளையும், அவர்களே எனது காதில் இரவுகளில் சொல்லி, எனது மனதை ஆட்கொண்டனர். புத்தங்களில் நான் மலையேறினேன். இயற்கையின் எழில் முழுமையையும் தரிசித்தேன். உங்கள் புத்தகத்தின் வழியாக நான்
முடிவிலாத பள்ளங்களுக்குள் குதித்திருக்கிறேன். புதுமைகள் செய்து, நகரங்களை எரித்து, புது மதங்களை போதித்து, ராஜ்ஜியக்களைப் பிடித்திருக்கிறேன்.
ஆனால் இது எல்லாவற்றையும் நான் புறந்தள்ளுகிறேன். இவ்வுலகம், இந்த ஞானம் அனைத்தும் மாயை, கானல் நீரைப் போல. நீங்கள் ஞானியாக, சிறந்தவராக இருக்கலாம். ஆனால் மரணம் அனைத்தையும் துடைத்தெறியும். உங்களது வரலாறு, வளம்,முடிவிலா அறிவுஜீவித்தனம் எல்லாவற்றையும் இவ்வுலகுடனேயே உறையச் செய்திடும்.
நான் அனைத்தையும் மறுதலித்தது குறித்து தங்களுக்கு புரிய வைத்திட, ஒரு காலத்தில் சொர்க்கமாக நான் கனவு கண்டிருந்த இந்த இரண்டு மில்லியன் பணத்தை மறுதலிக்கிறேன். அதனைப் பெறும் தகுதியை இழக்கும் பொருட்டு, குறிக்கப்பட்ட நேரத்திற்கு 5 மணி நேரம் முன்னதாக நான் வெளியேறி விடுவேன் . . .”
அதிகாரி அக்கடிதத்தை மீண்டும் மேசையிலேயே வைத்து விட்டு, அழுதபடி அவனது தலையில் முத்தமிட்டு வெளி வருகின்றார். அக்கணத்தில் அவர் பங்குச் சந்தையில் இழந்த பணமோ, இதர செல்வங்களோ பெரிதாகத் தெரியவில்லை. அவர் படுக்கையில் வீழ்ந்தும் நீண்ட நேரம் பொங்கும் உணர்வுகளும், கண்ணீரும் அவரை உறங்க அனுமதிக்கவில்லை.
மறுநாள் வெளுரிய முகத்துடன் ஓடிவந்த காவலாளி, சிறையிலிருந்தவன் சன்னலின் வழியாக தப்பித்து போனதாக கூறுகிறான். அதிகாரியோ குழப்பங்களுக்கும், வீண் பேச்சுகளுக்கும் இடமளிக்கா வண்ணம், பணத்தை அவன் மறுதலித்திருந்த அவனது கடிதத்தை தனது பெட்டகத்தில் பத்திரப்படுத்துகிறார்.