-வருணன்
 
ஆங்கில மொழி உலகின் தொடர்பு மொழியாக விளங்கி வருவது குறித்து கடந்த பதிவில் பேசத் துவங்கினோம் அதனை ஒட்டியே இவ்வாரமும் சிந்திக்கலாம். ஆங்கில மொழியின் பல சொற்கள் ஐரோப்பிய மொழிகளில் இருந்து பெறப்பட்டுள்ளன. ஆங்கில மொழியும் கொஞ்சங் கொஞ்சமாக அம்மொழிகளோடு கலக்கத் கலக்கத் துவங்கி வெகு காலமாகிறது. பல தேசங்களில் இளைய தலைமுறையினரிடையே தான் ஆங்கிலப் புழக்கம் பரவலாக காணக் கூடியதாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஆங்கிலம் உலகின் தொடர்பு மொழியாக மட்டுமல்லாமல் பயிற்று மொழியாகவும் (the language of instruction) பரவலான நாடுகளில் இருந்து வருகிறது என்பதைத் தான் அதற்கான முக்கியக் காரணமாக நாம் சொல்ல முடியும்.
 
English at Workplaces
 
எல்லா நாடுகளிலும் ஏனையோரைக் காட்டிலும் மாணவர்களே கல்வி நிலையங்கள் வாயிலாக ஆங்கில மொழியின் அறிமுகம் பெறுகின்றனர். அம்மொழியில் உள்ள வளைந்து கொடுக்கும் தன்மை இளைய தலைமுறையினரை வசீகரிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆங்கில வழியில் அவர்கள் தங்களது பாடங்களைப் பயில்வதால் மெள்ள மெள்ள அதன் சொற்களை தங்களது பேச்சு வழக்கில் தமது தாய்மொழியோடு கலந்து கலந்து பேசும் போக்கு அதிகரிக்கிறது.
இப்படி மொழிகள் ஆங்கிலத்தோடு கலந்து விடுவதால் நாளடைவில்  ஆங்கில மொழியின் சொற்கள் மட்டுமல்லாது அதன் தொடரியல்/ வாக்கிய அமைப்பையும் (syntax) தங்களது  தாய்மொழியைப் பேசுகையில் பயன்படுத்தத் துவங்குகின்றனர். இதனால் அந்தந்த மொழிகளின் பிரயோகங்கள் மாற்றமடைகின்றன. இதுவே அம்மொழிகளின் மொழி தூய்மைவாதிகளை (purists) ஆங்கிலத்தினை கடுமையாக எதிர்க்கக் காரணமாகவும் இருக்கிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை. சில வருடங்களுக்கு முன்னே பிரான்சில் தூய்மைவாதிகள் தங்கள் மொழியை அதிகமாக ஆங்கிலம் சிதைக்கிறது என்றும் அதனால் பிரெஞ்சு மொழியே திரிந்து போய்க் கொண்டிருக்கிறது என்று கடுமையாக குற்றஞ்சாட்டினர். அங்கு மட்டுமல்ல, இது உலகின் பல தேசங்களிலும் அடிக்கடி அரங்கேறுவது வாடிக்கை தான்.
எந்த மொழியோடும் ஆங்கிலம் கலப்பதால் அம்மொழிக்கு சிரமங்கள் வருகிறதைப் போலவே ஆங்கில மொழிக்கு வராதா? அம்மொழிகளைப் போல ஆங்கிலமும் திரிந்து போகாதா? இவையே உங்கள் மனதில் எழும் கேள்விகளாக இருக்கக் கூடும். அதற்கான பதில் நிச்சயம் இல்லை என்பதாக இருக்காது. மொழிக் கலப்பில் நிகழும் மாற்றங்களுக்கு ஆங்கிலம் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனால் அம்மொழி இந்த மாற்றத்தை தாங்கிக் கொண்டு தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. ஏனெனில் இந்த நெகிழ்வுத் தன்மைதான் இன்றளவும் உலகெங்கிலும் ஆங்கிலத்தை தொடர்பு மொழியாகவும், பயிற்று மொழியாகவும் மட்டுமின்றி அதனை அலுவல் மொழியாகவும் (official language) நிலைபெற அதிமுக்கிய காரணமாக விளங்குகிறது.
 
English Speakers by Country
 
பொதுவாக புதிய சொற்களின் பயன்பாடு ஆங்கிலத்தில் மிக சாதாரணமான ஒரு விடயம். அதுவரையிலும் அகராதியில் இல்லாத ஒரு வார்த்தை பேச்சு வழக்கில் புழகத்திற்கு வந்து பயன்டுத்தப்படுகிறது எனில், சிறிது காலத்திலேயே அதையும் அதிகாரப்பூர்வமான ஆங்கிலச் சொல்லாக அறிவித்து விடும் அளவிற்கு தாரளமான மொழியாக ஆங்கிலம் விளங்குகிறது. ஏறத்தாழ ஆங்கில அகராதிக்கு வருடந்தோறும் ஆயிரம் வார்த்தைகளாவது புதிதாக கிடைப்பதாக மொழியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிற தகவல் ஆச்சரியமாகவே இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னரே ஆங்கில சொற்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை (ஒரு மில்லியன்) கடந்தது விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு ‘Web 2.0’ என்ற வார்த்தையே அதிகாரப்பூர்வமாக ஆங்கில மொழியின் பத்து லட்சமாவது வார்த்தையாக அறிவிக்கப்பட்டது.
சில வருடங்களுக்கு முன்னர் உலகெங்கிலும் சு-டோ-கு (Sudoku) என்ற எண்கள் விளையாட்டைக் குறிக்கும் சொல் இப்போது ஆங்கில வார்த்தை. உண்மையில் இவ்விளையாட்டின் தாயகமான ஜப்பானிய நாட்டின் ஜப்பானிய மொழிச் சொல் அது. இதனைப் போல பல மொழிகளின் வார்த்தைகள் எப்படி ஆங்கிலச் சொற்களாக மாறின என்பதற்கு கணக்கற்ற உதாரணங்களைச் சொல்லலாம்.
ஆங்கில மொழியில் மட்டும் எப்படி இவ்வளவு சொற்கள் உருவாக்கப்படுகின்றன, பொதுவாக என்னென்ன நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பன போன்ற சந்தேகங்களை கார்டியன் இதழில் கடந்த வருடம் வெளியான இக்கட்டுரை ஓரளவேனும் தெளிவாக்கும் என நினைக்கிறேன்.