-வருணன்
 
இன்று உலகமெங்கும் தொடர்பு மொழியாக பல நாடுகளில் ஆங்கில மொழி இருந்து வருகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. மேலும் ஆங்கிலமே பல துறைகளிலும் பயிற்று மொழியாக கல்விப் புலத்தில் இருந்து வருகிறது என்பதையும் நாம் இவ்விடத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.
பொதுவாக வரலாற்று ஆய்வாளர்களும், அரசியல் விமர்சகர்களும், பிரிட்டன் நாட்டின் காலனி ஆதிக்கமே ஆங்கில மொழி உலகெங்கிலும் பரவலாக்கப்பட முழுமுதல் காரணம் என்ற பார்வையை முன் வைப்பது வழக்கம். எந்த சமூக அமைப்பிலும் காலங்காலமாக ஆள்பவன்- ஆளப்படுபவன் (அல்லது ஆள்பவனின் பார்வையில் அடிமை) இருந்து கொண்டு தான் வருகிறது. இருவரின் மொழி ஒன்றாக இருக்கின்ற பட்சத்தில் சிக்கல் ஏதுமில்லை. ஆனால் வெறு வேறாக இருக்கையில் நிச்சயம் ஆள்பவனின் மொழியே தழைக்கும். அதுவே எல்லா காலங்களிலும் உலக நியதியாக இருந்து வருகிறது. ஆள்பவரின் மொழியும்,பண்பாடும், கலாச்சாரமும் மேம்பட்டதென வியந்தோதப்படுவதும், அவை அனைத்தும் ஆளப்படும் அடிமை சமூகத்தின் மீது திணிக்கப்படுவதும் வாடிக்கையே. இந்த உலக யதார்த்தத்தினை முன்வைத்தே மேற்சொன்ன பார்வை உருவாகிறது.
 
English Speaking Countries
 
பிரித்தானிய காலனியமும் ஆங்கில மொழி பரவ ஒரு காரணமாக இருந்தது என்பதே சரியான பார்வையாக இருக்கும். அதாவது அது மட்டுமே காரணமல்ல, அதுவும் ஒரு காரணம் என்பதே நான் சொல்ல வருவது. சந்தேகத்திற்கு இடமின்றி அதிகாரம் படைத்தவரின் மொழி இயல்பாகவே பரவலாக்கப்படும். இருப்பினும் அது தன்னுடையதல்லாமல் முற்றிலும் வேறான ஒரு தேசத்தில் அது நிலைபெறுவது என்பதற்கு அது மட்டுமே காரணியாக இருப்பதில்லை.
அதிகாரம் அடிமைகளை ஆதிக்கம் செய்வது வரையில் மட்டுமே ஆதிக்க மொழியின் செல்வாக்கு செல்லுபடியாகும். ஆனால் இது நிரந்தரமாக நிலைத்து விடுவதற்கு வெறும் அதிகாரம் மட்டுமே நிர்பந்திக்க முடியாது. ஆங்கிலக் காலணிகள் விடுதலையாகத் துவங்கியதுமே, கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில மொழியும் விடை பெற்றிருக்க வேண்டுமே?
முதலில் பொதுவான காரணங்கள் குறித்து பேசி விட்டு பிறகு தமிழ் நிலத்தில் ஆங்கிலம் மேலோங்கி இருப்பதற்கான காரணங்களை பார்க்கலாம். ஆதிக்க மொழி ஒன்று ஆதிக்கம் செலுத்துவோர் சென்ற பிறகும் தங்குகிறது என்பதற்கு முக்கியமான காரணமாக நான் பார்ப்பது ஆங்கில மொழியில் நிகழ்ந்த மொழி கலப்பைத் தான். சரியாக சொல்வதென்றால், ’ஆங்கில மொழி அனுமதித்த மொழி கலப்பை’ என்று தான் சொல்ல வேண்டும். பல மொழிகளின் சொற்கள் இன்று ஆங்கிலச் சொற்களாகவே மாறி உலகெங்கிலும் ஆங்கிலச் சொற்களாகவே பயன்பாட்டில் இருந்து வருகிறது என்பது கண்கூடு. எடுத்துக்காட்டாக பிரெஞ்சு மொழிச் சொற்கள் இன்று ஆங்கில மொழியின் சொற்களாகவே நிலைபெற்றுவிட்டன. இன்னும் ஆங்கில மொழிச் சொற்களின் வேர்களை நாம் தேடிச் சென்றால் அவற்றுள் பல ஆங்கிலம் அல்லாத வேற்று மொழிகளின் சொற்களில் போய் முடிவதை நாம் காணலாம்.
ஆங்கிலத்தின் இந்த வளைந்து கொடுக்கும் தன்மையே அது தனது தாயகத்தைத் தாண்டிய வேற்று நாடுகளிலும் கோலொச்சுவதற்கு மிக முக்கியமான காரணங்களுள் ஒன்றாக திகழ்கிறது என்றால் அது மிகையல்ல. எல்லா மொழிகளின் சொற்களையும் தனதாக்கிக் கொள்கிற லாவகத்தை அம்மொழியின் மிகப் பெரிய பலமாகவே நான் பார்க்கிறேன். இந்த மொழி கலப்புத் தன்மையே ஆங்கில மொழியை. அதன் சொற்களை மெள்ள மெள்ள பிராந்திய மொழிகளின் சொற்களில் இருந்து பிரிந்து நிற்கும் அந்நியத் தன்மையை நீர்த்துப் போகச் செய்கிறது. இதனால் தமது தாய்மொழியைப் பேசுகிற பலரும் தங்களின் தாய்மொழியின் சொற்கள் என்று நினைத்துக் கொண்டே ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தி வருவதையோ அல்லது மிகச் சரளமாக தங்களது பேச்சினூடே ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துவதையோ நாம் பல சந்தர்ப்பங்களில் காணலாம்.
மொழித் தூய்மைவாதிகள் (Liguistic Purists) இதனை ஆங்கில மொழியின் ஊடுறுவல் என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஆனால் ஆங்கில மொழி மற்ற மொழிகளைக் காட்டிலும் எளிதாக ஊடுறுவ முடிவதற்கான காரணத்தையே நான் கவனத்திற்கு கொண்டு வர முயல்கிறேன்.
இதே சிந்தனையை ஒட்டிய மேலும் சில கருத்துக்களை வரும் வாரமும் நாம் தொடர்ந்து பார்க்கலாம்.