reading
 
எப்படி வாசிப்பது?
———————-
– வருணன்
 

இந்த தலைப்பே கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாகத் தெரியலாம். ஒரு வகையில் சொல்லப் போனால் அது உண்மை தான். ஆனாலும் தேவை கருதியே இது போன்ற ஒரு தலைப்பைத் தேர்ந்து கொண்டு எழுத நேர்ந்தது. பெரும்பாலும் நம்மில் பலருக்கு வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கவே செய்கிறது. அது யாரோ ஒருவர் வாசிப்பின் அருமை பெருமை குறித்து அற்புதமாக உரையாற்றியதை அல்லது பேசியதைக் கேட்டோ, அல்லது இலக்கிய வாசிப்பு குறித்து யாரோ எழுதிய கட்டுரையை வாசிக்க நேர்ந்து அதனால் உந்தப்பட்டோ நிச்சயம் வாசிக்க வேண்டும் என்று முடிவு (அல்லது இன்னும் தீவிரமாக சொல்வதென்றால் சபதமோ) எடுத்திருக்கலாம். அல்லது இயல்பாகவே சிலருக்கு (எனது வாழ்க்கையில் நடந்தது இது தான்) இருந்தார்ப் போல புத்தக வாசிப்பின் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டு நாளடைவில் அது புத்தகங்களின் மீதான பெருங்காதலாக மாறி இருக்கலாம்.

மிக ஆரம்ப கட்டத்தில், இந்த இரு நிலையில் இருப்பவர்கள் மனதிலும் எழுகின்ற ஒரு இயல்பான கேள்வி வாசிக்க வேண்டும் தான். எதிலிருந்து, எங்கிருந்து ஆரம்பிப்பது என்பெதே அந்த அடிப்படைக் கேள்வியாக இருக்கும். உண்மையைச் சொன்னால் இதற்கு என்று வரையறுக்கப்பட்ட எந்தவொரு வழிமுறையும் இல்லை. ஏனெனில் வாசிப்பு என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடக் கூடியது. ஒவ்வொரு தனி மனிதரின் விருப்பு வெறுப்பு அவரது இயல்மையும், ஆர்வத்தையும் சார்ந்தது. எனவே ஒருவருக்கு பிடிக்கிற நூல் வேறு ஒருவருக்கு பிடிக்காமல் போகலாம். எனவே நமக்குப் பிடித்தது என்ன என்பதை நாம் வாசித்துப் பார்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும். பரிசோதனை வாசிப்பு (Experimental Reading) என்று இதனை சொல்லலாமா?

அடுத்ததாக வாசிக்கும் பழக்கமுள்ள பலர் கேட்கிற ஒன்று, ஒரே நேரத்தில் எத்தனை புத்தகங்களை வாசிக்கலாம் என்பதே. அதாவது ஒரு நேரத்தில் ஒரு புத்தகத்தை மட்டுமே வாசிப்பதா அல்லது ஒரே நேரத்தில் பல நூல்களை வாசிப்பதா என்பது தான் அதன் சாரம். ஒரு முறை எழுத்தாளர் சுஜாதா பொதிகை தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு நேர்காணலில் (Interview) வாசகர் கேள்வி-பதில் பகுதியில் அவரிடம் இதே கேள்வியை கேட்டு ஒரு வாசகர் எழுதிய கடிதத்தை நேர்காணல் செய்பவர் வாசித்தார். அதற்கு சுஜாதா மிக எளிமையாக அது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது என்று மிக எளிமையாக பதிலளித்தார். மேலும் தனக்கு ஒரே நேரத்தில் பல நூல்களை வாசிக்கும் பழக்கம் இருப்பதாகவும் சொன்னார். மேலும் அவர் பகிர்ந்தது ஏறத்தாழ, “ தற்போது இந்த நேர்காணலுக்காக சென்னை தொலைக்காட்சி அரங்கிற்கு நான் வந்து அமர்ந்திருந்த போது, காத்திருக்க நேர்ந்த கொஞ்ச நேரத்தில் கூட வாசித்துக் கொண்டு தான் இருந்தேன். எப்போதும் ஒரு நூலை வாசிக்கத் துவங்கும் முன்னர் இதனை முடித்த பிறகே இன்னோரு நூலைத் தொட வேண்டும் என எனக்குள் உறுதி எடுத்துக் கொள்வேன். ஆனால் மனக்குரங்கு ஒரு போதும் உறுதியைக் காப்பாற்ற விடுவதில்லை,” என்பதாக இருந்தது.

நூல்களை பொதுவாக இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை புனைவு எழுத்து (Fiction) மற்றும் அபுனைவு எழுத்து (Non-fiction). பொதுவாக புனைவு எழுத்தை (கவிதை, நாவல், சிறுகதை போன்றவை) நாம் வாசிக்கும் இன்பத்திற்காக வாசிக்கிறோம். ஆனால் பெரும்பாலும் அபுனைவு எழுத்தை (கட்டுரைகள், கட்டுரைத் தொகுப்புகள், ஆய்வுக் கட்டுரைகள், துறை சார்ந்த எழுத்துக்கள் போன்றவை) எனவே வாசிப்பவரின் தேவையே அவரது வாசிப்பு முறையை நிர்ணயிக்கிற காரணியாக இருக்கிறது.

பொதுவாக புனைவு எழுத்தை தொடர்ச்சியாக வாசிப்பது நல்லது. ஒவ்வொரு புனைவு எழுத்தும் ஒரு புனைவு உலகத்தை நிர்மாணிக்கிறது. எனவே அதற்குள் இருந்து அதனை அனுபவமாக்கிக் கொள்ள ஒரு நேரத்தில் ஒன்றென வாசிப்பது நல்லது. அபுனைவு எழுத்துக்களை பெரும்பாலும் நாம் தகவல் திரட்ட அல்லது தகவல்களை அறிந்து கொள்வதற்காகவே வாசிக்கிறோம். எனவே ஒரே நேரத்தில் ஒரு பொது அம்சத்தோடு தொடர்புடைய பல நூல்களைக் கூட நாம் கலந்து வாசிக்கலாம்.

இருப்பினும் மீண்டும் ஒன்றைச் சொல்வது மிக அவசியம். இங்கு பகிரப்பட்டது மிக மிக பொதுவான ஒரு அபிப்ராயம் மட்டுமே. மற்றபடி வாசிப்பது என்பது மிக அந்தரங்கமான செயல்பாடு. அவரவர் விருப்பபடி தாராளமாக தேர்ந்தெடுத்து வாசிக்கலாம்.