எழுத்து மொழி
——————

-வருணன்
 
history-of-tamil-script

எந்த ஒரு மொழியின் பேச்சு மொழியும் ஒலிகளை அடிப்படையாகக் கொண்டது. ஆதி மனிதன் தனது உணர்வுகளை வெளிப்படுத்த ஒலிகளையே பயன்படுத்தினான். கூடவே ஓவியங்களையும், படங்களையும், குறியீடுகளையும் குகைகள், பாறைகள் போன்றவற்றில் வரைந்து வைப்பதன் மூலமாக தனது உணர்வுகளை பதிவு செய்யத் துவங்கினான். மொழியானது நீண்ட காலம் புழக்கத்தில் இருப்பதற்கு அதற்கு எழுத்து வடிவம் இருக்க வேண்டியது அவசியமானது. கடந்த பதிவில் நாம் பார்த்திருந்தது போல வெறும் பேச்சு மொழியோடு மட்டுமே நிலைத்துவிடும் மொழிகள் எல்லாமே அதனைப் பேசுகிற மனிதர்கள் இறக்கும் போது, கூடவே இறந்து விடுகின்றன. பேசப்படுகிற ஒரு மொழியின் அடுத்த கட்ட வளர்ச்சி அதன் எழுத்து வடிவமாகும் என்பது நாம் அறிந்ததே. எந்த ஒரு மொழிக்கும் வரி வடிவம் (Script) இருப்பதே அது எழுதப்படும் மொழியாகவும் இருப்பதற்கான அடிப்படை அம்சம் ஆகும்.

இந்த தருணத்தில் நாம் குறியீடுகளுக்கும், எழுத்துகளுக்கும் உள்ள ஒற்றுமையை அவசியம் பார்ப்பது நல்லது. குறியீடுகள் (symbols) என்றால் என்ன? நமது அன்றாட வாழ்க்கையில் பல விதமான குறியீடுகளை நாம் பயன்படுத்துகிறோம். குறியீடுகள் மற்றும் அவற்றின் அர்த்தங்கள் ஒவ்வொரு இனத்திற்கும், நாட்டிற்கும், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கும் மாறுபடுகிற ஒரு விசயம். நம் அனைவருக்குமே நன்கு தெரிந்த ஒரு எடுத்துக்காட்டை பார்க்கலாம். எல்லா சமூகங்களிலும் நிறங்கள் பரவலாக குறியீடுகளாக பயன்படுத்தப்படுகின்றன. சிவப்பு நிறம் அபாயத்தின் குறியீடாகவும், கருப்பு நிறம் துக்கத்தின் குறியீடாகவும், வெள்ளை அமைதியின்/ சமாதானத்தின் குறியீடாகவும் (இதே கருத்தை சுட்டுவதற்கு புறாவும் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது.) பல சமூகங்களில் (societies) புரிந்து கொள்ளபடுகிறது என்பது நமக்கு தெரியும். இதன் அடிப்படையில், சுருக்கமாக ‘குறியீடு’ என்பது எந்த உணர்வையாவது, எந்த கருத்தையாவது அல்லது மனிதனின் எண்ணத்தையாவது ‘குறிப்பது’ என்று புரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட கருத்தை நாம் இந்த இடத்தில் எதற்குப் பார்க்கிறோம் என்று கேள்வி எழலாம். நியாயம் தான். நிறக் குறியீடு எடுத்துக்காட்டில் நாம் ஒரு நிறம் எப்படி ஒரு உணர்வின் அல்லது கருத்தின் குறியீடாக விளங்குகிறது என்பதைப் பார்த்தோம் இல்லையா. இதைப் போலவே பேச்சு மொழியின் அடிப்படை அலகான (basic unit) ஒலிகளை குறியீட்டு ரீதியில் உணர்த்துபவையே எழுத்துக்கள் எனலாம். ஒவ்வொரு ஒலியையும் எழுத்து வடிவில் எழுதிடவும், பேசும் போது உச்சரிக்கவும் நமக்கு எழுத்துக்கள் அத்தியாவசியமாகின்றன. ஒவ்வொரு எழுத்தையும் குறித்திடும் ஒரு எழுத்தின் வரி வடிவமானது விதிகட்டுப்பாடற்ற ஒரு குறியீடு (arbitrary symbol) தான். உதாரணமான நாம் ‘அ’ எனும் ஓசையை/ ஒலியைக் குறிக்க ‘அ’ எனும் எழுத்து வடிவைப் பயன்படுத்துகிறோம். (இப்போது இந்த விளக்கத்தில் கூட நான் ஒரு ஒலியைப் பற்றி எழுத்து வடிவிலான இக்கட்டுரையில் எடுத்துச் சொல்ல ஒரு வரி வடிவ குறியீட்டையே பயன்படுத்த வேண்டி இருகிறது. இதுவே நான் சொல்ல வந்த கருத்து.)

இது போலவே ‘அ’ எனும் ஒலியை ஆங்கில வரி வடிவத்தில் எழுத்தும் போது நாம் ‘A’ என்ற எழுத்தை (அதாவது குறியீட்டை) பயன்படுத்துகிறோம். இதன் மூலம் பேச்சு மொழியில் ஒலிகள் பல சமயம் ஒரே மாதிரி இருந்தாலும் அவற்றை குறிக்கும் எழுத்து வடிவங்கள் மொழிக்கு மொழி மாறுபடுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். எந்த மொழியிலும் நாம் பயன்படுத்துகிற எழுத்தானது அது குறிக்கும் ஒலியின் எழுத்து வடிவமாகும். அது ஒரு Arbitrary Symbol தான். (அதாவது ஏன் ‘ட’ எனும் ஒலியைக் குறிக்க ஆங்கில மொழியில் நாம் ‘T’ என்ற வரி வடிவத்தை எழுத்தாக பயன்படுத்துகிறோம் என்று நாம் கேள்வி எழுப்ப முடியாது. அக்கேள்விக்கு விடையும் கிடையாது.)

பல மொழிகளில் பொதுவான ஒலிகள் (Common sounds) மற்றும் பெரிதும் ஒத்துப் போகக்கூடிய ஒலிகள் (resembling sounds) இருக்கிறது எனப் பார்த்தோம். ஒலிகளுக்கும் நில அமைப்புக்கும் (geographical landscape) ஒரு சுவாரசியமான தொடர்பு இருக்கிறது.

(வளரும்…)