– வருணன்
 
நூல் அறிமுகம் – ‘ஏழாம் உலகம்’ (நாவல்)
[ஜெயமோகன், கிழக்கு வெளியீடு, பக்கம்: 250]
 
ezhaam-ulagam
 
’ஒரு நாவலை எங்கு வேண்டுமானாலும் துவங்கி எங்கு வேண்டுமானாலும் முடிக்கலாம். ஆனால் அது ஒரு தரிசனத்தை தர வேண்டும்’ என தனது ‘நாவல் கோட்பாடு’ நூலில் சொல்லியிருப்பார் ஜெயமோகன். அவரது ஏழாம் உலகம் புதினத்தை வாசித்து முடித்த போது மனதில் இவ்வரிகளே மீண்டும் மீண்டும் எழுந்து சிந்தனையை ஆட்கொண்டன.
நாம் காணும் இவ்வுலகில் காணாதவற்றையும், கண்டும் காண மறுப்பவற்றையும் நம் முன்னால் பரப்பி விடுவது கலையின் உன்னதங்களின் ஒன்று. ஒரு வாசகனை பரவசப்படுத்தும் அதே கலை தான் அவ்வப்போது அவனை தர்மசங்கடப்படுத்தும் விதமாக, சுற்றியுள்ள அவனறியா உலகிற்குள் அவனை இழுத்துச் செல்கிறது. வாழ்வின் அபத்தங்களை, நாகரிகமடைந்து விட்ட, பிற விலங்குகளிடமிருந்து தான் மேலானவன் என்ற இறுமாப்பை உடைத்தெறிகிறது.
பரவசப்படுத்துவது மட்டுமன்று, பொட்டில் அறைகிறார் போல உண்மையை பூச்சுகளின்றி வெளிப்படுத்துவதன் வாயிலாக மனம் கனக்கச் செய்வதும் உன்னத படைப்புகளில் ஒரு வாசகன் எதிர் கொள்ளும் முரணான உணர்வுகள்.
ஏழைகளின் பாட்டை எடுத்துக் காட்டும் பல இலக்கியப் படைப்புகள் இருக்கின்றன. ஆனால் நாம் நாள்தோறும் கடந்து செல்ல வாய்ப்பிருக்கிற தேக உரு குலைந்த பிச்சைக்காரர்களின் வாழ்க்கை குறித்தும் அவர்களை வைத்து பிழைப்பு நடத்துகிறவர்களின் வாழ்க்கை குறித்தும் ரத்தமும் சதையுமான ஒரு படைப்பு தமிழில் இது போல் இல்லை என்று தாராளமாக சொல்லலாம்.
மனிதர்கள் புண்ணியந்தேடி செல்லும் கோவில்களில், அவர்களின் இரக்கத்தையும் தரும சிந்தனையையும் சுரண்டுவதையே பிழைப்பாகக் கொண்ட போத்திவேலு பண்டாரத்தை சுற்றியே கதை வளர்கிறது. அதிதீவிரமான முருக பக்தராக இருக்கும் இவர் ஆத்ம சுத்தியுடன் அங்க குறைபாடுள்ள பிச்சைகாரர்களை வைத்து பிழைப்பு நடத்துபவராக இருக்கிறார். ஒரு பக்கம் அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்வின் பக்கங்களைப் புரட்டும் கதை, மறுபுறம் அவரிடம் இருக்கும் ‘உருப்படி’களின் வாழ்க்கையின் தீராத துன்பத்தை காட்டுவதுமாக இரண்டு கதை சரடுகளாய் கிளை பிரிந்து வளர்கிறது.
பல்வேறு கதாப்பாத்திரங்களின் வழி மீண்டும் மீண்டும் முன்னிறுத்தப்படுவது எந்த நிலையிலிருக்கையிலும் மனிதனிடம் மீதமிருக்கும் வாழும் வேட்கையை தான்.
புதினம் ஒரு இடத்தில் கூட பெருஞ்சோக வாழ்வை விளக்கி வாசகனின் பரிதாபத்தை வேண்டுவதில்லை. மாறாக அத்தனை இக்கட்டிலும், பிச்சைக்காரர்களின் உலகில் அவர்களின் வாழ்க்கையிலும் எஞ்சியிருக்கும் சுவைகளை படம் பிடித்துக் காட்டுகிறது. இது தான் ஏழாம் உலகத்தின் கலை சாதனையில் முதன்மையானது. உருப்படிகளாக வரும் முத்தம்மை, குய்யன், ராமப்பன், தொரப்பு, எருக்கு, அகமது, மாங்காடுச் சாமி போன்றவர்களும் அவல வாழ்வை வாழும் போதிலும் வாழ்க்கையின் மீதுள்ள ருசி சாமானிய வாழ்க்கை வாழ்பவர்களின் வாழ்வின் மீதான பற்றிற்கு சற்றும் சளைத்ததல்ல. அவர்களின் பார்வையில் சகலரும் எள்ளலுக்கு உள்ளாகின்றனர். பெருந்துன்பம் அனுபவிக்கும் ஆத்மங்களிடம் தான் நகைச்சுவை உணர்வு மிகுந்திருக்கிறது. அது நேரடியாய் வாழ்வின் அபத்தத்தை, வெறுமையை மிதமிஞ்சி ருசித்ததால் ஏற்படும் பக்குவத்தினாலேயே அவர்களுக்கு கூடி வருகிறது. அவர்களின் எள்ளலில் இருந்து கடவுளும் தப்பவில்லை.
போத்திவேலு பண்டாரமாகட்டும், அவருக்கு உதவியாக இருக்கும் பெருமாள், வண்டிமலை போன்ற பாத்திரங்களாகட்டும், கெட்டவர்களாக வலிந்து காட்டப்படவில்லை. அவர்கள் மோசமானவர்கள் தான் ஆனால் அதனை ஆசிரியர் தனது எழுத்தின் மூலமாக எங்கும் சொல்லவில்லை. மாறாக புனைவின் வழியே அதனை காட்சிப் படுத்திவிட்டு நகர்கிறார்.
பண்டாரத்தின் குடும்ப வாழ்வு கதைச் சரடில் அவரது மனைவி ஏக்கியம்மையும், மூன்று பெண் பிள்ளைகளும், நண்பராக தோளோடு தோள் கொடுத்து வரும் போத்தியும், என அத்துணை பாத்திரவார்ப்புகளும் உயிர்ப்புடன் வார்க்கப்பட்டிருக்கிறன. கதாபாத்திரத்தின் நம்பகத்தன்னைமையை வாசகனிடையே நிலைநிறுத்துவதில் தான் ஒரு எழுத்துக்காரனின் முதற்கட்ட வெற்றி இருக்கிறது.
கதை சொல்லியின் எழுத்து, தண்ணீர் போல, எல்லா வடிவங்களையும், குணாம்சங்களையும் கொள்கிறது, பேசுகிற வாழ்வின் நிலை சார்ந்து. ஆன்மீகம் பேசுகையில் மணக்கும் எழுத்து, மலங்காட்டின் ஊடே பயணிக்கையில் நாறுகிறது. கடவுள் குறித்த தர்க்கங்களை முன்வைக்கிற போது பகுத்தறிவுச் சாயல் கொள்கிறது.
கடவுள் குறித்தும், கடவுள் நம்பிக்கை குறித்தும், ஆன்மீகம், தானம் போன்றவை குறித்தும் நமக்கிருக்கும் நம்பிக்கைகளை மறு பரிசீலனை செய்ய நிர்பந்திக்கிற படைப்பு இது. இது போன்ற விசயங்களின் இதுவரையிலான நமது புரிதலை, நம்பிக்கையை வேரோடு பிடுங்கி எறிகிறது புனைவின் பாதையெங்கும் இழையோடும் குரூரமான யதார்த்தம்.
 
(கதை விவரணை தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தை கெடுக்கும் என்பதால் அதனை முற்றிலுமாக தவிர்த்திருக்கிறேன்.)