கடந்த பதிவில் இருந்து தாய்மொழியில் கல்வி கற்பதன் அவசியத்தையும், அதன் பயனையும் குறித்து பேச ஆரம்பித்தோம். கற்கின்ற பாடங்களைப் புரிந்து கொண்டு படிப்பது மட்டுமே தாய்மொழியில் கல்வி கற்பதன் பயன் என்பது ஒரு தட்டையான புரிதல் என்பதை உணர்வோம். ஏனெனில் கல்வியே ஒரு மனிதனின் ஆளுமையை கட்டமைக்கிறது. எனவே புரிந்து படிப்பது என்பது நேரடியாக தனிமனித ஆளுமை உருவாக்கத்தோடு தொடர்புடையது என்பதை நாம் எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.
புரிந்து படித்தல் எப்போதுமே தெளிவை ஏற்படுத்தும். தெளிந்த பார்வை நமது சிந்தனையை மேம்படுத்தும். ஒரு சமூகத்தின் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சி என்பது அந்த சமூகத்தில் வாழும் மனிதர்களின் மேம்பட்ட சிந்தனையில் இருந்தே பிறக்கிறது என்பது வரலாறு நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கும் பாடம்.
பொதுவாக தகவல்கள் கொட்டிக் கிடக்கும் இணைய வெளியில் இலக்கின்றி அலையும் பல சமயங்களில் தான் பல சுவாரசியங்கள் கண்ணில் படும். அப்படி மிகத் தற்செயலாக கண்ணில் பட்ட ஒரு விசயம் நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கும் ’தாய்மொழியில் கல்வி’ என்பதோடு மிக நேரடியான தொடர்புடையதாக இருக்கிறது. அது ஒரு தர வரிசைப் பட்டியல். அடிப்படையில் அது மொழி குறித்த பட்டியல் அல்ல என்பதே அதன் சுவாரசியம்.
 
Richest countries and Mother Tongue
 
அத்தளத்தில் (http://aseema.net.in/all-roads-to-success-through-english/) காணக் கிடைக்கும் பட்டியலை நாம் மேலே காணலாம். இப்பட்டியல் உலகின் இருபது பணக்கார நாடுகள் என்று தலைப்பிடப்பட்டிருக்கும் போதிலும், உண்மையிலேயே இப்பட்டியலானது ஒரு தனிநபருக்கான மொத்த தேசிய வருமானத்தின் (Gross National Income per Capita) அடிப்படையில் தொகுக்கப்பட்ட பட்டியலாகும். இந்த பட்டியலில் சீனா இல்லாமல் போனதற்கு அதன் மக்கள் தொகை அதிகமென்பதே காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். மற்றபடி பொருளாதார அடிப்படையில் இன்றைய தேதியில் உலகின் முதல் நிலையில் உள்ள தேசம் சீனா தான். சரி விசயத்திற்கு வருவோம். மேற்கண்ட பட்டியலில் இடம் பிடித்திருக்கும் இருபது நாடுகளிலுமே, கல்வி அவரவர் தாய்மொழியிலேயெ பயிற்றுவிக்கப்படுகிறது என்பதனை நாம் கவனிக்கலாம். இது நிச்சயம் நாம் பேசும் தலைப்போடு தொடர்புடையது தானே?
குழந்தைகள் தங்களுடைய தாய்மொழியிலேயே கல்வி கற்கும் பல தேசங்கள அறிவியலிலும், தொழிற்நுட்பத்திலும் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளதையும், அந்த நாடுகளெல்லாம் வளர்ந்த நாடுகளாக இருப்பதையும் நாம் சொல்லத் தேவையில்லை. ஜெர்மன் தேசத்தை இவ்விடத்தில் நல்ல உதாரணமாக சுட்டிக்காட்ட முடியும். இயற்பியல் துறையில் பல அரிய சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் பலர் ஜெர்மானியர்களே. உலகின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களுள் ஒருவராக போற்றப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் துவங்கி, நீல் போர், வெர்னர் ஹெய்சன்பெர்க், வெல்ஹெம் ரான்ட்ஜன் ( X-கதிர்களைக் கண்டுபிடித்தவர்), குவாண்டம் இயற்பியலின் தந்தை எனப் போற்றப்படும் மேக்ஸ் ப்ளாங்க் என பட்டியல் மிக நீளமானது.
இவ்விடத்தில் இயற்பியல் அறிஞர்களின் பட்டியலைத் தருவது என் நோக்கமல்ல. மாறாக நிச்சயம் அவர்கள் தங்கள் தாய்மொழியிலேயெ அடிப்படை அறிவியலை கற்று தமது மொழியிலேயே சிந்தித்ததும், அவர்களின் தனிப்பட்ட மேதைமையைத் தாண்டி, ஒரு முக்கியமான காரணமாக இருக்க வேண்டும் என்பதே எனது பார்வை.