-வருணன்
 
இந்தத் தலைப்பை வாசித்ததுமே ஏதோ பட்டிமன்ற தலைப்பு போல இருக்கிறது என்று நீங்கள் நிச்சயம் நினைப்பீர்கள். உண்மை தான். அப்படித்தான் உள்ளது இத்தலைப்பு. இருப்பினும் இது குறித்து அவசியம் பேச வேண்டியிருக்கிறது. அதுவும் பட்டிமன்ற அலங்கார பேச்சு போலல்லாமல் கொஞ்சம் தீவிரமான தேடலோடு பேசுவது முக்கியம்.
கடந்த வாரம் நாம் மனிதர்கள் ஒரு மொழியை புழங்கும் விதத்தால் அது எப்படியெல்லாம் மாற்றம் அடையக் கூடும் என்பது குறித்து சிந்தித்தோம். அக்கட்டுரையின் இறுதியில் மொழி ஆய்வின் வழியாக ஒரு இன வரலாற்றைப் பின்தொடர்வதில் மொழிக் கலப்பு ஒரு பெரும் தடையாக இருக்குமெனவும் பார்த்தோம். பிறமொழிகள் கலப்பதால் ஒரு மொழியானது  எவ்வாறு திரிகிறது என்பது மிகக் கவனமாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். ஒரு மொழியில் புழங்கும் சொற்களுக்கும் அதனைப் பேசும் மனிதர்களின் வாழ்வியலுக்கும், அம்மொழி பேசப்படும் நிலத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது எனவும் பார்த்தோம்.
சமீபமாக ஒரு இலக்கிய இதழில் வாசிக்க நேர்ந்த ஒரு முக்கியமான கட்டுரை (விகடன் தடம், டிசம்பர் 2016, ’தமிழ் நம் நிலத்தின் கண்ணாடி’,ப:80-91) முன்வைத்த பல விசயங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின என்றால் அது மிகையல்ல. நாம் எவ்வளவு புரிதலின்றி சில சொற்களை தாய்மொழியில் பயன்படுத்துகிறோம் எனவும், மொழிக் கலப்பு நமது மொழியை மட்டுமல்லாமல் அதன் வழியாக நமது வாழ்க்கை குறித்த புரிதலை எப்படி திரிக்கிறது என்று அக்கட்டுரை ஆசிரியர் திரு.நக்கீரன் அவர்கள் அழகாக விளக்கி இருந்தார். கட்டுரை ஆசிரியர் மிக எளிமையான இரு உதாரணங்களை முன்வைத்து மொழிக்கும் நிலத்திற்குமான தொடர்பை நமக்கு புரிய வைக்கிறார்.
ஒருவரை வரவேற்க ஆங்கில மொழியில் நாம் பொதுவாக ’Warm welcome’ என்று சொல்வோம். பல விழா மேடைகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் இப்படிச் சொல்வதை நாம் பல முறை கேட்டிருக்கலாம். இதற்கு நேர்மாறாக தமிழ் மொழியில் ‘மனம் குளிர்ந்த வரவேற்பு’ என்று சொல்வதை நாம் கருத்தில் கொள்ளலாம். மேலும் நல்ல மனசுக்காரரை குறீக்க ஆங்கிலத்தில் ‘Warm hearted person’ என்றும் அதையே தமிழில் ‘ஈரமான நெஞ்சமுள்ளவர்/ஈர மனதுக்காரர்’ என்றும் குறிப்பிடப்படுவதை நாம் கவனிக்கலாம்.
 
4 seasons wallpaper
 
அவர் எடுத்துக்காட்டிய, மேற்சொன்ன  எளிமையான இரண்டு உதாரணங்களுமே எவ்வாறு அந்தந்த மொழிகள் தத்தமது நிலங்களோடு மிக நெருக்கமான தொடர்புடையவையாக இருக்கின்றன என்பதை விளக்குகின்றன. ஆங்கில மொழி தோன்றிய நிலப்பரப்பு குளிர் பிரதேசம். தமிழ் நிலமோ வெப்பப் பிரதேசம். எனவே அந்தந்த மொழியில் பயன்படுத்தப்படும் சொற்கள் அந்த நிலத்தின் தன்மையை ஒத்தே இருக்கின்றன. ஏறத்தாழ வருடம் முழுவதும் வெயிலில் காயும் தமிழ் நிலப்பரப்பில் வாழும் தமிழர்கள் இயல்பிலேயே குளுமைக்கு ஏங்குபவர்களாக இருக்கின்றனர். போலவே குளிரிலேயே நடுங்கும் பிரித்தானிய நிலத்தில் வாழ்பவர்களோ இதம் தரும் வெப்பத்திற்காக ஏங்கிக் கிடப்பவர்களாகவே இருப்பர். இதுவே அந்தந்த மொழி பிரயோகயோகங்களிலும் எதிரொலிக்கிறது.
சரி இதில் எங்கே மொழி கலப்பு இருக்கிறது? இல்லை தான். ஆனால் அம்மொழிக்கு உரிய ஒரு சொல்லாட்சியை அப்படியே நமது மொழியில் கையாள்வது தான் பிரச்சனையே. எடுத்துக்காட்டாக ’வசந்தம்’ என்ற சொல் கோடை காலத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. ஒப்பீட்டளவில் தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியா குளிர் பிரதேசம். எனவே அவர்கள் வெப்பத்தை வரவேற்கும் விதமாக ‘வசந்தம்’ எனும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர். நமது தமிழ் நிலமோ வெயிலிலேயே காய்கிறது வருடத்தின் பெரும்பாலான நாட்களில். கோடையின் துவக்கத்தை தமிழில் ‘இளவேனில்’ என்ற சொல் குறிக்கிறது. இந்த இடத்தில் பேச்சு வழக்கில் நாம் வசந்தம் என்ற சொல்லை பயன்படுத்தினால் அதன் அர்த்தம் எவ்வளவு திரிகிறது என்பதை நாமே புரிந்து கொள்ளலாம்.
எத்தனை முறை புதுமணத் தம்பதியரை வாழ்த்தி நாம் ’உங்கள் வாழ்வில் வசந்தம் பொங்கட்டும்’ என்று சொல்கிறோம். கொஞ்சம் இப்போது யோசித்துப்பாருங்கள். நாம் இப்படிச் சொல்வது உண்மையிலேயே அவர்களை வாழ்த்துவதாக அமைகிறதா?!
தலைப்பை மொழிக்கலப்பு சாதகமா அல்லது பாதகமா என வைத்துவிட்டு சாதகத்தையே இதுவரை பேசவில்லையே என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. தமிழுக்கு மொழிக் கலப்பினால் சாதகங்கள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் ஆங்கில மொழிக்கு உண்டு. அது குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்.