மொழியும், நிலமும்
—————-

– வருணன்

மனிதர்களை பிற விலங்கினங்களிடம் இருந்து பிரித்து தனித்துவமாக காட்டுவது அவர்களது சிந்தனைத் திறனும், பேசும் திறனும் தான். எல்லா விலங்குகளும் தமக்கேயான, பிரத்யேகமான (exclusive) ஒலிகளை எழுப்புகின்றன. இருப்பினும் பேசும் திறமை பெற்ற ஒரே விலங்கு மனிதன் தான். (கிளியால் சொன்னதை மட்டுமே திருப்பிச் சொல்ல முடிகிறது.) நாம் அன்றாடம் பேசிக் கொண்டே இருக்கிற போதிலும் எப்படி ஒலிகளை உருவாக்கி பேசுகிறோம் என்பதை நம்மில் பலருக்கு சரிவர தெரிவதில்லை. எனவே முதலில் நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை அறிவியல்பூர்வமாக (scientifically) சுருக்கமாகப் பார்த்து விடலாம்.

மனிதர்களின் தொண்டைப் பகுதியில் இருக்கிற குரல்வளை (larynx) எனும் பகுதியை பொதுவாக குரல் பெட்டி (voice box) என்று அழைப்பார்கள். குரலானது இந்தப் பகுதியில் இருந்தே உருவாகிறது என்பதால் அப்பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஒலிகள் தான் நாம் பேசும் போது உருவாக்கப்படுகின்றன. நமது பேச்சில் நிறைய ஏற்ற இறங்கங்கள் இருக்கும். சில இடங்களில் நாம் எழுப்பும் ஒலிகள் உரத்தும் (loud) சில இடங்களில் மென்மையாகவும் இருக்கும். அதற்கு ஏற்றார்போல காற்று நம் குரல்வளையின் வழியாக சீரான முறையில் வெளியேற்றப்பட்டே குரல் எழுப்பப்படுகிறது.

நமது குரல் வளைக்குள் இருக்கிற குரல் மடிப்புகள் (vocal folds) மிக மென்மையான இரு மடல்களைக் (folds) கொண்டவை. (கொடுக்கப்பட்ட படத்தில் இதனைக் காணலாம்) வெளியேறும் காற்றின் அளவைப் பொறுத்து அவை விரிந்து கொடுக்கும்.

Vocal Cord Illustration

உலகெங்கிலும் நிலப்பகுதிகள் ஒரே வெப்பநிலையில் இருப்பதில்லை. உலகில் சில பகுதிகள் குளிராகவும், சில பகுதிகள் வெப்பமாகவும் இருக்கின்றன. பொதுவாக ஆசிய (குறிப்பாக இந்திய, இலங்கைப் பகுதிகள்), ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகள் மிகுந்த வெப்பமாகவும், ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கப் பகுதிகள் மிகுந்த குளிர் பிரதேசங்களாகவும் இருக்கின்றன என்பது நாம் புவியியலில் (Geography) கற்றது தான்.

ஒவ்வொரு நிலப்பகுதியின் வெப்பநிலைக்கும் அந்தப் பிரதேசத்தில் வாழுகின்ற மனிதர்கள் பேசுகிற மொழிக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. எந்த ஒரு உயிரினமும் தான் வாழுகின்ற நிலத்தில் வெப்பத்திற்கு ஏற்ப தனது உடலின் வெப்பநிலையை தகவமைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். இதனை சூழல் வெப்பநிலை (environmental temperature) என்று சொல்வார்கள். அதாவது தான் வாழும் நிலம் குளிர் பகுதியாக இருந்தால் குறைந்த அளவிற்கு வெப்பம் வெளியேறும் படியும், அதே வேளையில் வெப்ப நிலமெனில் அதிகமான வெப்பத்தை உடலில் இருந்து வெளியேற்றிடவும் வேண்டும்.

Global Avg. Temp)

நாம் வாய் திறந்து பேசும் போது நிச்சயம் உடல், சுற்றுப்புறத்திற்கு இடையே வெப்பப் பரிமாற்றம் நிகழும். எனவே நாம் நமது மொழியைப் பேசுகிற விதம், பிரதேச வெப்பநிலையோடு பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்ட ஒரு அம்சமாக இருக்கிறது. இப்போது மேலே சொன்னவற்றை உள்வாங்கிக் கொண்டு நாம் சற்றே யோசித்துப் பார்த்தால் ஏன் பல இந்திய மற்றும் ஆப்பிரிக்க மொழிகள் நன்றாக வாய் திறந்து பேசுகிற விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளலாம். மேலும் ஐரோப்பிய மற்றும் வடஅமெரிக்க பிரதேசங்களில் பேசப்படுகிற மொழிகள் (நமது பார்வையில்) ஏன் ‘வாய்க்குளே முணங்குவது போல பேசப்படுகின்றன என்றும் புரிந்து கொள்ள முடியும். அந்தப் பிரதேசங்கள் எல்லாம் மிகவும் குளிரான நிலப்பகுதிகளாக இருப்பதால் வாயை அதிகம் திறந்து பேசினால் உடலில் இருந்து வெப்பம் அதிக அளவில் வெளியேறிடும். அதனைத் தவிர்த்து, உடலின் வெப்பத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே அதிகம் வாயைத் திறக்காமலேயே பேசும் விதமாக அம்மொழிகள் அமைந்துள்ளன.

(வளரும்…)