மொழியை முன்வைத்து நாம் பல விசயங்களை, பல கோணங்களின் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஆங்கில மொழி குறித்த நமது பார்வையில் கூட, ஆண்டவர்களின் மொழி அடிமைகளின் மொழியைக் காட்டிலும் எப்படி மேன்மையானதென கட்டமைக்கப்பட்டது என்பதைக் குறித்து முன்னரே பேசியிருக்கிறோம். எப்போதுமே தலைவனின் மொழியைத் தான் அடிமைகள் கற்றுக் கொள்வார்களோ ஒழிய தலைவன் ஒரு போதும் அடிமைகளின் மொழியைக் கற்றுக் கொள்ள மாட்டார்கள். மொழி என்பது ஒரு கட்டத்தில் ஒருவரது அதிகாரத்தை மற்றவர் மீது பிரயோகிக்கக் கூடிய ஒரு ஆயுதமாக மாறி விடுகிறது. வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும், உலகேங்கிலும் இதற்கான ஏராளமான உதாரணங்களை நம்மால் அடுக்க முடியும்.
தமிழக வரலாற்றைப் பொருத்த வரை மொழி போராட்டங்களின் காலமாக 1960கள் இருந்தன என்பதை நாமறிவோம். உண்மையில் அந்த காலகட்டத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், மிகுந்த உக்கிரமானது. அதனை தமிழ் மொழி மீதான வெறி என்று புரிந்து கொள்ளலாகாது. நிச்சயம் அயல் மொழிகளுக்கொ அல்லது அயல் மொழி இலக்கியங்களுக்கோ  தமிழர்கள் எதிரிகள் அல்ல. அவர்கள் தகுதியான இலக்கியப் படைப்புகளை, மொழி பேதமின்றி, அது எம்மொழி இலக்கியமாக இருப்பினும் அதனைக் காலங்காலமாக கொண்டாடி இருக்கின்றனர் என்பதை மறுக்கவே முடியாது. தமிழில் வெளிவந்த, தொடர்ந்து அதிக அளவில் வெளிவந்து கொண்டிருக்கும் இலக்கிய மொழிபெயர்ப்புகளே அதற்கு சாட்சி. இந்திய மொழிப் படைப்புகளாகட்டும், அயல் மொழிப் படைப்புகளாகட்டும் வேறு எந்த மொழியிலும் தமிழில் வெளியாவதைப் போல மிக அதிக அளவிளான மொழியாக்கங்கள் வெளியாகின்றனவா என்பது சந்தேகமே. புனைவு நூல்கள் மட்டுமின்றி சமீப காலங்களில் அபுனைவு நூல்களின் (Non- fictions) மொழியாக்கங்கள் வெளியாவது மிக மிக வரவேற்கத்தக்கது; ஆரோக்கியமானதும்  கூட.
 
feb_12
 
இந்தியா போன்ற ஒரு பல்கலாச்சார. பல்மொழி தேசத்தில் ஹிந்தி போன்ற ஒரே மொழி ஒட்டு மொத்த தேசத்துக்கும் பொதுவான மொழியாக முடியுமா? இந்திய தேசத்தின் பன்மைத்துவத்தை அங்கீகருக்கும் விதமாகவே சர்வதேச அளவில் அதனை இந்தி துணைக் கண்டம் (Indian sub continent) என்ற பெயரால் அழைக்கின்றனர். அப்படி இருக்கையில் எண்ணிக்கையில் அதிகமானோர் பேசுகின்ற மொழி என்ற ஒரே தகுதியை மட்டும் கணக்கில் கொண்டு மற்ற மொழிகளைக் காட்டிலும் ஹிந்தி மேன்மையானது என்று சொல்லிவிட முடியுமா? மிக சமீபமாக நடுவண் அரசு நாடெங்கிலும் உள்ள தமது நேரடி அதிகாரத்திற்குட்பட்ட சி.பி.எஸ்.சி பள்ளிகளில் ஹிந்தி மொழியை பத்தாம் வகுப்பு வரை மாணாக்கர் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்துள்ளது. இதனை ஒட்டியே மொழி வழி அதிகாரம் செலுத்துதல் தொடர்பாக நாம் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
நாடெங்கிலும் ஹிந்தி மொழி வளர்ச்சியை தமது குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ‘ஹிந்தி பிரசார சபா’ தனியான பாடதிட்டங்களை வகுத்து வகுப்ப்புகளை பல காலமாக எடுத்து கொண்டுதான் இருக்கிறது. விரும்பம் உள்ளவர்கள் படிப்பதை மறுக்கவே இல்லை. அது ஜனநாயகம். அறுபது கோடி பேர் பேசுகின்ற ஒரு மொழியை, அம்மொழியைப் பேசாத எழுபது கோடி பேர் கொண்ட மக்கள் தொகையில் குறிப்பிட்ட அப்பாடதிட்டத்தில் பயிலும் மாணாக்கர் அனைவருக்குமெ – அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ- காட்டாயமாக்குதல் என்பது அம்மொழியைத் திணிப்பதன்றி வேறல்ல.
சமீபத்தில் மத்திய அரசின் இந்த ஆணைக்கு தமிழகத்தில் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பிய பொழுதும் அது வெறும் வெறுப்புக் குரலாகவே புரிந்து கொள்ளப்பட்டது/ அவ்வாறானது என பிரச்சாரம் செய்யப்பட்டது. உண்மையில் ஹிந்தி மொழியின் மீது மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் காலங்காலமாக அதிகமான வெறுப்பு விதைக்கப்பட்டிருக்கிறது என்றே விமர்சனங்கள் எழுகின்றன. உண்மையில் ஒரு மொழியைத் திணிப்பது என்பது வெறும் மொழிப் பிரச்சனையாக இங்கே சுருக்கப்படுகிறது என்பதே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விசயம்.
 
Languages in India
 
ஒரு மொழி என்பது இன்றைய சூழலில் ஒரு மனிதரது வேலை வாய்ப்பை, அதன் வழியாக அந்த நபரின் வாழ்வாதாரத்தோடு நேரடியாக தொடர்பு கொள்கிற விசயமான இருந்து வருகிறது. ‘தமிழர்களின் இந்தி வெறுப்பு’ குறித்து பேசுபவர்கள் எல்லோரும் தவறாமல் முன் வைக்கும் இன்னோரு கருத்து, அந்நிய மொழியான ஆங்கிலத்தைக் கூட ஏற்றுக் கொள்கிற தமிழ்ச் சமூகம் ஏன் இந்திய மொழியான ஹிந்தியை ஏற்க மறுக்கிறது என்பதாகும். இதற்கு நிச்சயம் விளக்கம் சொல்லியே ஆக வேண்டும்.
தாய்மொழியொலேயே ஒருவர் வாசித்து, சிந்தித்து பதில் எழுதக் கூடிய ஒரு போட்டித் தேர்வை ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் எழுதுவாரேயானால் அத்தேர்வின் முடிவுகளை அது கணிசமாக மாற்றியமைக்கும். இது நிதர்சனம். பொதுவாகவே மத்திய அரசின் பணிகளுக்கேன நடைபெறும் போட்டித் தேர்வுகளில் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே கேள்விகள் உள்ளன. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இத்தேர்வினை எழுதும் ஹிந்தி மொழியை தனது தாய்மொழியாகக் கொண்ட ஒரு நபர் மிக எளிமையாக தனது மொழியிலேயே தேர்வுகளை எழுதி விடுவார். ஆனால் அதெ வேளையில் ஏனைய அனைத்து தேர்வர்களும் தங்களது தாய்மொழியில் எழுத வாய்ப்பில்லாத நிலையில் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வினை எதிர் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இந்த தேர்வுமுறையை நாம் எப்படி ஜனநாயக ரீதியில் சம வாய்ப்பினைத் தருகிறது என ஏற்றுக் கொள்ள முடியும்? ஒன்று அனைவருக்கும் பொதுவான அந்நிய மொழியான ஆங்கிலத்தில் மட்டுமே இது போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள் நடைபெற வேண்டும் அல்லது ஒவ்வொரு மொழியினரும் தத்தமது தாய்மொழியிலும் தேர்வுகளை எழுதுவதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும் அல்லவா? இதில் ஏதேனும் ஒன்று நடைமுறைப்படுத்தபட்டால் மட்டுமே அதனை சமவாய்ப்பு என்று கருத முடியும்.
இதனை ஒட்டி முன்வைக்கப்படும் இன்னோரு வாதமும் தொடர்ந்து ஒலித்தபடியே இருக்கிறது. அது, இந்த போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பணியமரும் பட்சத்தில், தேர்வர்கள் வட இந்தியாவிலும் வேலை செய்ய வேண்டி வருமே! அப்போது அவர்களுக்கு ஹிந்தி மொழி தெரிவது அவசியம் தானே? நல்லது. இதனை அப்படியே வாதத்திற்கு எடுத்துக் கொள்வோம். பிற மொழியினர் ஹிந்தி பேசும் பிரதேசங்களுக்கு செல்லும் போது அம்மொழியைத் தெரிந்து வைத்திருக்க வேண்டுமெனில், ஹிந்தி பேசுபவர்கள் இந்திய தேசத்தில் பிற மாநிலங்களில் இது போலவே போட்டித் தேர்வுகளின் மூலமாக பணியமரும் போது அவர்களுக்கும் இதே கருத்து பொருந்தும் இல்லையா? அப்படி எத்தனை ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், நடைமுறையில் அந்தந்த பிராந்திய மொழியைக் கற்றுக் கொண்டு பணி செய்கிறார்கள்?
ஒரு ஜனநாயக தேசத்தில் இப்படி ஒரு மொழியை மட்டுமே முன்னிறுத்துவது மொழியின் வழியே அதிகாரத்தைக் கட்டமைப்பதே அல்லாமல் வேறல்ல.