Tamil Words
 
-வருணன்
 

ஏறத்தாழ நம் அனைவருக்குமே இந்த குழப்பம் மொழியை கற்றுக் கொண்டிருக்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் மனதில் நிச்சயம் தோன்றுகிற ஒரு விடயமே இக்கட்டுரையின் தலைப்பாக உள்ளது. மொழி ஆளுமை என்பது என்ன? வெறுமனே ஆயிரக்கணக்கில் வார்த்தைகளையும் அவற்றின் அர்த்தங்களை மொழி அகராதிகளின் (Dictionary) துணையோடு ஒருவர் அறிந்து வைத்திருக்கிறார் என்பதற்காகவே அவரை அம்மொழியை நன்கு அறிந்த அறிஞர் என்று சொல்லி விட முடியுமா?

பொதுவாகவே நமது பள்ளிக் காலம் தொட்டே மொழிப் பாடங்களை நமக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அடிக்கடி அதிகமான வார்த்தைகளை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருப்பார்கள். அதிலும் ஆங்கில ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்களை புதிய புதிய வார்த்தைகளுக்கான அர்த்தங்களை மொழியகராதியில் தேடிக் கண்டுபிடித்து படித்துக் கொள்ள வற்புறுத்திக் கொண்டே இருப்பார்கள். அது ஏதோ மொழி ஆளுமை (Expertise in a language) என்பதே அதிகமான எண்ணிக்கையில் வார்த்தைகளை தெரிந்து கொள்வது தான் போல, எனும் பிரமையை உண்டாக்கி விடுகிறது என்பது தான் உண்மை. யதார்த்தத்தில் மொழிப்பாட ஆசிரியர்கள் நாம் சிறப்பான வகையில் சொல் வளமை (word power) கொண்டவர்களாக விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அப்படி அறிவுரை கூறுகின்றனர்.

மனிதன் தனது எண்ணத்தையும், சிந்தனையையும் வெளிப்படுத்துகிற ஒரு ஊடகமாகவே (medium) மொழி செயல்படுகிறது. நாம் பல நேரங்களில் மனதில் தோன்றுகிறவற்றை சொல்வதற்கு சிரமப்படுவோம். ‘எனக்கு அத எப்படி சொல்றதுன்னு தெரியல’ என்பதாக நாம் எல்லோருமே அடிக்கடி பல தருணங்களில் நினைத்திருப்போம் அல்லது சொல்லியிருப்போம். அதற்கு மிக முக்கிய காரணம் நமது மோசமான சொல் வளமை தான். கருத்துப் பரிமாற்றத்தில் அடிக்கடி நிகழும் இன்னோரு பிரச்சனை, நாம் தவறான வார்த்தைகளை பயன்படுத்துவது அல்லது பிறர் கூறும் வார்த்தைகளின் அர்த்தங்களை தவறாகப் புரிந்து கொள்ளுதல். இதற்குக் காரணம் பல வார்த்தைகளை நாம் தெரிந்து வைத்திருக்கிற போதிலும் அவற்றிற்குரிய சரியான அர்த்தங்களை அறிந்து வைத்துக் கொள்ளாதது தான். எனவே வார்த்தைகளை நிறையவே அறிந்து வைத்திருப்பது நல்லது தான். ஆனால் அதே வேளையில் அது மட்டுமே போதுமானதல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சொல்லத் தோன்றும் கருத்தோ அல்லது வெளிப்ப்படுத்த நினைக்கும் எண்ணமோ தெளிவாக மனதில் இருப்பினும் நாம் அதனை எந்த அளவிற்கு மொழி எனும் கருவியின் வழியாக சொல்கிறோம் என்பது நிச்சயமாக இரண்டு விடயங்களைப் பொருத்தே அமைகிறது. சந்தேகமில்லாமல் முதலாவது அவரது மொழி வளமை. இரண்டாவது சரியான வார்த்தைகளை சரியான இடத்தில் கையாளும் திறமை. இது தான் ஒருவருடைய மொழி ஆளுமையை நிர்ணயிக்கிற மிக முக்கியமான காரணி.

நான் சொல்ல முயல்வதை விளக்க ஒரு எளிய உதாரணம் சொல்கிறேன். பல நேரங்களில் நாம் கவிதைகள் வாசித்திருப்போம். இல்லையெனில் குறைந்தபட்சம் நல்ல திரைப்பட பாடல்களையாவது கேட்டிருப்போம். அப்போது பல சமயம் ’ சே! என்ன அழகான வரிகள்…. எவ்வளவு ஆழமான அர்த்தம்…’ என நமக்குள் வியந்திருப்போம். அப்படி ஒரு தருணத்தை மனதில் அசை போட்டுப் பாருங்கள். அந்த கவிதையில்/பாடல் வரிகளில் கவிஞர் பயன்படுத்தி இருக்கும் வார்த்தைகள் நமக்கு நன்றாக அறிமுகமான மிக எளியமையான வார்த்தைகளாகவே இருக்கும். அவற்றுள் பல நாம் நமது அன்றாட பேச்சுகளில் பயன்படுத்துகின்றவையாகக் கூட இருக்கும். இருப்பினும் கவிஞரின் சொற்சேர்க்கையில் ஏதோ மந்திரம் இருப்பது போலவே தெரிகிறதல்லவா! அது தான் மொழி ஆளுமை.

ஒருவருடைய மொழி ஆளுமைக்கு மிக அடிப்படையானது அந்த நபருடைய சிந்தனை வளம் தான். அதற்கு துணை செய்வதே மொழி வளமை.

(வளரும்…)