-வருணன்
 
 
72 kg Cover
 
குறும்படங்களை பார்ப்பதற்கான வாய்ப்பு வெகு சிலருக்கே கிடைத்துக் கொண்டிருந்தது சில வருடங்களுக்கு முன்பு வரை. ஆனால் இப்போது நிலைமை வெகுவாக மாறி விட்டது. யூடியூப் (YouTube) போல காணொளி பகிரும் இணைய தளங்களின் (Video Sharing websites) வருகைக்குப் பின்னால் அவர்றைன் வாயிலாக குறும்படங்கள் பல்லாயிரக்கணக்கானோர் பார்ப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. இவ்வாரம் நாம் அறிமுகம் பகுதியில் பார்க்கப் போவதும் ’72 Kg’ என்ற குறும்படத்தைத் தான்.
தமர் (Thamar) எழுதி, இயக்கிய இக்குறும்படம் உண்மையில் சாம்சங் நிறுவனம் நடத்திய ஒரு போட்டியில் முதற்பரிசைப் பெற்ற குறும்படமாகும். முழுக்க முழுக்க இப்படம் சாம்சங் நோட் 5 கைபேசியில் எடுக்கப்பட்டது. மேலும் இக்குறும்படம் 12வது துபாய் சர்வதேச திரைப்பட விழாவில்  குறும்படப் பிரிவில் இரண்டாம் பரிசினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. படத்தின் பெயரே வித்தியாசமாக நமது கவனத்தை கவரும் விதத்தில் அமைந்துள்ளது. வசனங்களே இல்லாமல் நான்கு நிமிடத்திற்கும் குறைவாக ஓடும் இப்படம் ஏற்படுத்தும் நெகிழ்ச்சி அபரிவிதமானது. பொதுவாக எளிமையில் பேரழகு உள்ளதாய்ச் சொல்வார்கள். அதனை நிரூபிக்கிறது இப்படம். கதையின் கரு மிகச் சுருக்கமானது. அதனை படமாக்கிய விதமும் ஆர்ப்பாட்டமே இல்லாமல் எளிமையாக இருப்பதாலேயே நம் மனதை நிறைக்கிறது.
இரண்டே மையக் கதாப்பாத்திரங்கள் கதையில். ஒரு கடற்கரை சாலையோரம் ஒரு வயதானவர் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். போவோர் வருவொரிடம் இரந்து தனது ஜீவனத்தை நடத்துகிறார். ஒரு நாள் மாலையில் அவ்வழியே செல்லும் ஒரு இளைஞன் (கழற்றிய கோட் தோளில் தொங்க அவனைப் பார்க்கும் போதே பணிக் களைப்பில் தோய்ந்து வீடடைய முயல்வது தெரிகிறது) அம்முதியவரை கடந்து செல்கிறான். அவருக்கு அவன் ஏதும் பிச்சையிடாமலேயே கடந்து செல்கிறான். ஆனாலும், யோசனைகள் ஓடும் முகத்தோடு அவரை திரும்பப் பார்த்தபடி தனது இல்லம் சேர்கிறான். இல்லமே அவன் ஒரு உயர் நடுத்தர வர்க்கத்தினன் எனச் சொல்கிறது. அவ்வளவு களைப்பிலும் உடைகளைக் கூட களையாமல் எதையோ தேடத் துவங்குகிறான். அலமாரிகளின் மேலும், பரணியிலும் எதையோ மும்முரமாய் தேடுகிறான். சில மணித்துளிகள் தேடலுக்குப் பிறகு ஒரு பெட்டியைத் திறந்து பார்த்து திருப்தியுற்றவனாய் மேசையின் மீது வைத்து விட்டு உறங்கச் சொல்கிறான்.
மறுநாள் காலை அப்பெட்டியோடு அதே இளைஞன் அதே சாலையில். முதியவரோ அவரது வழக்கமான இடத்தில். அவர் அருகே சென்ற இவனைக் கண்டதும் அனிச்சையாய் அவர் கை யாசகம் கேட்டு இளைஞனை நோக்கி நீள்கிறது. ஏதும் பேசாத இளைஞனோ அவர் அருகே அப்பெட்டியை வைத்து அதிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்து அவர் முன்னே வைக்கிறான். காமிரா அதனை உற்று நோக்க அது ஒரு எடைப் பார்க்கும் இயந்திரம் என நாம் புரிந்து கொள்கிறோம். அவனொ அதில் ஏறி நின்று தனது எடையைப் பார்க்கிறான். பின்னர் அவரிடம் ஒரு சில்லைரைக் காசைத் தருகிறான்.  சிறு புன்னகையுடன் அவரிடம் விடை பெற்று தன்வழி நடக்கிறான். சில நொடிகளில் இன்னொரு மனிதர் அந்த எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறி தனது எடையைப் பரிசோத்திக் கொண்டு முதியவரிடம் காசைத் தருகிறார். படம் நிறைவுறுகிறது.
 
afishing1
 
மூன்றே காட்சிகள், இரண்டே இடங்கள். இரண்டே கதாபாத்திரங்கள். இதற்குள்ளாகவே நமது மனதைத் தொடும் மாயத்தை செய்து விடுகிறது இப்படம். எல்லோரும் பிச்சையிட்டு அம்முதியவரை பிச்சைக்காரராகவே வைத்திருக்க அந்த இளைஞனோ அவர் சக்திக்குட்பட்ட ஒரு சிறு தொழிலை அவருக்கு ஏற்பாடு செய்வதன் மூலம் அவரது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விடுகிறான். பசி என்று வருபவனுக்கு மீனைக் கொடுத்தால் அவனது ஒரு வேளை பசியை நீ ஆற்றலாம். ஆனால் அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடு. அவனது வாழ்நாளெல்லாம் பசியாற நீ உதவலாம் எனும் கருத்தை வலியுறுத்தும் ஒரு சீனப் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.
 
குறிப்பு: தலைப்புக்கும் கதைக்கும் தொடர்பே இல்லாதது போல தெரிகிறதா? அது என்ன 72 Kg? அது அந்த இளைஞனின் எடை!
 
72 Kg குறும்படத்தை இங்கு காணலாம்