– வருணன்
 
மேதைமை என்பது மிகப் பெரிய, நுட்பமான மற்றும் சிக்கலான விசயங்களை எளிமைப்படுத்தி, அதனை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறுவதே. தத்துவம் மற்றும் அறிவியல் புலங்களில் இது போன்ற திறன் கொண்ட மேதைகளை வரலாறு நமக்கு அபூர்வமாகவே எடுத்துக் காட்டுகிறது. இதன் பொருள் மானுட வரலாற்றில் மேதைகள் குறைவு என்று அர்த்தமல்ல. மாறாக தங்கள் மேதைமை எனும் கிரீடத்தை கழற்றி விட்டு சாமானியரின் புரிதல் தளத்திற்கு இறங்கி வந்து அவர்களது மொழியில் எளிமையாக சொல்லும் திறன் பெற்ற மேதைகள் அத்தனை இலகுவாக காணக் கிடைப்பதைல்லை என்பது தான் அதன் பொருள்.
பொதுவாக அறிவியலின் பலதுறைகளில் எளிமையாக மக்களுக்கு அறிவியலைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் தொடர்ந்து புத்தகங்கள் வெளிவரும். அத்தகைய புத்தகங்களை Popular Science நூல்கள் என்பார்கள்.(பிரபல அறிவியல் என்ற தமிழாக்கம் சரியாக இருக்காது. ஒற்றைப் பதத்தில் இதனை எப்படி மொழியாக்கம் செய்வது?!) வெகுமக்கள் கவனம் ஈர்த்த பாப்புலர் சயின்ஸ் வகை நூல்கள் பல துறைகளில், குறிப்பாக இயற்பியல் துறையில் மிக அதிகமான எண்ணிகையில் எப்போதுமே வெளிவரும். ஏனைய அறிவியல் துறைகளைக் காட்டிலும் மனித வாழ்க்கையோடு நேரடியாக நெருங்கிய தொடர்பு கொள்கிறபடியாக இயற்பியல் இருக்கிறது என்பதே அதிக எண்ணிக்கைக்கான காரணம்.
 
a-brief-history-of-time
 
பொதுவாக மேதைகளிடம்- அவர்கள் எத்துறையைச் சார்ந்தவரானாலும்- ஒரு சிக்கல் உண்டு. அது இயல்பான பேச்சு மொழியில் தமது துறையின் அதி சிக்கலான சங்கதிகளை சொல்ல முடியாமையே. அவர்களில் பலரால் சாமானியரும் புரிந்து கொள்ளும் வகையில் தாமறிந்தவற்றை எளிமைப்படுத்த முடியாததே இதற்கு அடிப்படைக் காரணம். சாமானியர்கள் அவரகளது உயரத்திற்கு ஏறிச் சென்று அவர்களை எட்டிப் பிடித்தால் மட்டுமே அவர்களது விளக்கங்களைப் புரிந்து கொள்ள முடியும். இந்நிலையே யதார்த்தத்தில் அதிகமிருக்கிறது. 1988 ஆம் ஆண்டு உலக முட்டாள்கள் தினமென சொல்லப்படும் ஏப்ரல் முதல் நாளன்று வெளியான ஒரு இயற்பியல் நூல் வெளியான சில நாட்களிலேயே மக்கள் மனதிலும், வரலாற்றின் பக்கங்களிலும் இடம் பெற்றது. நூல் வெளியாகி பல மாதங்கள் இலண்டன் புத்தக விற்பனை தரவரிசைப் பட்டியலில்(237 வாரங்கள்) முதலிடத்தில் இருந்தது. பொதுவாக புனைவு எழுத்துக்களே இத்தனை வாரங்கள் முதலிடத்தை தக்க வைப்பதென்பது அபூர்வம். அப்படியிருக்க ஒரு இயற்பியல் நூல்  இதனைச் சாதித்தது என்றால் உண்மையில் அது இமாலய சாதனை தான். நூலின் தலைப்பே இக்கட்டுரையின் தலைப்பும். முழு தலைப்பு A Brief History of Time  – From the Big bang to the Black Holes  எழுதியவர் உலகப் புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியல் (theoretical physics) மேதை Stephen W. Hawking.
இயற்பியல் துறை வரலாற்றில் அதி முக்கியமான இயற்பியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் பேராசிரியர் ஹாக்கிங். இயற்பியல் துறையில் வாழும் மேதைகளுள் மிக முக்கியமானவராக ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆளுமை இப்பேராசிரியர். இத்தகைய மேதைமை உள்ள ஒருவர் மிக எளிமையான மொழியில், அறிவியலின் மிகச் சிக்கலான உண்மைகளை எடுத்துக் கூறுவது என்பது அபூர்வமானது. அதனாலேயே அவரும் அவரது இந்நூலும் முக்கியத்துவம் பெறுகிறது.
 
Stephen-Hawking-387288
 
இயற்பியல் துறையின் உட்பிரிவுகளில், இந்நூலின் பேசுபொருளின் அடிப்படையில் இதனை வான் இயற்பியல் (Astrophysics), அண்டவியல் (Cosmology) மற்றும் கோட்பாட்டு இயற்பியல் துறைகளை சார்ந்தது எனலாம். இயற்கை குறித்த புதிர்களுள் ஆகப் பெரியதாக இருப்பது பிரபஞ்சத்தின் துவக்கம் குறித்து அல்லாமல் வேறென்ன இருக்க முடியும் ஒரு மனித மனத்திற்கு?
பிரபஞ்சத்தின் தோற்று வாய் என்ன? பிரபஞ்சம் குறித்த நமது பார்வையும், இதுவரைவிலான புரிதலும் என்ன? காலம் (time) மற்றும் வெளி (space) ஆகியவை குறித்த இயற்பியல் பார்வை எப்படிப்பட்டது? அடிப்படைத் துகள்கள் எவைஎவை? இயற்கையின் விசைகள் யாவை? கருந்துளைகள் (Blackholes) என்றால் என்ன? பிரபஞ்சத்தின் முடிவு எப்படிப்பட்டதாக இருக்கும்? காலம் நாம் விளங்கிக் கொள்ள முடியாத புதிரா? இது போல எண்ணற்ற கேள்விகளுக்கு விரிவான விளங்கங்களை அறிவியல்பூர்வமாக மிகத் தெளிவாக முன்வைக்கிறது இந்த புத்தகம். இதன் தனித்துவமே இதன் எளிமை தான். அவ்வளவு எளிதாக விளக்க முடியாத இயற்பியல் கோட்பாடுகளையும், விதிகளையும், தத்துவங்களையும் தனது மேதைமையால் அனாயசமாக சாதிக்கிறார் பேராசிரியர் ஹாக்கின்ஸ். நூலெங்கும் வருகிற மிக எளிமையான எடுத்துக்காட்டுகள், விளக்கங்கள் எல்லாமே பள்ளியளவில் அடிப்படை அறிவியலைக் கற்ற ஒருவருக்கும் புரியும் அளவிற்கும் இருக்கிறது என்பதே இது எல்லா தரப்பினரையும் கவர்ந்திழுத்த ஒற்றை அம்சம்.
மிகச் சாதாரணமாக போகிற போக்கில் அறிவியலின் மகத்தான உண்மைகளை போகிற போக்கில் சொல்லிச் சென்று வாசகரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் ஹாக்கிங். இயற்பியல் துறையில் இவர் உலகளாவிய கவனம் பெற்றது கருந்துளைகள் கூறித்த ஆய்வுகளால் தான். இவரும் இவரது சக ஆராய்ச்சியாளருமான ரோகர் பென்ரோசுடன் இவர் இணைந்து எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் பல மிகக் கடினமான கணித கோட்பாடுகளும் சமன்பாடுகளும் நிறைந்தவை. அப்படிபட்ட ஒரு தீவிரமான ஆராய்ச்சியாளர் எழுதிய இந்நூலில் ஒரே ஒரு சமன்பாடு (ஐன்ஸ்டைனின் ஆற்றல்-நிறை சமன்பாடு) மட்டுமே இடம் பெற்றுள்ளது என்பது ஆச்சரியமான விசயம் தானே?
 
brief-history-of-time
 
இலட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்த இந்நூலின் முக்கியத்துவத்தை இது ஏறத்தாழ நாற்பது மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை வைத்தே அறிந்து கொள்ளலாம். மேலும் வாசகரிடையே இது மிகப் பரவலாக அறிவியல் மீதான ஆர்வத்தை கிளர்த்தியதோடு மட்டுமல்லாது, பிரபஞ்சத்தின் மீதான புதிர்களின் மீதும் அறிவியல் உலகின் கவனத்தை குவிக்க உதவியது என்பது முக்கியமானது. இதன் பிரபல்யம் மற்றும் இது பேசிய செய்திகளின் முக்கியத்துவம் காரணமாக இந்நூலை அடிப்படையாகக் கொண்டு இதே பெயரில் ஒரு ஆவணப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. அப்படத்தில் பேராசிரியர் ஹாக்கிங்கே தோன்றி தனது கருத்துக்களை பரிமாறிக் கொள்வார்.
மிக இளம் வயதிலேயே Motor neuron disease எனும் நரம்பியல் நோயின் தீவிரத்தால் கழுத்திற்குக் கீழே உடலே செயலிழந்த நிலையில் இவ்வளவு மகத்தான அறிவியற் சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் இவர் உண்மையிலேயே எல்லோர் மனதிலும் தன்னபிக்கை விதைக்கும் ஒரு தனித்துவம் மிக்க ஆளுமை தான்.
உலகில் இதுவரையிலும் வெளிவந்த முக்கியமான அறிவியல் நூல்களுள் இதுவும் ஒன்றாகும். ஆகவே இது தவறவே விடக்கூடாத நூலுமாகும்.