A Social Life | Dir : Kerith Lemon | Short | 8 min
 
கட்டுரையின் தலைப்பை Social Life என்ற ஆங்கில பதத்தை நேரடியாக தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளதால், துவக்கத்தில் சற்றே குழப்பம் ஏற்படலாம் என்றே எண்ணுகிறேன். ஏனெனில் தமிழில் ‘சமூக வாழ்க்கை’ என்பதற்கான அர்த்தத்தை நாம் வேறு மாதிரியாக புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆங்கிலத்திலும் ஒரு காலத்தில் அதே அர்த்தம் கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இணைய யுகம் மனிதர்களின் சமூக வாழ்க்கை முறைகளை ஒட்டுமொத்தமாக தலைகீழாக புரட்டிப் போட்டு விட்ட இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்த ஆங்கிலப் பதத்தினை முற்றிலும் வேறு அர்த்தத்தில் மட்டுமே நம்மால் உள்வாங்க முடியும்.
இருபது வருடங்களுக்கு முன்னே தொழிற்நுட்ப வளர்ச்சி ஒன்று மனிதர்கள் ஒருவருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளும் முறையை அடியோடு மாற்றப் போகிறது என்று யாரவது சொன்னால் நாம் நிச்சயம் சிரித்திருப்போம். ஆனால் இன்று சமூக வலைதளங்களின் வருகைக்குப் பின் என்று இணைத்து சிந்தித்துப் பார்த்தால், நிச்சயம் நம இதழில் இருக்கும் புன்னகை மறைந்து நெற்றியில் சுருக்கங்கள் கூடும்.
இணைய வழி சமூக வலைதளங்கள் முகமறிந்த நெருக்கமான மனிதர்களை தனித்தீவுகளாய் துண்டாடி முகமறியா மனிதர்களை நிகர் உலகில் நெருக்கமாக்குகிறது. இச்செயல்பாடே உச்சக்கட்ட முரணியக்கமே என்பதை சொல்லவும் தேவையில்லை. இவை மனிதர்கள் தங்களுக்கிடையே கொண்டுள்ள உறவை மாற்றியதோடு மட்டும் நின்று விடவில்லை என்பதே நாம் இது குறித்து பேச வேண்டிய அவசரமான அவசியத்தை தருகிறது. மனிதர்களின் வாழ்க்கை முறையின் அடிப்படையே முற்றிலுமாய் மாறி இருக்கிறது.
சமூக வலைதளங்களின் மீதான் அதீத நாட்டம் ஒரு வித மன அழுத்தம் மிகுந்த உளவியல் சிக்கலாகவே நிபுணர்களால் வகைப்படுத்தப் பட்டு வருடங்களாகிறது. உங்கள் வாழ்க்கையை, வாழ்வின் கணங்களை உங்கள் நட்பு வட்டத்தோடு பகிர்ந்து கொள்ளுங்கள் எனும் கவர்ச்சிகரமான அறைகூவலோடு களமிறங்கிய முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தள ஊடகங்களும், வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளும் இன்று மனிதர்களை மறைமுகமாய் ஆள்கின்றன என்றால் அது மிகையில்லை. வாழும் வாழ்வின் கணங்களை நினைவுகூற பதிவுகள் செய்கின்ற வசதிகள் வந்தன என்பது முற்றாக மாறி, பதிவுகள் செய்வதற்காகவே வாழ்க்கையை வாழ்வது என்ற நிலைக்கு எண்ணற்ற மனிதர்கள் சென்றுவிட்டனர். அவர்களது இந்நிலையை அவர்களே உணராமல் இருப்பதே அவலமானது. உணரும் சிலரும் அதன் அடிமைத்தளையை அறுக்கத் திராணியின்றி அப்படியே கிடப்பது பரிதாபகரமானது.
 
A Social Life 1
 
ஒரு சில ஆக்கங்கள் குறித்த அறிமுகங்கள் என நாம் அதிகம் பேசத் தேவையில்லை எனும் நிலை இருக்கும். வடிவம் -எழுத்தோ, கலையோ-  எதுவாயினும் பிரச்சனை இல்லை. அப்படைப்புகள் தாங்களே நேரடியாக பார்வையாளர்களோடு பேசும் திறன் பெற்றிருக்கும். அறிமுகப் படுத்துதல் என்பது இது போன்ற படைப்புகளுக்கு வெறும் சுட்டிக் காட்டி அடையாளப்படுத்துதல் மட்டுமே. அது தவிர வேறு விளக்கங்களோ, வியாக்கியானங்களோ அவசியமற்றதே. அது போன்ற ஒரு குறும்படம் தான் இவ்வாரம் நாம் பார்க்கவிருக்கும் A Social Life குறும்படம்.
மெரிடித் ஒரு சராசரியான நாகரிக பெண். தனது பணி வாழ்க்கைக்கு எல்லொருடனும் தொடர்பில் இருப்பது காலத்தின் கட்டாயம் என்று நம்புகிறவள். உண்மையில் மெரிசித் தன் போன்ற எண்ணற்ற இளையோரின் மாதிரி பிம்பம் தான். இணைய நட்பு வட்டதிற்கு பகிர்கிறேன் என்று சதா தனது அன்றாடங்களை புகைப்படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி அதற்கான அங்கீகாரத்திற்காக முகமறியா நண்பர்கள் எதிர்நோக்கி ஏங்கிக் கிடக்கிறாள். அவளது வாழ்வின் பெரும்பகுதி அவளுக்கல்லாதது என்பதை அவள் உணரவே இல்லை.
ஒரு கட்டத்தில் விரக்தியில், வெறுமையான மனதுடன் தனது அறையின் நிலைக்கண்ணாடியில் தன்னை, தன் சுயத்தை தேட முற்படுகிறது போல அவள் நிற்க தனது ஒட்டு மொத்த வாழ்க்கையே பதிவேற்றிய கணக்கற்ற புகைப்படங்களாக மட்டுமே எஞ்சி நிற்கிறது என்ற உண்மையை ஒரு தரிசனம் போலக் காண்கிறாள். (உண்மையில் அக்காட்சி அவளது உளப் புரிதலின் வெளிப்பாடாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது). தனது கைபேசியை நழுவவிட்டு அது தன் மீது செலுத்திய மாய விலக்கை உடைத்தெறிந்து விட்டது போல கதவைத் திறந்து தனது வீட்டில் இருந்து வெளியேறுகிறாள். அக்கதவின் வழியே வெளிச்சம் பரவுகிறது.
 
A Social Life
 
மிக சிறிய, சொல்லப் போனால் கதையே இல்லாத ஒரு குறும்படத்தில், ஒட்டுமொத்த மனிதர்களின் அர்த்தமற்ற இணைய வாழ்வை கண் முன் நிறுத்துகிறார் இயக்குனர்.
 
A Social Life குறும்படம்