– வருணன்
கடந்த வாரம் ரஷ்ய (நல்ல தமிழில் ‘ருசிய’ என்றும் எழுதப்படுகிறது) இலக்கிய ஆளுமை ஆண்டன் செகாவின் ‘பந்தயம்’ சிறுகதையை அறிமுகம் பகுதியில் பார்த்தோம். இவ்வாரம் நாம் பகிர வேண்டுமென நினைப்பது ஆதவன் தீட்சண்யாவின் ‘கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக் கூடும்’ என்ற சிறுகதையை. உண்மையில் இப்பதிவை நூல் அறிமுகம் என்றும் தாரளமாகச் சொல்லலாம். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், நானறிய தமிழ் இலக்கிய பரப்பில் ஒரே ஒரு சிறுகதை ஒரு குறுநூலாக வெளிவந்ததே இல்லை. இதே தலைப்பில் இச்சிறுகதை ஒரு குறுநூலாக வெளிவந்து பரவலாக கவனம் பெற்றது.
ஆதவன் தீட்சண்யா சமகால தலித் இலக்கிய பரப்பில் தொடர்ந்து பங்களித்து வருகிற முக்கியமான படைப்பாளிகளுள் ஒருவர். இவர் எழுதிய இச்சிறுகதையை அது பேசும் அரசியலின் முக்கியத்துவம் கருதியே தனி நூலாக வெளியிடுவதாக இதனை பதிப்பித்த பயணி வெளியீட்டகம் நூலில் பதிவு செய்கிறது. சிறுகதை குறித்த அறிமுகம், துப்புரவு பணியாளர் நிலை விளக்கம் என அழகிய பெரியவன் எழுதிய இரு கட்டுரைகளையும் சிறுகதையோடு சேர்த்தே நூலாக 2008 இல் (முதற்பதிப்பு) வெளியானது.
 

ஆதவன் தீட்சண்யா

                 ஆதவன் தீட்சண்யா


 
ஒடுக்கப்பட்டவரின் கதையை, அவர்களின் துயரத்தை, அவர்தம் வாழ்வின் அவலத்தைப் பேசும் பல படைப்புகள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம், வாசித்திருப்போம். சாதியத்தின் பெயரால் சம உரிமை மறுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்வைப் பேசும் பல படைப்புகள் தமிழில் சமீப காலக்கட்டத்தில் வெளிவரத் துவங்கியுள்ளது ஆரோக்கியமானது. குறிப்பிட்ட இக்கதை மனித மலம் அள்ள நிர்பந்திக்கப்படும் துப்புரவுப் பணி செய்யும் அருந்ததியர் மக்களின் அவல வாழ்வை இருண்மை நகைச்சுவை (Black comedy) பாணியில் சொல்லியிருக்கிறது. தமிழ் படைப்பிலக்கியத்தில் முன்னுவமை கூறிட இயலாத அளவிற்கு தனித்துவமான இலக்கிய முயற்சியாக இது விளங்குகிறது.
எதிர்காலத்தில் நடப்பதாகப் புனையப்பட்டுள்ள இந்த கதையில் வரும் நிகழ்வுகள் எல்லாமே அப்பட்ட்டமாக சமகாலத்தில் சாதியின் பெயரால் இழிவுக்கு உள்ளாக்கப்படும் சமூகத்தின் குரலை பதிவு செய்கிறது. முழுக்க முழுக்க பகடியாக சொல்லப்படுகிற ஒரு கதைக்குள் மொத்த அருந்ததியரின் வாழ்க்கைச் சிக்கல்களையும், அவர்களின் மீதான சாதிய சமூக அரசியலையும் ஒட்டுமொத்தமாக பதிவு செய்து விடுவதே இதன் தனிச்சிறப்பாகவும் இலக்கிய சாதனையாகவும் உள்ளது.
 
Kathayin Thalaippu
 
கக்கா நாட்டில் (ஆம் நீங்கள் சரியாகவே வாசிக்கிறீர்கள், மேலே செல்லுங்கள்!) ஒரு விநோத சூழல் நிலவுகிறது. அதாவது ஒரு பத்தாண்டுகளாக அங்கு எந்த சனாதிபதியும் பதவியில் நீடிப்பதில்லை. ஒரு சனாதிபதி கக்கா நாட்டில் தனக்கு இந்த பொம்மைப் பதவியில் நீடித்திட விருப்பமில்லை எனவும், அதற்கு பதிலாக நாட்டின் வீதிகளையும், கழிவறைகளையும் சுத்தம் செய்து நாட்டு மக்கள் ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் வாழ்ந்திடவும் வழி செய்யும் துப்புரவு பணி செய்வதே மேலானது என்றும் சொல்லி தனது பதவியை உதறுகிறார். நாட்டின் முதல் குடிமகனே இப்படி சொல்லியபடியால் சனாதிபதியின் ஊதியத்தைக் காட்டிலும் ஒரு ரூபாய் அதிகமான சம்பளம் துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்குவதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது. அது முதலே கக்கா நாட்டில் துப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை நிலையும், தரமும் அடியோடு மாறுகிறது.
வேறு எந்த நாட்டிலும் இல்லாத இந்த அசாதரணமான சூழ்நிலையால் நாட்டில் உள்ள அனைத்து சாதியினரும் தாங்களும் துப்புரவு பணி செய்து அப்பணியால் கிடைக்கக் கூடிய சமூக அந்தஸ்தையும், சலுகைகளையும் பெறத் துடிக்கின்றனர். ஆனால் செய்யும் தொழிலை சாதிய அடிப்படையிலேயே நிர்ணயிக்கும் வழக்கம் காலங்காலமாக இருந்த வந்த ஒரு தேசத்தில், அதையே காரணங்காட்டி மலமள்ள நிர்பந்தப்படுத்தப்பட்டு வந்த அருந்ததியர் மக்கள், தற்போது ஏற்பட்ட தலைகீழ் மாற்றத்தால் சமூக ஆதிக்கம் பெற்ற சாதியினராக உருவெடுக்கின்றனர். ஏனைய சாதியினரோ தங்களுக்கும் துப்புரவுப் பணியில் ஈடுபட வாய்ப்பு வேண்டும் எனவும், அதனை சாதியின் காரணத்தை மட்டும் முன்வைத்து அவர்கள் மட்டுமே உரிமையாக்கி கொள்வது நியாமற்றது எனவும் குரல் எழுப்பத் துவங்குகின்றனர்.
துப்புரவு பணிக்கு ஏற்பட்ட திடீர் மவுசு காரணமாக பணியில் சேர்ந்திட கடும் போட்டா போட்டி நிலவிடுகிறது. இதனால் பணியில் சேர்பவர்களின் தரத்தைத் தக்கவைத்து கொள்ள போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதனை சந்தைப்படுத்தி காசு பார்க்க என பல பயிற்சி நிறுவனங்கள் கக்கா நாடெங்கும் முளைக்கின்றன. அருந்ததியரின் ஆதிக்கமே துப்புரவுப் பணியைப் பெருத்தவரை மேலோங்கி இருக்க ஏனைய சாதியினர் அணி சேர்ந்து தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என போராடும் நிலை அந்நாட்டில் உருவாகிறது.
இப்படியே செல்லும் கதையின் உச்சமாக ஏனைய சாதியினர் ’கிருந்ததியரல்லாத கூட்டமைப்பு’ ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வெளிநாடுகளில் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியை தங்கள் வசமாக்கிக் கொள்கின்றனர். (கதையில் அருந்ததியர் ’கிருந்ததியர்’ என்ற பெயரில் தான் வருகின்றனர்) இதனால் கிருந்ததியர்களின் ஆதிக்கம் குறைவதோடு மட்டுமல்லாமல் அதுவரையிலும் நாட்டில் பிற பணிகள் செய்து வந்த ஏனையோரும் அவற்றை விடுத்து துப்புரவுப் பணியில் சேர்வதாக கதை முடிகிறது.
நிசத்தில் நிகழும் சாதிய ஒடுக்குதலை அப்படியே பிரதிபலிப்பதாய் இருக்கிற இந்த பகடிக்குள் துப்புரவு தொழிலாளரின் வேதனைகள், தொழில் ரீதியாக அவர்கள் எதிர்கொள்ளும் அவலங்கள், அவமானங்கள் எல்லாமே விரிவாகவே சொல்லப்படுகிறது. மலம் அள்ளவும் சாக்கடைகளை தூர்க்கவும் நிர்பந்திக்கிற சமூகமே அத்தொழிலைக் காரணங்காட்டியே அவர்களுக்கான சமூக அந்தஸ்த்தை மறுத்து அவர்களை இழிவாக நடத்துவது ஒரு பக்கம் அரங்கேறுகிறது. இன்னொரு பக்கமோ அதே சாதியை காரணங்காட்டி அவர்களுக்கான (கல்வி முதற்கொண்டு எல்லா நிலைகளிலும்) சமவாய்ப்பை மறுப்பதன் மூலமாக அவர்களின் வாழ்க்கைத் தரம் எந்த வகையிலும் மாறாமலும் அதே சமூக அமைப்பே பார்த்துக் கொள்கிறது என்கிற முரண்பாட்டை மறுக்க முடியாத வகையில் பதிவு செய்கிறது இக்கதை.
பற்பல ஆண்டுகளுக்குப் பிறகு, நீண்ட போராட்டங்களுக்குப் பின்னால், பல சிந்தனையாளர்களின் விடாமுயற்சியால் அவர்களுக்கான சட்டப் பாதுக்காப்புகள் வந்து விட்ட போதிலும், பரவலாக இந்தியாவெங்கிலும் அம்மக்களின் வாழ்க்கை பெரிய அளவில் இன்னும் மாற்றங் காணவில்லை என்பதெ நிதர்சனமான உண்மை.