-வருணன்
 
தமிழில் பலர் வலைப்பூக்கள் (Blogs) எழுதத் துவங்கி ஏறத்தாழ பத்து ஆண்டுகள் ஆகின்றன. பலரும் பலவிதமாக எழுதத் துவங்கினர். இணையம் என்பது இலக்கிய தாகம் கொண்டவர்களுக்கு ஒரு புதிய வாசலை திறந்து விட்டது. ஒரே அலைவரிசையில் உள்ள முகமறியா பலர் தங்களிடையே இருக்கும் பொது விருப்பங்களின் பேரில் ஒன்றாக இணைந்தனர். சினிமாவை நேசிப்பவர்கள், இலக்கியத்தை நேசிப்பவர்கள், இசை விரும்பிகள் என பலதரப்பட்ட ரசனை கொண்டவர்களையும் இணைக்கும் பாலமாக இணையம் இருந்தது.
பொதுவாக சமீப காலங்களில் தமிழ் இலக்கிய உலகில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கி இருக்கின்றன. இன்றைய இளைய தலைமுறையினர் மீண்டும் வாசிப்பிறகுள் வரத் துவங்கி இருக்கின்றனர். இது நம் சமூகத்திற்கே மிக மிக ஆரோக்கியமான விசயம். வருடா வருடம் நடக்கிற தமிழகமெங்கும் புத்தகத் திருவிழாக்களில் நிறைய பேர் மிகுந்த ஆர்வத்துடன் புத்தகங்கள் வாங்கிச் செல்கின்றனர். தமிழில் புத்தகங்களுக்கான சந்தை புத்துயிர் பெற்றுள்ளது.
வாசகர்கள் தாங்கள் வாங்கிய நூல்களைப் புகைப்படமெடுத்து சமூக வலைதளங்களில் தமது நட்பு வட்டத்துடன் பகிர்ந்து கொள்வதும், தாங்கள் வாசித்த நல்ல புத்தங்கள் குறித்து தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு அதனை சக வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றனர். இது பல விதங்களில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அடிப்படை இலக்கிய ஆர்வம் உள்ள ஒரு நபர் தமது நட்பு வட்டதில் இவ்வாறு சக நண்பர்கள் பகிரும் தகவல்களின் மூலமாக பல படைப்புகளைப் பற்றி அறிய முடிகிறது. இதனால் அவரது வாசிப்பு விசாலப்படவும், இலக்கியம் குறித்த புரிதலும் பார்வையும் மேம்படவும் செய்கிறது.
ஆனால் இதில் உள்ள ஒரு நடைமுறை சிக்கல் என்னவெனில், வாசிப்பின் மிக ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஒருவருக்கு அதிகமாய் அறிமுகமாவது படைப்புகளின் பெயர்களும், எழுத்தாளுமைகளின் பெயர்களுமே. இந்த எழுத்தாளர் இப்படியான சிறப்புகள் உள்ளவர்… இந்த படைப்பு இந்த வகையில் மிகச் சிறப்பானது…. என்பன போன்ற துண்டுத் தகவல்களே அவருக்கு கிடைக்கப்பெறும் என்பதே நடைமுறை யதார்த்தம்.
ஆனால் ஒரு ஆரம்ப கட்ட இலக்கிய ஆர்வலருக்கு, இது ஆர்வத்தைத் தூண்டுவதற்கு பயன்படுமே தவிர, அடுத்த கட்ட புரிதலுக்கு நகர்வதற்கு, அவ்வாசகருக்கு ஒரு படைப்பாளியைப் பற்றியும், பெயரளவில் அவரது படைப்புகள் குறித்தும் தெரிவது மட்டுமெ போதாது. மாறாக அவற்றுள் சில படைப்புகளையாவது வாசிக்கிற வாய்ப்பு அமைய வேண்டும். இன்று இணையத்தில் வாசிப்போர் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். சொல்லப் போனால், இளையோரில் கணிசமானோர் தேடித் தேடி இணையத்தில் மட்டுமே வாசிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
 
Aziyasudargal
 
தமிழ் இலக்கிய பரப்பு குறித்து ஒரு மிக காத்திரமான அறிமுகத்தையும், தமிழின் முக்கியமான இலக்கிய ஆளுமைகள் குறித்தும், அவர்களது படைப்புகளையும் ஒரே இடத்தில் தொகுத்து அளிக்கிற ஒரு வலைப்பூவாக இருக்கிறது அழியா சுடர்கள்.
நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே … என்ற மறுப்புடனே இந்த வலைப்பதிவர் படைப்புகளை பதிவேற்றுகிறார். மிக விரைவிலேயே இவரது இந்த இலக்கிய பணியை லாபநோக்கற்றது என்பதை விரைவிலேயே புரிந்து கொண்ட பிரபலமான ஆளுமைகள் இந்த வலை தளத்திற்கு தங்களைது ஆதரவை அளித்துள்ளனர்.
2008 ஆம் செப்டம்பர் மாதம் எழுத்தாளர் மௌனி குறித்த ஒரு அறிமுகக் கட்டுரையோடு துவக்கப்பட்ட அழியா சுடர்கள் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு வரை தமிழ் இலக்கிய உலகிற்கு தனது போற்றத்தக்க பங்களிப்பைத் தொடர்ந்து செய்து வந்தது. ‘அழியா சுடர்’ எனும் பெயரே மௌனியின் புகழ்பெற்ற ஒரு சிறுகதையின் தலைப்பு தான். அத்தலைப்பே என்றென்றும் அழியா சுடர்களாக விளங்கும் இலக்கிய படைப்புகளுக்கும் மிகப் பொருத்தமான தலைப்பு என்பதால் அதனையே வலைப்பூவிற்கு பதிவர் சூட்டி இருக்க வேண்டும்.
மிழின் மிக முக்கிமான படைப்பாளிகளின் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகள், அவர்களது நேர்காணல்கள், என எல்லா தளங்களிலும் மிகச் சிறப்பான பதிவுகள் அத்தனையும் இத்தளத்தில் ஒரே இடத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. இது போல ஒரு தளம் தமிழில் நிச்சயம் இல்லை என தாராளமாகச் சொல்லலாம். தமிழ் இலக்கியத்தில் போக்கையும், வளர்ச்சியையும், அது கடந்து வந்திருக்கும் பாதையையும் ஒருவர் புரிந்து கொள்ள ஏறத்தாழ ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை இத்தளம் நமக்கு அளிக்கிறது.
அழியா சுடர்கள் ராம் என்றே அறியப்பட்ட இவ்வலைப்பதிவர் ராம்பிரசாத் ஹரிகரன் ஆவார். இலக்கியத்தின் மீதான தீராக்காதலால தனி நபராக இவரது முயற்சியும் உழைப்பும் மெச்சத்தக்கது.
அழியா சுடர்களின் இன்னொரு சீரிய முன்னெடுப்பாக 2011 மார்ச் மாதம் முதல் உலக இலக்கியம் என்ற பெயரில் இன்னொரு வலைப்பூ துவக்கப்பட்டது. அதில் உலக இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகள் தொடர்ந்து வெளிவரத் துவங்கின. இது தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு இன்னும் சில சன்னல்களைத் திறந்து விட்டன. சிறப்பாக சென்று கொண்டிருந்த அழியா சுடர்கள் 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரு தேக்க நிலையை அடைந்தது. என் போன்று அத்தளத்தை தொடர்ந்த பலரும் அது வெறும் இடைவெளியாக இருந்து விடக் கூடாதா என்று பலரும் எதிர்பார்த்ததனர் என்று தான் சொல்ல வேண்டும். ஆறு வருடங்கள் மிகப் பரபரப்பாக இயங்கி வந்த தளம், அதிலும் பயனுள்ள தீவிர இலக்கியம் பேசி வந்த இத்தளம் அவ்வருடங்களில் செய்ததே முன்னுவமை சொல்ல முடியாத மகத்தான இலக்கியப் பணி தான்.
மகிழ்ச்சியூட்டும் விதத்தில் சில வருடங்களாக தேக்க நிலையில், நீண்ட உறக்கத்தில் இருந்த அழியா சுடர்கள் இப்போது 2017 பிப்ரவரி முதல் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.
நிச்சயம் வாசிக்கவும், இலக்கிய நாட்டமுள்ள நண்பர்களுக்கு அவசியம் பகிர வேண்டிய தளமாக இருக்கிறது,
http://azhiyasudargal.blogspot.in/