Phone / WhatsApp : +91 9686446848
Spoken Tamil classes online - Book a demo

மதிலுகள் (குறுநாவல்) | 1965 | மலையாள மூலம் : வைக்கம் முகம்மது பஷிர் | தமிழில்: சுகுமாரன்

பெரியன சொல்லல் எத்துணை கடினமோ, போலவே எளியன சொல்லலும். வைக்கம் முகமது பஷிர், கேரள இலக்கியப்பரப்பில் மட்டுமல்ல, இந்திய இலக்கிய வரைபடத்திலேயே தவிர்க்க இயலாத ஆளுமை. தன் வாழ்நாளில் பெரும்பகுதி ஒரு கலகக்காரராகவே வாழ்ந்துவிட்ட பஷிரின் எழுத்துகள் இயக்கும் களமும், தளமும் வேறு மாதிரியாக இயக்குவது ஆச்சரியமே. அவர் ஒரு அற்புதமான கதை சொல்லி என இலக்கிய வட்ட நண்பர்கள் பலர் சொல்லி கேட்டதுண்டு. இருப்பினும் சுயானுபவமாக பஷீரை வாசித்தது ‘மதில்கள்’ மூலமாகத் தான். அசாதாரணமான ஒரு கதைசொல்லியின் விரல்வழி மொக்கவிழும் எழுத்துக்கள் ஒரு புனைவுப் பிரபஞ்சத்தை வெகு இயல்பாக சித்தரித்துச் செல்கின்றது. வரையப்பட்ட சித்திரத்திற்குள் வரைந்தவனும் இருக்கிறான்.

பஷிர், எழுத்தாளர் பஷிராகவே வருகின்றார் நாவலுக்குள்ளும். பல முறை சிறைக்கு வெவ்வேறு காரணங்களுக்காக வந்திருந்த போதிலும் இம்முறை அவர் சிறை நுழைவது ராஜதுரோக குற்றத்திற்காக. அரசியல் கைதியாக வந்த அந்த முதல் நாளின் மாலைப் பொழுதில் இருந்தே பஷிர் சகல வசதிகளுடன் தான் வாழ்கிறார். சிறை வாழ்க்கை குறித்து எந்த புகாரும் அவரிடத்தில் இல்லை. பெண்ணின் அருகாமை இல்லையெனும் குறை தவிர அவருக்கு வேறொன்றும் குறையில்லை. புகர்களே இன்றி செல்கிறது அவரது சிறைவாசம். அதிகாரிகளின் கரிசனமும், சக கைதிகளின் நட்புறவும் அவருக்கு சார்பாகவே இருக்கின்றன. அவருக்கு எதிரானதென்று எதுவுமில்லை.

பஷிருக்கு சிறையில் தங்கள் பகுதிக்கு அப்பால் இருக்கும் பெண்களுக்கான சிறை வளாகம் மிகுந்த வசீகரமான இடமாகிப் போகிறது. அங்கிருந்து வருகின்ற ஏதாவதொரு குரலுக்காகவும், எங்கோ அலையும் காற்று இழுத்து வருகின்ற பெண்ணின் வாசனைக்காவும் அவர் ஏங்கிக் கிடக்கிறார். இருப்பினும் அது பெரிய தேடலை அவருக்குள் விதைக்கவில்லை. ஆனால் திடீரென ஒரு நாள் அவருடன் இருந்த பிற அரசியல் கைதிகள் (பதினேழு பேர்) விடுதலையாகி இவர் மட்டும் தனித்து விடப்படுகிறார். தான் மட்டும் நிற்கதியாய் விடப்பட்டது இவருக்கு பய உணர்வையே தோற்றுவிக்கிறது. சிறையில் இருந்து தப்பிக்கக் கூட மனதிற்குள் திட்டம் தீட்டுகிறார். தனிமை இம்சிக்கிறது.

ஏறத்தாழ தன் கதை சொல்லல் பாணியில் செல்லும் மென்மையான பகடி நிரம்பிய மொழிநடை, மதிலுக்கு அப்பால் இவர் இருபத்தியிரண்டு வயது நாராயணியைக் குரல் வழி அறிந்து கொள்ளும் கணம் தொட்டு காதல் பிரவாகிக்கிற எழுத்தாக பெருகி வழிய ஆரம்பிக்கிறது. இவரும் நாரயணியும் தங்களைப் பிரிக்கும் பிரம்மாண்டமான மதிலின் இருபுறமும் நின்று குரலை வழியே மட்டும் தங்களது பிரியங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நாராயணி அடிக்கடி ’இன்று இரவு இதை நினைத்து நான் அழுவேன்’, என்று சொல்லும் போதெல்லாம் அவளது – கதைக்குள் சொல்லப்படாத-  கசப்பான கடந்த காலம் ஒரு வெளிச்சக் கீற்றைப் போல கண நேரம் வாசகரின் மனதில் தோன்றி மறைகிறது.

வார்த்தைகள் கொண்டு தங்களது சுய வர்ணனைகள் மூலமாக, கேட்டுக் கேட்டு தெரிந்து கொள்வதும், பாசாங்கில்லாத அவர்களது காமமும் பால் ஈர்ப்பும் வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தினை தருவதாக அமைகிறது. முதற்கட்ட அறிமுகங்களில் அவளது புனைவு கலந்த சுய விவரணைகளில், அவளே பிற்பாடு புனைவைக் கலைத்து உண்மைகளை பகிரும் தருணங்களில் யதார்த்தம் மிளிர்கிறது. எந்த விதமான நாடகீயத் திருப்பமோ, செயற்கையாக வருவிக்கப்பட்ட உச்சத் தருணமோ இல்லாமல் தெளிந்த நீரோட்டம் போல சுழித்தோடும் கதை சொல்லலே மதில்களை தூக்கி நிறுத்துகிற அம்சங்களாக இருக்கின்றன.

சிறைக்கூடங்களை களமாக வைத்து பல ஆக்கங்கள் வந்துள்ளன. ஆனால் சிறை என்றதுமே மனதிற்குள் ஒரு ஒவ்வாமை எழுகின்றது. பயத்தால் மனக்குட்டை நிரம்புகிறது. சிறைச்சாலைகளை களமாக வைத்து எழுதப்பட்ட எல்லா படைப்புகளிலும் இருண்மைத் தன்மை நிச்சயம் இருக்கும். ஆனால் சிறையும் ஏதோ ஒரு கட்டிடமே என்பது போன்ற ஒரு வெகு இயல்பாக ’மதில்கள்’ வரைந்து செல்கிறது. நிற்க. இந்த சித்திரத்தை பஷிர் என்ற பாத்திரத்தினை முன் வைத்தே நாம் உள்வாங்க முடியுமே தவிர பொதுமைப்படுத்த முடியாது. இருப்பினும் இது வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை தருகிறது என்பதும் உண்மையே.

பஷிரின் எழுத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னும் ஒரு முக்கியமான அம்சம், அவரது எழுத்தெங்கும் பொங்கி வழியும் அன்பு. அவரது எழுத்து முறை மிக மிக நேர்மறையான அம்சங்களால் நிறைந்து காணப்படுகிறது. யார் மீதும், புகார்கள் வாசிக்கப்படுவதே இல்லை. எந்த பாத்திரமும் எதிர்மறையாக சித்தரிக்கப்படவில்லை. கொஞ்சம் வில்லத்தனமான சாயல் கொண்ட பாத்திரங்களைப் பற்றிப் பேசுகிறது போது கூட எழுத்தில் சக மனிதரின் மீதான பேரன்பு பிசிபிசுத்தபடியே இருக்கிறது.

நாராயணியுடன், பேச்சால் வளர்த்தெடுத்த, அன்பைப் பரிமாறிக் கொள்ளும் பிரிய மேலீட்டால், அவர்கள் சிறைச்சாலையில் மருத்துவமனையில் சந்தித்துக் கொள்வதாய் திட்டமெல்லாம் தீட்டி ஆவலோடு காத்திருக்கும் வேளையில், சரியாய் அதற்கு முந்தைய நாள் பஷிர் விடுதலையாவது, உச்ச காட்சியாக வருகிறது. முதல் முறையாக ஒரு கதாபாத்திரத்தோடு வாசகராகிய நாமும் ஒரு மனிதனின் விடுதலையை வெறுக்கிறோம். ஆனால் விதிகள் விளங்கா விதியின் ஆட்டத்தில் உருளும் மனிதப் பதர்கள் தானே நாமெல்லோரும்!