1912 இல் பிறந்த சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான ஒரு ஆளுமைகளுள் தவிர்க்க முடியாத ஒருவர். நல்ல நிலையில் அரசாங்கப் பணியில் இருந்த இவரது தந்தை சுப்ரமணிய ஐயர் ஒரு தேசியவாதியாகவும் இருந்தார். அதனால் இளம் வயதிலேயே செல்லப்பாவிற்கு சுதந்திர வேட்கை அதிகம். அதிலும் இளைஞன் பகத்சிங் இவரை மிகவும் பாதித்திருந்தார். அதனால் தன்னை ஆர்வமுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். பள்ளிப் பருவத்திலேயே ராஜாஜி, பெரியார் போன்ற பெரும் ஆளுமைகளின் பேச்சால் கவரப்பட்டு சுதந்திர தாகம் கொண்ட இளைஞராக வளர்ந்தார். 1941இல் வத்தலக்குண்டில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டு தனது இருபத்தி ஒன்பதாவது வயதில் சிறைக்குச் சென்றும் இருக்கிறார். ஆறுமாத தண்டனை.
 

இளமையில் சி.சு.செல்லப்பா

     இளமையில் சி.சு.செல்லப்பா


 
1934 முதலே எழுதத் துவங்கிய இவர் ’மணிக்கொடி’ இலக்கிய இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். மணிக்கொடி 1932 முதல் 1939 வரை வெளியான ஒரு தமிழ் வார இலக்கிய இதழ். இந்த இதழில் தான் பிற்காலத்தில் பல தமிழ் இலக்கிய ஆளுமைகளாக அறியப்பட்டவர்கள் தங்கள் எழுத்து வாழ்க்கையைத் துவக்கினர். சி.சு., புதுமைப்பித்தன், கு.பா.ராஜகோபாலன் (கு.பா.ரா), ந.பிச்சமூர்த்தி போன்ற ஆளுமைகள் இந்த எழுத்து இயக்கத்தில் முக்கியமானவர்கள்.
சி.சு. ஒரு படைப்பாளி என்பதைத் தாண்டி ஒரு சிறந்த இலக்கிய விமர்சகராகவும் அறியப்படுபவர். சிறையில் இருந்து விடுதலையான பின்பு அவர் ஒரு காகிதத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். பின்னர் பெரு முயற்சி எடுத்து ‘எழுத்து’ எனும் இலக்கிய சிற்றிதழை கொண்டு வந்தார். 1959 முதல் ஏறத்தாழ பத்து வருடங்கள் வெளியான இந்த இதழுக்கு அவரே ஆசிரியராக இருந்தார். நவீன தமிழ் இலக்கிய தடத்தில் மிக முக்கியமான இடத்தை எழுத்து பிடித்தது. (போலவே, எழுத்துக்கு சமக்கால இலக்கிய இதழான தோழர் ஜீவாவின் ‘தாமரை’ இதழும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கை ஆற்றியிருக்கிறது என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.) எழுத்து இதழும் ஒரு எழுத்து இயக்கமாகவெ மாறிவிட்டிருந்தது. அறுபதுகளில் எழுதத் துவங்கிய பல இலக்கிய படைப்பாளிகள் (வெங்கட் சாமிநாதன், பிரமீள் போன்ற இலக்கிய ஆளுமைகள்) எழுத்து பாசறையில் இருந்து வந்தவர்கள் தான். தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் எப்போதும் மிக முக்கியமான இடம் ‘எழுத்து’ இதழுக்கு நிச்சயம் உண்டு. அதனைத் தவிர்த்து எப்போதும் தமிழ் சிற்றிதழ்களின் இலக்கியப் பங்கு எனும் வரைபடத்தை ஒருவரும் முழுமையானதாக்க முடியாது என்பதே நிதர்சனம்.
ஒரு இலக்கிய இதழாக மட்டும் ‘எழுத்தை’ சுருக்கி விட முடியாது. 1959 இல் துவங்கி மொத்தம் 119 இதழ்கள் வெளிவந்தது என்கிறார்கள். 112 இதழ்கள் தொடர்ச்சியாகவும், ஏனைய இதழ்கள் பொருளாதார நெருக்கடியால் காலாண்டிதழாகவும் வெளிவந்தன. ஒவ்வொரு இதழையும், பெரும் போராட்டங்களுக்கும் பண நெருக்கடிகளுக்கும் இடையே செல்லப்பா வெளிக்கொண்டு வந்தாராம். எனவே எழுத்தை ஒரு இதழ் வடிவிலான இலக்கிய இயக்கம் என்று சொல்வதே அவரது உழைப்பிற்கு நியாயம் சேர்ப்பதாக இருக்கும்.
 
Vaadivaasal Old Ad
 
இன்றளவும் சி.சு.செல்லப்பாவின் மிக முக்கிய படைப்பாக கருதப்படும் ‘வாடிவாசல்’ குறுநாவலை அவரே வெளியிட்டார். மேலும் வாடிவாசலை எழுத்து இதழின் சந்தாதாரர்களுக்கு பரிசாகவும் அளித்தார். என்பதுகளுக்கு பிறகு தனது சுதந்திரப் போர் காலகட்டத்தின் நினைவுகளை மையப்படுத்தி ‘சுதந்திர தாகம்’ எனும் மிகப் பெரிய நாவலை எழுதினார். (ஏறத்தாழ 1700 பக்கங்கள் எனவும் அதனை நான்கு தொகுதிகளாக வெளியிட்டதாகவும் கேள்விப்பட்டேன்). மதுரையைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல் காத்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் காலத்தை மையப்படுத்துகிறது. அந்த நாவலுக்காக அவருக்கு 2001 சாகித்திய அகடமி விருது வழங்கப்பட்டது பெருமைக்குரியது என்றாலும் அவர் அதற்கு முன்னரே 1998 இல் இறந்து விட்டது வருத்தமானதே.
மிக இளமைக் காலம் முதலே செல்லப்பாவை இரண்டு விசயங்கள் பின் தொடர்ந்தன. ஒன்று இலக்கியத்தின் மீதான தீராக் காதல். இன்னொன்று இடைவிடாத பொருளாதார நெருக்கடி. முன்னதே பின்னதை அவரது வாழ்நாள் தோறும் இழுத்துக் கொண்டு வந்தது. தனது மனைவியின் நகைகளை விற்றுத் தான் நூல்களைப் பதிப்பித்தார் சி.சு. எழுத்து துவங்கிய காலகட்டங்களில் இதழின் பிரதிகளை இவரே துமந்தலைந்து புத்தகக் கடைகளுக்குக் கொண்டு சேர்ப்பாராம். இன்னல்களும் இல்லாமைகளும் நிறைந்த தனது வாழ்க்கையில் தனக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற கணங்களாக தன எழுத்தை அச்சில் பார்த்த தருணங்களே இருந்தன என்று அவரே சொல்லி இருக்கிறார்.
 
மேலும் வாசிக்க:

  1. http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=29
  2. http://www.rediff.com/freedom/04chella.htm