Phone / WhatsApp : +91 9686446848
Spoken Tamil classes online - Book a demo

கூட்டுக் குடும்ப வாழ்வியல் என்பது பல சாதகங்களைக் கொண்டுள்ளது எனும் போதிலும், அவ்வமைப்பிலும் சில அடிப்படையான நெருடல்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றுள் இரு முக்கியமான அம்சங்களை மட்டும் இக்கட்டுரையில் அவதானிப்போம். மனித இனம் வெவ்வேறு காலகட்டங்களில் பற்பல மாற்றங்களைக் கண்டுள்ளது. பலநெடுங்காலம் கழிந்து மிக மிக சமீபமாகத்தான் பாலின சமத்துவத்தினைப் பற்றி அதிகமாக பேசப்படக் கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. தமிழ் சூழலைப் பொருத்தவரை நாம் நிச்சயமாக பெண் விடுதலை கருத்தியலை அரசியல் தளத்தில் வைத்து பேசிய பெரியாரை இவ்விடத்தில் நிச்சயம் நினைவு கூர்ந்தே ஆக வேண்டும். இவ்விசயத்தில் அவரது பங்களிப்பு அளப்பரியது.

பல காலமாக பெண் தனது வீட்டிற்குள்ளேயே சம உரிமையற்று ஆணின் தேவைகளையும், அவனைத் தாண்டி தனது குடும்பத்தவரது தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான ஒரு இயந்திரமாக மட்டுமே பாவிக்கப்பட்டாள். அவளது வாழ்நாள் இலட்சியமாக இதுவே திணிக்கப்பட்டது. கூட்டுக் குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கான இடம் என்னவாக இருந்தது என்பதை நாம் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குடும்ப அமைப்பில், அது கூட்டுக் குடும்பமோ அல்லது தனிக்குடும்பமோ, பெண்ணின் தலையாய கடமைகளுள் ஒன்றாக சுட்டப்படுவது குடும்பத்தினரின் பசியாற்றுவது. சமையல் என்பது இல்லத்தரிசியின் முதன்மையான பொறுப்புகளுள் ஒன்றாக இருந்து வருகின்றது. அதே வேளையில் ஆணுக்கு பொருளீட்டல் பொறுப்பு தரப்பட்டது. உத்தியோகம் புருஷ இலட்சணம் போன்ற சொலவடைகள் இவற்றை உறுதி செய்கின்றன.

கூட்டுக் குடும்ப வாழ்வியலில், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் என்ற காரணத்தினால், இயல்பாகவே ஒரு பெண் அதிக நேரத்தை சமையலறையில் செலவிட நேர்கிறது. இது அப்பெண்ணிற்கான தனிப்பட்ட நேரத்தினை வெகுவாக திருடி விடுகிறது. அவள் ஒரு வேளை பல்வேறு தனித்திறமை உடையவளாக இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் வளர்த்திடுக்கவும், அதற்கென நேரம் செலவிடவும் வாய்ப்பற்றுப் போகிறது. ஒரு பல்துறை திறமை பெற்ற ஒரு பெண், அடுத்த வேளைக்கு என்ன உணவு தயாரிப்பது என்ற சிந்தனையிலும், அதற்கான முன் தயாரிப்புகளிலுமே நேரம் செலவிட்டுக் கொண்டிருக்க நிர்பந்திக்கப் படுகிறாள். இதுவே அவளது நேரம் வாழ்வின் பெரும்பகுதியை விழுங்கி விடுகிறது. நாளடைவில் அவளது பிர திறமைகள் மழுங்கடிக்கப்பட்டு, சிந்தனை ஓட்டமும் மட்டுப்படுகிறது. ஆண்கள் பெண்கள் கட்டுப்பெட்டித்தனமானவர்கள் என்று குறைபட்டுக் கொள்வது வாடிக்கை. ஆனால் அப்படி ஒரு சூழலை திணித்ததே குடும்ப அமைப்பின் வழியே தாங்கள் தான்  என்பதை ஏனோ அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை. ஒரு பெண் கூட்டுக் குடும்ப சூழலில், பிற குடும்ப உறுப்பினர்களுக்கு சேவை செய்வதிலேயே தனது வாழ்நாளைத் தொலைத்துக் கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

வரலாற்றை திருப்பிப் பார்க்கையில், என்பதுகளில் தமிழக அளவில் கல்வித்துறையில் ஏற்பட்ட மாற்றங்களால், முன் எப்போதும் இல்லாத அளவில் பெண்கள் கல்விச் சாலைகளுக்கு செல்லத் துவங்கினர். இதற்கு விதையிட்ட பெருந்தலைவர் காமராசரை நாம் இவ்விடத்தில் கண்டிப்பாக நினைவுகூற வேண்டும். அவர் மட்டும் அதிக பள்ளிக்கூடங்களை துவக்கி இருக்கா விட்டால், சிறுமிகளை கல்வி கற்க வீட்டில் அனுமதித்திருப்பார்களா என்பது சந்தேகமே.

கல்வி கற்றதன் பயனாக வேலை வாய்ப்பில் மகளிரின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்தது. இன்றோ பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை. இதனால் வீட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. அதனால் குடும்ப அமைப்பில், குறிப்பாக வேலை பகிர்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட வேண்டியது காலத்தில் கட்டாயம் ஆனது. எனவே பெண்களுக்கே வீட்டு வேலைகள் எனும் நிலை மாறி வருகிறது. இது பாலின சமத்துவம் எய்த நல்ல துவக்கம். இத்தலைமுறை ஆண்கள் இது குறித்த புரிதலோடு இருக்கிறார்கள். வரும் காலங்களில் இப்புரிதல் அதிகரிக்கவே செய்யும். ஆனால் கூட்டுக் குடும்ப அமைப்பில் சென்ற தலைமுறை ஆண்களும் சரி, பெண்களும் சரி இம்மாற்றத்தை அவ்வளவு எளிதில் ஏற்கவோ, அங்கீகரிக்கவோ காட்டும் தயக்கம் கண்கூடு.