-வருணன்
 
ஆண்களின் விடலைப் பருவ பித்துகளில் மிக முக்கியமான ஒன்று உடலை கட்டுமஸ்தாக வைத்திருப்பது. உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பதனைத் தாண்டி செதுக்கிய சிற்பம் போல உடலை மாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் பல இளைஞர்களுக்கு உண்டு. மிக லேசாக புஜங்கள் தெரிய ஆரம்பித்த உடனே கைகள் தெரியும்படி சட்டையை ஏற்றி விட்டுக் கொண்டு வலம் வருவது இளங்காளைகள் யார் தான் செய்வதில்லை. பதின்பருவத்தில் ஏறும் இந்த கிறுக்கு, எதனால் வருகிறது? இதற்காக இளைஞர்கள் என்னவெல்லாம் மெனெக்கெடல்களில் இறங்குகிறார்கள். ’பாடி பில்டிங்’ என்று சொல்லப்படும் இக்கலை குறித்த பல புரளிகளும், நம்பிக்கைகளும் நம்மிடையே நிறையவே இருக்கின்றன.
சென்னையில் உள்ள L.V Prasad Film & TV Academy வழங்கிய அஜய் அர்ஜுன் இயக்கத்தில் வெளியான Bodybuilding, Steroids, Supplements & Cinema (2013) என்ற ஆவணப்படம் பாடி பில்டிங் துறையில் ஆர்வமேற்பட்டு நுழையும் பல இளைஞர்களின் மனதில் இயல்பாக எழுகிற சில முக்கிய கேள்விகளுக்கு விடை தேட முற்படுகிறது. சென்னையில் இயங்கி வருகிற சில முன்னாள் ஆணழகர்கள், உடற்பயிற்சியங்கங்களின் இயக்குனர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட நேர்காணல்களின் தொகுப்பாகவே இந்த ஆவணப்படம் (˜12 நிமிடங்கள்) விரிகிறது. முக்கிய கேள்விகளுக்கு விடை தேடுவதே இதன் நோக்கமாக இருப்பதால் பாடி பில்டிங் துறை குறித்த அறிமுகம் பெற்ற ஒரு பார்வையாளனுக்கே இதனோடு ஒருமிப்பது எளிதாக இருக்கும்.
 
Body building
 
உடற்கட்டுக்கும் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? ஆணழகன் போட்டிக்கு உடலை தயார் செய்வதும், ஒரு நபர் வெறுமனே தனது உடல் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி அதற்கான முயற்சிகளில் இறங்குவது ஒன்றா? உடற்கட்டோடு இருக்கும் நபர்கள் எல்லோரும் உண்மையிலேயே தேக ஆரோக்கியத்தோடும், திடகாத்திரமாகவும் இருப்பார்களா? என்பன போன்று சாமானிய மனங்களில் எழும் பல கேள்விகள் அந்தத் துறையைச் சார்ந்த நபர்களிடமே நேர்காணல் கேள்விகளாக முன்வைக்கப்படுகிறது. பின்னணிக் குரலில் விவரணை போல் அல்லாமல் நேரடியாக நேர்காணல் பாணியிலேயே இப்படம் அமைந்திருப்பதால் குறுகிய காலத்தில் நிறையவே பேசியிருக்கிறது. பெரிய அளவில் விளக்கங்களை முன்வைக்காமல், சுருக்கமாக பல கேள்விகளுக்கான விடைகளை நேரடியான பதில்கள் மூலமாகவே நமக்குத் தருகிறது. ஆனால் ஒர்ரிருவரின் தனிப்பட்ட கருத்துகளை பொதுவான கருத்தாக, அப்படியே எடுத்துக் கொள்ளவும் முடியாது என்கிற யதார்த்தத்தையும் நாம் நினைவில் கொள்வது இவ்விடத்தில் அவசியம்.
மிகக் குறைந்த காலத்திற்குள் அதிகமான உடல் எடை வேண்டுமென்ற விபரீத ஆசையில் பல இளைஞர்கள் ஊக்க மருத்துகள் (steroids) அல்லது ஊக்க மருந்துகள் கலக்கப்பட்ட ஊட்டமாவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும், என்று பட்டும் படாமலும், ஆனால் தீர்க்கமாக சொல்லிச் செல்கிறார் ஒரு முன்னாள் தமிழக ஆணழகன் பட்டம் வென்ற ஒரு பாடி பில்டர். ஆனால் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கூட இது போன்ற தகாத, பக்கவிளைவுகள் நிறைந்த ஊக்கமருந்துகளை எடுத்துக் கொள்கிறனர் என்பதே கவலைக்குரிய உண்மை. அதே வேளையில் எல்லா கூடுதல் உணவுகளும் (Food Supplements) மோசமானவை அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இது போன்ற ஊக்கமருந்துகளில் ஒளிந்திருக்கும் ஆபத்தை நன்கு தெரிந்தும் ஏன் பலரும் பயன்படுத்துகின்றனர் என்ற கேள்விக்கு மிகத் தெளிவான பதிலாக ‘புகழின் மீதிருக்கும் போதை’ நமக்குக் கிடைக்கிறது. குறுகிய காலத்தில் பிரபலமாவதையே பிராதன நோக்கமாகக் கொண்டு, தங்களின் உடலையே பணயம் வைத்துச் சூதாடுகின்றனர் என்பது கவலைக்குரியதே.
இந்த் பாடி பில்டிங் மீதான மோகம் தலை தூக்கியது இளைஞர்கள் மத்தியில் தோராயமாக என்பதுகளில் தான். அதற்கு மிக முக்கியமான காரணம் முன்னாள் உலக ஆணழகனும், பிரபல ஹாலிவுட் நடிகருமான அர்னால்ட் ஸ்வாஷின்நேகர் தான். தமிழகத்திற்கு வந்த அவரது திரைப்படங்கள் மற்றும் அவருக்கு அப்போதைய தொழிற்முறை போட்டியாளராக விளங்கிய சில்வெஸ்டர் ஸ்டெலோனின் திரைப்படங்களிலும் அவர்களது உடல் அழகே பிராதனப்படுத்தப்பட்டது. இது ஒரு விதமான கிறக்கத்தை பார்வையாளர்கள் மத்தியில், குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் ஒரு பித்தையே உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து தங்களது பங்கிற்கு இந்திய நடிகர்களும் தங்களின் கட்டுமஸ்தான உடல்களை திரைகளில் காட்டத் துவங்கிட இந்த பித்து இன்னும் தலைக்கேறியது. ஆண்களிடையே பாடி பில்டிங் மோகம் மேலோங்கிட சினிமாவின் தாக்கம் (influence) மிக முக்கியமானது. இதனையும் இப்படம் கவனப்படுத்துகிறது.
இறுதியில் ஆஸ்டின் என்ற ஒரு ஆணழகரின் நம்பிக்கையூட்டும் நேர்காணலோடு படம் நிறைவடைகிறது. பாடி பில்டிங் உங்களுக்கு என்ன தந்துள்ளது என்பதற்கு தனக்கு அது வாழ்க்கையயே தந்திருக்கிறது என்று தன்னம்பிக்கை பொங்கிட சொல்லும் அவர் ஒரு மாற்றுத்திறனாளி. 2013 ஆம் வருடத்தில் எடுக்கப்பட்ட அந்த நேர்காணலில்  அவர் மிஸ்டர் சென்னை மற்றும் அதனைத் தமிழக ஆணழகன் பட்டம் வென்றதாகவும், அதன் பயனாக தனக்கு வேலை கிடைத்ததாகவும் பகிர்ந்து கொள்கிறார். அவரது நம்பிக்கை ஒளிரும் புன்னகையோடு படம் நிறைவடைகிறது.
 
இப்படத்தை காண Bodybuilding, Steroids, Supplements & Cinema (2013)