-வருணன்
 
ஆங்கிலேயர்களின் வருகையால் ஆங்கிலம் நமது மண்ணிலும் நமது மொழியிலும் நுழைந்தது. ஆங்கிலேயர்களுக்கோ அவர்களது கட்டளைகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்காக சேவை செய்திட அவர்களின் மொழி தெரிந்த இந்தியர்கள் அதிகமாகவே தேவைப்பட்டனர். அதனால் இந்த தேவையை, ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொண்டு ஆங்கில வழியில் கல்வி கற்று இந்தியர்கள் சிலர் நல்ல (ஆங்கில) அரசுப்பணிகளில் அமர்ந்து தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டனர்.
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் ஆங்கிலம் பல இடங்களில் பல வகையில் பிரிக்க முடியாத அளவிற்கு கலந்து வேரூன்றிவிட்டது. இந்தியா போன்றதொரு பன்மொழி (Multilingual), பல்கலாச்சார (Multicultural) தேசத்தில் தொடர்பு மொழியாக ஒரு பொதுவான மொழி இருப்பது அத்தியாவசியமே. அதற்கு ஆங்கிலம் நல்ல தேர்வாக (choice) இருக்கும். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
கடந்த வாரங்களில் நாம் ஆங்கில மொழி உலகெங்கிலும் பரவி நிலைத்து விட்டதற்கான காரணங்களை அலசினோம். அதில் சொல்லப்பட்ட பல காரணங்களுள் முக்கியமானதென நாம் பார்த்தது, பல தேசங்களிலும் இன்று ஆங்கில மொழியான பயிற்று மொழியாக இருக்கிறது என்பதே. தாய் மொழி வழிக் கல்வி, ஆங்கில வழிக் கல்வி, இந்த இரண்டில் எது சிறந்தது? இந்த கேள்வி காலங்காலமாக நம்மிடையே இருந்து வருகிறது. ஏறத்தாழ இக்கேள்வி நம்மிடையே ஒரு பட்டிமன்றத் தலைப்பைப் போல உலா வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதன் விடை தான் என்ன?
 
Einstein Quote on Edu
 
 
இதற்கு நேரடியான பதிலை நாம் யோசிப்பதற்கு முன்னர் கல்வியின் தேவை மற்றும் நோக்கம் (scope) என்ன என்பது குறித்து சிந்திப்பது மிக நல்லது. ”கல்வி என்பது வெறும் தகவல்களைக் கற்றுக் கொள்வது என்பதல்ல. மாறாக கல்வி என்பது ஒருவரது மனதை சிந்திக்கத் தூண்டும் ஒருவித பயிற்சி ஆகும்”, என்று நான் சொல்லவில்லை. உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சொல்கிறார். ஒரு மனிதனின் சிந்தனா முறைக்கும் மொழிக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. நமக்கு எத்தனை மொழிகள் தெரிந்திருந்தாலும் நாம் மனதிற்குள் சிந்திக்கிற மொழி என்பது நமது தாய்மொழியாகவே எப்போதும் இருக்கிறது.
ஒருவர் பிறந்தது முதல் தன்னைச் சுற்றி இருக்கிற மனிதர்கள் புழங்கும் மொழியே அம்மனிதரது தாய்மொழி என்னும் அந்தஸ்த்தைப் பெறும். நினைவு தெரிவதற்கு முன்னரே அவர் கேட்டு வளர்ந்த மொழி அவரோடு இரண்டறக் கலந்து விடுகிறது. வளர வளர அவரது சிந்தனைகள் எதைக் குறித்து இருக்கிற போதிலும், அடிப்படையில், அந்த கருத்துக்களை அவர் சிந்திப்பது தாய்மொழியில் தான். தாய்மொழியின் இவ்விடத்தை மட்டும் வேறெந்த மொழியும் எடுத்துக் கொள்ள முடியாது. இதுவே நிதர்சனமான உண்மை.
கற்கிற அனைத்துப் பாடங்களையும் தன்னுடைய தாய்மொழியிலேயே கற்கிற ஒருவது புரிதல் என்பது நிச்சயமாக வேற்று மொழியில் (உதாரணத்திற்கு ஆங்கிலத்தில்) அதே பாடப் பகுதியை கற்கிற ஒருவருடைய புரிதலைக் காட்டிலும் மேம்பட்டதாகவே இருக்கும். இதனை மறுக்க முடியாது. தாய்மொழியில் கற்றல் என்பது பல உளவியலாளர்கள் மற்றும் மொழியியல் ஆய்வாளர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
கற்கிற பாடங்களை புரிந்து கற்றுக் கொள்ள தாய்மொழி உதவிடுகிறது. இதனால் கற்கும் பாடங்களை தெளிவுற கற்பது சாத்தியமாகிறது. இதனால் கற்பவருடைய திறன் சந்தேகத்திற்கு இடமின்றி வளருகிறது. ஆனால் தாய்மொழிக் கல்வி என்பதன் பயன் என்பது இது மட்டும் தானா என்றால், இல்லை என்பது தான் என் உடனடியான பதில். இதற்குச் சான்றாக ஒரு ஆய்வு முடிவை முன்வைப்பது மிகச் சரியாக இருக்கும். அது அடுத்த வாரம்.