Everest | 2015 | Dir: Baltasar Kormákur | Language: English | 121 min
 
சாகசத்தன்மை நிரம்பிய உண்மைக் கதைகள் பல உள்ளன. பெரும்பாலும் தனிமனித சாதனைகளையும், சாகசங்களையும் முன்னிறுத்தி எடுக்கப்படும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களுக்கு (Biopics) என்றுமெ பஞ்சமில்லை. எதையும் சாதிக்க தன்னம்பிக்கை தளும்பும் மனிதனால் இயலும் என்று நம்பிக்கையூட்டுவதே இவ்வகைப் படங்களின் பொதுவான தன்மையாக இருக்கும். இவை தவிர குழுக்களாக இயங்கிய மனிதர்கள் சந்தித்த இடர்பாடுகளை அவற்றை அவர்கள் எதிர்கொண்டு மீண்ட விதங்கள் குறித்த திரைப்படங்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இவை போன்ற பெரும்பாலான திரைப்படங்கள் பொதுவாக நாடகத்தன்மை அதிகம் உள்ளனவாகவோ அல்லது வலிந்து திணிக்கப்பட்ட நாடகீய மிகைகளாகவோ இருப்பதைக் காணலாம்.
உலகின் மிகப் பெரும் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைய வேண்டும் என்ற மலையேறிகளின் ஆசை, 1953இல் டென்சிங் முதன் முதலாக சிகரத்தை எட்டிய பிறகு வேட்கையாகவே மாறிப் போனது. மீண்டும் மீண்டும் மலையேறிகளின் கனவுகளுக்குள் இச்சிகரத்தை தொட்டு விடும் வேட்கை வளர்ந்து கொண்டே இருக்கும் விருட்சமாக இருக்கிறது. எவரெஸ்ட் சிகரத்தை அடையும் நோக்கில் பல நூறு பேர் முயன்றாலும் சிகரத்தை எட்டுவது மிகச் சிலரே. பயணத்தைத் துவங்கிய பலர் தங்களின் வேட்கைக்கு விலையாக தங்கள் உயிரைக் கூட கொடுத்திருக்கின்றனர். பலரது பயணக் கதைகளில் சாகசத்தின் அளவை விஞ்சும் அளவிற்கு சங்கடங்களும் துயரங்களும், இழப்புகளும் நிறைந்துள்ளது.
அப்படி 1996 ஆம் ஆண்டு வந்த சில மலையேறும் குழுக்களின் பயணக்கதையின் உண்மைச் சம்பவங்களின் அடைப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் Everest (2015). மலையேற்றம் தொடர்பான திரைப்படங்கள் என்றவுடன் சினிமா ரசிகர்களின் நினைவிற்கு உடனடியாக வருகின்ற திரைப்படங்களாக Cliffhanger (1993) மற்றும் Vertical Limit (2000) நிச்சயம் இருக்கும். முதல் படம் தனிமனித சாகசத்தையும், இரண்டாவது மலையேறும் குழுவினர் சந்திக்கும் சவால்களையும் மையப்படுத்தி பின்னப்பட்ட கதைகள். இரண்டிலுமே சாகசத் தன்மை மிகுந்திருப்பதனாலேயே அதில் ‘சினிமாத்தனம்’ அதிகமாக இருக்கும். ஆனால் சாகசங்களைத் துரத்தும் மலையேறிகளின் பயணங்களின் அவர்களது கனவுக்கும், யதார்த்தத்திற்கும் இடையேயான தூரத்தை அளப்பது போன்ற திரைக்கதை அமைந்திருப்பதாலேயே எவரெஸ்ட் திரைப்படம் தனித்து விளங்குகிறது. இப்படம் தவறவே விடக்கூடாத படமென்று சொல்ல முடியாது. ஆனால் திரையில் பல முறை அணுக்கப்பட்ட ஒரு களத்தின் இன்னொமொரு கோணத்தை இது கவனப்படுத்துவதால் கவனிக்கப் பட வேண்டிய படமாக இருக்கிறது. அதனாலேயே இப்படத்தை அறிமுகம் செய்யும் எண்ணம் தோன்றியது.
 
Everest Film Poster
இத்திரைப்படமானது Beck Weathers எழுதிய Left for Dead: My Journey Home from Everest என்ற சுயானுபவ புத்தகத்தினைத் (memoir) தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. கதை என்று பெரிதாக ஒன்றுமில்லை. எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயலும் சில குழுக்களின் பயண அனுபவங்களின் தொகுதியே இத்திரைப்படம் என்று கொள்ளலாம். காலமாற்றத்தால் எப்படி தொழிற்நுட்பம் இது போன்ற மலையேற்றக்காரர்களுக்கு பல வசதிகளை வழங்கி உள்ளது என்று நாம் புரிந்து கொள்ளும் அதே வேளையில், என்ன தான் தொழிற்நுட்ப வசதிகளில் துணை கொண்டு பயணப்பட்டாலும் இயற்கையில் பிரம்மாண்டத்திற்கு முன்னே மனிதன் இன்னும் வலுவற்றவனாகவே இருக்கிறான் என்பதையும் நாம் உணர்கிறோம்.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால், பார்வயாளர்களுக்கு சுவாரசியம் கூட்ட மாற்றங்கள் பெரிதாக செய்ததாக தெரியவில்லை. உண்மையில் படத்தின் மூலமாக விளங்கும் நூலை எழுதிய ஆசிரியர் பெக் ஒரு அமெரிக்க மருத்துவர். அவருடைய கதாபாத்திரமும் படத்தில் உண்டு. ஆனால் கதை அவரை மட்டுமே மையம் கொள்ளவில்லை என்பது ஆறுதலானது. மலையேற்றத்தில் ஆர்வமுள்ள அவர் தனது மலையேறும் கனவை நிசமாக்கிக் கொள்ள ஒரு தொழிற்முறை மலையேற்ற நிறுவனத்தை அணுகுகிறார். அவர்கலது குழு 1996 ஆம் ஆண்டு மே மாதம் எவெரெஸ்டின் அடிவாரத்தை அடைகின்ற பொழுது இவர்களைப் போலவே பல்வேறு குழுக்கள் வந்துள்ளதை அறிகிறார்கள். இணைந்து பரஸ்பர ஒத்துழைப்புடன் மலையேறத் துவங்குகின்றனர்.
பொதுவாக நாம் படங்களைப் பார்க்கும் போது ஒரு பார்வையாளராக நமது முன் அனுபவங்களே நமது பார்வை அனுபவத்தை பெரிதும் நிர்ணயக்கிற காரணியாக இருக்கும். கதையோட்டத்தில் கதாபாத்திரங்களின் நிலை இப்படி இருக்கும் என்ற ஊகங்கள் வருவது இயல்பே. அந்த அடிப்படையில் பார்க்கையில், பெக் கதாபாத்திரம் ஒரு நம்பிக்கையில்லாத பாத்திரமாகவே வருகிறது, துவங்கம் முதலே. மலையேறும் ஆர்வத்தில் அவர் வந்து விட்டாரே ஒழிய தனது பயத்தை உதற முடியாதவராகவே அவர் இருக்கின்றார். தன் மீது நம்பிக்கையற்றவராக இருக்கின்ற அதே வேளையில் அவரது மலையேறும் ஆசையே அவரை முன்னகர்த்தும் சக்தியாகவும் விளங்குகிறது. ஒரு கட்டத்தில், அவரது பார்வை தற்காலிகமாக மங்கிப் போக இடையிலேயே நின்று விடுகிறார். அவரது வழிகாட்டியாக வருகின்ற ராப் ஒரு பொறுப்புமிக்க மனிதராகவும், அடுத்தவர் மீது தொழிற்முறையில் அல்லாமல் அவர்பால் கொண்ட மனிதநேயத்தால் உறவாடுபவராக வருகிறார். ஏறத்தாழ படத்தின் நாயகனுக்குரிய அம்சங்களைத் தாங்கி வருவது இவரது பாத்திரமே. ஆனால் இறுதியில் ஏனைய பலரையும் காவு வாங்கிய மோசமான வானிலை இவரையும் விட்டு வைக்கவில்லை.
அதீத நம்பிக்கை நிறைந்தவராக விளங்குகிற ராப், தான் மட்டுமன்றி உடன் வருபவர்களுக்கும் நம்பிக்கை ஊட்டிக் கொண்டே இருக்கிறார், பயண வழியேங்கும். ஆனால் இறுதியாக மரித்துப் போகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையும் அவருக்கு நண்பர்கள் உதவி கிடைப்பதற்கு எதிராகவே அமைந்து விடுகின்றது. ஆனால் அதற்கு நேர்மாறான மனோநிலை கொண்டவராக வரும் பெக், நம்பிக்கையின்றி பயணத்தை துவங்கிய போதிலும் எவரது உதவியுமின்றி தனிச்சையாகவே அதிசயிக்கத்தக்க வகையில் தன்னைக் காத்துக் கொள்கிறார். சிகரத்தை அடையாமல் தனது ஆசை நிராசையான போதிலும் பெக் வாழ்க்கையில் ஜெயித்து விட்டார் என்பதே யதார்த்தமாகிறது.
வாழ்க்கை என்பது பெரிய புதிர் தான். மனிதர்களுக்கு எப்போதும் அதன் விளையாட்டுக்கள் பிடிபடுவதில்லை. மனிதர்கள் தங்களுக்கென ஒரு கணக்கீட்டை வைத்திருந்தால் வாழ்க்கை சில நேரங்களில் அவைகளை அநாயசமாக புரட்டிப் போட்டு விடுகிறது.
இப்படம், இயற்கை முன்வைக்கும் அசாத்தியங்களை வென்றெடுக்க துடிக்கும் மனித முனைப்பை மிக கொஞ்ச அளவிலான நாடகத் தன்மையுடன் முன்வைக்கிறது. படத்தின் ஒரு காட்சியில் மலையேறிகளுக்கிடையே நடக்கும் ஒரு உரையாடலில் முன் வைக்கப்படும் ஒரு கேள்வி, “நீங்கள் ஏன் எவரெஸ்ட் சிகரத்தை தொட முயல்கிறீர்கள்?” அதற்கு யாதொருவரும் தீர்க்கமான பதிலைச் சொல்வதில்லை. சாகசத்தின் மீதான மனித விருப்பும் அது போலவே, தீர்க்கமாய்ச் சொல்ல இயலாத புரியாத புதிர் தான்!