FD0
 
 
– வருணன்
 
அடிப்படை மனித உணர்வுகள் எல்லோருக்கும் பொதுவானவை. குறிப்பாக உறவுகளுக்கு மனிதர்கள் தருகின்ற முக்கியத்துவமும், உறவுகளின் மீதான் அன்பின் பிசுபிசுப்பும் உலகெங்கிலும் பொதுவானது. உணர்ச்சிப்பூர்வமானது. டென்மார்க் நாட்டின் மைக்கேல் டுடாக் டி விட் அவர்களுடைய Father and Daughter என்ற மௌனக் குறும்படம் ஒரு தந்தைக்கும் மகளுக்குமான அன்பின் ஈரத்தை முன்வைக்கிறது.
முதல் காட்சியில் ஒரு தந்தையும் அவருடைய செல்ல மகளும் மிதிவண்டியில் வருவதைக் காண்கிறோம். அவர்கள் செல்லும் பாதையில் இறுதியாக தந்தை ஒரு பெரிய குளம் போலவோ அல்லது ஆறு போலவோ காட்சியளிக்கும் நீர்நிலை அருகிலே வண்டியை நிறுத்தி விட்டு அங்கே இருக்கும் ஒரு படகில் மகளைப் பிரிந்து செல்கிறார். மகளை வாரி அணைத்து பிரிந்து செல்லும் தந்தையின் பிம்பம் தொடுவானை நோக்கி விரைகிறது.  தந்தைக்காக வெகு நேரம் காத்திருக்கும் மகள் சோர்ந்து போய் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு தான் மட்டும் தனியளாய் கிளம்புகிறாள்.
அந்த நாள் முதல் அன்றாடம் தன்னைப் பிரிந்து தந்தை கிளம்பிய அதே இடத்திற்கு வந்து அவரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். நாளடைவில் இது வாடிக்கையாகிறது. எப்போதெல்லாம் அப்பகுதியை அவள் கடக்க நேர்கிறதோ அப்போதெல்லாம் அவள் அந்த இடத்தில் சிறிது நேரமாவது நின்று விட்டு செல்கிறாள். பருவ நிலை மாற்றங்கள் காலம் உருண்டோடுவதைக் காட்டுகிறது. சிறுமி, பதின் வயதினளாகி (Teen ager), இளம்பெண்ணாகிறாள். பிரிந்து சென்ற அவளது தந்தை மீதான ஏக்கமும் அவளோடு கூடவே வளர்கிறது. சக்கரத்தின் சுழற்சி உருண்டோடும் காலத்தைக் குறிக்கும் ஒரு குறியீடாக காட்டப்படுகிறது. அவளுக்கென ஒரு குடும்பம் என்றான பின்பும், தானே ஒரு தாயான பின்பும், அவளுக்குள் இருக்கும் சிறுமியானவள் தன்னைப் பிரிந்து சென்ற தந்தையின் வரவிற்காக காத்திருந்தபடியே இருக்கிறாள்.
ஆண்டுகள் கடக்கின்றன. அந்த நீர்நிலையே வற்றிப் போய் நாணல்கள் மண்டிய ஒரு புதர் வெளி போல உருமாறிக் கிடக்கிறது. இளம்பெண்ணாய் இருந்தவள் இப்போது கிழவியாக நம் முன் நிற்கிறாள். தள்ளாமையோடு ஒரு மிதி வண்டியில் வருகிறாள். தான் வாழ்நாளெல்லாம் செய்து கொண்டிருக்கும் அதே செய்கையை அனிச்சை செயல் போல அன்றும் செய்கிறாள். வழக்கமான அவ்விடத்தில், மிதி வண்டியை நிறுத்துகிறாள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக தனது தந்தையைப் போல இப்போது நாணல்கள் மண்டிக் கிடக்கும், வெறும் சமவெளியாய்ப் போன அப்பகுதிகுள் ஒரு சரிவின் ஊடே இறங்குகிறாள். இடை வரை வளர்ந்து மூடியிருக்கும் புற்களை விலக்கியபடி மேலும் மேலும் உள்ளே நடந்து செல்கிறாள்.
அந்த நாணல் வெளியின் மத்தியில் ஒரு வெற்றிடத்தில் தனது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்னர் தன்னைப் பிரிந்து சென்ற படகு தனியாகக் கிடக்கிறது. அதனை தனது தளர்ந்த, நடுங்கும் விரல்களால் வருடுகிறாள். அப்படியே மெதுவாக நகர்ந்து அந்த படகிற்குள் அமர்ந்து உடல் குறுக்கி படுத்துக் கொள்கிறாள். அவள் ஏதோ தனது தந்தைக்குள் அடைக்கலமாவது போன்ற ஒரு பிரமையை அக்காட்சி பார்வையாளனுக்கு உருவாக்குகிறது.
இறுதிக் காட்சியில், சுருண்டு படுத்திருந்த கிழவி மெல்ல எழுகிறாள். தூரத்தில் தெரியும் ஒரு பிம்பத்தை நோக்கி நடக்கத் துவங்குகிறாள். நடை ஓட்டமாக மாற மாற, கிழவியானவள் காலத்தில் பின்னே சென்று மெள்ள மெள்ள சிறுமியாக உருமாறுகிறாள். தூரத்தில் தெரிந்த பிம்பம் இப்போது அவளது தந்தையென பார்வையாளன் புரிந்து கொள்கிறான். சில நொடித் தயக்கத்திற்குப் பிறகு கரங்களை விரித்து நிற்கும் அவளது தந்தையின் தோள்களுக்கிடையே அவள் சரணாகதியாகிறாள். மேற்சொன்ன இந்த விவரணையை (narration) காட்சியாகப் பார்க்கையில் அந்த கணங்கள் முழுவதும் கவிதை போல இருப்பதை மறுக்க முடியாது.
வசனங்களே இல்லாமல், இசையை மட்டும் துணையாகக் கொண்டு வெறும் ஏழரை நிமிடங்களுக்கும் சற்றே அதிகமாக ஓடும் இக்குறும்படம் நம்மிடையை மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இப்படத்தை இரண்டு கோணங்களில் புரிந்து கொள்ளலாம். கலை இலக்கிய வெளியில் அதிகமாக உணர்வுப்பூர்வமாக பேசப்படாத தந்தை மகள் உறவினை நேர்த்தியான படைப்பாக இதனை எடுத்துக் கொள்ளலாம். இன்னோரு விதத்தில் தனது குடும்பம் செழிக்க உறவுகளைப் பிரிந்து பணி நிமித்தமாக வேரறுந்து தூர தேசம் போகும் தந்தைகளின் வேதனையை மறைமுகமாக இப்படம் காட்டுவதாகவும் கொள்ளலாம்.
மிகப் பரவலான கவனத்தையும் பாராட்டையும் சர்வதேச அளவில் பெற்ற இந்தக் குறும்படம் 2000 ஆம் வருடம் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. பெரும்பான்மையான் விளம்பர மற்றும் குறும்பட களங்களில் மட்டுமே இயங்கி வந்த இப்படத்தின் இயக்குனர் மைக்கேல் டு டாக் இயங்கிய முதல் முழு நீள திரைப்படம (first feature film) The Red Turtle கடந்த வருடம் (2016-இல்) வெளியானது. இதுவும் ஒரு அனிமேஷன் மௌனப்படம் என்பது குறிப்பிடத் தக்கது.
 
தந்தையும், மகளும் குறும்படத்தை கீழ்காணும் சுட்டியில் யூடியூப் தளத்தில் காணலாம்.
https://www.youtube.com/watch?v=r37doBLA2bM