Ikiru| 1952 | Dir: Akira Kurosava | Japanese | 143 min
 
ஜப்பானிய திரையுலகை நினைத்த மாத்திரத்தில் நம்மில் பலருக்கும் நினைவிற்கு வருகிற பெயர் அகிரா குரோசவா. உலக சினிமா இயக்குனர்களுள் தனக்கென ஒரு முக்கியமான இடத்தைத் தனது தனித்துவத்தினால் உருவாகிக் கொண்ட திரைமேதை அவர். அகிராவின் திரைப்படங்கள் என்றவுடனே – அவரது கதையுலகம் குறித்த அறிமுகம் ஓரளவேனும் இருக்கிற ரசிகர்களுக்கு – சட்டென நினைவில் வந்து போவது ’சாமூராய்’களின் கதைகள் தாம். அவரது திரைப்பயணத்தில் பல காலத்தால் அழியாத சாமூராய் படங்களை அவர் தந்திருக்கிறார் என்பது உண்மையே. இருப்பினும் ‘இகிரு’ வித்தியாசமான கதைக்களம் கொண்ட தனித்துவமான ஒரு மென்சோக நாடகம்.
’இகிரு’ என்ற ஜப்பானிய சொல்லுக்கு வாழ (to live) என்பது அர்த்தம். டோக்கியோ நகரில் வாழும் அதிகாரவர்க்க்த்தைச் சேர்ந்த வாட்நாபி. தனது பணியில் முப்பது ஆண்டுகள் விடுமுறையே எடுக்காமல் கடமையாற்றும் அவர், மனைவியின் மறைவிற்குப் பிறகு, தனது ஒரே மகனது வாழ்வே தனது இருப்பின் அர்த்தமென வாழ்ந்து வருகிறார். ஆனால் மகனோ திருமணத்திற்குப் பிறகு தனக்காகவே வாழும் தந்தையை உதாசீனப்படுத்துகிறான். அவரை தன்னோடு வைத்திருப்பது கூட வரவிருக்கும் அவரது ஓய்வூதியத்தை மனதில் வைத்தே எனும் அளவிற்கு அன்பற்ற வரண்ட உறவாகவே இருக்கிறது.
இத்தனை வெறுமையாகச் செல்லும் அவரது வாழ்வில், இன்னுமொரு பேரிடியாய் இறக்குகிறது அவருக்கு வயிற்றுப் புற்றுநோய் இருக்கின்ற செய்தி. நிலைகுலைந்து போகும் அவர் நழுவிக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் அர்த்தம் தேடி அலைவதே படத்தின் கதையாக விரிகிறது.
 
Ikiru Collage
 
படத்தின் கதை மூன்று தளங்களில் இயங்குகிறது. முதலாவது மனிதனின் வாழ்க்கையின் மீதான அர்த்தம் குறித்த சுயதேடல்; இரண்டாவது மக்கள் நலனில் இம்மியும் அக்கறையில்லாத அதிகாரவர்க்கத்தின் சுயரூபம்; மூன்றாவது குடும்ப உறவுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிற ஜப்பானிய பாரம்பரியத்தில் வெளிப்படும் உறவுகளுக்கிடையேயான விரிசல். ஒரு தனி மனிதனின் மென்சோகக் கதைக்குள் இத்தனை அடுக்குகளை வைத்தும், அவற்றை தனித்தனியே திறம்பட கையாண்டிருக்கும் விதமும் அகிராவின் திரை மேதைமையையே காட்டுகின்றன.
நோய் தின்று தீர்ப்பதற்குள், தனது எஞ்சியிருக்கும் நாட்களை வாட்நாபி எப்படி அர்த்தமுள்ளதாய் மாற்ற எடுக்கும் முயற்சிகளைக் கூட மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். ஒரு குடிவிடுதியில் அவர் சந்திக்கிற ஒரு இரண்டாம் தர எழுத்தாளனிடம் தனது கதையைப் பகிர்வதோடு, தனது வசமிருக்கும் பணத்தை செலவழிக்க வழி கேட்க அவனோ குடியிலும், கேளிக்கை விடுதிகளிலும் அப்பணத்தை செலவழிக்கச் செய்கிறான். தானறியாத டோக்கியோ நகரின் பகட்டும், குடியும், போகமும் நிரம்பி வழியும் இரவுகளை முதன் முறையாக வாழ்வில் பார்க்கிறார் வாட்நாபி. ஆனாலும் அது தனது வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் சேர்க்கப் போவதில்லை என்பதை ஒரே இரவில் உணர்ந்தவராக அவனிடமிருந்து விலகுகிறார்.
அவரது பிரிவில் பணிபுரியும் டோயோவை வீதியில் காண்கிறார். அவளோ தனது வேலையை விடப்போவதாகவும் அதற்கு மேலதிகாரியான அவரது ஒப்பம் தேவை என்றும் வேண்டுகிறாள். அவளை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல , அது தனது மகனும் மருமகளும் அவரை தவறாகப் புரிந்து கொள்ளும் தர்மசங்கடத்தையே அவருக்கு தருவதாக அமைகிறது. ஆயினும் அவளுடன் விரும்பி நட்பை வளர்த்துக் கொள்ளும் அவர். ஒரு கட்டத்தில் அவளது துணைக்கு ஏங்கத் துவங்குகிறார். உண்மையில் அவருக்கு அவளது மகிழ்ச்சியான மனநிலை பிடித்துப் போவதாலேயே அவளுடன் இருக்கப் பிரியப்படுகிறார். அவளோ அவர் தன் மீது மோகம் கொள்வதாக கருதுவது போலவே அரங்கேறுகிறது. அவரது பிரியத்தைக் கூட சரியாகக் காட்டத் தெரியாத அப்பாவியாக இருக்கிறார் வாட்நாபி.
இறுதியில் ஒரு தருணத்தில் மிக முக்கியமான ஒரு வாழ்க்கைப் பாடத்தை அவளிடமிருந்து படித்துக் கொள்கிறார். அடுத்தவரை மகிழ்விப்பதில் ஏற்படும் திருப்தியும், மன்நிறைவும் என்பதே. மிக நீண்ட நாட்களாய் சில பெண்கள் தங்கள் பகுதியில் மாசுபட்ட ஒரு இடத்தில் பூங்கா ஒன்றை அமைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் பொறுப்பற்ற அதிகாரமட்டம் அவர்களை அலைக்கழிப்பதையே வாடிக்கையாக்குகிறது. அவரது மரணத்திற்கு முன் அப்பூங்காவை அவரது தனிப்பட்ட தொடர் முயற்சியால் சாத்தியமாக்குகிரார்.
அவருக்கென குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்படும் இரங்கல் நிகழ்வில், அதிகாரிகளின் உரையாடல்கள் வாயிலாக அவரது இரப்பிற்கு முன்னர், பார்வையாளனுக்குத் தெரியாமல் நடந்து முடிந்த விசயங்கள் அனைத்தும் அசைப் போடப்படுகின்றன. இப்பகுதியெ அதிகாரவர்க்கத்தின் மீதான, அதன் போலித்தனத்தின் மீதான நேரடி விமர்சனத்தை முன்வைக்கிறது. மனிதர்களை அற்பர்களாக பாவிக்கும் அதிகாரிகள், தங்கள் நாற்காலிகளின் மீதும், பதிவு உயர்வுகளிலுமே முழுக் கவனத்தோடு இருக்கின்றனர். வாட்நாபி போன்றதொரு லட்சியவாதியின் உண்மையான சாதனையைக் கூட அங்கீகரிக்க மறுக்கின்ற மனதுடையவர்கள் அவர்கள்.
வாட்நாபியின் மகன் உள்பட அவர்களுக்கு ஏன் தனது இறுதி நாட்களில் அவர் இப்ப்டி தலைகீழாக மாறிப் போனார் என்பது விளங்கா புதிராகவே இருக்கிறது. அவரது மகனுக்கே அப்புதிர் விலகவில்லை. அவர்களது உரையாடலுக்கு இடையே பூங்கா அமைந்திருக்கும் அப்பகுதியில் பெண்கள் அவருக்கு மரியாதை செலுத்துமாறு வேண்டிஉள்ளே வருகிறார்கள். அவர்கள் மனதார வெதும்பி கதறி அழுகிறார்கள். இது அதிகாரிகளின் குற்ற உணர்வை மேலும் கூட்டுகிறது. அவர்களது பேச்சு, உண்மையிலே வாட்நாபிக்கு தனது நோய் குறித்து தெரியுமா எனற கேள்வி எழுகிறது. அவர்களது நினைவுகூறல்களின் வழியாக அவருக்கு துவக்கத்திலேயே அது தெரிந்திருந்தது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அறிய வருகின்றனர்.
 
Ikiru - Final Swing
 
படத்தின் இறுதிக் காட்சியில் குடிபோதையில் உச்சத்தில் அவர்கள் தாங்களும் இனி தீவிர மக்கள் பணிக்கு தம்மை அர்ப்பணிக்கப் போவதாக பிதற்றுவதோடு படம் நிறைவுறுகிறது. ஒரு தனி மனிதனின் வாழ்வின் அர்த்தம் தேடுகிற முயற்சியின் வழியாக ஒரு சமூகத்தில் அதிகாரமட்டத்தில் புரையோடிப் போயிருக்கும் அலட்சியத்தை மிக நேர்த்தியாக படம் பிடித்துக் காட்டுகிறார் அகிரா. வெறும் வரட்டு சம்பிரதாயங்களையும், காதிதங்களை மட்டுமே நிறைக்கும் வெற்று நடைம்முறைகளையும் கடைபிடித்துக் கொண்டு, அலுவலகங்களில் குப்பைகளை மட்டுமே சேர்த்து வைக்கின்றனர் அவர்கள். மக்களுக்கு நியாமாக நடக்க வேண்டியதென்னவோ நடந்த பாடில்லை. ஒரு தனிமனித தேடலை கதையாக்கி, அதனுள் ஊடுபாவாக அதிகார மட்டத்தின் மீதான விமர்சனத்தை மிக நேரடியாக வைத்துள்ளதே, அவரது பல படங்களில் இருந்து இப்படைப்பை தனித்துவம் மிக்க படைப்பாக எடுத்துக் காட்டுகிறது.
படத்தின் வாட்நாபி கதாப்பாத்திரத்திற்கு தனது அசாதாரணமான நடிப்பால் உயிரூட்டி இருந்தவர் குணசித்திர நடிகர் தகாசி ஷிமுரா (Takashi Shimura). தொடர்ச்சியாக அகிராவின் பல படங்களில்; இவர் நடித்திருந்த போதிலும், இகிருவில் இவரது பங்களிப்பு மகத்தானது. வெறும் பார்வையிலேயே அப்பாத்திரத்தின் அப்பாவித்தனத்தையும், நோய்மையை அறிந்து வெம்பும் மனவோட்டத்தையும், மகனால் புறக்கணிக்கப்பட்ட ஒரு தந்தையின் மனக்குமுறலையும் பார்வையாளனுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார். அதிலும் படத்தில் இருமுறை அவர் மென்மையாய் அடிக்குரலில் பாடிடும் அப்பாடல் பாடப்பட்ட விதமே நமது மனதை அழுத்துகிறது.
லட்சியவாதங்கள், ஒரு மனிதன் தனக்குள் வாழ்வின் அர்த்தத்தை தேடத் துவங்குவதிலேயே ஆரம்பிக்கிறது!
நல்ல சினிமாவைத் தேடும் ரசிகர்கள் தவற விடக்கூடாத படம் இது.