-வருணன்
 
நமக்கு சினிமா உலகம் பரிச்சயமான அளவிற்கு நிச்சயம் குறும்பட உலகம் தெரிந்து வைத்திருக்கிற வாய்ப்பில்லை. சினிமாக்களை சந்தைப் படுத்த  திரையரங்குகள், தொலைக்காட்சி போன்ற வழிகள் இருக்கின்றன. ஆனால் குறும்படங்களுக்கு அப்படியான வணிகத் தடங்கள் (commercial channels) இது வரையிலும் இல்லாததே அதற்கு முக்கிய காரணமாக சொல்ல முடியும். சினிமா எனும் ஊடகமும் குறும்படம் (Short Film) எனும் ஊடகமும் முற்றிலும் வேறு வேறானவை. அவற்றின் சாத்தியங்களும், அணுகுமுறைகளும் வேறுவேறானவை.
 
What is a Short
 
 
குறும்படங்களுக்கும் முழுநீள திரைப்படங்களுக்குமான (feature films) அடிப்படை வேறுபாடுகள் என்ன? இக்கேள்வி மிக அடிப்படையானது. குறும்படங்கள் குறித்து நாம் பேசுகையில் இதுவே நமக்கு முன்னால் எழும் முதல் கேள்வியாக இருக்கிறது. அடிப்படையில் இரண்டுமே சினிமாவின் இரு வேறு வடிவங்களாக இருக்கும் போதிலும், குறும்படங்கள் திரைப்படங்களைப் போல அதிகமான ஓட்ட நேரத்தில் (running time) எடுக்கப்பட்டவையாக இருக்காது. Academy of Motion Picture Arts and Sciences ‘ஒரு குறும்படம் என்பது அதிக பட்சமாக நாற்பது நிமிடங்களுக்குள் முடிவது போல எடுக்கப்பட்ட படங்கமாகும்’ என வரையறை செய்கிறது.
நமக்கு அறிமுகமில்லாத ஒன்றைப் பற்றி புரிந்து கொள்ளும் முயற்சியை நமக்கு நன்கு அறிமுகமான ஏதேனும் ஒன்றை வைத்துத் துவக்குவது தானே சரியான வழிமுறையாக இருக்க முடியும். ஒரு வகையில் குறும்படங்களை நாம் விளம்பரப் படங்களுடன் ஒப்பிடலாம். விளம்பரம் இல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் உண்டோ? நாம் விளம்பரப் படங்களைக் காணாத நாளே இல்லை எனும் அளவிற்கு நமக்கவை பரிச்சயமானவை. முற்றிலும் விளம்பரப் படங்கள் வணிக நோக்கம் கொண்டவையாக இருப்பினும், சில நொடிகளில் அல்லது ஓரிரு நிமிடகளுக்கு உள்ளாக அவை நமக்கொரு கதை சொல்கின்றன. இந்த இயல்பை நாம் அப்படியே குறும்படத்திற்கும் பொருத்திக் கொள்ளலாம். வெகு சில நொடிகளில் அல்லது ஓரிரு நிமிடங்களில் அவையும் நமக்கொரு கதை சொல்கின்றன.
இன்னொரு கோணத்தில் நாம் சினிமாவை நாவல்கள்/ நெடுங்கதைகளோடும் குறும்படத்தை சிறுகதை அல்லது குறுங்கதைகளோடும் ஒப்பிட முடியும். இலக்கியத்தில் நாவல் வடிவம் பிரம்மாண்டமானது. பல கிளைக் கதைகள் நாவல்களில் வரும். அதற்கு நேர் மாறாக சிறுகதைகள் அளவில் மட்டுமல்ல கதை அணுகுமுறையிலும் மிகச் சுருக்கமானவை. பெரும்பாலும் ஒற்றை கதை முடிச்சையோ அல்லது ஒரு திருப்பத்தையோ கொண்டிருப்பதே சிறுகதைகளுக்குரிய வடிவ இலக்கணமாக இருக்கிறது. இதே இலக்கணத்தை அடியொற்றியே குறும்படங்களுக்கான பொதுவான இலக்கணங்களும் இருக்கின்றன. முந்தையது எழுத்து இலக்கிய வடிவமென்றால், பிந்தையதோ காட்சி வடிவம். இன்னும் சொல்லப் போனால் குறும்படங்களைப் பொருத்தவரை குறுங்கதைகளே மிக செரிவான வடிவ ஒப்பீடாக இருக்க முடியும்.
குறும்படங்களின் நோக்கமும், உருவாக்க முறைகளும் திரைப்பட உருவாக்கத்திலிருந்து முற்றிலும் வேறானவை. திரைப்படங்கள் மிக அதிகமான பண முதலீட்டை கோருவதால் அவை அந்த முதலீட்டை எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவை. நேர் மாறாக பல சமயங்களில் குறும்படங்கள் மிக சிறிய முதலீட்டில் எடுக்கப் படுகின்றன. முதலீடுகளே இல்லாமல் எடுக்கக் கூடிய சாத்தியங்கள் கூட உண்டு. எனவே படைப்பு சுதந்திரம் அதிகம் உள்ள வடிவமாக இயங்குனர்களுக்கு இருப்பது சந்தேகமின்றி குறும்பட வடிவங்களே. வணிக சமரசங்கள் செய்ய வேண்டியது பல சமயங்களில் திரைப்படங்களில் தவிர்க்கவே முடியாத அம்சமாக ஒரு இயங்குனருக்கு இருந்தே தீரும். ஆனால் அத்தகைய ஒரு நிர்பந்தம் குறும்படத்தில் இல்லை என்றே சொல்லலாம்.
 
Jane Campion quote on Shorts
 
நோக்கமே ஒரு குறும்படத்தின் நேரத்தை, அதன் உருவாக்க பாணியை நிர்ணயம் செய்யக் கூடிய அதிமுக்கியமான காரணியாக இருக்கிறது. பொழுதுபோக்கிறாக எடுக்கப்படும் குறும்படங்கள் உண்டு. அவை வடிவில் சிறிதாக இருக்கும் போதிலும் திரைப்படங்கள் போலவே ஜனரஞ்சகமாக இருக்கும். அதுவே ஒரு கருத்தை வலியுறுத்தவோ அல்லது ஒரு கருத்தை பதிவு செய்யவோ ஆவணப்படங்களாகவும் (Documentaries) குறும்படங்கள் எடுக்கப்படலாம். இவற்றில் வணிக நோக்கம் என்பது அறவே இருக்காது.
திரைப்படக் கலை எல்லா கலைகளைப் போலவே மனித உணர்வுகளோடு மிக நெருக்கமான உறவு கொள்பவை. ஒரு திரைப்படமானது பலவிதமான உணர்வுகளை எழுப்பக் கூடியதாக உருவாக்கம் பெற்று இருக்கலாம். பொதுவாக குறும்படங்கள் சுருக்கமான நேரத்திற்குள் அடங்கி விடுவதால் எல்லா உணர்வுகளையும் எடுத்தாள்வதை விடவும் ஒரு குறிப்பிட்ட உணர்வினை மையமிட்ட கதைகளைக் கொண்டிருக்கும். இந்த அடிப்படையில் ஒரு குறும்படம் பார்வையாளர் மத்தியில் எழுப்பிடும் உணர்வோடு, ஒரு கவிதையானது வாசகர் மனதில் கிளர்த்தும் உணர்வோடு ஒப்பிடலாம். கவிதை என்பது பெரும் உணர்ச்சிப் பிரவாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது கூட தேவையில்லை. ஒரு வாசகனை வாசித்து முடித்ததும் ’அட! என்ன் ஒரு சிந்தனை’ என ஒரு சிறு எதிர்வினையை கொடுக்க வைத்தாலே அது அப்படைப்பின் வெற்றியே.