ஆக்கம்: ஆர்.ஆர். சீனிவாசன் | பூவுலகின் நண்பர்கள் | 25 நிமிடம்
 
இந்தியா விவசாய தேசம். பன்நெடுங்காலமாக வேளாண் சமூகமாகவே இந்தியச் சமூகம் இருந்து வருகின்றது. இந்தியா கிராமங்களின் வாழ்கிறது என்று மூத்தோர் சொன்ன வாக்கு, அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயம் கிராமங்களில் தான் இருக்கிறது என்கிற புரிதலின் வெளிப்பாடாகவே இருக்க வேண்டும். இந்திய சமூகத்தின் முதுகெலும்பான விவசாயம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிக் கொண்டிருக்குறது. மாநிலங்கள் பலவாயினும், வேளாண் உற்பத்தியில் மிகப் பெரும்பான்மையாக ஒரு சில மாநிலங்களை மட்டுமே முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறது, தேசம் முழுமையும். இதுவே யதார்த்தம். வேளாண் உற்பத்தி மாநிலங்களுள் மிக முக்கியமானது தமிழகம் என்பதை யாரும் மறுக்கவே முடியாது.
ஆனால் தமிழக விவசாயிகளின் நிலை என்ன? அல்லது ஒட்டு மொத்தமாக தேசிய அளவில் விவசாயியகளின் நிலை இன்று என்ன? குலவைகளும், நாற்று நடுகையிலும் களை பறிக்கையிலும் கேட்கும் உழவுப் பாடல்கள் இன்று பட்டினிச் சாவுகளாகவும், மரண ஓலங்களாகவும் மாறிப் போய் கிடக்கின்றன.
எவர் ஆட்சியில் இருந்தாலும், மத்திய அரசு பாரமுகம் காட்டிட, மாநில அரசு கைநெகிழ்ந்திட விவசாயக் குடியின் துயரோ, கண்ணீரோ யார் கவனத்திற்கும் வாராமலே அடங்கி விடுகிறது. அண்டை மாநிலங்களுக்குள் நதி நீர் பங்கீட்டில் எப்போதும் நிகழும் குடுமிப் பிடி சண்டையை மத்திய அரசு எட்ட நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. அரசானைகள், நீதிமன்ற உத்தரவுகள் என எதுவுமே மதிக்கப்படாமல் உதாசீனப்படுத்தப்படுகின்றன.
முப்போகம் விளைவித்து செழித்தோங்க காரணமான காவிரியைப் புகழ்ந்தே ‘நடந்தாய் வாழி காவேரி’ என்று சொலவடை வழக்கில் வந்தது. இன்றோ மாநில அரசுகளின் அடர் மௌனத்திற்கு மத்தியில் ஆற்று மணற் கொள்ளை தலைவிரித்தாடுகிறது. அதனாலேயே வாழ்வித்த காவேரி இன்று தன்னையே காத்துக் கொள்ள வழியின்றி மடி வரண்டு பாலை போலாகி இருக்கிறது. அதனலேயே இந்த ஆவணப் குறும்படத்திற்கு இறந்தாய் வாழி காவேரி என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது.
 
IRANTHAI VAAZHI KAVERI-1
 
பொதுவாக வெகு சன ஊடகங்கள் வேளாண் பிரச்சனைகளை அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள் போன்ற கருத்தியளாளர்களின் பார்வையில் பின்னணியிலேயே எப்போதும் அணுக முற்படுகின்றன. ஆனால் வேளாண்மையில் உள்ள நடைமுறைச் சிக்கலை அதற்குள் தன்னுடைய, தனது குடும்பத்தினுடைய வாழ்க்கையையே பணயம் வைத்து வயலில் காயும் விவசாயியிடம் இருந்து அல்லவா அணுக வேண்டும். இந்த் ஆவணக் குறும்படம் அத்தகைய ஒரு சரியான கோணத்தில் தான் தமிழக விவசாயிகளின் பிரச்சனைகளைப் பதிவு செய்கிறது.
இந்த ஆவணப்படம் தீர்வுகளை நோக்கி பயணப்பதை படைப்பின் மைய நோக்கமாகக் கொள்ளவில்லை. மாறாக களநிலவரத்தை சமகாலத்தில் பதிவு செய்வதே இதன் மிக முக்கியமான நோக்கமாக இருக்கிறது. மிகச் சமீபமாக தமது இல்லங்களில் ஒரு உயிரைக் காவு கொடுத்த திருவையாறு பகுதியைச் சேர்ந்த வெவ்வேறு கிராமங்களின் இரு வேறு விவசாயக் குடும்ப அங்கத்தினர்களின் நேர்காணலே மிக முக்கியமாக இப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறந்த இருவருமே விவசாயிகள். ஒருவர் தன் கண் முன்னே நீரின்றி பயிர்கள் கருகுவதைக் கண்டும், தனது கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரிப்பது குறித்து மனமுடைந்து மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை, அவரை இழந்து தவிக்கும் அவரது மனைவி மற்றும் உறவுகளின் வழி நாம் அறிகின்றோம். இத்தனைக்கும் அவரது கடன் தொகை ஐம்பதாயிரம் ரூபாய் தான். ஆனால் அந்த எளியவர்களுக்கோ அது மீட்க இயலாத பெருந்தொகை.
 
IRANTHAI VAAZHI KAVERI-2
 
இன்னொருவரின் நிலையோ இன்னும் பரிதாபம். வருமென நம்பிய நீர் வராமல் பொய்த்துப் போக, தான் வாங்கிய இலட்சக்கணக்காக கடனை அடைப்பதெப்படி என்ற கவலை தின்ன, தாளமாட்டாமல் பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவ்விரு குடும்ப உறுப்பினர்களின் பகிர்வின் வழியாக நாம் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. அரசின் அக்கறை மட்டுமல்ல. ஒட்டு மொத்த சமூகமுமே விவசாயிகளின் துயரை அதன் உண்மையான வீரியத்தோடு புரிந்து கொள்ளவே இல்லை. நம்மிடம் பணம் இருக்கிறது. அதனால் உணவு நமக்குத் தடையின்றிக் கிடைக்கும் என்ற மெத்தனப் போக்கு பலரிடம் இருக்கிறது. விவசாயிகளின் தற்கொலைகள் வெறும் எண்ணிக்கையாகிப் போயிருப்பது ஒரு சமூக அவலமே.
கையில் இருக்கிற காசிற்கு உணவு கிடைக்காது எனும் நிலை வருகையில், தமது பணக் காகிதத்தைத் தின்று வயிற்றை நிறைக்க முடியாதென்னும் உண்மை உறைக்கத் துவங்குகையில், தேசத்தின் கடைசி விவசாயியும் தற்கொலை செய்து கொண்டிருப்பான். விவசாயிகளின் தற்கொலைகள் நம் சமூகத்திற்கு சாபமென்பது வெகு விரைவிலேயே தெரிய வரும். ஆனால் அப்போது காலம் வெகுவாகக் கடந்திருக்கும்.
 
இப்படத்தை கீழ்கண்ட யூடியூப் இணைப்பில் காணலாம். 
இறந்தாய் வாழி காவேரி