– வருணன்
 
Dir: Xavier Dolan | Canadian- French | 99min
 
ரத்த உறவுகள் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்வதால் மட்டுமே அது குடும்பம் என்றாகி விடாது. குறிப்பாக சமூக வாழ்க்கைக்கு இருந்த முக்கியத்துவத்தினை மெள்ள தனிமனித சுதந்திரத்தை மையப்படுத்திய தனிநபர் வாழ்க்கை எடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இது குறித்து நாம் சிறப்பான புரிதலுடன் இருப்பது நல்லது. மிக இளம்வயதிலேயே கனடிய- பிரெஞ்சுகாரரான சேவியர் டோலன் தனது திரை படைப்புகள் வழியே உலக சினிமா ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆர்ப்பாட்டமற்ற அன்றாட யதார்த்தங்கள் நிரம்பிய உரையாடல்கள் வழியாகவே கதை சொல்லி, அசாதாரணமான உணர்வெழுச்சியை ஏற்படுத்துவதே இவரது திரைமொழி.  மிகச் சமீபமாக இவர் எழுதி இயக்கிய (படத்தொகுப்பும் செய்த) It’s Only the End of the World (2016)  திரைப்படத்தை இவ்வார சினிமா அறிமுகமாகக் காணலாம்.
நாடக ஆசிரியரும், இயக்குனருமான ழான்-லூக் லகர்ஸ்  எழுதிய மேடை நாடகத்தைத் தழுவி அதே பெயரிலேயே திரைவடிவில் வந்துள்ளது இப்படம். மேடை நாடகத்தின் தழுவல் என்பதாலேயே மிக எளிமையான ஆர்ப்பாட்டமில்லாத ஒரு நாடகமே இப்படம். எண்ணி ஐந்தே பாத்திரங்கள். மிக எளிமையான கதை. கதாபாத்திரங்களின் தொடர்ச்சியான உரையாடல்கள். படைப்பு சொல்ல விழைவதை எப்படிச் சொல்லிச் சென்றது என்பது தெரியாமலே, அதனைப் உணர்ந்து கொள்வதில் தான் இயக்குனரின் மந்திரம் இருக்கிறது.
 
It's Only the End of the World (2016)
 
லூயி ஒரு பிரபலமான நாடக ஆசிரியன். ஓரினச் சேர்க்கையாளன். நீண்டவருட இடைவெளிக்குப் பிறகு தனது குடும்பத்தினரை பார்க்கச் செல்கிறான். பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகான அவனது பயணம் தனித்துவமானது. அவர்களைப் பார்த்து முப்பத்திநான்கு வயதான தனதுயிரையும் உடலையும் ஒரு தீரா வியாதி தின்று கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லி அவர்களிடம் தனது வரவிருக்கும் மரணத்தை அறிவிப்பதே அவனது இப்பயணத்தின் நோக்கம்.
அவனைப் பற்றி பெரிதாக எதுவுமே நேரடியாக உடன் வாழ்ந்தறியாத அவனது தங்கை சூசேன். அவன் இல்லாத போது அவனது அண்ணன் அன்த்துவானை மணந்து கொண்ட அவனது அண்ணன் மனைவி கேத்தரீன். லூயி ஒரு வகையில் தான் இதுவரையிலும் அறியாத தனது நெருங்கிய உறவுகளை சந்திக்கத் தயாராகிறான். ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் அவனது தாய் மார்டீன் மற்றும் தனக்கான அங்கீகாரம் மறுக்கப்படுவதாகவும் தான் மட்டம் தட்டப் படுவதாகவும் நினைத்து வெதும்பும் அண்ணன் அன்ந்துவான்; இவர்கள் எல்லோரையும் சந்திக்கிற ஆவலுக்கும், அதே வேளையில் தனது வரவிருக்கும் மரணத்தை எப்படி சொல்லப் போகிறோம் என்ற தவிப்புற்கும் இடையில் ஊசலாடும் மையப்பாத்திரமாக லூயி இருக்கிறான்.
முதன் முறையாக தனது இளைய அண்ணன் லூயியை பார்க்கும் சூசேன் மட்டும் கொஞ்சம் யதார்த்தமான இணக்கம் காட்டியும், அம்மா அவளுக்கே உரித்தான ஓயாத பேச்சால் தனது அன்பைக் காட்டுகிற போதும் அண்ணன் அன்த்துவான் தனது தாழ்வுமனப்பான்மையை மறைக்கிற மூகமூடியாக சதா அவனைக் காயப்படுத்தும் விதமாகவே சிடுசிடுப்பதை அவன் மௌனமாக ஏற்கிறான். சூசேன் அவனது பால்யத்தின் நினைவுகளை அசை போட அன்பாய் அனுமதிப்பதும், அவனுக்கு அணுசரணையாய் நடந்து கொள்வதுமே லூயிக்கு அப்போதைய ஆறுதலாய் இருக்கிறது. துவக்கத் தயக்கத்தோடு இவனிடம் பழகும் அண்ணி கேத்தரீனோ, தனது கணவனின் தற்குறித்தனத்தைப் புரிந்து கொண்டாலும் அவனை ஆமோதிப்பதைத் தவர வேறு வழியற்றவளாய் இருக்கிறாள். ஓயாது பேசும் தாய், அது தனக்குத் தானே போட்டுக் கொள்கிற வேடம் என்பதுபோல இருக்கிறது, அர்த்தத்துடன் அவனோடு உறையாடுமந்த சில நிமிடங்கள். ஒரு தாயாக அவன் மீது இன்னமும் பொங்கும் பேரன்பை பொதுவாக அதிகமாக பேசுமவள் சில வார்த்தைகள், வாஞ்சையான தொடுகையினாலும் அவனிடம் கடத்தி விடுகிறாள்.
 

இயக்குனர் சேவியர் டோலன்

            இயக்குனர் சேவியர் டோலன்


 
படத்தில் வருகிற ஐந்து கதாபாத்திரங்களில் பார்வையாளனை ஈர்க்கிற கதாப்பாத்திரங்கள் குணங்களில் நேர் எதிர் துருவங்களாய் வருகிற அண்ணனும் தம்பியும் தான். தனது பக்குவமின்மையால் தான் தனக்கு வீட்டில் போதிய மரியாதை கிடைப்பதில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமலே, அந்த அங்கீகார மறுப்பினை மூர்க்கமாக எதிர்க்கிறான். அவனது புரிதலின்மை, தனது சுயத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட, அனைவராலும் விரும்பத்தக்க ஒருவனாய் தனது தம்பி இருப்பதைப் பார்க்கையில் அவனது மூடத்தனங்கள் எல்லை மீறுகின்றன.
அன்ந்துவான் பாத்திரத்திற்கு நேர் எதிராக அத்தனை அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் அமைதியாய் விழுங்கிக் கொள்கிறான். வெறும் மௌனங்களாலேயே அத்தனை அவமதிப்புகளையும் கடந்து செல்கிறான். மாலை தேநீர் பருக அவர்கள் குழுமுகையில் தனது வருகையின் உண்மையான நோக்கத்தை அவர்களிடம் வெளிப்படுத்த வேண்டுமென எண்ணும் அவன், இறுதியில் அவனது தாயார் பேசியபடி உடன்பிறப்புகள் விரும்புகிற வகையில் பேசுகிறான்.
லூயியின் எப்படிபட்ட அன்பும் அடம் பிடிக்கும் அன்ந்துவானை மட்டும் அசைக்க முடியவில்லை. அவனை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்துச் செல்லும் அன்ந்துவான் அவனோடு வழியிலேயே சண்டையிட்ட பின்னர் வீடு திரும்புகிறார்கள். வெறுப்பின் உச்சத்தில் லூயிக்கு அவசரமாய் கிளம்ப வேண்டிய வேலை இருப்பதாக வலிந்து பொய் சொல்லும், அன்ந்துவானின் உள்ளுணர்வைப் புரிந்து கொண்ட லூயி ஒரு வெற்றுப் புன்னகையுடன் பொய் எனினும் அவன் சொல்லியதை ஆமோதிக்கும் விதமாய் கிளம்பத் தயாராகிறான். மிகுந்த கோபத்துடன் தங்கை மூத்த அண்ணனோடு சண்டையிட, தாய் வெளிப்படையாகவே அவனை சாடிட, வழமை போல வெற்றுத் தவிப்போடு செய்வதறியாது திகைத்தவளாய் நிற்கிறாள் கேத்தரீன். லூயி கிளம்பும் சற்று முன்னர் ஒரு திசைமாறிய சிறிய பறவையொன்று வீட்டிற்குள் திக்குத் தெரியாமல் தவித்தபடி இங்கும் அங்குமாய் ஓடுகிறது. சில நொடிகளில், பின்னணியில் இறுதி வரை தான் சொல்ல வந்ததை யாரிடமும் சொல்லாமலே லூயி வெளியேற, அப்பறவை தரையில் கிடக்கிற காட்சி அண்மைக் காட்சியாக (close up) உறைய படம் நிறைவுறுகிறது.
ஏனோ அப்பறவை நமக்கு லூயியாகவே தெரிகிறது!