தமிழ் இலக்கிய மரபில் தனக்கென ஒரு தனி இடத்தையும், தனது படைப்புச் செயல்பாட்டின் மூலமாக வாய்மொழி இலக்கியத்தின் செழுமையை அப்படியே எழுத்து மொழிக்கு கடத்தி வந்தவருமான கி.ராஜநாராயணன் எனும் கி.ராவின் படைப்புகளில் மிக முக்கியமான சிறுகதையான  ’கதவு’ சிறுகதையை இவ்வாரம் நாம் எடுத்துக் கொள்வோம். தமிழ் இலக்கிய ஆளுமைகளுள் முக்கியமானவர் மட்டுமல்ல இவர்; வித்தியாசமானவரும் கூட. மிகத் தாமதமாகவே இவரது எழுத்துலக பிரவேசம் நிகழ்ந்தது சற்றே ஆச்சரியமான ஒரு விசயம் தான். எழுத்துப் பித்து ஒரு மனிதனை எந்த வயதில் வேண்டுமானாலும் ஆட்கொள்ளும் என்பதற்கு இவர் மிகச் சிறந்த உதாரணம். ஏறத்தாழ நாற்பத்தைந்து வயதில் எழுதத் துவங்கிய ’கி.ரா’வின் இரண்டாவது சிறுகதையான ’கதவு’ (முதல் சிறுகதை ‘மாயமான்’) இவரது எழுத்தாளுமையை பறைச்சாற்றி பரவலாக இலக்கிய உலகெங்கிலும் கவனத்தை ஈர்த்தது. 1959 ஆம் ஆண்டு தாமரை இதழில் வெளிவந்தது கதவு.
இலக்கியம் என்றுமே இல்லாதவருக்கும், குரலற்றவர்களுக்குமே குரல் கொடுக்கும். அதுவே அதன் இயல்பு. அதுவே அதன் கடப்பாடு. வறுமையையும், இளமையில் ஏழ்மையையும் வலிக்க வலிக்க சொன்ன படைப்புகள் பல உண்டு. ’கதவு’ம் அதையே தான் தனது மையக் கதைப் பொருளாய்க் கொண்டிருக்கிறது. ஆனால் அதன் உருவாக்கத்தின் அதனித்துவத்தால், சொல்முறையால் தனித்த படைப்பாக முத்திரை பதிக்கிறது. கதை மிக எளிமையானதே.
 
கதைச் சுருக்கம்
மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ரங்கம்மா கூலி வேலை செய்து தனது குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறாள். பிழைப்பின் நிமித்தம் ஊருக்குப் போன கணவனிடமிருந்து நாலைந்து மாதமாக எந்த தகவலும் இல்லை. மூத்தவள் லட்சுமி, சின்னவன் சீனிவாசன், போதாதற்கு ஒரு கைக்குழந்தை வேறு. வீட்டுத் தீர்வையை கட்ட முடியாமல் போகவே, தலையாரி பல முறை கரிசனம் காட்டிய பிறகு, வேறு வழியின்றி ரங்கம்மா இல்லாத போது கதவைக் கழற்றிச் சென்று விடுகிறார். குழந்தைகளைப் பொருத்தவரை அது வெறும் கதவல்ல. அது அவர்களின் பிரதான விளையாட்டுப் பொருள், அவர்களை அவர்களின் கனவுகளோடும், கற்பனைகளோடும் சுமந்து ஆடும் கதவு அவர்களுக்கு பேருந்து. ’கதவாட்டம்’ அவர்களின் மிக விருப்பமான பொழுதுபோக்கு. இப்போது அது இல்லாமல் தவிக்கின்றன குழந்தைகள். அவரவருக்கு அவரவர் கவலைகள். ரங்கம்மா கதவற்ற வீட்டில் குழந்தைகளைக் காக்க போராடி, ஓர் இரவில், குளிருக்குத் தன் கைக் குழந்தையை பறிகொடுக்கிறாள்.
சில நாட்கள் கழிந்து சீனிவாசன் பள்ளிக்கூடத்திற்கு அருகிலுள்ள சாவடிக்குப் பின்புறம் தங்கள் வீட்டின் கதவினைக் கண்டு அதனை ஆர்வம் துள்ள அக்காள் லட்சுமியிடம் அறிவிக்கிறான். இருவரும் சென்று கதவினை வாஞ்சையாய் வருடி இறுகப் பிடித்துக் கொள்வதாக கதை நிறைவுறுகிறது.
 
வாசகனின் குறிப்புகள்
 நம்மில் பலருக்கும் தமது பால்யத்தின் நினைவுகளில் ஏதேனும் ஒரு மூலையில் கதவாட்டம் இருக்கலாம். எனக்கு உண்டு. பொதுவாக ஏழ்மை குறித்த இலக்கியப் பதிவுகளில் பெரியவர்களின் நோக்கிலேயே வாழ்வின் இடர்களும் அதன் வழியே அவர்களது துயரங்களும் பதிவாகும். இன்மையால் இன்னல்களுக்கு ஆளாபவர்கள் வயது வந்தோர் மட்டுமல்ல. அந்த வீடுகளின் குழந்தைகளும் தான். வறுமையில் கொடிது இளமையில் வறுமை என்றார் ஔவையார். தாங்கள் அனுபவிக்கும் துன்பங்களை, உணர்வுப்பூர்வமாக மனமழுத்தும் பாரமாய் சுமக்காத வரம் மட்டுமே குழந்தைகளுக்குக் கிடைக்கும் ஒரே ஆறுதலாகிறது. எதுவும் இல்லை என்று தெரிந்தும் பெரியவர்கள் போல அவர்கள் அயர்ந்துவிடாமல், தங்களின் குழந்தைத்தனத்திற்கே உரிய பரிசுத்தத்தின் பலத்தால் தமது அன்றாடங்களில் வறுமையை கடக்கிறார்கள். கவலைப் பட வேண்டிய எல்லா அம்சங்களும் இருக்கிற ஒரு வாழ்வை வாழும் குழந்தைகள் அந்த பிரக்ஞையே இல்லாமல் ஆடும் கதவாட்டத்தோடு தான் கதை ஆரம்பிக்கிறது.
கி.ரா மிக நேர்த்தியாக பிஞ்சுள்ளங்களின் அகவுலகை அவ்வளவு இயல்பாக, அதிக நாடகத்தனமின்றி, தனது எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பதே இக்கதையின் பலமாக உள்ளது. அதுவே வாசகனை அவர்களின் துயரை கண்டுணரும் முக்கிய காரணியாகவும் விளங்குகிறது. தம்மைச் சூழ்ந்துள்ள வறுமையின் கொடி தங்களை கொஞ்சம் கொஞ்சமாய் இறுக்கிக் கொண்டிருக்கிறது என்ற உணர்வின்றி லட்சுமியும் சீனிவாசனும் தமது வயதிற்கே உரிய சந்தோஷங்களோடு இருக்கின்றனர்.  (இந்த தருணத்தில் இதே போல உணர்வெழுச்சியை ஏற்படுத்தும் இன்னொரு படைப்பாக ஜெயகாந்தனின் ‘பொம்மை’ சிறுகதை நினைவிற்கு வருகிறது.) அற்ப சந்தோசங்கள் தான் மனிதர்களுக்கு – தற்காலிகமாகவேனும்- பல தருணங்களில் இன்னல்களைக் கடக்கும் ஊன்றுகோலாக இருக்கின்றன; லட்சுமிக்குக் வீதியில் கிடைக்கும் அந்த நாய் படம் போட்ட தீப்பெட்டி அட்டை போல.
கதவில்லாத காரணத்தால் குளிர் தாளாமல் பலியாகும் பிஞ்சுக் குழந்தை பலியாவது சோகத்தின் உச்சமெனினும், அது போலவே கதவு இல்லாமல் போனதால் தெருநாய் உள்நுழைந்து காய்ச்சி வைத்திருந்த கஞ்சியை குடித்துவிட்டுப் போய்விடுகிற காட்சி வாசகனுக்கு கதவின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அதிலும் அக்காட்சியில் மூத்தவள் லட்சுமியின் மன ஓட்டங்களாய் பதிவு செய்யப்படுபவை மிக முக்கியமானவை. வறுமை பிள்ளைகளை, மிகக் குறிப்பாக பெண் பிள்ளைகளை அவர்களின் வயதுக்கு மீறிய புரிதலுடையவர்களாகவும், பக்குவமிக்கவர்களாகவும் மாற்றி விடுகிறது. ஒரு எட்டு வயது சிறுமி நாய் உண்டதால் தனக்கு உணவில்லையே என வருந்தவில்லை. மாறாக பணிக் களைப்பில் வீடடையும் அன்னைக்கு உணவிருக்காதே என வருந்துகிறாள். தனக்குக் கிடைத்த படத்தை ஒட்ட சீனிவாசன் பருக்கைகள் கேட்கையில் நடந்தவற்றை அவள் சொல்கிறாள். அவனோ சில இடங்களில் அதனை ஒட்ட முயற்சி செய்து தோற்கிறான். இயல்பாகவே சிறுபிள்ளைகள் தமது இயலாமைகளை அழுகையில் தான் கரைக்கிறார்கள்.
’கதவோடு தன் முகத்தை ஒட்ட வைத்துக் கொண்டாள். அழ வேண்டும் போல இருந்தது அவளுக்கு! சீனிவாசனைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். முத்தமிட்டாள். சிரித்தாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. சீனிவாசனும் லட்சுமியைப் பார்த்து சிரித்தான். அவர்கள் இருவரின் கைகளும் கதவை பலமாகப் பற்றி இருந்தன’.
இவ்விறுதி வரிகள் மனிதர்களுக்கும் அவர்களின் இருப்பிடங்களுக்குமான உறவினை நுட்பமாக சித்தரிக்கின்றன. நேரடியாக அல்ல; மறைமுகமாக. இருக்கிறவர்கள் வீட்டில் பொருட்கள் ஏராளமாய் குவிந்து கிடக்கும். அதனால் அவர்களுடையது ஜடப் பொருட்களின் மீதான ஈர்ப்பு அல்லது வேட்கை என்ற அளவிலேயே நின்றுவிடும். ஆனால் இல்லாதவர் இல்லத்திலோ இருப்பவை சொற்பமெனினும் அதன் மீதான் அக்கறை அதிகமாகவே இருக்கும். உடைந்தால் மீண்டும் வாங்க இயலாத இயலாமையே அதன் காரணமாக இருப்பினும், ஒரு கட்டத்தில் அது அப்பொருள்களின் மீதான பிரியமாக வளர்ந்துவிடுகிறது.
கதவு சிறுகதையானது அதன் சொல்நேர்த்தியின் காரணமாகவே நம்முள் நிலைத்து விடுகிறது. இக்கதையை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.
http://azhiyasudargal.blogspot.in/2010/06/blog-post_03.html