-வருணன்
 
எழுத்து என்பது வாசிப்பு இன்பத்தை தருகின்றது. வாசிப்பால் ஒருவர் அடையும் நிறைவு மிகுந்த நேர்மறையான விளைவுகளை அவரது ஆளுமையில் ஏற்படுத்துவதாக உளவியல் ஆய்வு முடிவுகள்  தெரிவிக்கின்றன. இது சமீபத்தில் ஒரு கட்டுரையை வாசிக்கையில் காணக் கிடைத்த தகவல். நிச்சயம் இது உண்மை தான். தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தின் மூலமாகவே நம்மில் பலர் இதனை உணர்ந்து கொண்டிருப்போம். நமக்கு சுய அனுபவத்தின் மூலமாக முன்னரே தெரிந்த ஒன்றைத் தான் அந்த ஆய்வு ஆய்ந்து தெரிவிக்கிறது. ஆனால் இது மட்டுமே எழுத்தின், வாசிப்பின் நோக்கம் அல்ல என்பதனை நாம் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
சில வாரங்களுக்கு முன்னர் நாம் வரலாற்றிற்கும் புனைவிற்குமான தொடர்பு குறித்து சிந்தித்தோம். புனைவு நிசத்தின் கண்ணாடி. கலாப்பூர்வமாக அது நிசத்தைப் பிரதிபலிக்கிறது. புனைவின் வழியாக நாம் நிசத்தின் (reality) பல பரிமாணங்களைக் கண்டு கொள்ள முடியும். ஒரு எழுத்தாளர் தனது படைப்பின் ஒரு புனைவு வெளியை தன் எழுத்தால் நிர்மாணித்து அதில் கதாப்பாத்திரங்களை உலவ விடுகிறார். அம்மாந்தர்களின் கதையை நமக்கு அப்படைப்பு சொல்கிறது. இம்மனிதர்கள் நிசமல்ல. அவர்கள் உலவும் வெளி (space) நிசமல்ல. ஆனால் அவர்களும், அவ்வெளியும், அவர்களது கதையும் நிசத்தை உள்வாங்கி வளர்த்தெடுத்த படைப்பாளியினுடைய கற்பனையின் வெளிப்பாடே. ’இலக்கிய அனுபவம்’ என்பது எழுதுபவர்களும், தீவிர வாசகர்களும் அடிக்கடி சொல்லக் கூடிய ஒரு பதம். இலக்கிய அனுபவம் என்பது என்ன? அது ஏன் முகியமென பலரும் சொல்கிறனர்?
மனித வாழ்க்கை எவ்வளவு அற்பமானது என்பதனை ஒரு தனி மனித இருப்பை (இருப்பு-existence)  பிரபஞ்சத்தை இருப்பை அதன் பின்னணியில் வைத்துப் பார்க்கையிலேயே நாம் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளலாம். ஒரு மனிதனின் வாழ்நாள் என்பது காலத்தின் பிரம்மாண்டத்தின் முன்னர் ஒன்றுமே இல்லாதது. ஒரு சிறு தூசு. ம்னித தேடல்களுள் முக்கியமான ஒன்று அனுபவத்தினால் கைக்கொள்கிற அறிவு. ஏட்டறிவை விடவும் பட்டறிவு ஆழமானது. இதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. ஆனால் மிக கொஞ்சமான காலத்திற்குள் ஒரு மனிதன் எவ்வளவு அனுபவங்களைப் பெற்றிட முடியுமென்பதை நாம் யோசிக்க வேண்டும். அனுபவத்தால் நாம் பெறக்கூடிய அனுபவங்கள் எல்லாம் சுயானுபவங்களே. ஆனால் அடுத்தவர் வாழ்க்கையைப் படிப்பதன் மூலமாக நாம் பெறக் கூடிய அனுபவமும் அதே அளவு மனித வாழ்க்கைக்கு மிக மிக முக்கியமானது.
 
Quote-Literary experience
 
ஆழமாக எழுதப்பட்ட ஒரு இலக்கியப் படைப்பு எழுத்தாளனின் கற்பனையிலிருந்து உதித்திருந்த போதிலும், அப்படைப்பில் வருகின்ற கதாபாத்திரங்களின் வாயிலாக முன்வைக்கப்படும் மனித வாழ்க்கை உண்மைக்கு மிகவும் நெருக்கமானது. வாசிப்பின் மூலமாக இது சகமனிதருடைய அனுபவத்தில் இருந்து கற்று கொள்வதற்கு இணையான ஒரு அனுபவத்தை வாசகர் ஒருவர் முறையான வாசிப்பின் மூலமாக நிச்சயம் பெற முடியும். இப்படிப் பெறக் கூடிய வாசிப்பு அனுபவம் சுயனுபவங்களுக்கு இணையென்று சொல்ல முடியாத போதிலும் ஒருவர் தனது தீவிர வாசிப்பின் மூலமாக ஏறத்தாழ அதற்கு இணையானதொரு அனுபவத்தை பெற முடியும். இதன் வழியாக வாழும் ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கையை வாழும் வரத்தை வாசிப்பே தருகின்றது. வாசிப்பில் எந்த அளவிற்கு மனோரீதியாக வாசகனுக்கும் படைப்பிற்குமான இடைவெளி குறைகிறதோ அந்த அளவிற்கு அந்த அனுபவம் உண்மையாக வாழ்ந்து மட்டுமே பெறக்கூடிய சுய அனுபவத்திற்கு இணையான ஒரு அனுபவமாக வளரும். இத்தகையதொரு அனுபவத்தையே ‘இலக்கிய அனுபவம்’ என்கிறோம்.
இலக்கிய அனுபவத்தை தருகின்ற வாசிப்பு என்பது ஒரு விதத்தில் மனித மனதைப் பண்படுத்துகிற ஒரு மனப்பயிற்சியே. தரமான உணர்வுப்பூர்வமான வாசிப்பு ஒரு மனிதனை சக மனிதர்களின், சக உயிர்களின் துயரை உணர்ந்து கொள்ளக் கூடிய பக்குவத்தை தருகின்றது. அவனது சிந்தனையை நேர்செய்கிறது. இலக்கிய அனுபவத்தை இயந்திரத்தனமாக அல்லாமல் (பலருடைய இலக்கிய அனுபவம் இப்படிப்பட்டதாகவே இருக்கிறது என்பது வருத்தமானது தான்.) உணர்வுப்பூர்வமாக கண்டடையும் ஒரு வாசகனுக்கு மேற்சொன்ன அத்தனையும் சாத்தியமாகும்.
இலக்கிய அனுபவம் சுய முன்னேற்றத்திற்கான ஒரு சிறந்த வழி. அது ஒரு மனிதனை இன்னும் மேம்பட்டவனாக மாற்றுகிறது. சக மனிதரின் துயரங்களைப் ’உணர்ந்து’ புரிந்து கொள்ள இலக்கிய வாசிப்பு பயிற்றுவிப்பதால் எல்லோர் மீதான இரக்கமும், கருணையும் அதிகரிக்கும். அன்பு தழைக்கும்.