கடந்த வாரம் நாம் ஒருவர் வாசிப்பின் வாயிலாக பெறக்கூடிய இலக்கிய அனுபவம் என்றால் என்ன என்பது குறித்து சிந்தித்துப் பார்த்தோம். ஒரு வகையில் அப்பார்வை அகவயமானது. ஒரு தனிமனிதனுக்கு இலக்கிய அனுபவத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்பதாகவே நமது தேடல் இருந்தது. இதே கேள்வியை நாம் ஒட்டு மொத்த சமூகமும் இலக்கிய அனுபவத்தின் வாயிலாக அடையும் பயன் என்ன எனும் கேள்வியாக விரித்தால் அதற்கான பதில் என்னவாக இருக்கும்?
எழுத்து மட்டுமே சமூக மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியுமா? நல்ல எழுத்தை வாசிப்பதால் மட்டுமே நம்மைச் சுற்றியுள்ள எல்லாமே மாறி விடுமா? இது போன்ற கேள்விகள் நம் மனதில் இத்தருணத்தில் நிச்சயம் எழும். தவறில்லை. சரியான கேள்விகள் தான். ஆனால் இக்கேள்விகளுக்கான விடைகளை நாம் நேரடியாக வரையறுக்க முடியாது. இருந்த போதிலும் விடைகளைத் தேடுகிற பயணத்தில் நாம் பல விசயங்களைப் தெரிந்து கொள்ளலாம்.
தனிமனிதர்கள் சேர்ந்து உருவாவதே சமூகம் எனும் அமைப்பு. இது நமக்கு மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பே இல்லை. அப்படியெனில் சமூக மாற்றம் என்பது நம்மில் இருந்தே துவங்க வேண்டும். இதனையும் நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். சமூகத்தை புரிந்து கொள்வதென்பது மனிதர்களைப் புரிந்து கொள்வதில் இருந்தே துவங்க முடியும். சக மனிதர்களைப் புரிந்து கொள்ளும் அதே நேரத்தில், அது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு, நம்மையே புரிந்து கொள்வது அவசியம். இதற்கு இலக்கியம் பேருதவி செய்கிறது.
இலக்கியத்தின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் எனும் கேள்விக்கு பலரும் பலவிதமான கருத்துக்களை காலந்தோறும் முன்வைத்துக் கொண்டே இருப்பதை நாம் பார்த்து வருகிறோம். கருத்துகள் பலவாக இருக்கிற போதிலும் இலக்கியத்தின் ‘அறம் சார்ந்த இயக்கம்’ என்பது பலராலும் தொடர்ந்து வலியுறுத்தப்படும் ஒரு கருத்தாக இருந்து வருவதை நாம் பார்க்கிறோம். நல்ல இலக்கியம் என்பது நல்ல விசயங்களை மட்டுமே பேச வேண்டுமோ என்பது அப்பதில்களில் நாம் அடிக்கடி முன்னிலைப் படுத்தப்படுவதை நாம் காணலாம். உண்மையில் இலக்கியம் என்பது ஒரு பிராசார ஊடகம் அல்ல. ஒரு இலக்கியப் படைப்பு நீதியைச் சொல்வது முக்கிய அம்சம் எனினும் அது மட்டுமே அதன் நோக்கம் அல்ல.
 
Lenses
 
இலக்கியம் என்பது வாழ்வைப் புனைவில் பதிவு செய்கிறது. வாழ்க்கையின் பல்வேறு சாயைகளை (shades of life) எடுத்துக் காட்டுகிறது. அதுவே அதன் இயல்பாகவும் இருக்கிறது. அப்படியெனில் இலக்கியப் படைப்புகள் உலகில் உள்ள எல்லாவற்றையும் காட்டுகிற போதுதான் அவை முழுமையடைய முடிகிறது. அது காட்டுகிற உலகம் நமக்கு தனிப்பட்ட விதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் ஒரு வாசகனாக நம்மால் அதனோடு நம்மை பிணைத்துக் கொள்ள முடிகிறது. வேறொரு படைப்பு காட்டும் உலகம் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத உலகமாக இருக்கிற பட்சத்தில் அதனுடன் நம்மால் உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியவே முடியாது. அப்போது எனக்கு இப்படைப்பு பிடிக்கவில்லை என்று நாம் விலகுவோம்.
ஒரு வாசகனாய் இந்த ’பிணைத்து கொள்ளல்’ அடிப்படையில் தான் நாம் பிடித்தவை பிடிக்காதவை என தரம் பிரித்து பட்டியலிட்டுக் கொள்கிறோம். ஒரு இலக்கியம் காட்டுகிற வாழ்க்கையோ/ உலகமோ நல்லதாகவோ, மிக மோசமானதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது எந்த நோக்கத்தின் (அல்லது எந்த நோக்கத்திற்காக) அடிப்படையில் அவ்வுலகை தனது புனைவில் கொண்டு வந்துள்ளது என்பதே அதனை நல்ல எழுத்தென்றும் மோசமான எழுத்து என்றும் நிர்ணயம் செய்கிறது. அதுவே இலக்கிய விமர்சனங்களின் முக்கியமான அளவுகோள்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
அதாவது இலக்கியத் தரம் என்பது ஒரு படைப்பின் உள்ளடக்கத்தை விடவும், அப்படைப்பின் ஆதார நோக்கத்தின் அடிப்படையிலேயே அமைகிறது. இலக்கியம் என்பது ஒரு கண்ணாடி போல பல நேரங்களில் வெறுமனே வாழ்க்கையைப் பிரதிபலிக்கும். பதிவு செய்வதே அதன் அடிப்படை நோக்கம். அதற்கு அர்த்தம் கற்பித்துக் கொள்வதும், அதன் வழியாக என்ன பார்க்கிறோம் என்பது வாசகராகிய நம்மைச் சார்ந்தது.
இம்முதல் பகுதியில் நாம் இலக்கிய மதிப்பீட்டிற்கான அளவுகோள்கள் குறித்துப் பார்த்தோம். அடுத்த பகுதியில், எப்படி ஒரு இலக்கியம் சமூக மாற்றத்திற்கான துவக்கமாக இருக்க முடியும் என்பது பற்றி சிந்திக்கலாம்.