முதல் பகுதியில் இலக்கிய மதிப்பீட்டிற்கான அளவுகோல்களைக் குறித்து சிந்தித்த போதிலும், இலக்கியத்தின் வழி சமூக மாற்றத்திற்கான முன்னேடுப்புகள் என்ற இப்பகுதியின் மையக் கருத்தை சற்று சயக்கத்துடனே அணுகுவோம் என நினைக்கிறேன். இதைச் சொல்லக் காரணம், நம்மில் பலருக்கும் இலக்கியத்தின் ‘வாசிப்பு இன்பம்’ மட்டுமே பிரதானமான பயன் பாடாக உள்வாங்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் நம்மில் பலருக்கும் ’வாசிப்பில் உழைப்பைச் செலுத்துதல்’ எனும் சொல்லாடலே விசித்தரமாக இருப்பது தான்.
சற்றே சிந்தித்துப் பார்ப்போமே? ஒரு படைப்பாளி தனது படைப்பை எழுதுவதற்கு முன்னே அதற்கென ஆய்வு செய்ய வேண்டி இருக்கலாம். அப்படைப்பின் மையநோக்கம் வாசகரை சென்றடைய மிகச் சிறந்த ஒரு மொழிநடையை கண்டடைய அவர் அதிகமான உழைப்பைச் செலுத்த வேண்டியதிருக்கலாம். இப்படி ஒரு படைப்பை உருவாக்க உழைப்பைச் செலுத்துவது என்பது அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே. ஆனால் ஒரு வாசகராக ஒரு இலக்கியப் படைப்பை வாசிக்க உழைப்பைச் செலுத்த வேண்டும் என்பதை ’படைப்புச் செயலாக்கத்திற்கான உழைப்பை’ப் போல அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தோடு உள்வாங்கிட முடியாது என்பதே யதார்த்தம்.
எந்த ஒரு இலக்கிய படைப்பும் துவங்குவது மட்டும் தான் ஒரு படைப்பாளியிடம் இருந்து. ஆனால் அது முழுமையடைவது ஒரு வாசகனிடத்தில் தான். எப்படி கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டை பிரித்துப் பார்க்க நினைப்பது இயலவே இயலாத காரியமோ அது போலவே தான் இலக்கியத்தைப் படைப்பதும்-வாசிப்பதும். ஒன்று இல்லாமல் மற்றோன்றுக்கு அர்த்தமே இல்லை. தேவையும் இல்லை.
 
Reading is to the mind
 
இலக்கியத்தின் வழி சமூக மாற்றம் என்பதற்கான முதற்படி எழுத்திற்கும்-வாசிப்பிற்குமான தொடர்பை அதன் முழு அர்த்தத்துடன் உள்வாங்குவதில் இருந்தே துவங்க முடியும். ஏனெனில் சொர்க்கமே நமக்கு வாக்களிக்கப்பட்டிருப்பினும் அதனை அடையும் சரியான வழியை நாம் தேர்ந்து அல்லது தெரிந்து கொள்வது வரை பலனேதுமில்லை. அது போலவே தான் இதுவும். இலக்கியம் ஒரு அற்புதமான ஊடகம். அதன் வழியே பல நல்ல விசயங்களை நாம் எளிதில் வாசிப்பவர் மனதில் ஏற்றிட முடியும். ஆனால் அது சரியான வழியில் உள்வாங்கப்பட வேண்டும். அது அல்லாமல் எந்த ஒரு பயனும் இருக்கப் போவதில்லை.
சமூகம் என்பதே தனிமனிதர்களின் தொகுப்பாக இருக்கிற பட்சத்தில் சமூக மாற்றம் என்பது ஏதோ வெளியில் இருந்த வர வேண்டியது என்ற எதிர்ப்பார்ப்பு பலரிடமும் இருப்பது, சற்றே ஆச்சரியமளிக்கிறது தான். சமூக மாற்றம் என்பது அச்சமூகத்தின் அடிப்படை அலகாக இருக்கக்கூடிய தனிமனிதர்களிடம் இருந்து துவங்கிவது தானே சாத்தியம் !
தனிமனிதர்களின் சுயத்தை செழுமைப்படுத்தும் பெரும் பணியை முறையான இலக்கிய வாசிப்பின் மூலமாக எளிதான செயல்பாடாக மாற்ற முடியுமென்ற அனுகூலமே, இலக்கியத்தின் சமூக மாற்றத்திற்கான ஆகச் சிறந்த பங்களிப்பாக இருக்கும். நல்ல இலக்கியத்தை சரியான வகையில் அணுகுகிற ஒரு வாசகன், முதலில் தன்னைக் கண்டடைகிறான். தன்னைப் புரிவதன் வழியாக சக மனிதனைப் புரிகிறான். சக மனிதர்களைப் புரிந்து கொள்வதன் வழியாக அவன் ஒட்டு மொத்த சமூக இயக்கத்தை- அதனுள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், முரண்பாடுகள், குறைகள் என எல்லாவற்றோடும் சேர்த்தே- புரிந்து கொள்கிறான்.
இவ்வகையான புரிதல் அவனுக்கு எது சமூக கூட்டியக்கத்தில் சரியாக இருக்கிறது. எந்த அம்சம் மாற்றப்பட்டே ஆக வேண்டும். அப்படி மாற்றப்பட வேண்டிய அந்த அம்சத்தை மாற்றுவதற்கான தனது தனிப்பட்ட பங்களிப்பு எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும் என்கிற புரிதலும் அதன் வழியே கிடைக்கிற தெளிவும் ஒன்றன்பின் ஒன்றாக வாய்க்கும். அதுவே சமூக மாற்றத்திற்கான வழித்தடமாகவும் இருக்கும்.