மனிதரும், மொழியும்
—————–

– வருணன்
manithanum-mozhiyum

உலகில் வாழும் கணக்கற்ற உயிர்களில் ஒற்றை உயிராக இருப்பவன் மனிதன். மற்ற எல்லா உயிரினங்களை விடவும் மனிதர்கள் மேம்பட்டவர்களாக இருக்கின்றனர். ஏனைய உயிர்களிடம் இருந்து மேம்பட்டு தனித்துவமான உயிரினமாக மனிதர்களைக் காட்டுவது அவர்களது பகுத்தறிவும், சிந்திக்கும் ஆற்றலும் தான். மனித சிந்தனை வளர்ச்சியில் மிக முக்கியமான அம்சம் கருத்துப் பரிமாற்றம் ஆகும். ஆதி மனிதர்கள் தங்களுக்கிடையே தகவல்களை, தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள ஓவியங்களையும் (paintings) , படங்களையும் (diagrams), குறியீடுகளையும் (symbols) பயன்படுத்தி வந்தனர். உலகின் பல்வேறு இடங்களில் நமக்கு காணக் கிடைக்கிற தொல் குகை ஓவியங்கள் (Ancient Cave Paintings) இதற்கு சான்றுகளாக உள்ளன. மேலே சொன்ன எல்லாவற்றையும் நாம் ஒரே பதத்தில் (terminology) சொல்வதென்றால் Non-verbal Communication என்று சொல்லலாம்.

தகவல் பரிமாற்றத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக மனிதர்கள் ஒலிகளை (sounds) பயன்படுத்தத் துவங்கினார்கள். இந்த காலகட்டத்தில் தான் பேச்சு மொழி (Spoken Language) உருவாகியது. வார்த்தைகளை (words) அடிப்படையாகக் கொண்ட பேச்சு மொழியை நாம் Verbal Communication என்று அடையாளப் படுத்தலாம். பேச்சு மொழி கருத்துப் பரிமாற்றத்தில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. கருத்துகள் பரவலாக பரிமாறிக் கொள்ளப்பட்டது பேச்சு மொழிகள் புழக்கத்திற்கு வர ஆரம்பித்ததற்குப் பிறகு தான். மனிதர்கள் தங்களுக்குள் கருத்துகளையும், தங்களது எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வதற்கு மொழி ஒரு மிகச் சிறந்த கருவியாக அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறது. மனித கண்டுபிடிப்புகளில் மகத்தானதும் மிகச் சிறந்ததும் நிச்சயமாக மொழி தான்.

பேச்சு மொழி மனிதர்களிடையே தகவல் தொடர்பு (Communication) பல மடங்கு மேம்பட உதவிய போதிலும், கருத்துப் பரிமாற்றத்தை எளிமையாக்கிய போதிலும் அதில் சில குறைகள் இருக்கவே செய்தன. மொழி என்பது மிகச் சிறந்த தகவல் தொடர்பு கருவி (communication tool) என முன்னரே பார்த்தோம். பேச்சு மொழியானது வாய்மொழியாக மட்டுமே பரவலாக்கப்படக் கூடிய ஒன்று. ஒரு மொழிக்குரிய பேச்சு மொழியானது மனிதர்களால் பேசப்படும் வரையில் மட்டுமே புழக்கத்தில் (usage) இருக்க முடியும். ஏதோ ஒரு மொழியைப் பேசக் கூடிய கடைசி மனிதர் இறக்கும் போது அவரோடு சேர்ந்தே அந்த மொழியும் இறந்து விடுகிறது. மனித வரலாற்றில் நாம் இப்படி எண்ணற்ற மொழிகளை இழந்திருக்கிறோம்.

நம்மிடையே புழங்கும் மொழிகளைப் பாதுகாப்பது மிக மிக அவசியமானது. ஒரு மொழியானது அதனைப் பேசும் மனிதர்களை, அவர்களது வாழ்க்கையைக் குறித்த முக்கியமான வரலாற்று ஆவணம் (Historical document). மொழியானது பேச்சு வடிவில் (spoken form) மட்டுமே நின்று போகாமல் அதன் அடுத்த கட்டமாக எழுத்து மொழியாக (Written language) வளர்ச்சி அடைந்தது. ஒரு மொழியைப் பாதுகாக்க அது எழுத்து வடிவம் (written form) கொண்டதாக இருப்பது இன்றியமையாதது. ஏனெனில் பேச்சு வடிவில் இருக்கும் மொழியை விடவும், எழுத்துப்பூர்வமாக இருக்கும் மொழியை பாதுகாப்பது என்பது ஒப்பீட்டளவில் சுலபமானது. சொல்லப் போனால் ஒரு மொழியின் வரலாறு என்பதே அம்மொழியின் எழுத்துப்பூர்வமான பிரதிகளைக் கொண்டே மொழியியலாளர்களால் (Linguists / Linguistic experts) வரையறுக்கப்படுகிறது.

அடுத்த பதிவில் எழுத்து மொழியில், எழுத்துக்கள் (Letters / Alphabets) குறித்து நாம் சிந்திக்கலாம்.