ஒரு இலக்கியப் படைப்பு முக்கியமானது என்று சொல்லப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. இலக்கிய ரீதியாக ஒரு படைப்பின் வடிவம் சார்ந்த பரிசோதனைகளின் காரணமாக ஒரு படைப்பு முக்கியத்துவம் பெறலாம். இது ஒரு வகை. வடிவ ரீதியாக மாற்றங்களோ பரிசோதனைகளோ இல்லாத போதும் ஒரு இலக்கியப் படைப்பு எடுத்துக் கொள்ளும் கருப்பொருளுக்காகவும், அதன் வழியே வெளிபடும் அப்படைப்பாளியின் சமூக அக்கறைக்காகவும் முக்கியத்துவம் பெறலாம். இரா.முருகவேள் அவர்களின் ’மிளிர் கல்’ எனும் புதினம் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
அடிப்படையில் வழக்கறிஞராக இருக்கும் முருகவேள் அவர்கள் இலக்கியத்துறையில் மொழிபெயெர்ப்பிலேயே துவக்கத்தில் தீவிரமாக இயங்கி வந்தார். 2014 ஆம் ஆண்டு வெளியான தனது ‘மிளிர் கல்’ வாயிலாக நாவல் இலக்கியத்திற்குள் அடியெடுத்து வைத்தார். சிலப்பதிகாரத்தை, அரசியல்-பொருளாதார நோக்கில் ஆய்வு செய்கிற விதமாக நாவல் இருக்கிறது என்பது மட்டுமல்லாமல், அதனூடே நிகழ்காலத்தின் இரத்தினக் கற்கள் வியாபார அரசியலையும் ஊடிழையாக கதைப் பின்னலுக்குள் கொண்டு வந்த விதமே இந்நாவலின் சிறப்பம்சம்.
 
கதைச் சுருக்கம்
டெல்லிவாழ் JNU முன்னாள் இதழியல் மாணவியான தமிழ் பெண் முல்லை, தனது தந்தை சிறுவயது முதலே ஊட்டி வளர்ந்த பழந்தமிழ் இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்டு, தனக்கு மிக விருப்பமான கண்ணகி குறித்து ஆவணப்படம் எடுக்கிற நோக்கில் தமிழகம் வருகிறாள். அவளது நோக்கம் பூம்புகார் துவங்கி கண்ணகியும் கோவலனும் மதுரை வந்த பயணத்தடத்தினை வழித்தொடர்ந்து கண்ணகி கதையின் முக்கிய அம்சங்களை வரலாற்றுப் பின்னணியில் அலசுவதே. தனக்கு உதவுமாறு இடதுசாரி இயக்கத்தில் தீவிரமாக இயங்கிவருகிற தனது பல்கலைக்கழக சீனியர் நண்பன் நவீனின் உதவியை நாடுகிறாள். போலவே பழந்தமிழர்களின் வாணிபம் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளரும், பேராசிரியருமான ஸ்ரீகுமார் நேமிநாதன். தமிழகத்தில் இரத்தினக் கற்கள் வியாபாரத்தில் கால் பதிக்க முயலும் ஒரு பகாசுர நிறுவனம் அவரது ஆய்வில் தங்களின் தேடலும் உள்ளடங்கி இருப்பதால், அவருடைய ஆய்விற்கு பொருளுதவி செய்கிறார்கள். இதன் விளைவாக ஏற்கனவே கற்கள் வியாபாரம் செய்யும் ஒரு அரசியல் பெரும்புள்ளியின் எதிர்ப்பை பேராசிரியர் எதிர்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது.
இந்த இரண்டு கதைச் சரடுகளும் மிகத் துவக்கத்திலேயே ஒன்றிழைந்து செல்லத் துவங்குகின்றன. பேராசிரியரின் துறை சார் அறிவு தனது இலட்சியத்தை அடைய உதவும் என்றும், தனது ஆவணப்படத்தின் உள்ளடக்கம் அவரது பங்களிப்பால் பல மடங்கு மேம்படும் என்பதை முல்லை அறிந்து கொண்டு அவரது உதவியை நாடுகிறார். எதிர்பாரா எதிர்ப்புகள் தருகிற நெருக்கடியில் ஸ்ரீகுமார் இவர்களுடனே பயணிக்க வேண்டிய நிர்பந்தத்தைத் தருகிறது.
இப்பயணத்தில் வழியே சிலப்பதிகாரமும், கண்ணகியின் கதையும் அரசியல் பொருளாதாரப் பார்வையில் மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது.
 
 
Milir Kal
 
 
வாசகனின் குறிப்புகள்
எழுத்தாளனுக்கு சமூகப் பொறுப்பு அதிகம் உண்டு. சமூகப் பொறுப்பில்லாமல் எழுதக் கூடாது எனும் நிலைப்பாட்டை உடையவர் தோழர் முருகவேள் என நாவலின் பதிப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முற்றிலும் சான்று பகரும் வகையில் அமைந்துள்ளது நாவலின் உள்ளடக்கம். இந்திய மண்ணில் உலகமயமாக்கலுக்குப் பின் பரவலாகிப் போன பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களின் லாபவெறியும், அதில் சிதறடிக்கப்படும், நசிந்து போகும் சாமனியரின் வாழ்வும் கவனிக்கப்பட்டு மீட்சியடைய வேண்டும் எனும் ஏக்கம் அடியோட்டமாய் இருக்கிற கதைக்களம். இருப்பினும் ஒரு தீவிரமான ஒரு களத்தை அப்படியே தீவிரமான ஒரு கதையாக முன்வைத்தால் அது பலரைச் சென்றடையாமல் இது குறித்து முன் அறிமுகமுடைய சில வாசகர்களையே மீண்டும் சென்றடையக் கூடும். எனவே ஒரு சுவாரசியமான கதைக்குள், எளிமையான இடைநிலை எழுத்தின் (சொல்லப்போனால் கேளிக்கை எழுத்தின்) தொனியில் பொது வாசிப்பிற்கு இலகுவாக்கித் தந்து, அதே வேளையில் மையக் கருத்தின் தீவிரத்தன்மையையும் தக்க வைத்திருக்கிறது மிளிர் கல்.
தமிழ் மரபில் மிக முக்கியமான ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றை எடுத்துக் கொண்டு வெறுமனே அதன் சிறப்புகளைப் பட்டியலிட்டு வியந்தோதாமல், அக்களத்தை நடுநிலையுடன், எவ்வித மத, அரசியல் சார்புமின்றி அணுகுகிறார் ஆசிரியர். கண்ணகி கதையை நம்மில் பலர் அறிந்திருந்தாலும், நாம் அதனை அணுகாத கோணத்தில் நமக்கே மீண்டும் அறிமுகம் செய்கிறது இப்படைப்பு.
நிறைய வரலாற்றுத் தரவுகள், கதாபாத்திரங்கள் தங்களுக்குளே நிகழ்கிற உரையாடல்களின் பெரும்பகுதியாக வாசகனுக்கு தரப்படுகிற போதிலும், அது வறட்சியான உரை போலன்றி, அதற்கு முற்றிலும் மாறாக வெகு சுவாரசியமான ஒரு பொழுதுபோக்குக் கதையைப் படிக்கிற உத்வேகத்தை அளிக்கிறது என்பதனை ஆசிரியரின் படைப்புத்திறனுக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். வரலாற்றுத் தரவுகள் என்று நான் ஒற்றைப் பதத்தில் சொல்லிவிட்டு கடந்து விட்டாலும், அதௌ நாவலுக்குள் இயங்குகிற தளமும் விரிவும் மிக பரந்தது. சங்க கால இலக்கியங்களில் இருந்து சரியான இடங்களில் நாவலெங்கும் பரவிக் கிடக்கிற மேற்கோள்கள் எல்லாம் சங்கப் பாடல்களை அப்படியே மேற்கோளாகத் தரப்படாமல், அவற்றின் உரைகள் அர்த்தங்கள் என எளிமைப் படுத்தப்பட்ட வடிவிலேயே இருப்பது பழம் இலக்கிய அறிமுகமில்லாத வாசகனைக் கூட ஈர்க்கிறது. இதன வழியே சங்க இலக்கியங்களை, குறைந்தது சிலப்பதிகாரத்தையேனும் தேடிக் கற்ற வேண்டும் என்ற உந்துதலையும் அது வாசிப்பு அனுபவத்தின் வாயிலாக தருகிறது.
இலக்கிய மேற்கோள்களை தருகிற அதே வேளையில், அந்தந்த காலகட்டங்களில் அதனை ஒட்டிய வணிக-பொருளாதார வரலாற்று தரவுகளை சரியாக பொருத்திக் காட்டுவதன் வழியே பேசப்படுகிற, முன்வைக்கப்படுகிற அனைத்துக் கருத்துக்களும் பல்பரிமாணங்கள் உடையனவாக மாறி விடுகின்றன என்பது சிறப்பு. கதையைச் சொல்லும் உத்தி மிகச் சாதாரணமானதே. ஆனால் இப்படைப்பின் நோக்கம் நிச்சயம் முதலிலேயே சொன்னதைப் போல இலக்கிய வடிவம் சார்ந்த பரிசோதனை முயற்சி அல்ல. மாறாக நம் மண்ணில் நாமறியாவண்ணம் நிகழ்ந்து கொண்டிருக்கிற ஒரு பெருவணிக ஆக்கிரமிப்பை இலக்கியப் பிரதியோடு இணைத்து அது பேசுகிற காலகட்டத்தை, கண்ணகி தொன்மத்தின் வரலாற்றுப் பார்வையோடு மீளவும் புதிதாய் கட்டுடைத்துப் பார்ப்பதே.
என் பார்வையில் பொதுப்புரிதலில் இதுவரை நாம் உள்வாங்கி இருந்த பல விடயங்களை முற்றிலும் புதிதான வெளிச்சம் பாய்ச்சுகிற வகையில் பல இடங்கள் வந்தது மிக முக்கியமான திறப்பாக மனதிற்குப் பட்டது. குறிப்பாக கண்ணகியை புரட்சிப் பெண்ணாகக் கருதுகிறீர்களா என்று ஒரு கதாபாத்திரம் கேட்க அதற்கு வருகின்ற மறுமொழியில் , ”ஆணாதிக்கம் வரையறுத்த எல்லைக்குள்ளேயே கண்ணகியின் கோபமும், மாதவியின் துறவும், மணிமேகலையின் துறவும் இருக்கிறது…” (பக்:222), “கண்ணகி பாண்டியன் நெடுஞ்செழியனை தண்டித்தது உண்மையானால் அவள் தான் உட்பட மாதவி, மணிமேகலை என்று மூவருடைய வாழ்க்கையையும் சீரழித்த கோவலைனையும் தண்டித்திருக்க வேண்டும் (ப:223) போன்ற இடங்கள் பல அடிப்படையான நியாயவாத தர்க்கங்களை முன்வைக்கின்றன.
இவை அல்லாமல் சமகால அரசியல் சமூக விமர்சனங்களையும் மிக கூரான மொழியிலேயே பல இடங்களில் பார்க்க முடிகிறது. “தீர்ப்பு பாட்டுக்கு இருக்கிறது. அரசு தன் போக்கில் போய்கொண்டு இருக்கிறது. வியாபாரம் தன் வழியே நடந்து கொண்டே இருக்கிறது. இந்தியா… எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. “ (ப:91), “வெளிநாட்டு மூலதனம் இருக்கும் இடங்களில் இந்திய அரசு ஈவிரக்கமில்லாமல் தான் நடந்து கொள்கிறது”. (ப:95) போன்ற இடங்களில் கட்சி சாய்வின்றி நேரடியான மொழியிலேயே அரச நிர்வாகம் குறித்த விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. போலவே மத அரசியலை அதன் காலகட்டத்தோடு இணைத்து தர்க்கப்பூர்வமாக அலசுகிற இடங்களையும் (ப:191 இல் வருகிற ஊழ்வினை குறித்தும், மறுபிறவி குறித்தும் வருகிற சமணப்பார்வைகள் குறித்த விமர்சனங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.) வாசகனின் கவனத்தை ஈர்க்கிற இடங்களாக நிச்சயம் இருக்கின்றன.
மிக மிக எளிய மொழிநடையில், தீவிரமான கள ஆய்வுகளின் பயனாகத் தனக்குக் கிடைத்த தகவல்களை அழகாய் ஒரு கதைக்குள் கோர்த்து, ஆசிரியர் தேர்ந்த ஒரு வாசிப்பை நல்கி, அதன் வழியே அறியாத பல புதிய செய்திகளயும், அறிந்ததாய் நினைத்திருக்கும் செய்திகளுக்குள் பல புதிய கோணங்களை அடையாளப்படுத்துகிறார்.