Phone / WhatsApp : +91 9686446848
Spoken Tamil classes online - Book a demo

My Left Foot | 1989 | Dir: Jim Sheridan | 103 min

1932 ஆம் ஆண்டு ஐயர்லாந்தில், டூப்ளின் பிறந்த கிறிஸ்டி பிரவுன், பிறப்பிலேயே செரிப்ரல் பால்சி எனும் உடல் இயக்கம் தொடர்பான ஒருவித நிரந்தரமான குறைப்பாட்டோடு இருந்தார். ஏனைய குழந்தைகள் போல எதையுமே செய்ய முடியாத நிலைமை. அவரது குடும்பமோ மிக மிக சாதாரணமானது. அப்படிப்பட்ட சூழலில் தனது தாயின் தளராத ஊக்கத்தினை மட்டுமே தனது ஒரே ஊன்றுகோலாகக் கொண்டு சாதனையாளராக எழுந்த கதையே இப்படத்தின் வாயிலாக திரைவடிவம் பெற்றுள்ளது.

தனது உடலில் இடது காலை மட்டுமே இயல்பாக இயக்கும் ஆற்றல் பெற்ற கிறிஸ்டி பின் நாட்களில் ஒரு ஓவியராகவும், கவிஞராகவும், தனது சுயசரிதையை எழுதியதன் வாயிலாக ஒரு எழுத்தாளராகவும் பரிணமித்தார். அவரது இருபத்தியிரண்டாவது வயதில், 1954 ஆம் ஆண்டு, வெளியான அவரது சுயசரிதையே My Left Foot. அப்புத்தகத்தை தழுவியே ஜிம் ஷெரிடன் இப்படத்தை இயக்கினார். கிறிஸ்டி பிரவுன் எனும் அசாத்தியமான தன்னம்பிக்கை தளும்பும் மனிதனின் வாழ்க்கைக் கதையை இப்படம் எடுத்துச் சொல்கிறது.

இயற்கையே அவனது வஞ்சிப்பது போல பிறப்பிலேயே கிறிஸ்டியின் நோய் அவனை முடக்கிப் போடுகிறது. பிரவுன் குடும்பம் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்கிற அளவிற்கு பெரிய அளவில் இல்லை. மிக சாதரணமான ஒரு ஐரிஷ்காரராக அவரது தகப்பனர் இருக்க, பல உடன் பிறப்புகளுடன் மிக சாதாரண வாழ்க்கையே அவருக்கு வாய்த்தது. அவரது தாயார் பிரிச்ஜட் பிரவுன் தான் உண்மையில் அந்த குடும்பத்தை தாங்கிய ஒரே தூண். தனது அசாத்தியமான தன்னம்பிக்கையே நிச்சயமாக கிறிஸ்டி அவரது தாயாரிடம் இருந்து தான் பெற்றிருக்க வேண்டும். பள்ளிக்குச் செல்லாமல் வீட்டினுள் முடங்கிக் கிடந்த கிறிஸ்டி தானே முயன்று கற்கிறார். உடன் பிறப்புகளும், சுற்றத்தவரும் அவரை ஒதுக்காமலும், ஏளனம் செய்யாமலும் அரவணைத்துக் கொண்டது மட்டுமே அவரது வாழ்வின் மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது.

நோய் தன்னை முடக்கினாலும், தனது தளராத தன்னம்பிக்கையால் அவர் ஒரு இயல்பான மனிதன் வாழும் வாழ்க்கையையே வாழ முற்படுகிறார். எச்சூழலிலும் பிறரிடம் இருந்து இரக்கத்தை கிறிஸ்டி வேண்டுவதே இல்லை. பதின் வயதைக் கடக்கும் கிறிஸ்டி, அவ்வயதிற்கே உரிய கனவுகள் நிரம்பி இருக்கிறார். அவரது முதல் காதல் நிராகரிக்கப்படுகிறது. அதனால் அவர் துவண்டு போகவில்லை. மருத்துவர் ஐலின் கோல், தனது மருத்துவமனையில் அவர் போன்றவர்களுக்கு சிகிச்சை அளித்து, அந்நோயைப் பற்றிய ஆய்வையும் மேற்கொள்கிறார். அவ்வேளையில் கிறிஸ்டியின் நிலை குறித்து அறியும் அவர் தனது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறார். முதலில் தனது வீட்டுச் சூழல் கருதி சிக்கிச்சையை மறுக்கும் கிறிஸ்டி, பின்னர் அது இலவச சிகிச்சை என்று தெரிந்தவுடன் சம்மதிக்கிறார்.

அவர் மீதான தனது காதலை வெளிப்படுத்தும் போது, ஐலின் உண்மையில் வைத்திருந்தது ஒரு மருத்துவருக்கே உரிய கரிசனை மட்டுமே என்று புரிந்து கொள்ளும் கிறிஸ்டி, மீண்டும் தான் நிராகரிக்கபட்டதாக புரிந்து கொள்கிறார். தனது தாயின் பேரன்பின் பக்கபலத்தோடு அலைக்கழியும் மனதை ஓவியத்தின் மீது செலுத்துகிறார். ஐலின் மீண்டும் அவர் வாழ்வில் வருவதைக் கூட சகஜமாக ஏற்கும் அளவிற்கு காலம் அவருக்கு பக்குவத்தை வழங்குகிறது. அச்சுழலில் தான் அவருக்கு தனது கதையை எழுதிட வேண்டும் என்ற எண்ணம் உதிக்கிறது. அதுஅவரது வாழ்வைப் புரட்டிப் போடுகிறது. உலகம் அவரது கதையின் வாயிலாக ஒப்பற்ற மானுட தன்னம்பிக்கையின் பேரொளியை தரிசிக்கிறது. அவர் புகழடைகிறார். இறுதியில் அவரைப் பார்த்துக் கொள்ளும் செவிலி மேரியிடம் அவரது அன்பைத் தெரிவிக்க், அதனை மேரியும் ஏற்றுக் கொள்கிறார்.

உலகெங்கும் சினிமா ஆர்வலர்களால் தலைசிறந்த தன்னம்பிக்கைத் திரைப்படங்களுள் (Motivational Cinema) ஒன்றாக இப்படம் இன்று மதிக்கப்படுகிறது. இப்படத்தில் மையப் பாத்திரத்தினை ஏற்று நடித்த ஐரிஷ் நடிகரான டேனியேல் டே லூயிஸ் நமது தலைமுறையின் ஒப்பற்ற நடிகர்களுள் ஒருவர். இப்படத்தில் அவரது அதி அற்புதமான நடிப்பிற்கு அங்கீகாரமாக அவர் சிறந்த நடிகருக்கான (முதன்மைப் பாத்திரத்தில்) ஆஸ்கர் விருதினைப் பெற்றார். போலவே அவரது தாயாக நடித்த பிரண்டா ஃபிரிக்கர் தனது நேர்த்தியான நடிப்பால் அப்பாத்திரத்திற்கு உயிரூட்டியிருப்பார். (அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது).