பொதுவாகவே இலக்கியவாதிகளுக்கு தங்களது படைப்பியக்கம் சார்ந்த ஒரு நடைமுறை சிக்கல் உண்டு. எவரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு முறை எழுத்தாளர் சுஜாதா கூட ஓர் உரையாடலினிடையே ஓரினப் புணர்ச்சியாளர்களைப் பற்றி என் படைப்பில் நான் எழுதினால் என்னை சந்தேகமாய்ப் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். பேசும் கதைப்பொருளுக்கும் படைப்பாளிக்குமான தொடர்பை ஊகித்துக் கொள்வது என்பது வாசக மனதில் ஓர் ஓரத்தில் நடைபெறவே செய்கிறது. அதனாலேயே பலரும் கொஞ்சம் தொந்தரவு செய்யும், சமூகப் பார்வையில் கீழ்தரமானது என புறமொதுக்கப்படும் கதாபாத்திரங்களை தமது படைப்பில் தவிர்த்து விடுகின்றனர் அல்லது சில வரிகளில் அவர்களை கடந்து சென்று விடுவார்கள்.
 
G.Nagarajan
 
ஜி.நாகராஜன் அசாதாரணமான ஒரு படைப்பாளி. அவரது எழுத்தின் துணிவிற்கு ஒப்புமை கூறத் தக்க எழுத்துக்கள் தமிழில் அபூர்வமே. தனது எழுத்தின் மீதோ தன் மீதோ விழுகின்ற பிம்பத்தைக் குறித்து அவர் கவலை கொள்ளவே இல்லை எனுமளவிற்கு அவரது கதையுலகின் கதைமாந்தர்கள் இருக்கின்றனர். பெருவாரியான இலக்கிய ஆக்கங்களில் இடமளிக்காமல் விரட்டப்படும் கதாப்பாத்திரங்களுக்கு அடைக்கலம் தருகிற எழுத்துக்காரர் இவர்.  கேடிகளும், ஏமாற்றுக்காரர்களும், சுயநலவாதிகளும், அன்றாடங்காய்ச்சிகளும், பித்தலாட்டக்காரகளும், விலைமகளிருமே அவரது புனைவுலகில் உலவும் பாத்திரங்கள். சமூகத்தின் இருண்ட அந்தரங்கங்களில் வாழ நிர்பந்திக்கப்பட்ட மனிதர்களின் கதைகளையே அவர் எழுதியிருக்கிறார். மோசமானவர்கள் என்ற சமூக முத்திரையைச் தம் மீது சுமந்திடும் மனிதர்களின் கதைகளை இலக்கிய அழகியல் கெடாமல் எழுதிச் சென்றதே அவரது இலக்கிய சாதனை.
உண்மையின் அழகியலைச் சொன்ன படைப்புகளை ஏராளமாய் நாம் உதாரணங்களாய் வரிசை கட்டலாம். ஆனால் அதற்கு நிகராக பொய்மையின் அழகியலை படைப்பின் வழியே வாசகனுக்குக் காட்டுகிறது ஜி.நாகராஜனின் எழுத்து. பொதுவாகவே ஆசிரியரின் குரல் (Authorial voice) மிகப் பெரும்பான்மையான படைப்புகளில் பின்னணியில் ஒலித்துக் கொண்டே இருக்கும். இதன் அளவு மிகும் போது படைப்பில் பிரச்சார நெடி ஏறிவிடும். படைப்பாளியின் குரலில் எப்படியேனும் ஒரு ‘பக்க சார்பு’ நுழைந்து விடுகிறது என்பதனை நமது வாசிப்பு அனுபவத்தில் நாமே உணர முடியும். ஆனால் எந்த வித சார்பும் இன்றி, புகார்களோ அங்கலாய்ப்போ இன்றி தனது கதையுலகை நிறுவி அதனுள் உலவும் மனிதர்களைத் வெறும் சாட்சி மாத்திரமாய் தொடர்கின்ற தொனியில் எழுத்து நடையும் அணுகுமுறையும் இவரது படைப்புச் செயல்பாட்டின் தனித்துவமாக இருக்கிறது. அதுவே படைப்பிற்கான நேர்மையையும், தனது முன்முடிவுகளைத் துடைத்தெறிந்து ‘திறந்த பார்வையுடன்’ உலகையும், சக மனிதர்களையும் அணுகும் வாய்ப்பை வாசகனுக்கு நல்குகிறது.
 
Nalai Matrumoru Naale
 
நாளை மற்றோரு நாளே எனும் நாவலை, கந்தன் என்ற ஒரு மனிதனின் வாழ்க்கையின் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் நடக்கும் கதையாக எடுத்துக் கொள்ளலாம். கந்தனைப் போன்ற எண்ணற்ற சாதாரணர்களின் கதையாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாள் என்றில்லை இப்படிபட்ட, ஏன் நம்மில் பலருடைய மாற்றம் இல்லாத நாட்களின் வகை மாதிரியாகவும் இந்நாவலை நாம் உள்வாங்கிட முடியும். வாசிப்பவரின் பார்வையையும், புரிதலையும், தேடலையும் பொறுத்தே இது நிர்ணயித்துக் கொள்ள முடியும். மையக் பாத்திரமான கந்தன் என்றில்லாமல், அவன் தீடீரென கண்டதும் காதலித்து சேர்த்துக் கொண்ட ’தொழில்’ செய்து கொண்டிருந்த மீனாவோ, அவர்களின் குப்பத்தில் குடியிருக்கும்- கணவனுக்குத் தெரியாமல் தனியாய் தன்னை விற்று சம்பாதிக்கும் – ராக்காயியோ யாவரின் கதைகளையும் சொல்லிக் கொண்டே போகிற எழுத்து. எந்த ஒரு இடத்திலும் பாத்திரங்களை ஆய்வு செய்வதோ, நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் முடிவு செய்யும் முத்திரை குத்தல்களோ, பொதுப்புரிதலில் அவர்களின் மீதான விமர்சனமோ நியாயப்படுத்தும் வக்காலத்துகளோ இல்லாத ஒரு நடையில் தான் நாவல் முழுவதுமே எழுதப்பட்டுள்ளது. ஒழுக்கம் குறித்த உபதேசங்களோ, கடவுள்களோ இல்லாத அல்லது அவசியமற்ற ஒரு உலகினை, வாழ்வதை ஒன்றே குறிக்கோளாய் கொண்டியங்கும் மனிதர்களின் வாழ்வியக்கத்தை பிரதானப்படுத்துகிற கதையோட்டமே இந்நாவல்.
சமூகம் வெறுக்கும் மனிதர்களின் கதையை நேரடியாக சொல்லும் அதே வேளையில் அதற்கு இணையாக அவர்களின் மோசமான வாழ்க்கையென்பதும் அவர் போன்றோரது வாழ்க்கைச் சூழல் சமூக இயக்கத்தின் விளைவே அன்றி அவர்களின் தேர்வல்ல என்று சொல்கிறது போன்ற ஒரு வாசிப்பு அனுபவத்தை தருகின்ற அபூர்வத்தை நிகழ்த்துகிறது. கொஞ்சம் சாராயத்திற்காகவும், கொஞ்சம் பணத்திற்காகவும் பஞ்சாயத்து செய்து பிழைக்கும் கந்தனின் ஒரு ஞாயிறு வாழ்க்கையை பகிரும் நாவல், அந்த ஒரு நாளில் அவன் சந்திக்கும் மனிதர்கள் வழியாகவும், அவனது வாழ்வில் கடந்து வந்த மனிதர்களை இடையிடையே மனதிற்குள் அசைபோட்டுப் பார்க்கும் அவனது நினைவுகளின் வாயிலாகவும், மனிதர்களில் பல அற்பங்களை எடுத்துக் காட்டுகிறது நாவல்.
கதை மாந்தர் எவருக்குமே (கதையில்) எந்த ஒரு கணத்திலுமே  தாங்கள் செய்கிற எத்தைகைய செயல்கள் குறித்த குற்றவுணர்வோ, மன ஊசலாட்டங்களோ இல்லவே இல்லை. பொய்களும், ஏமாற்றலும், நம்பிக்கைத் துரோகமும் ஏதோ மனித வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத ஒரு அம்சம் மட்டுமே எனும் மனவோட்டமே இருக்கிறது.
மீனாவை தன்னிடம் விற்ற வெற்றிலைக் கடை சோலைப்பிள்ளை தன் வீட்டை மிகக் குறைந்த விலைக்கு விற்க வைத்து ஏமாற்றி விட்டது வருடங்கள் ஆன போதும் கந்தனின் மனதை விட்டகல மறுக்கிறது. அவன் தனது சஞ்சலத்தைப் பகிர நாடும் தரகர் அந்தோணி அவனுக்குச் சமாதானம் சொல்லும் போது, “தம்பி, ஏமாத்தறவங்களும், ஏமார்றவங்களும் இருக்குறது தான் உலகத்தின் தன்மை… என்னைப் பொருத்தவரை, யாரையாவது கவுக்க, எதைப் பத்தியாவது சூழ்ச்சி செய்யும் போது தான் எனக்கு உசிரோட இருப்பதாகவே தெரியுது..” என்று அவனுக்கு தனது பார்வையை முன்வைக்கிறார். அவரே , “பொறு தம்பி, என்னைப் பொருத்தமட்டிலே, என்னை ஒருவன் ஒரு வளிலே ஏமாத்தினா, அதே வளிலே வேறு யாரெ நான் ஏமாத்த முடியும்னு யோசிப்பேன்… ஒருத்தன் உன்னைய ஏமாத்துனா அவன் உனக்கு ஒரு தந்திரம் கத்துக் கொடுத்தான்னு வச்சுக்க. அவன் ஒரு வகையில் ஒனக்குக் குரு. அதை மட்டும் மறந்திராதே” (ப:110,111) என தன் போதனைகளை வாரி வழங்குகிறார்.
 
Tomorrow Is One More Day
 
கலையின் வேலைகளுள் முக்கியமானது வாழ்க்கையை அசலாக ஆவணப்படுத்துதலே. மாறாக முடிவு சொல்வதோ, கருத்துப் பகிர்வதோ முதன்மைப்படுத்த வேண்டிய அம்சங்களே அல்ல. அந்த வகையில் ‘நாளை மற்றோரு நாளே’ மனித வாழ்க்கையை எந்த வித பாசாங்கும் இன்றி, சமரசங்களுமின்றி உள்ளது உள்ளபடி முன்வைக்கிறது. அதுவே இலக்கிய உலகில் அதற்கான நிரந்தரமான இடத்தை உறுதி செய்கிறது.