Phone / WhatsApp : +91 9686446848
Spoken Tamil classes online - Book a demo

தமிழக மாணவர்கள் மட்டுமல்லாமல், எல்லா இந்திய மாநிலங்களிலும் உள்ள மாணவர்களையும் அவர் தம் பெற்றோரையும் குழப்பத்தில் தவிக்க விட்டிருக்கிறது மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு. தேர்வுகள் நடைபெறுகிற விதத்திலும், தேர்வுகளுக்குக் கேட்கப்படுகிற  கேள்விகளில் மாநிலங்கள் சார்ந்து பாரபட்சம் இருப்பதாகவும் எழுந்த புகார்கள் அனைவரும் அறிந்ததே.

மருத்துவப்ப் படிப்புகளுக்கு மட்டுமல்லாமல் (AIPMT தேர்வு), பொறியியல் படிப்புகளுக்கும் கூட (AIEEE) தேசிய அளவிலான தேர்வுகள் பல காலமாக நடந்தே வருகின்றன. இவை அல்லாமல் நாட்டின் மிக உயரிய கல்வி நிலையங்களாக மதிக்கப்படும் IIT – களில் மாணவர்கள் சேர்க்கைக்கேன பிரத்தியேகமான தேர்வுகள் (IIT-JEE) நுழைவுத் தேர்வுகள் என பல தேசிய தேர்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இருப்பினும் மேற்சொன்ன தேர்வுகள் போல் அல்லாமல், ஏன் நீட் தேர்வு தொடர்பாக மட்டும் இத்தனை குழப்பங்கள், எனும் கேள்வி மனதில் எழுவது இயல்பே.

இதர தேசிய நுழைவுத் தேர்வுகளில் இருந்து நீட் தேர்வு எவ்விதத்தில் மாறுபடுகிறது என்பதில் முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான செய்தி நீட் தேர்வு ‘கட்டாயமானது’ என்பதையே. தேசிய அளவில் மருத்துவக் கனவுகளோடு இருக்கிற எந்த ஒரு மாணவரும் இனி நீட் தேர்வை எதிர்கொள்ளாமல் மருத்துவக் கல்லூரிகளுக்குள் நுழைவது சாத்தியமில்லை எனும் சூழல் இத்தேர்வால் உருவாகி உள்ளது. மேற்சொன்ன எல்லா தேர்வுகளும் வருடந்தோறும் நடைபெறுகின்றன எனும் போதிலும் அவை வருப்பத்தின் பேரில் மாணவர்கள் எதிர்கொள்ளும் தேர்வுகளாக மட்டுமே இருக்கின்றன என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

நீட் தேர்விற்கான கேள்விகள் மத்திய பாடத்திட்டமான CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தயாரிக்கப் படுகின்றன என்பது மிக முக்கியமான, ஆனால் சர்ச்சைகுரிய அம்சம். ஏன் என்பதற்கு ஒரு சிறிய விளக்கம். இவ்வருடம் மார்ச் 2017 பொதுத் தேர்வுகளில் பங்குகேற்ற CBSE பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை, ஏறத்தாழ பத்து இலட்சம். (துல்லியமாகச் சொல்வதென்றால் 10,98,891 [இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம், மார்ச் 9,2017] மாணவ மாணவியர் பங்கேற்றனர்.) இந்த மாணவ எண்ணிக்கை மொத்த தேசத்திற்கும் ஒட்டுமொத்தமானது என்பதே இதில் கவனிக்கப்பட வேண்டியது. அதாவது நாடெங்கிலும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் கோடிக்கணக்கான மாணவர்களுள், வெறும் பத்து இலட்சம் மாணவர்கள் மட்டுமே பயிலும் CBSE பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிற ஒரு தேசிய தேர்வாக நீட் இருக்கிறது என்பதே மிகப் பெரிய, விவாதிக்கப்பட வேண்டிய முரண்பாடு.

எல்லா போட்டி தேர்வுகளுமே, மத்திய அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தானே நடத்தப்படுகின்றன என்று கேள்வி எழுப்புபவர்கள் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டியது அத்தேர்வுகள் விருப்பத் தேர்வுகள் மட்டுமே என்பதைத் தான்.

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நீட் தேர்வுக்கு எதிரான எதிர்ப்பலை தமிழகத்தில் தான் அதிகம் இருப்பதாக தேசிய ஊடகங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கான காரணங்கள் மிக நியாயமானவை என்பதை ஏனோ அவை அலச மறுக்கின்றன. ஒரு மாற்றம் வருகிற போது, நிகழும் மாற்றத்தால் யார் அதிகமாக பாதிப்படுகிறார்களோ, அவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புவது இயல்பானது தானே?

ஆனால் நீட் தேர்வினால் அப்படியென்ன பாதிப்பு தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டு விடப் போகிறது என்று எழும் கேள்வி மிக முக்கியமானது. தேசிய ஊடகங்கள் இதையே பல்வேறு மாதிரியாக எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. அதன் வழியே தேசிய அளவில் பொதுமக்களிடையே தமிழர்கள் ஏதோ தேவையில்லாமல் நீட் தேர்வை எதிர்ப்பதாக ஒரு பிம்பத்தை தோற்றுவிக்கின்றன. எனவே ஒரு சில அதிகாரப்பூர்வ தகவல்களுடன் அதற்கு முறையாக பதிலளிப்பது அவசியமாகிறது.

வரும் வாரம் வரவிருக்கும் இரண்டாம் பகுதியில் தமிழகத்தை மையப்படுத்தி அதனை அலசலாம்.