– வருணன்
 
நூல் அறிமுகம் : பாரபாஸ் (நாவல்)
ஆசிரியர்              : பேர் லாகர் குவிஸ்ட்
மொழி                   : ஸ்வீடிஷ்
தமிழில்                : க.நா.சு
வெளீயீடு            : அன்னம்
 
1950 ஆண்டு எழுதடப்பட்ட ஒரு சிறு நாவலுக்கு இலக்கிய உலகில் மிக உயரிய அங்கீகாரங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைக்கப்பெற்றது என்பதை விடவும் நாவல் வெளியான அடுத்த ஆண்டே அந்த கௌரவத்தைப் பெற்றது என்பதே இலக்கிய உலகெங்கிலும் உடனடி கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.
பேர் லாகர் குவிஸ்ட் (Par Lagerkvist) ஸ்வீடிஷ் மொழியில் எழுதிய இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்து தமிழ் இலக்கிய வாசகரிடையே அதனை அறிமுகம் செய்த க.நா.சு அவர்கள் நூலின் முன்னுரையில் ‘இன்றைய (வெளியான சமயத்தில்) ஸ்வீடிஷ்  இலக்கியத்தில் கொழுந்தென்று பாரபாஸைச் சொல்ல வேண்டும்…. இதற்கு 1951-ல் நோபல் இலக்கியபபரிசு அளிக்கபட்டது , அதற்குமுன் அந்தப் பரிசுபெற்ற பேராசிரியர்களையும் கௌரவிப்பது போலத்தான் என்று அபிப்ராயம் தோன்றுவதில் ஆச்சரியமில்லை.’ என்று இந்த ஆக்கத்திற்கு அணி செய்கிறார்.
 
29661
 
உலக வரலாற்றில் ஏசு என்னும் ஒரு மனிதரின் வருகை உலகின் போக்கையே மாற்றியது என்பதும், அம்மனிதரை மையமிட்டு துளிர்த்து கிளைத்த கிறித்தவ மதம் கடந்த இருபத்தியோரு  நூற்றாண்டுகளாக உலககெங்கிலும் தன்னை நிறுவிக் கொண்ட, பெருவாரியான சனத்தொகையை தன்னை நோக்கி ஈர்த்துக் கொண்ட மார்க்கமாகவே இருந்து வருகிறது. ஏசு என்பவரை கிறித்தவ பார்வையில் ‘ஏசு கிறிஸ்து’வாக ஒரு ஒளிவட்டத்தில் நிறுத்திப் பார்ப்பதை விடுத்து அவரை மனித வரலாற்றின் ஒரு மிக முக்கியமான ஆளுமையாக நாம் காணும் பொழுதில், கிறித்தவ மதத்தின் புனித நூலாக அறியப்படும் புதிய ஏற்பாடு, அவரது வாழ்க்கை வரலாறாக முன்வைக்கிற நிகழ்வுகளில் சில பல இடங்களில் நமக்கு கேள்விகள் எழாமல் இருக்க இயலாது. பொதுவாக இவ்வகை ஐயங்களை ’கடவுளின் மீதான நம்பிக்கை’ (கிறித்துவர்கள் இதனை இறை விசுவாசம் என்பர்) கொண்டு நிரப்பிக் கொள்கிறது கிறித்துவ மதம். மேலும் ஏசுவின் வாழ்க்கை வரலாற்றில் வந்து போகும் சில மனிதர்களில் மிக மோசமானவர்களாக உள்வாங்கப்படுவது இரண்டு நபர்கள் – முதலாவது, ஏசுவை காட்டிக் கொடுத்த அவரது சீடர்களுள் ஒருவரான யூதாஸ் இஸ்காரியுத்; இரண்டாவது, ஏசு சிலுவைச் சாவை ஏற்க நிர்பந்திக்கப்படுகிற வேளையில் அவருக்கு பதிலாக விடுதலையான குற்றவாளி பாரபாஸ்.
ஏசு வெகுமக்கள் பார்வையில் முழுமையாய் ‘கிறிஸ்துவாக’ மாற்றம் பெறத் துவங்கி, அவரை மையமிட்டு கிறிஸ்துவம் எனும் மதம் மொட்டு விட்ட அந்த முதல் கணம் முதல் நிகழ்ந்த துவக்க கால கிறிஸ்துவர்களின் வாழ்க்கையினூடே, இந்த எதிலுமே துளியும் தொடர்பில்லாத ஆனால் விதி வசத்தால் ஏதோ ஒரு வகையில் மிக முக்கியமான திருப்பு முனையாய் அமைந்த பாரபாஸின் பார்வையில் அந்த காலகட்டத்தையே வாசகர்  முன்னால் பரப்புகிறது நாவல்.
விவிலியத்தில் ஏசுவின் பாடுகளைப் பற்றி சொல்லிடும் பகுதிகளில் ஒரே ஒரு இடத்தில், அதுவும் வெறும் ‘கள்வன் பாரபாஸ்’ என்று வெறும் பெயராக கடந்து செல்லும் ஒரு மனிதனை மையப் பாத்திரமாகக் கொண்டு விரிகிற வரலாற்று புதினமே (Historical Fiction) பாரபாஸ். சிலுவை மரணத்திற்கு ஏசு கையளிக்கப்படுவதும், தொடர்ச்சியாக திருவிழாவை முன்னிட்டு ஏதேனும் ஒரு கைதியை விடுதலை செய்கிற வழக்கத்தில், அத்தருணத்தில் தானே எதிர்பாராத வண்ணம் பாரபாஸ் விடுதலையாவதில் துவங்குகிறது நாவல். தனக்கு பதிலாக சாவை முத்தமிட கொல்கோத்தா குன்றை நோக்கி சிலுவையைச் சுமந்து செல்லும் அம்மனிதனை ஏனென்றே தெரியாமல் பின் தொடர்ந்து, நடக்கும் அத்தனைக்கும் ஒரு மௌன சாட்சியாக உடனிருகிறான் பாரபாஸ்.
ஏசுவின் இறுதிக் கணங்களை துளியும் அவரது வாழ்க்கையோடு அதுவரையிலும் எத்தொடர்பும் இல்லாத அவன் எட்ட நின்று பார்க்கிறான். தொடர்ந்து மரித்த மூன்றாம் நாள் கிறிஸ்து உயிர்ந்தெழுந்ததாக சொல்லப்படும் அத்தருணத்திலும் மறைவில் நிற்கிறான். பின்னர் பல இடங்களில் அலைந்து திரியும் பாரபாஸ் தான் சந்திக்கிற மனிதர்களுள் அநேகர் இறந்த அந்த மனிதரை (ஏசுவின்) கடவுளின் மகன் என மிகத் தீர்க்கமாக நம்புவதையும், அவர் மீது அளவு கடந்த விசுவாசம் வைத்திருப்பதையும் காண்கிறான். மேலும் அவர்கள் யாவரும் அவர் மீண்டும் வந்து தங்களை இந்த அடிமை வாழ்விலிருந்து மீட்டெடுத்து நிலையான இன்ப வாழ்வை அளிப்பார் என்று உறுதியாக நம்புகிறார்கள் என்பதை ஆச்சரியத்துடனே அணுகுகிறான் பாரபாஸ்.
 
Barabaas
 
பாரபாஸ் எனும் பாத்திரம் இறை நம்பிக்கைக்கும், நாத்திகத்திற்கும் இடையேயான ஊசலாட்ட மனநிலையை நாவலின் ஒவ்வொரு கட்டத்திலும் மிக சிறப்பாக வெளிப்படுத்துகிறது. அவன் தான் எதிர்படும் மனிதர்களுள் பலரும் குருட்டுத்தனமாக ஏசு கிறிஸ்துவை கடவுளின் மகன் என்றும் தமது மீட்பர் என்றும் பரிபூரணமாக நம்புகிறார்கள் என்று எண்ணிக் கொள்ளும் அதே வேளையில்,  ஒரு வேளை இது உண்மையாக இருந்து விட்டால்… என்கிற நிச்சயமின்மையே அப்பாத்திர வார்ப்பு இருக்கிறது.
பாரபாஸ் அவன் சந்திக்கும் மனிதர்களிடம் கதைப்பதாக வரும் நாவலின் தருணங்களில் அவ்வுரையாடல்களின் வழியாகவே ஏசுவைப் பற்றிய செய்திகள் வாசகனுக்கு தெரிவிக்கப்படுகின்றன. கூடவே அந்த துவக்க கால கிறித்தவர்கள் ரோம சாம்ராஜியத்திற்கு அஞ்சி தலைமறைவில் தங்களின் கடவுளை வழிப்பட்ட நிகழ்வுகளும் வந்து போகின்றன. பாரபாஸ் சந்திக்கும் மனிதர்களுள் முக்கியமானவர்கள் ஒரு உதடு பிளவுபட்ட பெண் மற்றும் சுரங்கத்தில் அடிமையாக வேலை செய்கையில் அவனது துணையாகவும், தோழனாகவும் இருக்கிற ஸகாக் ஆவர். மேலும் அவனை பைத்தியம் போல மனதிற்குள் காதலிக்கும் ஒரு விடுதியை நடத்துகிற பருத்த பெண் இன்னுமொரு சுவாரசியமான கதாபாத்திரம்.
 
Lagerkvist
 
நாவல் நெடுகிலும் ஏசுவை ஏற்றுக் கொள்வதா அல்லது அவரைச் சுற்றி பின்னப்பட்ட எல்லாமே புனைவு என்று புறந்தள்ளி விடுவதா என்கிற குழப்பித் திரிபவனாகவே அவன் இருக்கிறான். ஏக காலத்தில் அவரைப் பற்றிய அனைத்தையும் நம்ப விரும்பும் அவன் அதன் மீது சந்தேகம் கொண்டவனாகவும் இருக்கிறான். இறுதியில் ரோமர்களுக்கு எதிராக அவர்களது வீடுகளுக்கு தீயிட்டு கும்பலோடு கும்பலாக சிறைபிடிக்கப்பட்டு கடைசியில் சிலுவையில் அறையப்பட்டு மரணிக்கிறான். ஏசுவின் சிலுவை மரணத்தோடு துவங்கும் நாவல் பாரபாஸின் சிலுவை மரணத்தோடு முடிகிறது.
நூலாசிரியர் லாக குவிஸ்ட் குறித்த சிறு அறிமுகத்தில் ’கிறித்துவ மத நம்பிக்கைகளை முழுமையாக ஏற்க முடியாமலும் நிராகரிக்க முடியாமலும் இருந்த இவரது தவிப்பு தான் இவரது பல படைப்புகளில் வெளியானது’ என்ற குறிப்பு எத்தனை உண்மையானது என்பதை நாவலை வாசித்து முடித்ததுமே உணர முடிகிறது.