இலக்கிய வடிவங்களில் வாசகர்கள் பலருக்கும் வாசிப்பின் முதல் திறப்பாக கவிதைகள் இருப்பது வாடிக்கையானதே. படைப்பாளிகள் பலரும் இலக்கியத்தின் பல வேறுப்பட்ட தளங்களில் இயங்கி வந்தாலும் நிச்சயம் கவிதைகளை, குறைவான எண்ணிக்கையிலேனும், எழுதியிருப்பர். ஒரு சில படைப்பாளிகள் இதில் விதிவிலக்காக இருப்பதுவும் உண்டு. இன்னும் சிலரோ இலக்கியவாதிகள் என்ற அடையாளத்தை விடவும், கவிஞர் என்ற அடைமொழிக்குள்ளேயே மிகுந்த விருப்பதோடு புகுந்து கொண்டதைப் போல வாழ்நாள் முழுவதும் கவிதைகளை மட்டுமே எழுதி வருபவர்களாகவும் இருக்கின்றனர்.
ஆரம்ப நிலை வாசகர்கள் பலரும், கவிதை எனும் நுழைவாயில் வழியே இலக்கிய வாசிப்புப் பிரவேசம் நிகழ்த்துவது, கவிதை எனும் வடிவம் அளவில் சிறியது என்பதாகவே இருக்கும். அளவில் சிறிது என்பதாலேயே அது எளிது என்ற பொது அபிப்ராயம் நிலவுவதே இதற்குக் காரணம். வடிவம் எதுவாயினும், ஒரு இலக்கியப் படைப்பு வாசகனின் தேடலுக்கு ஏற்பவே தன்னை விரித்துக் கொள்ளும் இயல்புடையது. அதாவது வாசகன் எத்தகைய நுன்ணுணர்வோடு அதனை அணுகுகிறாரோ அதற்கேற்ப அந்த இலக்கிய ஆக்கம் அவருக்குள் வளரும். இந்த அம்சம் மற்ற எல்லா இலக்கிய வடிவங்களை விடவும் கவிதைகளுக்கு மிக மிக பொருத்தமானது.
இயந்திரத்தனமான அன்றாட வாழ்வின் மாறுதல்களே இல்லாத /சலிப்பான (monotony) வாழ்வியல் யதார்த்தத்தில் இருந்து சற்றேனும் தப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பாகவே, தற்கால கவிதை வாசிப்பு இருக்கிறது. எனது புரிதலில், கவிதைகளை வாசித்தல் என்பது, கவிதைகளை எழுதுதலுக்கு ஈடான ஒரு கலையே. வாழ்க்கையில் அன்றாடங்களில்  நாம் தவற விடும் கணங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் எண்ணற்ற அழகுகளை வார்த்தைகளுக்குள் பொதிந்து அள்ளி வருகின்ற வார்த்தை தேவதைகள் கவிதைகள்.
 

எந்த மொழியினை எடுத்துக் கொண்டாலும், அம்மொழி சார்ந்த பரிசோதனைகளை அதிகமாக செய்து பார்க்க மிகவும் ஏதுவான வடிவம் கவிதைகளே. மொழியின் மிகச் செறிவான வடிவம் கவிதை. குறைந்த சொற்களில் நிறைய பேசுவதே கவிதை வடிவின் அடிப்படை அழகியலாகும்.

 
கவிதைகள் நாம் பார்த்ததாய் நினைப்பவற்றுள் பார்க்காத கோணங்களை எடுத்துக் காட்டும் கருவிகளாகவும், பார்க்காத திசைகளை நமக்கு அடையாளம் காட்டும் திசைகாட்டிகளாகவும் விளங்குகின்றன. இலக்கிய வடிவங்களிலேயே அதீத வீரியமுள்ள மன எழுச்சிக்களை வாசகர் மனதில் உருவாக்க வல்லவை கவிதைகளே. காலங்காலமாய் அதனாலேயே உலகெங்கிலும் நடக்கும் புரட்சிகளின் வாகனமாய் கவிதைகள் விளங்குகின்றன. அதிகாரத்திற்கு எதிராக எழுந்த குரல்கள் வரலாற்றுப் பதிவுகளாக இலக்கியத்தில் பெரும்பாலும் இடம்பிடிப்பது கவிதைகளாகவே. கவிதைகளுக்கு உக்கிரம் இயல்பாகவே அமைந்து விடுகின்றது.
நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையில் அழகையும், ரம்யத்தையும் அள்ளி வருபவை கவிதைகள். வாழ்க்கையின் நுட்பங்களை நாம் கண்டு கொள்ள கவிதைகளை ஊன்றி வாசித்தாலே போதுமெனும் அளவிற்கு, எண்ணற்ற அற்புதமான கவிதைகள் தமிழில் இருக்கின்றன. எந்த ஒரு மொழியின் உச்சபட்ச படைப்புச் சாதனை நிகழ்த்தப்படுவது கவிதை வடிவில் தான். படைப்புச் செயல்பாட்டின் உச்சமாக கருதப்படுவதும் கவிதைகளே. அதனாலேயே செறிவான எழுத்து நடை படைப்பாளி ஒருவருடைய எழுத்தில் கைகூடி வருவதை நாம் ‘கவித்துவமான நடை’ என்று சிலாகிக்கிறோம்.
 
Golden Hour
 
ஒரு கவிஞனின் கண் எப்போதுமே நாம் காணாதவற்றையே காட்டுகிறது. நாம் கடக்கும் தருணங்களில் நான் தவறவிட்ட நுண்மையான விசயங்களை கவிதைகளின் வழியே நாம் கண்டடையலாம். வாழும் வாழ்க்கைக்கு ஒருவித முழுமையை கவிதை வாசிப்பு வழங்கும் என்பது மிகையானதே அல்ல. வாழ்க்கை மீதான நமது புரிதலை இன்னும் ஆழப்படுத்தும் தத்துவங்களை அனாயசமாக கவிதை மொழிக்குள் கொண்டு வந்து விடுகிற ஜாலத்தை கவிஞர்கள் சாதித்து விடுகின்றனர். (இளம் வயதில் பிரமிள் கவிதைகளை வாசித்த மாயக் கணங்கள் இன்னும் மனதிற்குள் பசுமையாய் நிறைந்துள்ளது.)
மொழியின் அர்த்தத் தளத்தை எல்லாக் காலங்களிலும், எப்போதும் விரித்தெடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்பவை பெரும்பாலும் கவிதைகளாகவே இருக்கின்றன. வாழ்வின் மேன்மையான தருணங்களை நாம் ‘கவித்துவமான கணங்கள்’ என்று வர்ணிப்பதுண்டு. அது நம்மையும் அறியாமல் கவிதையை பெருமைப்படுத்துதே.
இலக்கியத்தின் பல்வேறு ஆக்கங்களை இந்த அறிமுகப் பகுதியில் தொடர்ந்து அறிமுகம் செய்து வருவதால், மொழியில் செறிந்த இலக்கிய வடிவமான கவிதைகளை அறிமுகம் செய்வது மிகவும் அவசியம் என்று கருதுகிறேன். இனி வரும் வாரங்களின் அவ்வப்போது கவிதைகளையும் ருசிக்கத் துவங்குவோம்.