-வருணன்
 
ஒரு மொழி குறித்த முறையான அறிமுகம் கிடைப்பது பள்ளிக்கூடங்களில் தான். கடந்த வாரம் ஆங்கிலத்தின் மீதுள்ள மோகத்தால் பள்ளிகளில் தமிழ் புறங்கணிக்கப்படும் அவலத்தைப் பற்றி பேசினோம். பள்ளி வளாகங்களை விட்டு வெளியே பரந்து விரிந்து கிடக்கும் தமிழ் நிலத்தில் தமிழ் மொழியின் நிலை எந்த அளவிற்கு இருக்கிறது? இதையே நாம் இவ்வாரம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் போகிறோம்.
இன்றல்ல, நேற்றல்ல ஆங்கில மோகம் தமிழர் தலைகளுக்குள் ஏறி வருடங்கள் பலவாகிறது. பொது இடங்களில் பலரும், தமிழில் பேசுவதைக் காட்டிலும் ஆங்கிலத்தில் பேசுவதை கௌரவமாக நினைக்கின்ற போக்கு மிகுந்துள்ளது. பலரும் தமிழில் பேசுகிறோம் என பெயரளவிற்கு சொன்னாலும், தெரிந்தே கவனமாக பேச்சின் ஊடே இயன்ற அளவிற்கு ஆங்கில சொற்களைக் கலந்து பேசுவதை நாம் பல சந்தர்பங்களில் கண்டிருக்கலாம். அப்படி பேசுவதன் மூலம் அம்மனிதர்கள் தங்களுக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் மட்டுமே வரும். தங்கள் நாவுகளில் பெரும்பான்மையாய் வருவது ஆங்கிலமே. அதுவே தங்களின் இயல்பு என்பதாக காட்டிக் கொள்வதற்காகவே அப்படி பேசுவதை நாம் கவனிக்கலாம். வேறெந்த சமூகத்திலும் இல்லாத அளவிற்கு தமது தாய்மொழியில் பேசுவதை அவமானமாகவும், கௌரவக் குறைச்சலாகவும் அதே வேளையில் அந்நிய மொழியைப் பேசுவதை தமது புலமையின், அறிவுஜீவித்தனத்தின் அடையாளமுமாகவும் தமிழ் சமூகத்தில் பார்க்கின்றனர். இது பெருமைக்குரியது அன்று. மாறாக வருத்தப்பட வேண்டிய அவல நிலை.
 
ஆங்கிலம் என்பது...
 
பொதுவெளியில் ஆங்கிலத்தில் பேசக் கூடிய மனிதர்களை அறிவாளிகள் பட்டியலில் தான் தமிழன் எப்போதும் வைத்துக் கொள்கிறான். அதாவது ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே; ஆங்கிலம் என்பதே அறிவல்ல எனும் புரிதல் பெரும்பான்மையானோருக்கு இல்லை என்பதுவே நிதர்சனம். ஆங்கிலம் பேசத் தெரிவதே ஒரு நபருடைய மேதாவிலாசம் என்ற அபிப்ராயம் பொதுப் புத்தியில் ஊறிப் போய்க் கிடப்பதாலேயே பலரும் வலிந்து தங்களின் ஆங்கிலப் புலமையை சமயம் வாய்க்கையில் எல்லாம் நிரூபித்திடிடத் துடிக்கின்றனர். தமிழில் வாசிப்பதைவிடவும் ஆங்கிலத்தில் வாசிச்ப்பது மேலானது என்பது போலவும். தமிழிலேயே வாசித்து, தமிழிலேயே தனது கருத்துக்களை பகிரும் ஒரு மனிதரைக் காட்டிலும், அதனையே ஆங்கிலத்தில் வாசித்து ஆங்கிலத்தில் வெளிப்படுத்துகிற ஒருவர் மேம்பட்டவர், அறிவாளி என்ற எண்ணம் நம் பலரிடையே இருப்பது மறுக்க முடியாதது. மனித சிந்தனனையின் வீச்சையும் அதன் ஆழத்தையும் அளவிட அது எந்த மொழியில் வெளிப்படுத்தப் படுகிறது என்பதையா அளவுகோலாகக் கொள்வது? இது எவ்வளவு அபத்தம்.
ஆக தமிழில் வெளிப்படையாக பேசுவதால் தங்களது மேதைமை சந்தேகத்தோடு பார்க்கப்படும் என்பதும், அதன் நீட்சியாக தமது அறிவாளித்தனத்திற்கு சமூக அங்கீகாரம் கிடைக்காது எனும் கருத்தும் நம்மிடையே ஆழ வேரூன்றிவிட்டது. ஏதோ பேச்சிற்கு நீங்கள் சொல்லிக் கொள்ளல்லாம். ஆனால், ஆங்கிலம் தெரியவில்லை என்றால் ஒருவர் சமூகத்தில் வாழவே முடியாது என்பது தான் நடப்பு யதார்த்தம் தெரியுமா? இக்கேள்வி என்னை நோக்கி பல திசைகளில் இருந்து வருவதை நான் அறியாமல் இல்லை. ஓரளவிற்கு அது உண்மை தான். ஆனால் அதற்கான ஒரு சூழலை ஆங்கில மோகத்தின் காரணமாக நாமே உருவாகியது என்பதை மறுக்கவும் முடியுமா? இல்லை, இப்போது கூட நாம் நினைத்தால் தமிழுக்கு உரிய நியாயமான அங்கீகாரத்தை பொது வெளியில் மீட்டெடுக்க முடியும் என்பதையும் நாம் மறுத்திட முடியாது. அதனை நம்மில் பலரும் உண்மையில் உள்ளூர விரும்புவதில்லை என்றோ அதன் சாத்தியப்பாட்டை ஏற்றுக் கொள்ள தாயாரக இல்லை என்று சொல்வதும் பொருத்தமாக இருக்கும்.
கல்விச் சூழலில் இருந்து தமிழ் பெருவாரியாக வெளியே தள்ளப்பட்டு விட்டது. சமூகத்தின் பொது வெளியில் கௌரவமென முடிந்த வரையில் ஆங்கிலத்தில் அல்லது வெகுவாக ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது. அலுவலக மொழியாகவும் ஆங்கில மாறி வருடங்களாகிறது. விளம்பரப் பலகைகளில் இருந்து கூட தமிழ் விடைபெற்றுக் கொண்டு விட்டது. ஒரு மொழி அதனைப் பேசும் மனிதர்களால் இவ்வளவு தூரம் புறக்கணிப்பிற்குப் பிறகும் இன்னும் உயிர்த்திருக்கிறது என்று சொன்னால், அது தமிழ் மொழியின் தனித்திறன் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல! – இது சமீபமாக தமிழ் பேராசிரியரும், பிரபல் எழுத்தாளாருமான பெருமாள் முருகன் அவர்கள் ஒரு இலக்கிய இதழுக்கு அளித்த ஒரு நேர்காணலில் பகிர்ந்தவை.