-வருணன்
 
உலகில் எந்த மூலையிலும் சந்தித்துக் கொள்ளும் ஒரே மொழி பேசும் இரு மனிதர்கள் தத்தமது தாய் மொழியில் மட்டுமே பேசிக் கொள்வர். ஒரு மனிதருக்கு எத்தனை மொழிகளைப் பேசுகிற புலமை இருக்கும் போதிலும் அவரது மனம் அவருடைய தாய் மொழியைப் பேசும் போது மட்டுமே ஒருவித நிறைவைப் பெறும். சொந்த மொழி பேச வழியில்லாத அந்நிய நிலத்தில் தமது மொழி பேசும் ஒருவரை சந்திக்க நேரும் போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாய்மொழில் ஆசை ஆசையாய் பேசிக் கொள்வர். ஆனால் இப்படி இருவர் உலகில் எங்காவது சந்திக்கும் போது, அவர்கள் ஆங்கேலயர் அல்லாமல் (அது தான் பார்த்த மாத்திரத்தில் தெரிந்து விடுமே), ஆனால் ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் நிச்சயம் தமிழர்களாக இருந்திடும் வாய்ப்புகள் அதிகம் என்று நகைச்சுவையாய் சொல்வதுண்டு.
இப்படி சொல்லிக் கொள்வது மேலோட்டமாக நகைச்சுவையாய் தெரிகிற போதிலும், அதன் உள்ளார்ந்த அர்த்தம் மிக கசப்பான ஒரு உண்மையை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது. தாய்மொழி மீதான வாஞ்சை மனிதர்களிடையே இருக்கக் கூடிய ஒரு இயல்பான உணர்வு. பேசுகிற மொழியின் மீதுள்ள அளவு க்டந்த பிரியத்தின் வெளிப்பாடாகவே அதனை நாம் தாய்மொழி (Mother tongue) என்று அழைக்கிறோம். பல மொழிச் சமூகங்களிடையே மொழி வெறியே கூட உண்டு. ஆனால் ஒரு மொத்த சமூகமே பெருவாரியாக தனது தாய்மொழியை விடுத்து வேற்று மொழி ஒன்றிற்கு முதல்நிலையையும், தமது தாய்மொழிக்கு அதற்கு அடுத்த நிலையையே வழங்கி வருகிறது என்றால் அது நானறிய தமிழ் சமூகமாகத் தான் இருக்கிறது.
ஆங்கில மொழிக்கு நான் எதிரியல்ல. அது அவசியமற்றது என புறக்கணிக்கும் அளவிற்கு தீவிரமான மொழித் தூய்மைவாதியுமல்ல. ஆனால் அதற்குண்டான இடமும், முக்கியத்துவமும் நமது தாய்மொழிக்கு அடுத்தபடியாக மட்டுமெ இருக்க வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடு.
 
Speak only in English 1
 
கல்விக் கூடங்களில் தமிழ்
கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பாருங்கள். ஒரு மொழி நிலைத்திருப்பது அம்மொழி பேசும் மனிதர்களாலே மட்டுமே சாத்தியாமாகிறது. அம்மொழியின் இருப்பு அம்மனிதர்களைச் சார்ந்தே இருக்கிறது. தமிழர்கள் இன்று உலகெங்கும் பரவிக் கிடக்கிறார்கள். ஆனால் அதன் சொந்த நிலமான தமிழகத்தில் தமிழின் நிலை மிக மிக பரிதாபத்துக்குரியதாகவே இருக்கிறது. இதுவே கசப்பான யதார்த்தம். ஒரு மொழியை முறையாகக் கற்க வேண்டியதே குழந்தைப் பருவத்தில் கல்விக் கூடங்களில் தான். ஆனால் இன்றைய நிலை என்ன? ஆங்கிலேயர்கள் நமது மண்ணை விட்டுச் சென்று எழுபது ஆண்டுகளைக் கடந்து விட்டது. ஆனாலும் அவர்கள் மட்டுமே சென்றிருக்கிறார்களே ஒழிய அவர்களது மொழி தமிழ் மண்ணில் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. தமது தாய்மொழியைக் காட்டிலும் கல்விப் புலத்தில் ஒரு அந்நிய மொழியை வளர்க்க நடைபெறும் மெனக்கெடல்கள் உலகில் வேறு எங்கும் தமிழகத்தில் நடப்பதைப் போல நடக்கிறதா என்பதனை உறுதிபட சொல்வது சிரமமே.
பல பெற்றொர்கள் தங்களின் குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளிக்களில் சேர்த்துப் படிக்க வைக்கின்றனர். தமிழ் வழிப் பள்ளிகளை பெரும்பான்மையாய் எடுத்து நடத்தும் அரசினுடைய அரசுப் பள்ளிகளின் தரத்தை காரணம் காட்டுவது வாடிக்கை. அவ்வாதத்தை ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொண்டாலும், அப்படி ஆங்கில வழிப் பள்ளிகளில் படிக்கிற தமது பிள்ளைகளுக்கு சொந்த முயற்சி எடுத்து தாமே தாய் மொழியாம் தமிழை எத்தனை பேர் கற்றுத் தருகிறார்கள்? அல்லது அதற்கான முயற்சிகளை எத்தனை பேர் செய்கிறார்கள்? இதற்கான விடை நேரடியானதே. இல்லை.
 
Speak only in English 2
 
பள்ளி வளாகத்தினுள் ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும். பல ஆங்கில வழிப் பள்ளிகளில் தமிழில் பேசுவது தண்டனைக்குரியது எனும் நிலை தான் இன்றைய யதார்த்தம். இதனை பல பெற்றோர், ”குழந்தையோட ஸ்கூல்ல ரொம்ப ஸ்டிரிக்ட். இங்கிலிஷ்ல மட்டும் தான் பேசணும். தமிழ்ல பேசுனாலே ஃபைன் போட்றுவாங்க” என்று பெருமையாக அங்கீகரிக்கும் விதமாகவே பேசுகிறார்கள்.
இளையோரிடம் தமிழ் செல்லும் வழிகள் அத்தனையும் நாம் அடைத்துக் கொண்டே வருகிறோம். இந்த ஆங்கிலம் மட்டுமே சூழல் சில பத்தாண்டுகளாகவே தமிழகத்தில் நிலவி வருகிற சூழலிது என்பதால், அதன் பயனாக தாய்மொழியில் சரிவர வாசிக்கவோ, எழுதவோ தெரியவெ தெரியாத ஒரு தலைமுறையினரை நாம் உருவாக்கிக் விட்டோம். உருவாக்கிக் கொண்டும் இருக்கிறோம்.
கல்வி நிலையங்களில் தமிழ் இல்லாமல் போய் ஆண்டுகளாகின்றது. கல்வி நிலையங்களுக்கு வெளியே இயங்கும் தமிழ் சமூகத்தில் தமிழர்கள் மத்தியில் தமிழ் மொழியின் நிலை என்ன?
தொடர்ந்து சிந்திப்போம்…