Phone / WhatsApp : +91 9686446848
Spoken Tamil classes online - Book a demo

ஏறத்தாழ முப்பது முதல் நாற்பதாண்டுகளுக்கு முன்னர் நம்மிடையே குடும்ப அமைப்பு என்பதே கூட்டுக் குடும்ப அமைப்பாகவே இருந்தது. நவீனங்களும், வசதி வாய்ப்புகளும் நகர்புறங்களில் மட்டுமே இருப்பதாக நினைத்து பலரும் தமது பிரந்த மண்ணை விட்டு வெளியூர்களுக்கு பயணப்பட ஆரம்பித்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை தேயத் தொடங்கியது. இன்று, ஒரு வகையில் சொல்லப் போனால், தனிக் குடும்பம் என்ற சொல்லே கேட்ட மாத்திரத்தில் நமக்கு விநோதமானதாக தோன்றிகிறது. ஏனெனில் குடும்பம் என்பதே தனிக்குடும்பங்களாய் போன ஒரு சமூகத்தில், அப்படி ஒரு சொல்லாடல் வித்தியாசமாய்த் தோன்றுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

தனிக்குடும்பங்களின் அனுகூலங்கள் என நாம் பலவற்றை பட்டியலிட்டு நம்மைத் தேற்றிக் கொண்டாலும், உள்ளூற மனதிற்குள் நாம் இழந்தவை அதிகம் என்பதை நாமே அறிவோம். பொருளீட்டல் என்ற ஒற்றை நோக்கமே நம்மை நமது பிறந்த மண்ணில் இருந்து வெளியேறக் காரணமென்பதைச் சொல்லவும் தேவையில்லை. ஆனால் அதற்காக நாம் இழந்தவை நாம் செய்து கொண்டுள்ள சமரசங்கள் ஏராளம். இழந்தவை எண்ணற்றவை.

கூட்டுக் குடும்ப வாழ்வு சிதைந்ததன் விழைவாக நாம் இழந்ததில் பெரிதென நான் கருதுவது, மூத்தோர் பகிரும், அவர்தம் அனுபவம் வழி கைக்கொண்ட, ஆலோசனைகள். உடல் நலன் சார்ந்த மருத்துவக் குறிப்புகள் ஆகட்டும், பாரம்பரிய உணவு தயாரிப்பு முறைகள் ஆகட்டும், வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்க அவர்கள் வழங்கிடும் அனுபவமிக்க வழிக்காட்டுதலாகட்டும்… எல்லாமே நாம் நமது அன்றாடங்களை அவ்வப்போது வருகிற சிறு ஏற்ற இறக்கங்கள் தான். அவற்றை மன அழுத்தங்களின்றி எதிர்கொள்ள ஒரு உற்ற துணையாக அவர்களது ஆலோசனைகள் இருந்தது என்பதை நாம் மறுக்கவியலாது.

இருப்பதைப் பேணுவதைக் காட்டிலும் சவாலானது, புதியதாய் ஒன்றை உருவாக்குவது. நல்ல மாணக்கர்கள்/ குடிமக்கள் வேண்டுமானால் கல்விக் கூடங்களில் உருவாகலாம். ஆனால் நல்ல மனிதர்கள் உருவாவதற்கான முதல் விதை நிச்சயம் குடும்பத்திற்குள் தான் தூவப் படுகிறது. பணி நிமித்தமாக மணமான சில நாட்களிலேயே தனித்து அயலூருக்கு வருகின்ற ஒரு இளம் தம்பதிகள் மகிழ்ந்து குலாவிட வழிகள் பலவுண்டு, இடர்கள் ஏதுமில்லை. இருந்த போதிலும், அப்பெண் கருத்தாங்கும் போது, அவளுக்குள் நிகழும் உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்களைக் கண்டு மலைக்கையில் நிச்சயம் ஒரு அனுபவமிக்க முதிய கரத்தை அவள் இயல்பாகவே நாடுவாள். இத்தகைய தருணங்களில் தட்டிக் கொடுக்கவும், துவண்டு போகையில் உறுதுணையாய் நின்று நம்பிக்கை ஊட்டவும் உறவுகள் அருகில் இல்லாத வெறுமையை ஈடு செய்திட எதுவும் முடியாது.

என்னதான் தொழிற்நுட்ப வசதிகள் பெருகி விட்ட போதிலும், ரத்தமும் சதையுமான மனித இருப்பை வேறெதுவும் ஈடு செய்திட முடியாது. சிறு சிறு ஐயங்களைக் கூட உடனடியாக ஆலோசனைகளைப் பெற்று தெளியாமல் மனதிற்குள் போட்டு குழம்பித் தவிப்பாள் அந்த கர்பவதி.

குழந்தைகள் பிறந்தவுடன் இம்மனவாட்டம் இன்னும் அதிகமாகும். குழந்தைக்கு ஒன்றென்றால் பதறித் துடித்திடும் பெற்றோர் செய்வதறியாது திகைத்து நிற்கையில், தமது அனுபவம் புடமிட்ட சிறு கைவத்திய குறிப்புகள் சொல்வதற்கு மூத்தோர் ஒருவர் இருந்தால், அதுவே பெரிய மனோபலத்தை தரும்.

ஒவ்வொரு காலகட்டத்தினைப் பொருத்த ஒரு பொதுவான அபிப்ராயங்கள் நம்மிடையே இருக்கும். அக்காலகட்டம் குறித்த ஒரு ஒட்டு மொத்தமான சமூக விமர்சனமாக அது முன்வைக்கப்படுவத்உ வழக்கமே. அப்படி சமகாலத்தில் நம் சமூகத்தின் மீதான சுய மதிப்பீட்டில் மீண்டும் முன்வைக்கப்படும் ஒரு விமர்சனம் ஒட்டு மொத்தமாக சமூகத்தில் அற உணர்வு குறைந்து கொண்டே வருகிறது என்பதே. இதற்கு நாம் இயந்திரத்தனமாகிப் போன பண மோகம் கொண்ட வாழ்க்கை முறை, கடவுள் நம்பிக்கை தேய்தல், நன்னெறிக் கல்வியை புறந்தள்ளிவிட்ட மதிப்பெண் மையக் கல்வி முறை என காரணங்கள் பல அடுக்கினாலும், குழந்தைப் பருவம் முதலே, மழலைகளோடு அதிக நேரம் செலவழித்து, அவர்கள் உடனிருந்து, பண்படுத்தி, கதைகள் சொல்லி அற உணர்வை முதலில் விதைக்கும் அந்த ஒரு வாழ்வியல் அருகிப் போனதே அடிப்படையான காரணம்.

எல்லா நாணயங்களுக்கும் இருபக்கங்கள் உண்டு. கூட்டுக் குடும்ப அமைப்பில் எண்ணற்ற சாதங்கள் இருப்பினும், அதிலும் சமூக வாழ்வியல் சார்ந்து சில பாதங்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றை வரும் வாரத்தில் காணலாம்.