பல ஆண்டுகளாக தீவிரமாக தமிழ் இலக்கியப் பரப்பில் அதே உத்வ்வேகத்துடன் இயங்கி வருகிற ஆளுமை எஸ்.ராமகிருஷ்ணன். எஸ்.ரா வின் கதையுலகம் சாமானியர்களால் நிரம்பியது. நாம் நமது அன்றாட வாழ்வில் அதிக கவனிப்பின்றி கடந்து செல்கிற எளிய மனிதர்களின் வாழ்வும், அதனுள் கவியும் யதார்த்தமும், அவர்களின் துயருமே பெரும்பாலான கதைகளின் களமாகி இருக்கிறது. காட்சிகளை கவித்துவமான போக்கில் வாசகன் கண் முன்னே விரித்து வைப்பதில் நிபுணத்துவம் மிளிரும் எழுத்து இவருடையது.
கல்யாணி இருந்த வீடு அவரது ஆரம்ப கால சிறுகதைகளுள் ஒன்று. மிக முக்கியமானது என்று சொல்வதை விட நினைவில் எனது நிற்கிற சிறுகதை என்று சொல்வதே உண்மையாக இருக்கும். மிக எளிமையான கரு. சிறு சிறு வாக்கியங்கள். கதைமாந்தர்களின் நினைவோடையில் பயணிக்கையில் ஆங்காங்கே தெரித்து விழும் ஞாபகச் சிதறல்கள். இவையனைத்தையும் நேர்த்தியாக பொருத்தி தொடுத்த மாலை போல இருக்கிறது இச்சிறுகதை. ‘வாழ்ந்து கெட்ட குடும்பங்களை’ப் பற்றி நிறைய கதைகளை, நாவல்களை நாம் இலக்கியத்தில் கண்டிருக்கிறோம். எஸ்.ரா-வே இது போல பல கதைகளை எழுதியிருக்கிறார். ஒரு வகையில் பார்த்தால் அவரது பல சிறுகதைகளில் தனிமை அப்பிய மனிதர்களையும், வெறுமை நிறைந்த அவர்களின் வாழ்க்கையையும் முன்வைக்கும். இந்த சிறுகதையோ வாழவே முடியாமல் தவிக்கும் ஒரு குடும்பத்தை கண் முன் நிறுத்துகிறது.
துயரத்தின் இசை வழிகின்ற வரிகள் நிரம்பியவை அவரது பல கதைகள். எனது நண்பர் ஒருவர் அவரது கதைத் தொகுப்பினை வாசிக்கத் துவங்கி சில கதைகளை வாசித்தபின், ஒரு மாலையில் உரையாடலின் ஊடே ‘போப்பா! அவரது கதைங்க வாசிக்க ரொம்ப நல்லா இருக்கு. கவிதை மாதிரி. ஆனா ரொம்ப சோகம் நிரம்பி வழியுது. ரொம்ப வெறுமையா உணர்றது மாதிரி இருக்கு’ என்றார். அவரது நான் மறுக்கவில்லை. அவர் சொல்வது உண்மை தான் எனத் தோன்றியது. அத்தனை ஆர்ப்பட்டங்களோடும் ஆரவாரங்களோடும் மனிதர்கள் வாழும் இந்த வாழ்க்கை எத்துணை வெறுமையானது. வாழ்க்கைக்கென எடுக்கப்படும் மனித எத்தணிப்புகள் பல சமயங்களில் ஒரு பரந்து விரிந்த பார்வையில் எத்தனை அபத்தமாகிப் போகின்றன என்பதை அவரது கதைகள் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.
ஐந்து பெண்களைப் பெற்ற ஒரு தந்தை, அவர்களின் ஒரே சொத்தான வசிக்கும் சிறிய வீட்டினை விற்று விட்டதாகவும், அதனை இடிக்க வெள்ளிக் கிழமையன்று ஆட்கள் வர இருப்பதாகவும் அறிவிப்பதில் இருந்து கதை துவங்குகிறது. வீட்டின் கடைசிப் பெண்ணான கல்யாணி தான் வாசகனுக்கு கதைசொல்லியாக உடன் வருகிறாள். சிறு வயது முதலே தான் சேர்த்த, அவள் அசை போடும் ஞாபகங்கள் வாயிலாக அக்குடும்பம் அப்படியொன்றும் சிறப்பாக எந்த காலத்திலுமே வாழ்ந்து விடவில்லை என்று புரிந்து கொள்கிறோம்.
அவளது நினைவு கூறல்களின் வாயிலாக ஏனைய கதாபாத்திரங்களைப் பற்றியும் நாம் அறிய வருகிறோம். கல்யாணியின் நினைவோட்டம் ஒவ்வொருவரைக் குறித்தும் சிறு சிறு விள்ளல்களாகவே இருக்கிறது. மொத்த குடும்பத்தின பாத்திரங்களை வாசகனுக்கு அறிமுகம் செய்ய இதனை ஆசிரியர் ஒரு உத்தியாகவே கையாண்டிருக்கிறார் என்பது புலனாகிறது. ஒரே அறையும் சமையலறையும் கொண்ட, எப்போதும் ஒழுகிக் கொண்டிருக்கும் அவ்வீட்டில் அவளது அம்மா விதிக்கு தன்னை ஒப்புவித்த ஒரு பெரிய குடும்பத்தின் தலைவியை எடுத்துக் காட்டுகிறாள். வீட்டை விற்பதாக அப்பா சொன்னதும், எந்த திகைப்போ, மறுப்போ, அழுகையோ அவளிடமிருந்து வெளிப்படவே இல்லை என்பது முதலில் சற்றே ஆச்சரியமாக நமக்கு இருக்கலாம். ஆனால் ‘அம்மா எப்போதும் போலவே வேலையில் இருந்தாள். சமையல் அறையில் அலையும் குருவியைப் போல அவள் அந்த இருட்டோடு பழகிப் போய்விட்டாள்.’ என்பது அவளது மௌனத்திற்குள் ஒளிந்திருக்கும் பக்குவத்தையே (அல்லது மித மிஞ்சிய விரக்தியையோ) காட்டுகிறது.
தாய்மாமன் மீது ஆசை கொண்டு, பின் அவனது புறக்கணிப்பைத் தாழ முடியாமல் அவளது அக்கா பிரபாவின் அழுகை பழகிய சித்தரிப்பு எனினும் கதையின் காட்சியை முழுமை செய்ய தேவைப்படுவதாகவே இருக்கிறது. அடுத்தவரைப் பற்றியே கதையெங்கும் நினைத்துப் பார்க்கிற கல்யாணி தன்னைக் குறித்த ஞாபகங்களையும் சேகரம் செய்திருக்கிறாள் என்பது ஒரு முறை அடிபட்டுக் கிடக்கையில் தள்ளி விட்ட அவளது பள்ளித் தோழனே, வீட்டிற்கு பார்க்க வருகையில் திராட்சைப் பழங்களை அவனுக்கு தந்த நினைவை அசை போடுகையில் உயிர்க்கிறது.
செல்லும் அந்த தோழனை திருப்பவும் அவள் பார்க்கவே இல்லை என்பதாகட்டும், அவளது மாமா ஏதும் சொல்லாமல் அவர்களின் வீட்டிலிருந்து வெளியேறுவதாகட்டும், இரண்டுமே இயலாமையில் இருக்கும் அவர்களை விட்டு விலகியோடும் உலகத்தையே குறிப்பதாக தோன்றுகிறது. ‘அப்போதெல்லாம் வீடெங்கும் பெண்கள்’ என்று ஒரு வரி ஓரிடத்தில் வருகிறது. கதை முழுவதுமே பெண்களே நிறைகின்றனர். தந்தை பாத்திரம் இருக்கும் போதிலும் அவரது வெளி கதையில் குறைவே.