-வருணன்
 
மொழி குறித்து பேசும்போதெல்லாம் (அது எந்த மொழியாயினும்), அம்மொழியின் இலக்கியம் குறித்தும் நாம் பேச முற்படுகிறோம். ஒரு வகையில் இலக்கியம் குறித்து பேசாமல், மொழியை முன்வைத்து துவக்கப்படும் எந்த உரையாடலும் முழுமையடையவே முடியாது. இலக்கியம் என்பது அத்தனை அவசியமானதா? பள்ளிப் பருவம் முதலே மொழிப்பாட ஆசிரியர்கள் இலக்கியத்தின் சிறப்பையும், மேன்மையையும் பற்றி சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றனர். மொழிப்பாடத்திற்கான பாடதிட்டங்களிலும் இலக்கியத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தைப் பார்த்தே அது அவசியம் என தெளிவாக புரிந்து கொள்ளலாம். இலக்கியத்தின் வழியாகவே ஒரு மொழியை நாம் செம்மையாக கற்கவும், புரிந்து கொள்ளவும் முடிகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
இக்கட்டுரையின் தலைப்பை இலக்கியம் ஏன் அவசியம் என்றோ இலக்கியத்தின் முக்கியத்துவம் என்ன என்றோ சூட்டி இருந்தால் இன்னும் தெளிவாக அது கட்டுரையின் நோக்கத்தை சொல்வதாக அமையும் எனத் தோன்றுகிறது. இருப்பினும் இத்தலைப்பு ஒரு விதத்தில் இலக்கியம் குறித்த அறிமுகமோ, பரிச்சயமோ இல்லாத ஒருவரின் மனதில் மிக அடிப்படையான கேள்வியாக இருக்குமென்பதால் அதுவே வைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய சிந்தனையை நாம் இலக்கியத்தின் நோக்கம் (scope) என்ன என்பதில் இருந்தே துவக்க வேண்டும்.
 
Scope of Literature
 
முதன்மையாக இலக்கியத்தை நாம் இருவகையாக பிரிக்கலாம். அவை வாய்மொழி இலக்கியங்கள் மற்றும் எழுதப்பட்ட (அல்லது எழுத்து) இலக்கியங்கள் ஆகும். இலக்கிய வடிவங்களும் பல உண்டு என்பதை நாம் நன்கு அறிவோம். வகைகளோ, வடிவங்களோ எதுவாயினும் இலக்கியங்களை ‘புனையப்பட வரலாறு’ என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். ஒரு மொழியில் படைக்கப்படும் இலக்கியத்தின் மிக அடிப்படையான நோக்கமே அதன் மக்களின், அந்த இனத்தின் வாழ்க்கைக் கூறுகளை, வாழ்வியலை பதிவு செய்வதே ஆகும். மிக பழமையான இலக்கியங்களே நாம் அக்காலத்தோடு தொடர்பு கொள்ளக் கூடிய ஒரே நுழைவாயில். அதன் வழியாக நுழைந்து நாம் இல்லாத காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையை நாம் படிக்க முடிகிறது. இலக்கியம் என்பது ஒரு வகையில் ஒரு அறிதல் முறை. வரலாற்றோடு நாம் நடத்தும் ஒரு உரையாடல். படைப்பு நேர்மையோடு உருவான எந்த இலக்கியமும் ஒரு வரலாற்று ஆவணமே.
பொதுவாக வென்றவர்களால் எழுதப்படும் நாட்குறிப்புகளே வரலாற்றின் பக்கங்கள் முழுவதும் நிறைந்து கிடக்கின்றன என்ற ஒரு கருத்து பரவலாக இருப்பதை நாம் அறிவோம். அது ஒரு வகையில் உண்மையும் கூட. வரலாறு என்பது எப்போதுமே ஒற்றைப் பார்வையை முன்வைத்து எழுதப்படுகவது. வரலாறு பெரும்பான்மையாக பன்முகத்தன்மையோடு இருப்பதே இல்லை. வரலாற்றை அணுகுவதிலும் பன்முகப்பார்வை என்பது இருப்பதே இல்லை. இதன காரணமாக எந்த ஒரு நிகழ்வையும் (event/ incident ) ஒரு கோணத்திலேயே வரலாறு அணுகுகிறது.
இருப்பினும் ஒரு வரலாற்று நிகழ்விற்குள் ஒளிந்திருக்கும் உண்மையை நாம் பன்முகப்பார்வை கொண்டு அணுகும் போது மட்டுமே கண்டடைய முடியும். வேறு எவ்வழியிலும் அது சாத்தியமில்லை. வரலாற்றின் இந்த இயலாமைக்கு ஒரே மாற்று இலக்கியம் மட்டுமே. இலக்கிய பிரதிகளின் வாயிலாக மட்டுமே நாம் ஒரே நிகழ்வின் பல மாறுபட்ட கோணங்களையும், அந்நிகழ்வோடு தொடர்புடைய மனிதர்களின் பலதரப்பட்ட  நிலைப்பாடுகளையும் அவரவரது பக்க நியாயங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
வரலாறு காலத்தின் கண்ணாடி தான். ஆனால் அது எப்போதும் ஒரு தட்டையான பிம்பத்தினை மட்டுமே காட்டக் கூடியதாக இருக்கிறது. ஆனால் இலக்கியமோ அதிகமான பரிமாணங்களோடு அந்த வரலாற்றை மாற்றக் கூடிய திறனுடைய கருவியாகத் திகழ்கிறது. அதனால் இலக்கியம் பிரதிபலிக்கும் வரலாற்றின் முகம் உண்மையின் பல முகங்களைக் காட்டுவதாக அமைகிறது.
நம்மிடையே நிலவுகிற பலதரப்பட்ட கருத்து வேற்றுமைகள் நீங்கிடவும், பரப்பப்படும் அடிப்படைவாதத்தை எதிர்கொள்ளவும் ஒரே வழி சரியான முறையில் இலக்கியத்தினை அணுகிட இன்றைய தலைமுறைக்கு பயிற்சி கொடுப்பது தான். அதுவே எதிர்கால சமூகத்தின் அமைதிக்கும், ஆரோக்கியத்திற்கும் நாம் இன்று சரியான பாதையில் எடுத்து வைக்கக்கூடிய முதல் அடியாகவும் இருக்கும்.