இந்தியக் கல்விமுறையின் முரண்கள் – பகுதி I

கல்வி தொடர்பான உரையாடல்கள் நம்மிடையே தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளன. இதன் மீது நாட்டமுடையோர், அக்கறை காட்டுவோரின் எண்ணிக்கையும் குறைவே எனும் போதிலும், சமூக முன்னேற்றத்தின் பால் தீவிர அக்கறை கொண்ட எல்லோரும் கல்வி குறித்தும் சிந்திக்கத் தவறுவதே இல்லை என்பது ஆறுதலான விடயமே.. இந்த சூழலில் இந்தியாவில் கல்வியின் வரலாற்றை நாம் தொடர பல்வேறு மதங்களின் தோற்ற வரலாறுகளை தொடர்வதே எளிமையான வழியாக இருக்கிறது. பல உலக மதங்களின் தாயகமான இந்தியாவில் மதங்கள் தோன்றி வளர்ந்த அதே வேளையில், அம்மதங்கள் சார்ந்த கல்வி முறைகளும் சேர்ந்தே வளர்ந்தன. அவற்றில் சாதக பாதகங்களும் சேர்ந்தே இருந்தன என்பதை மறுக்க முடியாது. உதாரணமாக வேத கால கல்வி முறையில் கல்வி கற்பதில் வர்க்க பேதங்கள் மிக முக்கிய காரணியாக இருந்ததை நாம் அறிவோம். கல்வியானது ஒரு குறிப்பிட்ட வர்கத்தினரின் உரிமைச் சொத்தாக ஆக்கப்பட்டதையும், ஏனையவருக்கு அது மறுக்கப்பட்டதும் நாம் அறியாதது அல்ல.
உலக வரலாற்றில், குறிப்பாக மேற்குலக வரலாற்றில் பதினேழாம் நூற்றாண்டு Age of Reasoning என்றும் அதனைத் தொடர்ந்த பதினெட்டாம் நூற்றாண்டு Age of Enlightenment என்றும் வருணிக்கப்படுகிறது. இக்காலகட்டத்தில் தான் அறிவியல் குறித்த மானுட புரிதல் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு ஒரு பெரும் நகர்வைக் கண்டது. அதன் விளைவாக நாம் கண்டடைந்ததே தொழிற் புரட்சி. குறிப்பாக அச்சு இயந்திரங்களின் வரவுக்குப் பிறகு கல்வித்துறையில் நிகழ்ந்த முன்னேற்றம் ஒரு மாபெரும் பாய்ச்சலே. சிந்தனையும், அறிவும் ஒரே இடத்தில் தேங்காமலும். ஒரே நபருக்குள் சுருங்காமலும் பெரும் விரிவுற்றது இந்த காலகட்டத்தில் தான்.
இந்தியாவைப் பொருத்தவரை பலதரப்பட்ட கல்வி முறைகள் புழக்கத்தில் இருந்திருந்த போதிலும், ஆங்கிலேயரின் காலனியானதற்குப் பிறகு பலதரப்பட்ட மாற்றங்களுக்கு உள்ளானது. ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு தங்களின் அதிகார மட்டத்தில் ஆங்கிலம் தெரிந்த இந்தியர்கள்- தங்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் தாங்கள் இடும் ஆணைகளையும் செவ்வனே நிறைவேற்றிடவும்- உதவியாளர்களாக மிக அதிகமாக தேவைப்பட்டனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அறிமுகம் செய்த கல்விமுறை குறித்து நாம் சிந்திக்கையில் உடனடியாக நம் மனதில் தோன்றும் ஒரு பெயர் மெக்காலே தான்.
 
Macaulay's Address
 
மெக்காலே பிரபு 1835 ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் நாள் பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒரு உரை நிகழ்த்தியதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தி உண்டு. அந்த உரையில் அவர் ‘நான் இந்தியாவின் எல்லா திக்குகளிலும் மேற்கொண்ட பயணங்களில் ஒரு யாசகனையோ, திருடரையோ கண்டதில்லை. இந்தகைய ஒரு வளம் கொழிக்கும் நிலத்தையும், பாரம்பரியமிக்க அற மதிப்பீடுகளை கொண்ட உயர்ந்த பண்புகளையுடைய மனிதர்களையும் பார்த்ததில்லை. இந்த நிலையில் நம்மால் ஒரு போதும் இந்திய நிலத்தை நமது ஆளுகையின் கீழ் கொண்டுவர முடியாது என்றே தோன்றுகிறது. அப்படி நாம் இந்தியாவை நமது ஆதிக்கத்திற்குள் கொண்டு வருவதற்கு அவர்களுடைய ஆதார மையமாக இருக்கின்ற ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை சிதைத்தல் அவசியம். அதற்காக நான் அவளுடைய தொன்மையான கல்வி முறைக்கும் கலாச்சாரத்திற்கும் பதிலியாக நாம் ஒரு கல்வி முறையைப் புகுத்த வேண்டும் எனும் யோசனையை முன்மொழிகிறேன். இந்தியர்கள் பிரித்தானியாவிலிருந்து வரும் சகலமும் தம்முடைய நாட்டில் இருப்பவற்றைக் காட்டிலும் சிறப்பானவை என்றும் தமதுடையடதை விடவும் மேன்மையானதெனவும் நினைப்பார்களேயானால் அவர்களின் சுயமதிப்பை அவர்கள் இழந்து போவார்கள். அதன் விளைவாக தமது மரபான கலாச்சாரத்தைத் தொலைப்பார்கள். அப்படியொரு நிலையில், உண்மையிலேயே நாம் நினைப்பது போல, நமது மேலாதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு தேசமாக இந்தியா மாறும்.’
இந்த தகவல் குறித்த குழப்பங்கள் இருப்பதாலேயே ஒரு செய்தி உண்டென முன்னரே குறிப்பிட்டேன். உண்மையில் குறிப்பிட்ட அந்நாளில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் மெக்காலே பிரபு உரை நிகழ்த்தினாரா என்பதை உறுதி செய்யும் தகவல்களோ தரவுகளோ காணக் கிடைக்கவில்லை. சில அதிகாரப்பூர்வமற்ற இணையப் பக்கங்களில் இது குறித்து நாம் வாசிக்கக் கிடைக்கிறது. இப்படி ஒரு செய்தியை பரப்பியதே தீவிர தேசியவாதிகளாக இருந்த சில இந்தியர்கள் தான் என்ற கூற்றும் உலவுகிறது. (மார்ச் நான்கு, 1835 இல் இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது இவ்விடத்தில் நினைவுகூறத்தக்கது.)
எது எப்படியிருப்பினும், இந்தியாவில் மெக்காலே கல்விமுறையின் தாக்கத்தை நாம் நிச்சயம் மறுத்திட முடியாது. அக்கல்வி முறை இந்தியர்களை தமது சிந்தனையில், செயல்பாடுகளில் ஆங்கிலேயர்களாக மாற்றியிருந்தது. அதே வேளையில் அவர்களை சுயசிந்தனை அற்றவர்களாகவும், சுய அடையாளங்களைத் தொலைத்தவர்களாகவும் ஆக்கியிருந்தது. சுதந்திர இந்தியாவிலும் இதே மெக்காலே கல்விமுறையை அப்படியே அடியொற்றித் தான் நமது நடப்பு கல்வி முறைகளை கட்டமைத்துள்ளோம். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ராஜாராம் மோகன்ராய் போன்ற இந்திய அறிஞர்கள் மேற்கத்திய கல்வியை பெரிதும் ஆதரித்தனர் என்பது உண்மைதான். இருப்பினும் அவர்கள் அக்காலத்திய இந்திய சூழலில் மலிந்து கிடந்த சமூகப் பிற்போக்குத்தனங்கள், சாதிய அடக்குமுறை போன்ற எண்ணற்ற சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சனைகளுக்கு ஒரே மாற்றாக மேலைநாட்டு கல்வி தான் இருக்க முடியுமென தீவிரமாக நம்பினர். இந்த நம்பிக்கையின் பின்னணியில் தான் நாம் இது போன்ற ஆதரவுகளைப் பார்க்க வேண்டும்.
 

இக்கட்டுரைக் குறுந்தொடரின் நோக்கம் குறைகளைச் சுட்டிக் காட்டுவது அல்ல. மாறாக நமது கல்வி முறைகளில் நிலவி வரும் சில முரண்களை அவதானிப்பதே ஆகும்.

 
(தொடரும்…)
 
 

இலக்கிய கண்ணாடியில் சமகாலத்தின் பிம்பம்

 
கருத்தியல் ரீதியில் இலக்கிய தூய்மைவாதம் என்று ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் இது குறித்து இலக்கிய உலகினுள் நிச்சயம் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. நிச்சயம் அவை ஆதரவு, எதிர் கருத்துக்களாக இருக்கின்றன என்பதை சொல்லவும் தேவையில்லை. இலக்கியத் தூய்மைவாதம் என்பது என் புரிதலில் இலக்கியம் என்பது இலக்கியத்திற்காக மட்டுமே. அது நடப்புலகின் எவ்விதமான சமூக-அரசியல் செயலாக்கங்களை விமர்சிப்பதோ அல்லது எதிர்வினை ஆற்றுவதோ அவசியமற்றது எனும் நிலைப்பாடு.
படைப்பாளிகள் சிலர் மிகப் பிரம்மாண்டமான – அளவிலும், வீச்சிலும்-  படைப்பு சார்ந்த ஒரு செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கும் போது அவர்களது கவனக்குவிவு முழுவதும் அப்படைப்பைச் சார்ந்தே தான் இயங்க முடியும். அது அவர்களது எல்லா நேரத்தையும், உழைப்பையும் கோரும் விதத்தில் அமைந்திருக்கும். எனவே அவர்கள் சமகால சமூக மாற்றங்களை தங்களது எழுத்தின் வழியே பிரதிபலிக்கவோ, விமர்சிப்பதோ சாத்தியமில்லாமல் போவதாய் சொல்வதுண்டு. இருப்பினும் அவர்களே வேறு ஊடகங்களில், வேறு தளங்களில் தமது படைப்பியக்கத்தை, செய்து கொண்டிருக்கும் பெரிய ஆக்கத்தையும் தாண்டி, தொடர்ந்த படிதான் இருக்கின்றனர் என்பது யதார்த்தம். எடுத்துக்காட்டாக ஒரு பெரிய புதினத்தை எழுதிக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி, அதற்கிடையே சில பல கட்டுரைகள், சிறுகதைகள் என எழுதுவது வாடிக்கையாய் நடைபெறக் கூடிய ஒன்று தான்.
எனவே மேற்சொன்னதை நாம் நேரமின்மை என சொல்லிக் கொண்டாலும் உண்மையில் அதனை விருப்பமின்மை என்றும் புரிந்து கொள்ள வாய்பிருக்கிறது. தனது நிலைப்பாடு இது தான் எனத் தேர்ந்து கொள்ளும் உரிமை எல்லோருக்கும் உண்டு. ஆனால் அது சமூகத்தில் அவர்களது இடத்தைப் பொறுத்தே இருக்கவேண்டும் என்பதனை நிர்பந்தமாக புரிந்து கொள்ள இயலாது. ஒரு நபர்  சத்தம் போடாமல் பேசுவது தான் என் இயல்பு என்று சொல்வதை நாம் எவ்விதத்திலும் குறை சொல்ல முடியாது. ஆனால் அந்நபரே ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கும் பட்சத்தில், அது தனி மனித விருப்பம் சார்ந்த நிலைப்பாடு என்று ஒதுக்கிட முடியாதில்லையா.
 

Susan Sontag on Storytelling

                            Susan Sontag on Storytelling


 
மனித வாழ்க்கை இரண்டு மையங்களைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது. ஒன்று அறிவியல், இன்னொன்று அரசியல். அறிவியல் இன்றி வாழ்ந்த காலகட்டங்கள் கூட மானுட வரலாற்றில் உண்டு. ஆனால் அரசியல் இன்றி வாழ்ந்ததே இல்லை. உலகின் எல்லா சமூகங்களிலும், மொழிகளிலும் சமூக இயக்கத்தை உன்னிப்பாக இடைவிடாமல் கவனித்து அதனை விமர்சனப் பார்வையோடு அணுகுபவர்களாக எழுத்தாளர்களும், ஆசிரியர்களுமே இருந்து வருகின்றனர். ஏறத்தாழ இவ்விருவரும் ஒரே வேலையைத் தான் செய்கின்றனர். பின்னவர் தனது வகுப்பறைக்குள் மாணவருக்கு மட்டும் செய்வதை, முன்னவர் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் செய்கிறார். வேறுபாடு அவ்வளவே. எல்லா எழுத்தாளர்களும் ஆசிரியர்களே. எனவே தான் மற்ற எல்லா தரப்பினரையும் விட வெகு மக்களை வழிநடத்தும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. பல தேசங்களில், குறிப்பாக லத்தின் அமெரிக்க நாடுகளில், ஏற்படுகிற சமூக மாற்றங்கள் எல்லாவற்றிற்குப் பின்னாலும் எழுத்தாளர்களும், ஆசிரியர்களுமே நிற்கின்றனர்.
மேற்சொன்ன ஆரோக்கிய போக்கு ஏனோ தமிழ் சூழலில் வரவே இல்லை. தமிழ் சமூகத்தில் எழுத்தாளர்களில் கணிசமானோரையாவது நாம் சமூக விமர்சனங்களுக்கு – தமது பேச்சிலும் எழுத்திலும்- இடமளிப்பதாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஆசிரியச் சமூகம் ஒட்டு மொத்தமாக ஒரு அடர்மௌனத் திரைக்குப் பின்னால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது வருத்தமளிக்கக் கூடியதே. ஆசிரியப் பணியில் இருக்கின்ற சிலர் படைப்பாளிகளாகவும் இருப்பதே ஒரே ஆறுதலான செய்தியாக இருக்கிறது.
இலக்கியவாதிகளுள் ஒரு சாரார் சமூகத்தில் ஒட்டு மொத்தமாக இயங்கக் கூடிய புறவயமான அரசியலை எழுதாவிட்டாலும், தமது படைப்புகள் வழியே மனிதர்களுக்கிடையேயான அரசியலை ஏறத்தாழ எல்லா படைப்புகளிலும் எழுதுச் செல்கின்றனர். அது இல்லாமல் எழுதவே முடியாது என்பது உண்மையாயினும், அதனை கையாள்வதில் இருக்கிற நேர்த்தியை பலரது எழுத்திலும் காண முடிகிறது.
பல வாரங்களுக்கு முன்னே வரலாற்றிற்கும் புனைவிற்கும் இடையேயான  தொடர்பு குறித்து பேசியிருந்தோம். இன்று சொல்லியிருப்பவை அதனுடைய நீட்சியே. இலக்கியப் படைப்பு என்பது நிச்சயமாக எடுத்துக் கொண்ட கால-வெளி களத்தோடு தொடர்புடைய சமூகப் பார்வையை, சமூக யாதார்த்தத்தை பதிவு செய்ய வேண்டியது அவசியம். இலக்கியம் என்பது அது பேசுகிற காலத்தின், சமூகத்தின் ஆவணமாகிவிடுவதால் இது கவனிக்க வேண்டிய விசயமாக இருக்கிறது. தமது பங்களிப்பாக ஆசிரிய சமூகம் செய்ய வேண்டியது, நல்ல படைப்புகளை இனங்கண்டு அடையாளப்படுத்துதலும், நியாமனான படைப்புகளை இளைய தலைமுறையினரிடமும், வெகு மக்களிடமும் எடுத்துச் செல்கிற பரவலாக்குகிற முன்னெடுப்புகளையுமே.
 

தமிழரும், மிகை அங்கதமும்

 
’இடுக்கண் வருங்கால் நகுக’ என்றான் வள்ளுவன். அதாவது துன்பம் உன் வாழ்க்கையில் வரும் போது அதனைக் கண்டு மலைத்துத் துவண்டு விடாதே. எல்லா மனிதர்கள் வாழ்விலும் துன்பம் வரவே செய்யும். எனவே அந்த துன்பத்தைக் கண்டு நகைத்து அதனைக் கடந்து விடு என்கிற அர்த்தத்தில் சொல்லப்பட்டதே இக்குறள்.
தனிமனிதத் துன்பத்தைக் கடக்க சுய எள்ளல் ஒரு சிறந்த வழிமுறை தான். தம்மையே எள்ளல் செய்து கொள்கிற மனிதர்களுக்குள் அகந்தை குறைவாகவே இருக்கும். அது ’நான்’ எனும் கர்வத்தை மட்டுப்படுத்தியே வைத்திருப்பதால், அத்தகைய மனிதர்கள் தம் வாழ்க்கையில் சந்திக்கிற தோல்விகளையும், படுகிற அவமானங்களையும் மனதளவில் எளிதாக கடந்து செல்கிற பக்குவத்தை அது நிச்சயம் வழங்குகிறது.
ஆனால் ஒட்டு மொத்த சமூகமும் சந்திக்கிற பிரச்சனைகள் மற்றும் இடர்பாடுகளில் இருந்து மீள அங்கதத்தை தேர்வு செய்வது என்பது அச்சமூகம் சந்திக்கிற பிரச்சனையின் அளவு மற்றும் அதன் தீவிரத்தன்மையைப் பொருத்தே அமைய வேண்டும். அதோடு கூட பிரச்சனைகளைக் கடப்பது மட்டும் போதாது. மாறாக அவற்றிற்கான சரியான தீர்வுகளும் எட்டப்பட வேண்டும் என்பது நாம் நன்கு அறிந்ததே.
அங்கதம் (Satire) என்பதற்கு சொற்களஞ்சியம் (dictionary) தருகின்ற பொருள் ’சமூக கோளாறுகளை சீர்திருத்துகிற நோக்கில் அவற்றை நையாண்டி செய்தல்’ என்பதாகும். அதாவது நையாண்டி என்பதே கொஞ்சம் இறுக்கம் குறைந்த எதிர்ப்பின் வடிவமே. தமிழ் இலக்கியத்தில் அங்கதச் சுவைக்கு நெடுங்காலமாகவே முக்கிய இடமுண்டு. தமிழ் சமூகமும் அங்கதத்திற்கு தமது வாழ்வில் முக்கிய இடமளித்தே வந்துள்ளன. உறவுகளுக்குள் மனதைக் காயப்படுத்தாமல் குறைகளையும், சிறு சிறு தவறுகளையும் – வயது வித்தியாசமின்றி – சுட்டிக் காட்டிட மிகச் சிறந்த வழிமுறைகளுள் ஒன்றாக அங்கதம் இருக்கிறது.
இப்படி தனிமனித உறவுகளுக்குள் என்று மட்டுமல்லாமல், சமூக விமர்சனங்களையும் அங்கத்தத்தின் மூலமாக வெளிப்படுத்தும் போக்கு நெடுங்காலமாகவே நம்மிடையே இருக்கின்றது. தினசரிகளிலும், ஏனைய வார மாத நாளிதழ்களிலும் கேலிச் சித்திரங்களை வெளிவருவது பல பத்தாண்டுகளாவே வாடிக்கை. சமூக, அரசியல் விமர்சனங்களை காத்திரமாக கேலிச் சித்திரங்கள் வழியாக முன்வைக்க முடியும்.
சமூக வலைத்தளங்களின் புழக்கம் தமிழர் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது கடந்த பத்தாண்டுகளுக்குள் தான். குறிப்பாக முகநூல் மற்றும் மிகச் சமீபமாக புழக்கத்திற்கு வந்த வாட்ஸ ஆப் செயலிகள் போன்றவற்றின் வருகைக்குப் பிறகு தனி விமர்சனங்கள் மற்றும் சமூக விமர்சனங்களில் அங்கதம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமூக பிற்போக்குத்தனங்கள், அரசியல் விமர்சனங்கள், கருத்தியல் ரீதியான விமர்சனங்கள் என எல்லா தளங்களிலும் அங்கதம் இயங்கிய விதம் ஆரோக்கியமான துவக்கமாகவே தென்பட்டது.
 
Tamil Political Memes
 
இன்றைக்கு இணைய வெளியில், உலா வந்து கொண்டிருக்கிற மீம்கள் (Memes) அங்கதத்தின் நவீன வடிவமே. விதிவிலக்கே இல்லாமல் எல்லா விசயங்களுக்குமென மீம்கள் உருவாக்கப்படுகின்றன. மீம்களின் வரவிற்கு பிறகு சமூகத்தில் நிகழும், மக்கள் கவனம் பெறும் எந்த ஒரு விசயத்திற்கும் நூற்றுக்கணக்கில் மீம்கள் உருவாக்கப்படுகின்றன. தனிமனித கருத்துக்கள், சமூகத்தின் மீதான விமர்சனம், அரசியல் பார்வை, பொதுவெளியில் வெகுமக்களை சிரமத்திற்கு ஆளாக்கும் விசயம் என எதுவாயினும் மீம்கள் முக்கியமான எதிர்வினைகள் ஆற்றும் கருவிகளாக மாறி இருக்கின்றன என்பதை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
உருவாக்கப்படும் மீம்கள் சமூக வலைத்தளங்கள் வாட்ஸ் ஆப் போன்ற செயலிகள் வழியாக மிகக் குறுகிய காலத்தில் மிகப் பரவலாக மக்கள் பார்வைக்குக் கிடைத்துவிடுகிறது. நம்மை அறியாமலே (அல்லது அறிந்தே) இவற்றை நமது நட்பு வட்டத்தில் இருக்கும் நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவருக்கும் பகிர்வதன் மூலமாக இவற்றின் பரவலாக்கத்திற்கு நாமும் ஒரு காரணமாகிறோம்.
இது ஒரு விவாதத்திற்கு உகந்த பொருளா என்று வாசிக்கும் நீங்கள் எண்ணலாம். இதற்குக் காரணம் இது மிகவும் சாதாரணமானது தானே என்ற அபிப்ராயம் நம்முள் இருப்பது தான். உளவியல் ரீதியாக இதனை நாம் கொஞ்சம் ஆராயலாம். பொதுவெளியில் நடக்கின்ற ஒரு நிகழ்விற்கு நாம் இத்தனை காலம் மௌனமாக நமக்குள் பேசிக் கொண்டிருந்த அங்கலாய்ப்புகளின் மாறுபட்ட வடிவமே இந்த மீம்கள். குறிப்பாக அரசியல் எதிர்வினைகளாக வருகின்ற மீம்கள். சாமானியரான நமது குரலை இந்த மீம்களும் அரசியல் அங்கதங்களும் வெளிப்படுத்துகின்றன என்ற காரணத்தினாலேயே அதனை நாமறிந்தவர்களோடு பகிர விழைகிறோம். இப்படி பகிர்வது நமது சுயத்தை ஓரளவு ஆறுதல் படுத்தக்கூடியதாக இருக்கிறது. ஏதோ நாம் நமது எதிர்வினையை காட்டி விட்ட திருப்தியை மனதிற்குத் தருகிறது. அதனால் நமது சமூகப் பொறுப்புணர்வின் ஒரு வெளிப்பாடாகவே நாம் இது போன்ற தகவல்களையும் படங்களையும் பகிர்கிறோம். ஆனால் துவக்கத்தில் இது வெறும் செய்தியை பரவச் செய்யும் ஒரு வழிமுறை என்ற புரிதல் நாளடைவில் மங்கி, பகிர்வதே சமூகக் கடைமை என்றாகி விடுகிறது. அதாவது இது போன்றவைகளை பகிர்வதன் மூலமாகவோ, அல்லது ஒரு சமூக நிகழ்வு குறித்த, அங்கதம் நிறைந்த ஒரு முகநூல் நிலைத்தகவலை (Facebook status) இடுவதே சமூக அக்கறையின் பால் நாம் செய்யும் பங்களிப்பு என்றாகி விடுகிறது.
மேலும் நாட்கள் நகர, இதற்கு அடுத்த ஒரு நிலையில், பகிரப்படுகிற செய்தியின், அதன் மீதான விமர்சனத்தின் முக்கியத்துவம் நீர்த்துப் போய் அவற்றுள் இருக்கிற அங்கதம் மட்டுமே பலரது மனதுள் தங்கி விடுகிறது. இது ஒரு கட்டத்தில் ஒரு ’தகவல் பொழுதுபோக்காக’ (Infotainment) மட்டுமே எஞ்சுகிறது என்பது வருத்தத்திற்குரியதே.
இதன் காரணமாக சமூகத்தில் மக்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த சில வருடங்களுக்கு முன்னர் முக்கியமான காரணமாக இருந்த மீம்கள் உள்ளிட்ட அங்கதங்களே இன்று சமூக எதிர்வினையை அதனளவிலேயே மட்டுப்படுத்தி நீர்த்துப் போகச் செய்கிறது.
அங்கதம் நன்றே! ஆனால் அதீத அங்கதம்…?
 

எழுத்தும், சமூகமும் பகுதி – II

 
முதல் பகுதியில் இலக்கிய மதிப்பீட்டிற்கான அளவுகோல்களைக் குறித்து சிந்தித்த போதிலும், இலக்கியத்தின் வழி சமூக மாற்றத்திற்கான முன்னேடுப்புகள் என்ற இப்பகுதியின் மையக் கருத்தை சற்று சயக்கத்துடனே அணுகுவோம் என நினைக்கிறேன். இதைச் சொல்லக் காரணம், நம்மில் பலருக்கும் இலக்கியத்தின் ‘வாசிப்பு இன்பம்’ மட்டுமே பிரதானமான பயன் பாடாக உள்வாங்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் நம்மில் பலருக்கும் ’வாசிப்பில் உழைப்பைச் செலுத்துதல்’ எனும் சொல்லாடலே விசித்தரமாக இருப்பது தான்.
சற்றே சிந்தித்துப் பார்ப்போமே? ஒரு படைப்பாளி தனது படைப்பை எழுதுவதற்கு முன்னே அதற்கென ஆய்வு செய்ய வேண்டி இருக்கலாம். அப்படைப்பின் மையநோக்கம் வாசகரை சென்றடைய மிகச் சிறந்த ஒரு மொழிநடையை கண்டடைய அவர் அதிகமான உழைப்பைச் செலுத்த வேண்டியதிருக்கலாம். இப்படி ஒரு படைப்பை உருவாக்க உழைப்பைச் செலுத்துவது என்பது அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே. ஆனால் ஒரு வாசகராக ஒரு இலக்கியப் படைப்பை வாசிக்க உழைப்பைச் செலுத்த வேண்டும் என்பதை ’படைப்புச் செயலாக்கத்திற்கான உழைப்பை’ப் போல அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தோடு உள்வாங்கிட முடியாது என்பதே யதார்த்தம்.
எந்த ஒரு இலக்கிய படைப்பும் துவங்குவது மட்டும் தான் ஒரு படைப்பாளியிடம் இருந்து. ஆனால் அது முழுமையடைவது ஒரு வாசகனிடத்தில் தான். எப்படி கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டை பிரித்துப் பார்க்க நினைப்பது இயலவே இயலாத காரியமோ அது போலவே தான் இலக்கியத்தைப் படைப்பதும்-வாசிப்பதும். ஒன்று இல்லாமல் மற்றோன்றுக்கு அர்த்தமே இல்லை. தேவையும் இல்லை.
 
Reading is to the mind
 
இலக்கியத்தின் வழி சமூக மாற்றம் என்பதற்கான முதற்படி எழுத்திற்கும்-வாசிப்பிற்குமான தொடர்பை அதன் முழு அர்த்தத்துடன் உள்வாங்குவதில் இருந்தே துவங்க முடியும். ஏனெனில் சொர்க்கமே நமக்கு வாக்களிக்கப்பட்டிருப்பினும் அதனை அடையும் சரியான வழியை நாம் தேர்ந்து அல்லது தெரிந்து கொள்வது வரை பலனேதுமில்லை. அது போலவே தான் இதுவும். இலக்கியம் ஒரு அற்புதமான ஊடகம். அதன் வழியே பல நல்ல விசயங்களை நாம் எளிதில் வாசிப்பவர் மனதில் ஏற்றிட முடியும். ஆனால் அது சரியான வழியில் உள்வாங்கப்பட வேண்டும். அது அல்லாமல் எந்த ஒரு பயனும் இருக்கப் போவதில்லை.
சமூகம் என்பதே தனிமனிதர்களின் தொகுப்பாக இருக்கிற பட்சத்தில் சமூக மாற்றம் என்பது ஏதோ வெளியில் இருந்த வர வேண்டியது என்ற எதிர்ப்பார்ப்பு பலரிடமும் இருப்பது, சற்றே ஆச்சரியமளிக்கிறது தான். சமூக மாற்றம் என்பது அச்சமூகத்தின் அடிப்படை அலகாக இருக்கக்கூடிய தனிமனிதர்களிடம் இருந்து துவங்கிவது தானே சாத்தியம் !
தனிமனிதர்களின் சுயத்தை செழுமைப்படுத்தும் பெரும் பணியை முறையான இலக்கிய வாசிப்பின் மூலமாக எளிதான செயல்பாடாக மாற்ற முடியுமென்ற அனுகூலமே, இலக்கியத்தின் சமூக மாற்றத்திற்கான ஆகச் சிறந்த பங்களிப்பாக இருக்கும். நல்ல இலக்கியத்தை சரியான வகையில் அணுகுகிற ஒரு வாசகன், முதலில் தன்னைக் கண்டடைகிறான். தன்னைப் புரிவதன் வழியாக சக மனிதனைப் புரிகிறான். சக மனிதர்களைப் புரிந்து கொள்வதன் வழியாக அவன் ஒட்டு மொத்த சமூக இயக்கத்தை- அதனுள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், முரண்பாடுகள், குறைகள் என எல்லாவற்றோடும் சேர்த்தே- புரிந்து கொள்கிறான்.
இவ்வகையான புரிதல் அவனுக்கு எது சமூக கூட்டியக்கத்தில் சரியாக இருக்கிறது. எந்த அம்சம் மாற்றப்பட்டே ஆக வேண்டும். அப்படி மாற்றப்பட வேண்டிய அந்த அம்சத்தை மாற்றுவதற்கான தனது தனிப்பட்ட பங்களிப்பு எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும் என்கிற புரிதலும் அதன் வழியே கிடைக்கிற தெளிவும் ஒன்றன்பின் ஒன்றாக வாய்க்கும். அதுவே சமூக மாற்றத்திற்கான வழித்தடமாகவும் இருக்கும்.
 

எழுத்தும், சமூகமும் – பகுதி – I

 
கடந்த வாரம் நாம் ஒருவர் வாசிப்பின் வாயிலாக பெறக்கூடிய இலக்கிய அனுபவம் என்றால் என்ன என்பது குறித்து சிந்தித்துப் பார்த்தோம். ஒரு வகையில் அப்பார்வை அகவயமானது. ஒரு தனிமனிதனுக்கு இலக்கிய அனுபவத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்பதாகவே நமது தேடல் இருந்தது. இதே கேள்வியை நாம் ஒட்டு மொத்த சமூகமும் இலக்கிய அனுபவத்தின் வாயிலாக அடையும் பயன் என்ன எனும் கேள்வியாக விரித்தால் அதற்கான பதில் என்னவாக இருக்கும்?
எழுத்து மட்டுமே சமூக மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியுமா? நல்ல எழுத்தை வாசிப்பதால் மட்டுமே நம்மைச் சுற்றியுள்ள எல்லாமே மாறி விடுமா? இது போன்ற கேள்விகள் நம் மனதில் இத்தருணத்தில் நிச்சயம் எழும். தவறில்லை. சரியான கேள்விகள் தான். ஆனால் இக்கேள்விகளுக்கான விடைகளை நாம் நேரடியாக வரையறுக்க முடியாது. இருந்த போதிலும் விடைகளைத் தேடுகிற பயணத்தில் நாம் பல விசயங்களைப் தெரிந்து கொள்ளலாம்.
தனிமனிதர்கள் சேர்ந்து உருவாவதே சமூகம் எனும் அமைப்பு. இது நமக்கு மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பே இல்லை. அப்படியெனில் சமூக மாற்றம் என்பது நம்மில் இருந்தே துவங்க வேண்டும். இதனையும் நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். சமூகத்தை புரிந்து கொள்வதென்பது மனிதர்களைப் புரிந்து கொள்வதில் இருந்தே துவங்க முடியும். சக மனிதர்களைப் புரிந்து கொள்ளும் அதே நேரத்தில், அது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு, நம்மையே புரிந்து கொள்வது அவசியம். இதற்கு இலக்கியம் பேருதவி செய்கிறது.
இலக்கியத்தின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் எனும் கேள்விக்கு பலரும் பலவிதமான கருத்துக்களை காலந்தோறும் முன்வைத்துக் கொண்டே இருப்பதை நாம் பார்த்து வருகிறோம். கருத்துகள் பலவாக இருக்கிற போதிலும் இலக்கியத்தின் ‘அறம் சார்ந்த இயக்கம்’ என்பது பலராலும் தொடர்ந்து வலியுறுத்தப்படும் ஒரு கருத்தாக இருந்து வருவதை நாம் பார்க்கிறோம். நல்ல இலக்கியம் என்பது நல்ல விசயங்களை மட்டுமே பேச வேண்டுமோ என்பது அப்பதில்களில் நாம் அடிக்கடி முன்னிலைப் படுத்தப்படுவதை நாம் காணலாம். உண்மையில் இலக்கியம் என்பது ஒரு பிராசார ஊடகம் அல்ல. ஒரு இலக்கியப் படைப்பு நீதியைச் சொல்வது முக்கிய அம்சம் எனினும் அது மட்டுமே அதன் நோக்கம் அல்ல.
 
Lenses
 
இலக்கியம் என்பது வாழ்வைப் புனைவில் பதிவு செய்கிறது. வாழ்க்கையின் பல்வேறு சாயைகளை (shades of life) எடுத்துக் காட்டுகிறது. அதுவே அதன் இயல்பாகவும் இருக்கிறது. அப்படியெனில் இலக்கியப் படைப்புகள் உலகில் உள்ள எல்லாவற்றையும் காட்டுகிற போதுதான் அவை முழுமையடைய முடிகிறது. அது காட்டுகிற உலகம் நமக்கு தனிப்பட்ட விதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் ஒரு வாசகனாக நம்மால் அதனோடு நம்மை பிணைத்துக் கொள்ள முடிகிறது. வேறொரு படைப்பு காட்டும் உலகம் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத உலகமாக இருக்கிற பட்சத்தில் அதனுடன் நம்மால் உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியவே முடியாது. அப்போது எனக்கு இப்படைப்பு பிடிக்கவில்லை என்று நாம் விலகுவோம்.
ஒரு வாசகனாய் இந்த ’பிணைத்து கொள்ளல்’ அடிப்படையில் தான் நாம் பிடித்தவை பிடிக்காதவை என தரம் பிரித்து பட்டியலிட்டுக் கொள்கிறோம். ஒரு இலக்கியம் காட்டுகிற வாழ்க்கையோ/ உலகமோ நல்லதாகவோ, மிக மோசமானதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது எந்த நோக்கத்தின் (அல்லது எந்த நோக்கத்திற்காக) அடிப்படையில் அவ்வுலகை தனது புனைவில் கொண்டு வந்துள்ளது என்பதே அதனை நல்ல எழுத்தென்றும் மோசமான எழுத்து என்றும் நிர்ணயம் செய்கிறது. அதுவே இலக்கிய விமர்சனங்களின் முக்கியமான அளவுகோள்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
அதாவது இலக்கியத் தரம் என்பது ஒரு படைப்பின் உள்ளடக்கத்தை விடவும், அப்படைப்பின் ஆதார நோக்கத்தின் அடிப்படையிலேயே அமைகிறது. இலக்கியம் என்பது ஒரு கண்ணாடி போல பல நேரங்களில் வெறுமனே வாழ்க்கையைப் பிரதிபலிக்கும். பதிவு செய்வதே அதன் அடிப்படை நோக்கம். அதற்கு அர்த்தம் கற்பித்துக் கொள்வதும், அதன் வழியாக என்ன பார்க்கிறோம் என்பது வாசகராகிய நம்மைச் சார்ந்தது.
இம்முதல் பகுதியில் நாம் இலக்கிய மதிப்பீட்டிற்கான அளவுகோள்கள் குறித்துப் பார்த்தோம். அடுத்த பகுதியில், எப்படி ஒரு இலக்கியம் சமூக மாற்றத்திற்கான துவக்கமாக இருக்க முடியும் என்பது பற்றி சிந்திக்கலாம்.
 

இலக்கிய அனுபவம் என்றால் என்ன?

-வருணன்
 
எழுத்து என்பது வாசிப்பு இன்பத்தை தருகின்றது. வாசிப்பால் ஒருவர் அடையும் நிறைவு மிகுந்த நேர்மறையான விளைவுகளை அவரது ஆளுமையில் ஏற்படுத்துவதாக உளவியல் ஆய்வு முடிவுகள்  தெரிவிக்கின்றன. இது சமீபத்தில் ஒரு கட்டுரையை வாசிக்கையில் காணக் கிடைத்த தகவல். நிச்சயம் இது உண்மை தான். தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தின் மூலமாகவே நம்மில் பலர் இதனை உணர்ந்து கொண்டிருப்போம். நமக்கு சுய அனுபவத்தின் மூலமாக முன்னரே தெரிந்த ஒன்றைத் தான் அந்த ஆய்வு ஆய்ந்து தெரிவிக்கிறது. ஆனால் இது மட்டுமே எழுத்தின், வாசிப்பின் நோக்கம் அல்ல என்பதனை நாம் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
சில வாரங்களுக்கு முன்னர் நாம் வரலாற்றிற்கும் புனைவிற்குமான தொடர்பு குறித்து சிந்தித்தோம். புனைவு நிசத்தின் கண்ணாடி. கலாப்பூர்வமாக அது நிசத்தைப் பிரதிபலிக்கிறது. புனைவின் வழியாக நாம் நிசத்தின் (reality) பல பரிமாணங்களைக் கண்டு கொள்ள முடியும். ஒரு எழுத்தாளர் தனது படைப்பின் ஒரு புனைவு வெளியை தன் எழுத்தால் நிர்மாணித்து அதில் கதாப்பாத்திரங்களை உலவ விடுகிறார். அம்மாந்தர்களின் கதையை நமக்கு அப்படைப்பு சொல்கிறது. இம்மனிதர்கள் நிசமல்ல. அவர்கள் உலவும் வெளி (space) நிசமல்ல. ஆனால் அவர்களும், அவ்வெளியும், அவர்களது கதையும் நிசத்தை உள்வாங்கி வளர்த்தெடுத்த படைப்பாளியினுடைய கற்பனையின் வெளிப்பாடே. ’இலக்கிய அனுபவம்’ என்பது எழுதுபவர்களும், தீவிர வாசகர்களும் அடிக்கடி சொல்லக் கூடிய ஒரு பதம். இலக்கிய அனுபவம் என்பது என்ன? அது ஏன் முகியமென பலரும் சொல்கிறனர்?
மனித வாழ்க்கை எவ்வளவு அற்பமானது என்பதனை ஒரு தனி மனித இருப்பை (இருப்பு-existence)  பிரபஞ்சத்தை இருப்பை அதன் பின்னணியில் வைத்துப் பார்க்கையிலேயே நாம் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளலாம். ஒரு மனிதனின் வாழ்நாள் என்பது காலத்தின் பிரம்மாண்டத்தின் முன்னர் ஒன்றுமே இல்லாதது. ஒரு சிறு தூசு. ம்னித தேடல்களுள் முக்கியமான ஒன்று அனுபவத்தினால் கைக்கொள்கிற அறிவு. ஏட்டறிவை விடவும் பட்டறிவு ஆழமானது. இதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. ஆனால் மிக கொஞ்சமான காலத்திற்குள் ஒரு மனிதன் எவ்வளவு அனுபவங்களைப் பெற்றிட முடியுமென்பதை நாம் யோசிக்க வேண்டும். அனுபவத்தால் நாம் பெறக்கூடிய அனுபவங்கள் எல்லாம் சுயானுபவங்களே. ஆனால் அடுத்தவர் வாழ்க்கையைப் படிப்பதன் மூலமாக நாம் பெறக் கூடிய அனுபவமும் அதே அளவு மனித வாழ்க்கைக்கு மிக மிக முக்கியமானது.
 
Quote-Literary experience
 
ஆழமாக எழுதப்பட்ட ஒரு இலக்கியப் படைப்பு எழுத்தாளனின் கற்பனையிலிருந்து உதித்திருந்த போதிலும், அப்படைப்பில் வருகின்ற கதாபாத்திரங்களின் வாயிலாக முன்வைக்கப்படும் மனித வாழ்க்கை உண்மைக்கு மிகவும் நெருக்கமானது. வாசிப்பின் மூலமாக இது சகமனிதருடைய அனுபவத்தில் இருந்து கற்று கொள்வதற்கு இணையான ஒரு அனுபவத்தை வாசகர் ஒருவர் முறையான வாசிப்பின் மூலமாக நிச்சயம் பெற முடியும். இப்படிப் பெறக் கூடிய வாசிப்பு அனுபவம் சுயனுபவங்களுக்கு இணையென்று சொல்ல முடியாத போதிலும் ஒருவர் தனது தீவிர வாசிப்பின் மூலமாக ஏறத்தாழ அதற்கு இணையானதொரு அனுபவத்தை பெற முடியும். இதன் வழியாக வாழும் ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கையை வாழும் வரத்தை வாசிப்பே தருகின்றது. வாசிப்பில் எந்த அளவிற்கு மனோரீதியாக வாசகனுக்கும் படைப்பிற்குமான இடைவெளி குறைகிறதோ அந்த அளவிற்கு அந்த அனுபவம் உண்மையாக வாழ்ந்து மட்டுமே பெறக்கூடிய சுய அனுபவத்திற்கு இணையான ஒரு அனுபவமாக வளரும். இத்தகையதொரு அனுபவத்தையே ‘இலக்கிய அனுபவம்’ என்கிறோம்.
இலக்கிய அனுபவத்தை தருகின்ற வாசிப்பு என்பது ஒரு விதத்தில் மனித மனதைப் பண்படுத்துகிற ஒரு மனப்பயிற்சியே. தரமான உணர்வுப்பூர்வமான வாசிப்பு ஒரு மனிதனை சக மனிதர்களின், சக உயிர்களின் துயரை உணர்ந்து கொள்ளக் கூடிய பக்குவத்தை தருகின்றது. அவனது சிந்தனையை நேர்செய்கிறது. இலக்கிய அனுபவத்தை இயந்திரத்தனமாக அல்லாமல் (பலருடைய இலக்கிய அனுபவம் இப்படிப்பட்டதாகவே இருக்கிறது என்பது வருத்தமானது தான்.) உணர்வுப்பூர்வமாக கண்டடையும் ஒரு வாசகனுக்கு மேற்சொன்ன அத்தனையும் சாத்தியமாகும்.
இலக்கிய அனுபவம் சுய முன்னேற்றத்திற்கான ஒரு சிறந்த வழி. அது ஒரு மனிதனை இன்னும் மேம்பட்டவனாக மாற்றுகிறது. சக மனிதரின் துயரங்களைப் ’உணர்ந்து’ புரிந்து கொள்ள இலக்கிய வாசிப்பு பயிற்றுவிப்பதால் எல்லோர் மீதான இரக்கமும், கருணையும் அதிகரிக்கும். அன்பு தழைக்கும்.