’இடுக்கண் வருங்கால் நகுக’ என்றான் வள்ளுவன். அதாவது துன்பம் உன் வாழ்க்கையில் வரும் போது அதனைக் கண்டு மலைத்துத் துவண்டு விடாதே. எல்லா மனிதர்கள் வாழ்விலும் துன்பம் வரவே செய்யும். எனவே அந்த துன்பத்தைக் கண்டு நகைத்து அதனைக் கடந்து விடு என்கிற அர்த்தத்தில் சொல்லப்பட்டதே இக்குறள்.
தனிமனிதத் துன்பத்தைக் கடக்க சுய எள்ளல் ஒரு சிறந்த வழிமுறை தான். தம்மையே எள்ளல் செய்து கொள்கிற மனிதர்களுக்குள் அகந்தை குறைவாகவே இருக்கும். அது ’நான்’ எனும் கர்வத்தை மட்டுப்படுத்தியே வைத்திருப்பதால், அத்தகைய மனிதர்கள் தம் வாழ்க்கையில் சந்திக்கிற தோல்விகளையும், படுகிற அவமானங்களையும் மனதளவில் எளிதாக கடந்து செல்கிற பக்குவத்தை அது நிச்சயம் வழங்குகிறது.
ஆனால் ஒட்டு மொத்த சமூகமும் சந்திக்கிற பிரச்சனைகள் மற்றும் இடர்பாடுகளில் இருந்து மீள அங்கதத்தை தேர்வு செய்வது என்பது அச்சமூகம் சந்திக்கிற பிரச்சனையின் அளவு மற்றும் அதன் தீவிரத்தன்மையைப் பொருத்தே அமைய வேண்டும். அதோடு கூட பிரச்சனைகளைக் கடப்பது மட்டும் போதாது. மாறாக அவற்றிற்கான சரியான தீர்வுகளும் எட்டப்பட வேண்டும் என்பது நாம் நன்கு அறிந்ததே.
அங்கதம் (Satire) என்பதற்கு சொற்களஞ்சியம் (dictionary) தருகின்ற பொருள் ’சமூக கோளாறுகளை சீர்திருத்துகிற நோக்கில் அவற்றை நையாண்டி செய்தல்’ என்பதாகும். அதாவது நையாண்டி என்பதே கொஞ்சம் இறுக்கம் குறைந்த எதிர்ப்பின் வடிவமே. தமிழ் இலக்கியத்தில் அங்கதச் சுவைக்கு நெடுங்காலமாகவே முக்கிய இடமுண்டு. தமிழ் சமூகமும் அங்கதத்திற்கு தமது வாழ்வில் முக்கிய இடமளித்தே வந்துள்ளன. உறவுகளுக்குள் மனதைக் காயப்படுத்தாமல் குறைகளையும், சிறு சிறு தவறுகளையும் – வயது வித்தியாசமின்றி – சுட்டிக் காட்டிட மிகச் சிறந்த வழிமுறைகளுள் ஒன்றாக அங்கதம் இருக்கிறது.
இப்படி தனிமனித உறவுகளுக்குள் என்று மட்டுமல்லாமல், சமூக விமர்சனங்களையும் அங்கத்தத்தின் மூலமாக வெளிப்படுத்தும் போக்கு நெடுங்காலமாகவே நம்மிடையே இருக்கின்றது. தினசரிகளிலும், ஏனைய வார மாத நாளிதழ்களிலும் கேலிச் சித்திரங்களை வெளிவருவது பல பத்தாண்டுகளாவே வாடிக்கை. சமூக, அரசியல் விமர்சனங்களை காத்திரமாக கேலிச் சித்திரங்கள் வழியாக முன்வைக்க முடியும்.
சமூக வலைத்தளங்களின் புழக்கம் தமிழர் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது கடந்த பத்தாண்டுகளுக்குள் தான். குறிப்பாக முகநூல் மற்றும் மிகச் சமீபமாக புழக்கத்திற்கு வந்த வாட்ஸ ஆப் செயலிகள் போன்றவற்றின் வருகைக்குப் பிறகு தனி விமர்சனங்கள் மற்றும் சமூக விமர்சனங்களில் அங்கதம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமூக பிற்போக்குத்தனங்கள், அரசியல் விமர்சனங்கள், கருத்தியல் ரீதியான விமர்சனங்கள் என எல்லா தளங்களிலும் அங்கதம் இயங்கிய விதம் ஆரோக்கியமான துவக்கமாகவே தென்பட்டது.
 
Tamil Political Memes
 
இன்றைக்கு இணைய வெளியில், உலா வந்து கொண்டிருக்கிற மீம்கள் (Memes) அங்கதத்தின் நவீன வடிவமே. விதிவிலக்கே இல்லாமல் எல்லா விசயங்களுக்குமென மீம்கள் உருவாக்கப்படுகின்றன. மீம்களின் வரவிற்கு பிறகு சமூகத்தில் நிகழும், மக்கள் கவனம் பெறும் எந்த ஒரு விசயத்திற்கும் நூற்றுக்கணக்கில் மீம்கள் உருவாக்கப்படுகின்றன. தனிமனித கருத்துக்கள், சமூகத்தின் மீதான விமர்சனம், அரசியல் பார்வை, பொதுவெளியில் வெகுமக்களை சிரமத்திற்கு ஆளாக்கும் விசயம் என எதுவாயினும் மீம்கள் முக்கியமான எதிர்வினைகள் ஆற்றும் கருவிகளாக மாறி இருக்கின்றன என்பதை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
உருவாக்கப்படும் மீம்கள் சமூக வலைத்தளங்கள் வாட்ஸ் ஆப் போன்ற செயலிகள் வழியாக மிகக் குறுகிய காலத்தில் மிகப் பரவலாக மக்கள் பார்வைக்குக் கிடைத்துவிடுகிறது. நம்மை அறியாமலே (அல்லது அறிந்தே) இவற்றை நமது நட்பு வட்டத்தில் இருக்கும் நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவருக்கும் பகிர்வதன் மூலமாக இவற்றின் பரவலாக்கத்திற்கு நாமும் ஒரு காரணமாகிறோம்.
இது ஒரு விவாதத்திற்கு உகந்த பொருளா என்று வாசிக்கும் நீங்கள் எண்ணலாம். இதற்குக் காரணம் இது மிகவும் சாதாரணமானது தானே என்ற அபிப்ராயம் நம்முள் இருப்பது தான். உளவியல் ரீதியாக இதனை நாம் கொஞ்சம் ஆராயலாம். பொதுவெளியில் நடக்கின்ற ஒரு நிகழ்விற்கு நாம் இத்தனை காலம் மௌனமாக நமக்குள் பேசிக் கொண்டிருந்த அங்கலாய்ப்புகளின் மாறுபட்ட வடிவமே இந்த மீம்கள். குறிப்பாக அரசியல் எதிர்வினைகளாக வருகின்ற மீம்கள். சாமானியரான நமது குரலை இந்த மீம்களும் அரசியல் அங்கதங்களும் வெளிப்படுத்துகின்றன என்ற காரணத்தினாலேயே அதனை நாமறிந்தவர்களோடு பகிர விழைகிறோம். இப்படி பகிர்வது நமது சுயத்தை ஓரளவு ஆறுதல் படுத்தக்கூடியதாக இருக்கிறது. ஏதோ நாம் நமது எதிர்வினையை காட்டி விட்ட திருப்தியை மனதிற்குத் தருகிறது. அதனால் நமது சமூகப் பொறுப்புணர்வின் ஒரு வெளிப்பாடாகவே நாம் இது போன்ற தகவல்களையும் படங்களையும் பகிர்கிறோம். ஆனால் துவக்கத்தில் இது வெறும் செய்தியை பரவச் செய்யும் ஒரு வழிமுறை என்ற புரிதல் நாளடைவில் மங்கி, பகிர்வதே சமூகக் கடைமை என்றாகி விடுகிறது. அதாவது இது போன்றவைகளை பகிர்வதன் மூலமாகவோ, அல்லது ஒரு சமூக நிகழ்வு குறித்த, அங்கதம் நிறைந்த ஒரு முகநூல் நிலைத்தகவலை (Facebook status) இடுவதே சமூக அக்கறையின் பால் நாம் செய்யும் பங்களிப்பு என்றாகி விடுகிறது.
மேலும் நாட்கள் நகர, இதற்கு அடுத்த ஒரு நிலையில், பகிரப்படுகிற செய்தியின், அதன் மீதான விமர்சனத்தின் முக்கியத்துவம் நீர்த்துப் போய் அவற்றுள் இருக்கிற அங்கதம் மட்டுமே பலரது மனதுள் தங்கி விடுகிறது. இது ஒரு கட்டத்தில் ஒரு ’தகவல் பொழுதுபோக்காக’ (Infotainment) மட்டுமே எஞ்சுகிறது என்பது வருத்தத்திற்குரியதே.
இதன் காரணமாக சமூகத்தில் மக்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த சில வருடங்களுக்கு முன்னர் முக்கியமான காரணமாக இருந்த மீம்கள் உள்ளிட்ட அங்கதங்களே இன்று சமூக எதிர்வினையை அதனளவிலேயே மட்டுப்படுத்தி நீர்த்துப் போகச் செய்கிறது.
அங்கதம் நன்றே! ஆனால் அதீத அங்கதம்…?