மதில்கள் – சொல்லில் தளைக்கும் மனிதநேயம்

 
மதிலுகள் (குறுநாவல்) | 1965 | மலையாள மூலம் : வைக்கம் முகம்மது பஷிர் | தமிழில்: சுகுமாரன்  
 
பெரியன சொல்லல் எத்துணை கடினமோ, போலவே எளியன சொல்லலும். வைக்கம் முகமது பஷிர், கேரள இலக்கியப்பரப்பில் மட்டுமல்ல, இந்திய இலக்கிய வரைபடத்திலேயே தவிர்க்க இயலாத ஆளுமை. தன் வாழ்நாளில் பெரும்பகுதி ஒரு கலகக்காரராகவே வாழ்ந்துவிட்ட பஷிரின் எழுத்துகள் இயக்கும் களமும், தளமும் வேறு மாதிரியாக இயக்குவது ஆச்சரியமே. அவர் ஒரு அற்புதமான கதை சொல்லி என இலக்கிய வட்ட நண்பர்கள் பலர் சொல்லி கேட்டதுண்டு. இருப்பினும் சுயானுபவமாக பஷீரை வாசித்தது ‘மதில்கள்’ மூலமாகத் தான். அசாதாரணமான ஒரு கதைசொல்லியின் விரல்வழி மொக்கவிழும் எழுத்துக்கள் ஒரு புனைவுப் பிரபஞ்சத்தை வெகு இயல்பாக சித்தரித்துச் செல்கின்றது. வரையப்பட்ட சித்திரத்திற்குள் வரைந்தவனும் இருக்கிறான்.
 
மதில்கள்
 
பஷிர், எழுத்தாளர் பஷிராகவே வருகின்றார் நாவலுக்குள்ளும். பல முறை சிறைக்கு வெவ்வேறு காரணங்களுக்காக வந்திருந்த போதிலும் இம்முறை அவர் சிறை நுழைவது ராஜதுரோக குற்றத்திற்காக. அரசியல் கைதியாக வந்த அந்த முதல் நாளின் மாலைப் பொழுதில் இருந்தே பஷிர் சகல வசதிகளுடன் தான் வாழ்கிறார். சிறை வாழ்க்கை குறித்து எந்த புகாரும் அவரிடத்தில் இல்லை. பெண்ணின் அருகாமை இல்லையெனும் குறை தவிர அவருக்கு வேறொன்றும் குறையில்லை. புகர்களே இன்றி செல்கிறது அவரது சிறைவாசம். அதிகாரிகளின் கரிசனமும், சக கைதிகளின் நட்புறவும் அவருக்கு சார்பாகவே இருக்கின்றன. அவருக்கு எதிரானதென்று எதுவுமில்லை.
பஷிருக்கு சிறையில் தங்கள் பகுதிக்கு அப்பால் இருக்கும் பெண்களுக்கான சிறை வளாகம் மிகுந்த வசீகரமான இடமாகிப் போகிறது. அங்கிருந்து வருகின்ற ஏதாவதொரு குரலுக்காகவும், எங்கோ அலையும் காற்று இழுத்து வருகின்ற பெண்ணின் வாசனைக்காவும் அவர் ஏங்கிக் கிடக்கிறார். இருப்பினும் அது பெரிய தேடலை அவருக்குள் விதைக்கவில்லை. ஆனால் திடீரென ஒரு நாள் அவருடன் இருந்த பிற அரசியல் கைதிகள் (பதினேழு பேர்) விடுதலையாகி இவர் மட்டும் தனித்து விடப்படுகிறார். தான் மட்டும் நிற்கதியாய் விடப்பட்டது இவருக்கு பய உணர்வையே தோற்றுவிக்கிறது. சிறையில் இருந்து தப்பிக்கக் கூட மனதிற்குள் திட்டம் தீட்டுகிறார். தனிமை இம்சிக்கிறது.
ஏறத்தாழ தன் கதை சொல்லல் பாணியில் செல்லும் மென்மையான பகடி நிரம்பிய மொழிநடை, மதிலுக்கு அப்பால் இவர் இருபத்தியிரண்டு வயது நாராயணியைக் குரல் வழி அறிந்து கொள்ளும் கணம் தொட்டு காதல் பிரவாகிக்கிற எழுத்தாக பெருகி வழிய ஆரம்பிக்கிறது. இவரும் நாரயணியும் தங்களைப் பிரிக்கும் பிரம்மாண்டமான மதிலின் இருபுறமும் நின்று குரலை வழியே மட்டும் தங்களது பிரியங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நாராயணி அடிக்கடி ’இன்று இரவு இதை நினைத்து நான் அழுவேன்’, என்று சொல்லும் போதெல்லாம் அவளது – கதைக்குள் சொல்லப்படாத-  கசப்பான கடந்த காலம் ஒரு வெளிச்சக் கீற்றைப் போல கண நேரம் வாசகரின் மனதில் தோன்றி மறைகிறது.
வார்த்தைகள் கொண்டு தங்களது சுய வர்ணனைகள் மூலமாக, கேட்டுக் கேட்டு தெரிந்து கொள்வதும், பாசாங்கில்லாத அவர்களது காமமும் பால் ஈர்ப்பும் வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தினை தருவதாக அமைகிறது. முதற்கட்ட அறிமுகங்களில் அவளது புனைவு கலந்த சுய விவரணைகளில், அவளே பிற்பாடு புனைவைக் கலைத்து உண்மைகளை பகிரும் தருணங்களில் யதார்த்தம் மிளிர்கிறது. எந்த விதமான நாடகீயத் திருப்பமோ, செயற்கையாக வருவிக்கப்பட்ட உச்சத் தருணமோ இல்லாமல் தெளிந்த நீரோட்டம் போல சுழித்தோடும் கதை சொல்லலே மதில்களை தூக்கி நிறுத்துகிற அம்சங்களாக இருக்கின்றன.
சிறைக்கூடங்களை களமாக வைத்து பல ஆக்கங்கள் வந்துள்ளன. ஆனால் சிறை என்றதுமே மனதிற்குள் ஒரு ஒவ்வாமை எழுகின்றது. பயத்தால் மனக்குட்டை நிரம்புகிறது. சிறைச்சாலைகளை களமாக வைத்து எழுதப்பட்ட எல்லா படைப்புகளிலும் இருண்மைத் தன்மை நிச்சயம் இருக்கும். ஆனால் சிறையும் ஏதோ ஒரு கட்டிடமே என்பது போன்ற ஒரு வெகு இயல்பாக ’மதில்கள்’ வரைந்து செல்கிறது. நிற்க. இந்த சித்திரத்தை பஷிர் என்ற பாத்திரத்தினை முன் வைத்தே நாம் உள்வாங்க முடியுமே தவிர பொதுமைப்படுத்த முடியாது. இருப்பினும் இது வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை தருகிறது என்பதும் உண்மையே.
 

வைக்கம் முகம்மது பஷிர்

                 வைக்கம் முகம்மது பஷிர்


 
 
 
பஷிரின் எழுத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னும் ஒரு முக்கியமான அம்சம், அவரது எழுத்தெங்கும் பொங்கி வழியும் அன்பு. அவரது எழுத்து முறை மிக மிக நேர்மறையான அம்சங்களால் நிறைந்து காணப்படுகிறது. யார் மீதும், புகார்கள் வாசிக்கப்படுவதே இல்லை. எந்த பாத்திரமும் எதிர்மறையாக சித்தரிக்கப்படவில்லை. கொஞ்சம் வில்லத்தனமான சாயல் கொண்ட பாத்திரங்களைப் பற்றிப் பேசுகிறது போது கூட எழுத்தில் சக மனிதரின் மீதான பேரன்பு பிசிபிசுத்தபடியே இருக்கிறது.
நாராயணியுடன், பேச்சால் வளர்த்தெடுத்த, அன்பைப் பரிமாறிக் கொள்ளும் பிரிய மேலீட்டால், அவர்கள் சிறைச்சாலையில் மருத்துவமனையில் சந்தித்துக் கொள்வதாய் திட்டமெல்லாம் தீட்டி ஆவலோடு காத்திருக்கும் வேளையில், சரியாய் அதற்கு முந்தைய நாள் பஷிர் விடுதலையாவது, உச்ச காட்சியாக வருகிறது. முதல் முறையாக ஒரு கதாபாத்திரத்தோடு வாசகராகிய நாமும் ஒரு மனிதனின் விடுதலையை வெறுக்கிறோம். ஆனால் விதிகள் விளங்கா விதியின் ஆட்டத்தில் உருளும் மனிதப் பதர்கள் தானே நாமெல்லோரும்!
 

வெண்ணிற இரவுகள்

Fyodor Dostoyevsky | தமிழில் : பத்மஜா நாராயணன் | டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு | ப: 80

காலத்தால் அழியாத எழுத்தினை வழங்கியது ரஷ்ய மண். பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலக இலக்கியத்திற்கு புது இரத்தம் பாய்ச்சியது ரஷ்ய இலக்கியங்களே.. பரவலாக ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியான பிறகே உலகின் கண்களுக்கு ரஷ்ய இலக்கியங்கள் தெரிய ஆரம்பித்தது. மிகக் குறுகிய காலத்திலேயே அவை தங்களது ஈடு இணையற்ற மேதைமையால் தமக்கு தகுதியான வாசக வட்டத்தையும், இலக்கிய அங்கீகாரத்தையும் பெற்று விட்டன. ருஷ்ய இலக்கியகளையும், இலக்கிய மேதைகளைக் குறித்து நிறைய கேள்விப்பட்டும், வாசித்தும் இருந்த போதிலும் இதுவரையில் முழுமையாக ஒரு படைப்பையும் வாசித்திருக்கவில்லை என்பது நானே வருந்துகிற ஒரு விசயம். பேரிலக்கியங்கள் தம் இயல்பிலேயே அதிக நேரம் கோருபவை. அதனாலேயே அவற்றை வாசிக்க முடியவில்லை. இன்னுமும் ’போரும் அமைதியும்’  அமைதியாக அலமாரியில் உறங்கிக் கொண்டிருக்கிறது. என்ன செய்ய!

ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி உலக இலக்கிய வரைபடத்தில் மிக முக்கியமான, தவிர்க்கவே இயலாத ஆளுமை. அவரது ’வெண்ணிற இரவுகள்’ குறூநாவல் என்று தமிழ் பெயர்ப்பில் பொதுவாகவே வரையறுக்கப்படினும், அவர்கள் இதனை சிறுகதை என்றே வகைப் படுத்துகிறார்கள். ஆனால் குறுநாவல் என்று சொல்வதற்கான சாத்தியங்களே உள்ளதாய் வாசிப்புக்குப் பிறகு தோன்றுகிறது. எனவே நானும் இதனை குறுநாவல் என்றே வகைப்படுத்த விரும்புகிறேன்.

white-nights

கதைச் சுருக்கம்

மிக சதாரணமான வரிகளில் அசாத்தியமான ஆழங்களை வாழ்வின் அன்றாட தருணங்களில் அடைந்து விடுகிற நுட்பம் இருப்பதாலேயே இலக்கிய மேதைகள் என்று வெகு சில எழுத்துக்காரர்களை மட்டுமே நாம் சொல்கிறோம். வெண்ணிற இரவுகளின் கதை அறியாதது அல்ல. ஆனால் அறிந்த ஒரு கதையின் அறியாத பரிமாணங்களை அறிமுகம் செய்கிறது இக்குறும்புதினம். பழகிய தருணங்களின் உள்ளே இருக்கும் தொட முடியாத ஆழத்தைத் தொட்டுச் செல்லும் எழுத்து.

பெரும்பாலும் தஸ்தாயெவ்ஸ்கியின் கதைகளில் பெயரற்ற கதைசொல்லிகளே வருவார்களாம். போலவே இக்கதையிலும் நாம் சந்திக்கிற இளைஞன், ஒரு பெயரற்ற கதை சொல்லியே. கோடை காலத்திற்கென பீட்டர்ஸ்பெர்க் நகர மக்கள் தங்களது கோடை இல்லங்களுக்கு வெளியேறிக் கொண்டு இருக்கிற தருணத்தின் தனது அடர் தனிமையை வாசகனோடு பகிர்கிறான் இளைஞன்.

இரத்தினச் சுருக்கமாக கதையைச் சொல்வதென்றால் ஒரு இளைஞன் ஒரு இளம்பெண்ணை வீதி வழி ஓர் இரவில் காண்கிறான். பின்தொடர எத்தணிக்கும் இன்னொரு முரடனிடம் இருந்து அவளைக் காப்பாற்றும்,  தனியனாகவே இருந்து விட்ட, அவன் அவளது நட்பினை வேண்டுகிறான். தொடர்ந்து சில இரவுகள் அவர்கள் சந்தித்துக் கொள்கிறனர். சந்திப்புகளின் போது தங்களது வாழ்க்கைக் கதையை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றனர்.

இளைஞனின் தீராத் தனிமையையும், அவன் வாழ்வில் கவிந்திருக்கும் கனவு நிலை குறித்து அவளுக்குச் சொல்கிறான். நாஸ்தென்கா (அதுவெ அவளது பெயர்) தனது பாட்டியுடனான சலித்துப் போகிற வாழ்வையும், இடையில் தான் கடந்த முதல் காதலையும், தற்போழுது அக்காதலனுக்காக காத்திருப்பதையும் அவனிடம் பகிர்கிறாள். அவள் மீது இவனுக்கு காதலுள்ள போதிலும் அவளது காதலை அவன் சிரத்தையுடன் ஏற்கிறான். அவளுக்கு ஆறுதலும், யோசனைகளும் சொல்கிறான். அவளது காதலனிடம் தூது செல்லவும் தயாராய் இருக்கிறான்.

தன்னவர் தன்னை ஏமாற்றி விட்டதாய் நினைத்துக் கொள்ளும் நாஸ்தென்கா அவசரத்தில் அவரை விட இவரே மேல் எனக் கூறி அவர்கள் இணைந்து வாழ யோசனைகளை முன்வைக்கிறாள். நெடிய தனிமையப்பிய தன் வாழ்வில் இறுதியில் ஒரு வசந்தம் வந்து விட்டதாக குதூகலிக்கிறான் நாயகன். எதிர்பாராத விதமாக அவர் வந்தவுடன் மனம் மீண்டும் மாறும் அவள் அவருடனே சென்று விடுகிறாள். மீண்டும் இவன் தனியனாகிறான்.

White Nights Tamil

 

வாசகனின் குறிப்புகள்

உலக இலக்கியத்தில் ஒப்பற்ற காதல் கதைகளுள் ஒன்றாக வெண்ணிற இரவுகள்  மதிக்கப்படுகிறது என்பதில் ஐயமில்லை. இருப்பினும் இப்புதினத்தை வாசிக்கிற எவரும், ஒரு மென்மையான காதல் கதையின் ஊடே தனி மனிதர்களின் தீராத் தனிமையை மௌனமாக பேசிக் கொண்டே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஆறு அத்தியாயங்களாய் பிரிக்கப்பட்ட புதினத்தின், முதல் அத்தியாயத்தின் துவக்க பகுதிகளில் கதை சொல்லியாய் வருகின்ற நாயகன் வாசகரிடம், தான் பீட்டஸ்பெர்க் நகர தெருக்களில் அலைகையில் வீடுகளுடன் பேசிக் கொள்வதாகவும், அவற்றுடனான உரையாடல் தான் மிகவும் விரும்புவது எனும் தொனியில் சிலாகித்துச் சொல்கிறான்.

இப்பகுதிகளை நாயக கதாப்பாத்திரம் மிகுந்த அழகியல்பூர்வமான நுன்ணுணர்வு மிக்கவன் என்று தெரியப்படுத்துகிறது என விளக்கம் சொல்லக் கூடும். எனினும், ஒரு சாதாரண மனிதனான அவனோடு அன்பாய் பழகிட ஆளில்லாத ஏக்கத்தை உயிரற்ற வீடுகளுடன் உரையாடுவதாக கற்பனை செய்து போக்கிக் கொள்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் துவக்கம் முதலே அவன் கண்ணியன் என்ற சித்திரத்தை ஆசிரியர் சந்தேகத்திற்கு இடமின்றி தீட்டி விடுகிறார். மேலும் அவன் இளகிய மனத்தினனாகவும், தான் அனுபவிக்கிற தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வைப் போல நாஸ்தென்காவின் வாழ்வும் மாறி விடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கிறான்.

மனிதர்கள் நிரம்பிய ஒரு பெருநகரில் வாழ்ந்து கொண்டிருப்பினும், ஒரு மனிதனுக்குள் மண்டிக் கிடக்கும் அகத்தனிமையை தன் கதை வழியே நாஸ்தென்காவிடம் (அவளிடம் சொல்வதாய் வாசகரிடமும்) பகிர்ந்து கொள்கிறான். சக மனிதரின் அன்பிற்கான தனது மறைமுகமான ஏக்கத்தையும் தனது கதை சொல்லலின் ஊடே உணர்த்துகிறான். அவனுடைய பேச்சுகள் மிக நீண்டதாகவும், கவித்துவமான மொழியிலும் இருக்கின்றது. சில வேளைகளில் கனவு நிலையில் நின்று பேசும் ஒரு மனிதனின் பிதற்றலைப் போல சாயல் கொள்கிறது.

நாயகி நாஸ்தென்காவோ ஒரு பதின் வயதுப் பெண்ணின் ஊசலாட்ட மனோநிலையை, உணர்வுப் பிரவாகத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தும் பாத்திரமாக படைக்கப்பட்டிருக்கிறாள். தனது பாட்டியைத் தவிர வேறு யாருமே நுழையாத தனது வாழ்க்கைக்குள், வீட்டின் மாடி அறையில் தங்க வருகிற அந்த இளைஞர் வருகிறார். இவளும் அவரை ஒரு தலையாக காதலிக்கத் துவங்குகிறாள். அவளுடைய பேச்சு, வாசகனிடத்தில், அவ்விடத்தில் வேறு யார் இருந்தாலும் அந்த மனிதரை அவள் காதலித்தே இருப்பாள் என்ற அபிப்ராயத்தை நிச்சயம் தோற்றுவிக்கும். ஒரு வகையில் அவளும் தனது வாழ்வில் கவிந்திருக்கும் நீண்ட தனிமையில் (பாட்டியைத் தவிர அவள் வாழ்வில் எவருமில்லை. ஒரே ஒரு இடத்தில் ஒரு தோழியின் பெயரை அவள் சொல்கிறாள். தவிர பாட்டியின் கண்டிப்பையும் அவள் அறவே வெறுக்கிறாள்.) இருந்து தன்னை மீட்டெடுக்க எவரேனும் வருவார் என ஏங்கியே கிடக்கிறாள்.

கதையின் முடிவு நாடகீயம் மிகுந்த ஒரு முடிவாகவே இருக்கிறது. இருப்பினும் நுட்பமான கதை சொல்லலில் நிச்சயம் தஸ்தாயெவ்ஸ்கியின் மேதைமை வெளிப்படுகிறது. காதலைப் போல தனிமையும் சொல்லச் சொல்லத் தீராதது போலும்!

இக்கதை பலமுறை பல மொழிகளில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது என்பது கூறிப்பிடத்தக்கது.

 

இறந்தாய் வாழி காவேரி (2017) – ஆவண குறும்படம்

 
ஆக்கம்: ஆர்.ஆர். சீனிவாசன் | பூவுலகின் நண்பர்கள் | 25 நிமிடம்
 
இந்தியா விவசாய தேசம். பன்நெடுங்காலமாக வேளாண் சமூகமாகவே இந்தியச் சமூகம் இருந்து வருகின்றது. இந்தியா கிராமங்களின் வாழ்கிறது என்று மூத்தோர் சொன்ன வாக்கு, அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயம் கிராமங்களில் தான் இருக்கிறது என்கிற புரிதலின் வெளிப்பாடாகவே இருக்க வேண்டும். இந்திய சமூகத்தின் முதுகெலும்பான விவசாயம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிக் கொண்டிருக்குறது. மாநிலங்கள் பலவாயினும், வேளாண் உற்பத்தியில் மிகப் பெரும்பான்மையாக ஒரு சில மாநிலங்களை மட்டுமே முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறது, தேசம் முழுமையும். இதுவே யதார்த்தம். வேளாண் உற்பத்தி மாநிலங்களுள் மிக முக்கியமானது தமிழகம் என்பதை யாரும் மறுக்கவே முடியாது.
ஆனால் தமிழக விவசாயிகளின் நிலை என்ன? அல்லது ஒட்டு மொத்தமாக தேசிய அளவில் விவசாயியகளின் நிலை இன்று என்ன? குலவைகளும், நாற்று நடுகையிலும் களை பறிக்கையிலும் கேட்கும் உழவுப் பாடல்கள் இன்று பட்டினிச் சாவுகளாகவும், மரண ஓலங்களாகவும் மாறிப் போய் கிடக்கின்றன.
எவர் ஆட்சியில் இருந்தாலும், மத்திய அரசு பாரமுகம் காட்டிட, மாநில அரசு கைநெகிழ்ந்திட விவசாயக் குடியின் துயரோ, கண்ணீரோ யார் கவனத்திற்கும் வாராமலே அடங்கி விடுகிறது. அண்டை மாநிலங்களுக்குள் நதி நீர் பங்கீட்டில் எப்போதும் நிகழும் குடுமிப் பிடி சண்டையை மத்திய அரசு எட்ட நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. அரசானைகள், நீதிமன்ற உத்தரவுகள் என எதுவுமே மதிக்கப்படாமல் உதாசீனப்படுத்தப்படுகின்றன.
முப்போகம் விளைவித்து செழித்தோங்க காரணமான காவிரியைப் புகழ்ந்தே ‘நடந்தாய் வாழி காவேரி’ என்று சொலவடை வழக்கில் வந்தது. இன்றோ மாநில அரசுகளின் அடர் மௌனத்திற்கு மத்தியில் ஆற்று மணற் கொள்ளை தலைவிரித்தாடுகிறது. அதனாலேயே வாழ்வித்த காவேரி இன்று தன்னையே காத்துக் கொள்ள வழியின்றி மடி வரண்டு பாலை போலாகி இருக்கிறது. அதனலேயே இந்த ஆவணப் குறும்படத்திற்கு இறந்தாய் வாழி காவேரி என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது.
 
IRANTHAI VAAZHI KAVERI-1
 
பொதுவாக வெகு சன ஊடகங்கள் வேளாண் பிரச்சனைகளை அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள் போன்ற கருத்தியளாளர்களின் பார்வையில் பின்னணியிலேயே எப்போதும் அணுக முற்படுகின்றன. ஆனால் வேளாண்மையில் உள்ள நடைமுறைச் சிக்கலை அதற்குள் தன்னுடைய, தனது குடும்பத்தினுடைய வாழ்க்கையையே பணயம் வைத்து வயலில் காயும் விவசாயியிடம் இருந்து அல்லவா அணுக வேண்டும். இந்த் ஆவணக் குறும்படம் அத்தகைய ஒரு சரியான கோணத்தில் தான் தமிழக விவசாயிகளின் பிரச்சனைகளைப் பதிவு செய்கிறது.
இந்த ஆவணப்படம் தீர்வுகளை நோக்கி பயணப்பதை படைப்பின் மைய நோக்கமாகக் கொள்ளவில்லை. மாறாக களநிலவரத்தை சமகாலத்தில் பதிவு செய்வதே இதன் மிக முக்கியமான நோக்கமாக இருக்கிறது. மிகச் சமீபமாக தமது இல்லங்களில் ஒரு உயிரைக் காவு கொடுத்த திருவையாறு பகுதியைச் சேர்ந்த வெவ்வேறு கிராமங்களின் இரு வேறு விவசாயக் குடும்ப அங்கத்தினர்களின் நேர்காணலே மிக முக்கியமாக இப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறந்த இருவருமே விவசாயிகள். ஒருவர் தன் கண் முன்னே நீரின்றி பயிர்கள் கருகுவதைக் கண்டும், தனது கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரிப்பது குறித்து மனமுடைந்து மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை, அவரை இழந்து தவிக்கும் அவரது மனைவி மற்றும் உறவுகளின் வழி நாம் அறிகின்றோம். இத்தனைக்கும் அவரது கடன் தொகை ஐம்பதாயிரம் ரூபாய் தான். ஆனால் அந்த எளியவர்களுக்கோ அது மீட்க இயலாத பெருந்தொகை.
 
IRANTHAI VAAZHI KAVERI-2
 
இன்னொருவரின் நிலையோ இன்னும் பரிதாபம். வருமென நம்பிய நீர் வராமல் பொய்த்துப் போக, தான் வாங்கிய இலட்சக்கணக்காக கடனை அடைப்பதெப்படி என்ற கவலை தின்ன, தாளமாட்டாமல் பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவ்விரு குடும்ப உறுப்பினர்களின் பகிர்வின் வழியாக நாம் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. அரசின் அக்கறை மட்டுமல்ல. ஒட்டு மொத்த சமூகமுமே விவசாயிகளின் துயரை அதன் உண்மையான வீரியத்தோடு புரிந்து கொள்ளவே இல்லை. நம்மிடம் பணம் இருக்கிறது. அதனால் உணவு நமக்குத் தடையின்றிக் கிடைக்கும் என்ற மெத்தனப் போக்கு பலரிடம் இருக்கிறது. விவசாயிகளின் தற்கொலைகள் வெறும் எண்ணிக்கையாகிப் போயிருப்பது ஒரு சமூக அவலமே.
கையில் இருக்கிற காசிற்கு உணவு கிடைக்காது எனும் நிலை வருகையில், தமது பணக் காகிதத்தைத் தின்று வயிற்றை நிறைக்க முடியாதென்னும் உண்மை உறைக்கத் துவங்குகையில், தேசத்தின் கடைசி விவசாயியும் தற்கொலை செய்து கொண்டிருப்பான். விவசாயிகளின் தற்கொலைகள் நம் சமூகத்திற்கு சாபமென்பது வெகு விரைவிலேயே தெரிய வரும். ஆனால் அப்போது காலம் வெகுவாகக் கடந்திருக்கும்.
 
இப்படத்தை கீழ்கண்ட யூடியூப் இணைப்பில் காணலாம். 
இறந்தாய் வாழி காவேரி
 
 

காற்றில் அலையும் நம்பிக்கையின் வேர்கள்

 
The Master | 2012 | Dir: Paul Thomas Anderson |137 min
 
மனித வாழ்வின் அச்சாணி நம்பிக்கையே. எதன் மீதாவது – சக மனிதர்கள் மீது, சில கருத்தியல்கள் மீது, மதங்களின் மீது- மனித நம்பிக்கை வேரூன்றி நிற்கவே செய்கிறது. இக்கட்டான காலகட்டங்களில் சோதனைக்கு உள்ளாவதும் அதே நம்பிக்கை தான். நம்பிக்கை எனும் அடித்தளம் தகர்க்கபட்ட மனிதன் பித்து நிலைக்கு தள்ளப்படுகிறான். எதன் மீதாவது தனது வெற்றிடத்தில் அலையும் நம்பிக்கையை கோர்த்துப் போட ஒரு கொக்கியைத் தேடுகிறது மனித மனம். பெரும்பாலும் அத்தருணங்களில் குழப்பத்தில் ஆழ்ந்த சஞ்சலமுற்ற மனம் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் யாரேனும் ஒரு புதிய கதவைத் திறந்தால் அம்மனிதர் சகலருக்கும் தேவ தூதர் போல தெரிவார். காலந்தோறும் இது போன்ற எண்ணற்ற குருமார்களின் கதையை நாம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்.
அமெரிக்கா போன்ற ஒரு இயந்திரத்தனமான, நுகர்வின் உச்சத்தில் போகிக்கிற தேசத்தில், அமெரிக்கர்களிடையே பலப்பல ஆன்மீக குருக்கள் உலவி இருக்கின்றனர். பிடிப்பற்று அலையும் அவர்கள் மனதிற்கு இளைப்பாறல் தருவதாய் வாக்களித்து அவர்களை தமது அதிகாரத்திற்கு அடிபணிய வைத்திருந்த கதைகள் ஏராளம் அங்கே. அதிலும் குறிப்பாக இந்த போக்கு இரண்டாம் உலக யுத்ததிற்குப் பிறகு உச்சத்தை அடைந்தது. அமெரிக்கர்கள் என்றில்லை, உலக யுத்தங்கள் இரண்டுமே உலகெங்கும் மனித மனங்களை முன்னுவமை இல்லாத அளவிற்கு மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இச்சூழலுலில், தமக்கேன ஒரு தனிப்பட்ட கலாச்சாரம் இல்லாத அமெரிக்கர்களே இது போன்ற தம்மையும், தமது கண்டுபிடிப்புகளின்று புதுப்புது கோட்பாடுகளை முன்வைத்த சுயபிரகடன ஆன்மீகவாதிகளின் வலையில் கொத்துக் கொத்தாக விழுந்தனர்.
இவ்வாரம் அறிமுகங்கள் பகுதியில் நாம் பால் தாமஸ் ஆண்டர்சனின் ‘The Master’ திரைப்படத்தைக் காணலாம்.
 
The Master Poster
 
ஃபிரடி க்வில், இரண்டாம் உலக யுத்தகளத்தில் இருந்து நாட்டிற்கு திரும்பிய அமெரிக்க கடற்படை வீரன். காம பிறழ்வாலும், மித மிஞ்சிய குடியாலும் தவிக்கும் அவனுக்குத் அரசாங்கத்தால் தரப்படும் மறுவாழ்வு சிகிச்சை (rehabilitation therapy) பலனற்றுப் போகிறது. அவ்வேளையில் தற்செயலாக சான் பிரான்சிஸ்கோவில் ஒரு சொகுசுக் கப்பலில் போதையில் ஏறிக் கொள்ள, அங்கு லான்கேஸ்டர் டோட் (Lancaster Dodd) எனும் மனிதரைச் சந்திக்கிறான். அவர் ‘The Cause’ எனும் இயக்கத்தின் தலைவர் என்பதை அறியும் அவன் அவரால் வசீகரிக்கப்பட்டு தன்னை இணைத்துக் கொள்கிறான்.
தன்னை ஒரு பன்முக ஆழுமையாக பிரகடனப்படுத்திக் கொள்ளும் டோட் தான் காலங்காலமாய் மனித வாழ்வில் சிக்கல்களை கண்டறிந்து விட்டதாகவும், அதோடு அல்லாமல் அத்துணை வேதனைகளில் இருந்து மனிதர்களை மீட்கும் வழிகளை முழுமையாக கண்டறிந்து விட்டதாகவும் தனது ஆதரவாளர்கள் மத்தியில் முழங்குகிறார். தனது கருத்தியல்களின் மீது அசைக்கவே முடியாத அதீத நம்பிக்கை உடையவராகவும், மனித குல மேன்மைக்கான சாவி தன்னிடமே உள்ளது என்றும் தீர்கமாக நம்புகிறார். அதே நம்பிக்கையை அவரது குடும்பத்தினரிடமும், அவரது சீடர்களுக்கும் கடத்துகிற திறனுடையவராகவும் இருக்கிறார்.
ஃபிரடி கண்மூடித்தனமாக அவர் சொல்வதை நம்பத் துவங்கி விரைவிலேயே அவரது மிக நெருக்கமான உதவியாளனைப் போல அவருடனே தன்னை இணைத்துக் கொள்கிறான். 1950 இல் ஆரம்பித்த ‘The Cause’ எனும் அமைப்பு மிக விரைவிலேயே ஒரு தனி சமயமாக கோட்பாட்டுமுறையாக (cult) விரிவு கொள்கிறது. லான்கேஸ்டர் எழுதுகிற நூல்களே அவர்களது வேத புத்தகமாகிறது. அமைப்பிற்குள் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட போதிலும், ஃபிரடி சற்றே மனதோரத்தில் ஒரு நெருடல் இருக்கவே செய்கிறது. ஒரு கட்டத்தில் பண கையாடல் தொடர்பாக காவல் துறை லான்கேஸ்டரரை கைது செய்ய, அதைக் கண்டு கொதித்தெழும் ஃபிரடியும் அவரோடு சேர்த்தே கைதாகிறான். மிதமிஞ்சிய மனக்குழப்பத்திலேயே எப்போதும் இருப்பவனான ஃபிரடி, அதன் பின்னர் லான்கேஸ்டரிடமிருந்து ஒருவித மன விலகலை உணர்கிறான். லான்கேஸ்டரின் குடும்பத்தினரோ அவனை ஒரு உளவாளி என்று சந்தேகிக்கின்றனர். இறுதியாக மீண்டும் லான்கேஸ்டர் அவனை தொலைபேசியில் அழைத்து தன்னோடு இருந்து விடுமாறு அழைக்கிறார். அதனை ஏற்று செல்லும் அவனை அமைப்பிற்காக அவனது வாழ்வை அர்பணிக்குமாறு கேட்க அதற்கு தன் மௌனத்தையே மறுப்பாக்கி விட்டு ஃபிரடி வெளியேறுகிறான்.
இக்கதை புனைவைப் போல தோன்றினாலும், 1950 களில் இருந்த Ron.L. Hubbard இன் வாழ்க்கையை மிக நெருக்கமாக பிரதிபலிக்கிறது. RLH என பெரும்பான்மையாய் அடையாளப்படுத்தப்படும் இவர் அமெரிக்காவின் மிகப் பிரபலமான (ஒரு கல்ட்) Church of Scientology-ஐ நிறுவியவர். படம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது உண்மையான சயின்டாலஜி அமைப்பின் ஆரம்ப நாட்களை விரிவாகவே முன்வைக்கிறது. இயக்குனர் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான தகவலையும் வெளியிடாவிடினும், இது மேலதிகமான பொது அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை சயின்டாலஜி குறித்த அடிப்படை அறிமுகம் உள்ள எவரும் எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.
 

இயக்குனர் Paul Thomas Anderson

இயக்குனர் Paul Thomas Anderson


 
சஞ்சலப்பட்ட மனிதர்கள் எந்த அளவிற்கு சில கருத்தியல்களை, அது மனதை தற்காலிகமாக ஆற்றுப்படுத்துகிறது என்பதற்காக மட்டுமே, கண்மூடித்தனமாக நம்புகிறார்கள் என்பதனை சயின்டாலஜியின் வரலாற்றை புரட்டியே தெரிந்து கொள்ளலாம். எதன் மீதாவது தம் நம்பிக்கையை வைத்துவிடும் மனிதர்கள் எல்லாவற்றையும் நம்புவார்கள் போல, தம்மைத் தவிர.
இப்பிரச்சனைக்களின் வேர் தன்னம்பிக்கை இன்மையே. தமது சுயத்தின் மீது பற்றிக் கொள்ள நிலமற்ற இவ்வேர்கள் காற்றில் அலைந்தபடியே தான் இருக்கும், எதையேனும் பற்றிக் கொள்ளும் வேட்கையுடன்.
 
 

வாழ்வை அழகாக்கும் கவிதை வாசிப்பு

 
இலக்கிய வடிவங்களில் வாசகர்கள் பலருக்கும் வாசிப்பின் முதல் திறப்பாக கவிதைகள் இருப்பது வாடிக்கையானதே. படைப்பாளிகள் பலரும் இலக்கியத்தின் பல வேறுப்பட்ட தளங்களில் இயங்கி வந்தாலும் நிச்சயம் கவிதைகளை, குறைவான எண்ணிக்கையிலேனும், எழுதியிருப்பர். ஒரு சில படைப்பாளிகள் இதில் விதிவிலக்காக இருப்பதுவும் உண்டு. இன்னும் சிலரோ இலக்கியவாதிகள் என்ற அடையாளத்தை விடவும், கவிஞர் என்ற அடைமொழிக்குள்ளேயே மிகுந்த விருப்பதோடு புகுந்து கொண்டதைப் போல வாழ்நாள் முழுவதும் கவிதைகளை மட்டுமே எழுதி வருபவர்களாகவும் இருக்கின்றனர்.
ஆரம்ப நிலை வாசகர்கள் பலரும், கவிதை எனும் நுழைவாயில் வழியே இலக்கிய வாசிப்புப் பிரவேசம் நிகழ்த்துவது, கவிதை எனும் வடிவம் அளவில் சிறியது என்பதாகவே இருக்கும். அளவில் சிறிது என்பதாலேயே அது எளிது என்ற பொது அபிப்ராயம் நிலவுவதே இதற்குக் காரணம். வடிவம் எதுவாயினும், ஒரு இலக்கியப் படைப்பு வாசகனின் தேடலுக்கு ஏற்பவே தன்னை விரித்துக் கொள்ளும் இயல்புடையது. அதாவது வாசகன் எத்தகைய நுன்ணுணர்வோடு அதனை அணுகுகிறாரோ அதற்கேற்ப அந்த இலக்கிய ஆக்கம் அவருக்குள் வளரும். இந்த அம்சம் மற்ற எல்லா இலக்கிய வடிவங்களை விடவும் கவிதைகளுக்கு மிக மிக பொருத்தமானது.
இயந்திரத்தனமான அன்றாட வாழ்வின் மாறுதல்களே இல்லாத /சலிப்பான (monotony) வாழ்வியல் யதார்த்தத்தில் இருந்து சற்றேனும் தப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பாகவே, தற்கால கவிதை வாசிப்பு இருக்கிறது. எனது புரிதலில், கவிதைகளை வாசித்தல் என்பது, கவிதைகளை எழுதுதலுக்கு ஈடான ஒரு கலையே. வாழ்க்கையில் அன்றாடங்களில்  நாம் தவற விடும் கணங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் எண்ணற்ற அழகுகளை வார்த்தைகளுக்குள் பொதிந்து அள்ளி வருகின்ற வார்த்தை தேவதைகள் கவிதைகள்.
 

எந்த மொழியினை எடுத்துக் கொண்டாலும், அம்மொழி சார்ந்த பரிசோதனைகளை அதிகமாக செய்து பார்க்க மிகவும் ஏதுவான வடிவம் கவிதைகளே. மொழியின் மிகச் செறிவான வடிவம் கவிதை. குறைந்த சொற்களில் நிறைய பேசுவதே கவிதை வடிவின் அடிப்படை அழகியலாகும்.

 
கவிதைகள் நாம் பார்த்ததாய் நினைப்பவற்றுள் பார்க்காத கோணங்களை எடுத்துக் காட்டும் கருவிகளாகவும், பார்க்காத திசைகளை நமக்கு அடையாளம் காட்டும் திசைகாட்டிகளாகவும் விளங்குகின்றன. இலக்கிய வடிவங்களிலேயே அதீத வீரியமுள்ள மன எழுச்சிக்களை வாசகர் மனதில் உருவாக்க வல்லவை கவிதைகளே. காலங்காலமாய் அதனாலேயே உலகெங்கிலும் நடக்கும் புரட்சிகளின் வாகனமாய் கவிதைகள் விளங்குகின்றன. அதிகாரத்திற்கு எதிராக எழுந்த குரல்கள் வரலாற்றுப் பதிவுகளாக இலக்கியத்தில் பெரும்பாலும் இடம்பிடிப்பது கவிதைகளாகவே. கவிதைகளுக்கு உக்கிரம் இயல்பாகவே அமைந்து விடுகின்றது.
நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையில் அழகையும், ரம்யத்தையும் அள்ளி வருபவை கவிதைகள். வாழ்க்கையின் நுட்பங்களை நாம் கண்டு கொள்ள கவிதைகளை ஊன்றி வாசித்தாலே போதுமெனும் அளவிற்கு, எண்ணற்ற அற்புதமான கவிதைகள் தமிழில் இருக்கின்றன. எந்த ஒரு மொழியின் உச்சபட்ச படைப்புச் சாதனை நிகழ்த்தப்படுவது கவிதை வடிவில் தான். படைப்புச் செயல்பாட்டின் உச்சமாக கருதப்படுவதும் கவிதைகளே. அதனாலேயே செறிவான எழுத்து நடை படைப்பாளி ஒருவருடைய எழுத்தில் கைகூடி வருவதை நாம் ‘கவித்துவமான நடை’ என்று சிலாகிக்கிறோம்.
 
Golden Hour
 
ஒரு கவிஞனின் கண் எப்போதுமே நாம் காணாதவற்றையே காட்டுகிறது. நாம் கடக்கும் தருணங்களில் நான் தவறவிட்ட நுண்மையான விசயங்களை கவிதைகளின் வழியே நாம் கண்டடையலாம். வாழும் வாழ்க்கைக்கு ஒருவித முழுமையை கவிதை வாசிப்பு வழங்கும் என்பது மிகையானதே அல்ல. வாழ்க்கை மீதான நமது புரிதலை இன்னும் ஆழப்படுத்தும் தத்துவங்களை அனாயசமாக கவிதை மொழிக்குள் கொண்டு வந்து விடுகிற ஜாலத்தை கவிஞர்கள் சாதித்து விடுகின்றனர். (இளம் வயதில் பிரமிள் கவிதைகளை வாசித்த மாயக் கணங்கள் இன்னும் மனதிற்குள் பசுமையாய் நிறைந்துள்ளது.)
மொழியின் அர்த்தத் தளத்தை எல்லாக் காலங்களிலும், எப்போதும் விரித்தெடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்பவை பெரும்பாலும் கவிதைகளாகவே இருக்கின்றன. வாழ்வின் மேன்மையான தருணங்களை நாம் ‘கவித்துவமான கணங்கள்’ என்று வர்ணிப்பதுண்டு. அது நம்மையும் அறியாமல் கவிதையை பெருமைப்படுத்துதே.
இலக்கியத்தின் பல்வேறு ஆக்கங்களை இந்த அறிமுகப் பகுதியில் தொடர்ந்து அறிமுகம் செய்து வருவதால், மொழியில் செறிந்த இலக்கிய வடிவமான கவிதைகளை அறிமுகம் செய்வது மிகவும் அவசியம் என்று கருதுகிறேன். இனி வரும் வாரங்களின் அவ்வப்போது கவிதைகளையும் ருசிக்கத் துவங்குவோம்.
 

மிளிர் கல் – இரா.முருகவேள்

ஒரு இலக்கியப் படைப்பு முக்கியமானது என்று சொல்லப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. இலக்கிய ரீதியாக ஒரு படைப்பின் வடிவம் சார்ந்த பரிசோதனைகளின் காரணமாக ஒரு படைப்பு முக்கியத்துவம் பெறலாம். இது ஒரு வகை. வடிவ ரீதியாக மாற்றங்களோ பரிசோதனைகளோ இல்லாத போதும் ஒரு இலக்கியப் படைப்பு எடுத்துக் கொள்ளும் கருப்பொருளுக்காகவும், அதன் வழியே வெளிபடும் அப்படைப்பாளியின் சமூக அக்கறைக்காகவும் முக்கியத்துவம் பெறலாம். இரா.முருகவேள் அவர்களின் ’மிளிர் கல்’ எனும் புதினம் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
அடிப்படையில் வழக்கறிஞராக இருக்கும் முருகவேள் அவர்கள் இலக்கியத்துறையில் மொழிபெயெர்ப்பிலேயே துவக்கத்தில் தீவிரமாக இயங்கி வந்தார். 2014 ஆம் ஆண்டு வெளியான தனது ‘மிளிர் கல்’ வாயிலாக நாவல் இலக்கியத்திற்குள் அடியெடுத்து வைத்தார். சிலப்பதிகாரத்தை, அரசியல்-பொருளாதார நோக்கில் ஆய்வு செய்கிற விதமாக நாவல் இருக்கிறது என்பது மட்டுமல்லாமல், அதனூடே நிகழ்காலத்தின் இரத்தினக் கற்கள் வியாபார அரசியலையும் ஊடிழையாக கதைப் பின்னலுக்குள் கொண்டு வந்த விதமே இந்நாவலின் சிறப்பம்சம்.
 
கதைச் சுருக்கம்
டெல்லிவாழ் JNU முன்னாள் இதழியல் மாணவியான தமிழ் பெண் முல்லை, தனது தந்தை சிறுவயது முதலே ஊட்டி வளர்ந்த பழந்தமிழ் இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்டு, தனக்கு மிக விருப்பமான கண்ணகி குறித்து ஆவணப்படம் எடுக்கிற நோக்கில் தமிழகம் வருகிறாள். அவளது நோக்கம் பூம்புகார் துவங்கி கண்ணகியும் கோவலனும் மதுரை வந்த பயணத்தடத்தினை வழித்தொடர்ந்து கண்ணகி கதையின் முக்கிய அம்சங்களை வரலாற்றுப் பின்னணியில் அலசுவதே. தனக்கு உதவுமாறு இடதுசாரி இயக்கத்தில் தீவிரமாக இயங்கிவருகிற தனது பல்கலைக்கழக சீனியர் நண்பன் நவீனின் உதவியை நாடுகிறாள். போலவே பழந்தமிழர்களின் வாணிபம் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளரும், பேராசிரியருமான ஸ்ரீகுமார் நேமிநாதன். தமிழகத்தில் இரத்தினக் கற்கள் வியாபாரத்தில் கால் பதிக்க முயலும் ஒரு பகாசுர நிறுவனம் அவரது ஆய்வில் தங்களின் தேடலும் உள்ளடங்கி இருப்பதால், அவருடைய ஆய்விற்கு பொருளுதவி செய்கிறார்கள். இதன் விளைவாக ஏற்கனவே கற்கள் வியாபாரம் செய்யும் ஒரு அரசியல் பெரும்புள்ளியின் எதிர்ப்பை பேராசிரியர் எதிர்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது.
இந்த இரண்டு கதைச் சரடுகளும் மிகத் துவக்கத்திலேயே ஒன்றிழைந்து செல்லத் துவங்குகின்றன. பேராசிரியரின் துறை சார் அறிவு தனது இலட்சியத்தை அடைய உதவும் என்றும், தனது ஆவணப்படத்தின் உள்ளடக்கம் அவரது பங்களிப்பால் பல மடங்கு மேம்படும் என்பதை முல்லை அறிந்து கொண்டு அவரது உதவியை நாடுகிறார். எதிர்பாரா எதிர்ப்புகள் தருகிற நெருக்கடியில் ஸ்ரீகுமார் இவர்களுடனே பயணிக்க வேண்டிய நிர்பந்தத்தைத் தருகிறது.
இப்பயணத்தில் வழியே சிலப்பதிகாரமும், கண்ணகியின் கதையும் அரசியல் பொருளாதாரப் பார்வையில் மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது.
 
 
Milir Kal
 
 
வாசகனின் குறிப்புகள்
எழுத்தாளனுக்கு சமூகப் பொறுப்பு அதிகம் உண்டு. சமூகப் பொறுப்பில்லாமல் எழுதக் கூடாது எனும் நிலைப்பாட்டை உடையவர் தோழர் முருகவேள் என நாவலின் பதிப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முற்றிலும் சான்று பகரும் வகையில் அமைந்துள்ளது நாவலின் உள்ளடக்கம். இந்திய மண்ணில் உலகமயமாக்கலுக்குப் பின் பரவலாகிப் போன பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களின் லாபவெறியும், அதில் சிதறடிக்கப்படும், நசிந்து போகும் சாமனியரின் வாழ்வும் கவனிக்கப்பட்டு மீட்சியடைய வேண்டும் எனும் ஏக்கம் அடியோட்டமாய் இருக்கிற கதைக்களம். இருப்பினும் ஒரு தீவிரமான ஒரு களத்தை அப்படியே தீவிரமான ஒரு கதையாக முன்வைத்தால் அது பலரைச் சென்றடையாமல் இது குறித்து முன் அறிமுகமுடைய சில வாசகர்களையே மீண்டும் சென்றடையக் கூடும். எனவே ஒரு சுவாரசியமான கதைக்குள், எளிமையான இடைநிலை எழுத்தின் (சொல்லப்போனால் கேளிக்கை எழுத்தின்) தொனியில் பொது வாசிப்பிற்கு இலகுவாக்கித் தந்து, அதே வேளையில் மையக் கருத்தின் தீவிரத்தன்மையையும் தக்க வைத்திருக்கிறது மிளிர் கல்.
தமிழ் மரபில் மிக முக்கியமான ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றை எடுத்துக் கொண்டு வெறுமனே அதன் சிறப்புகளைப் பட்டியலிட்டு வியந்தோதாமல், அக்களத்தை நடுநிலையுடன், எவ்வித மத, அரசியல் சார்புமின்றி அணுகுகிறார் ஆசிரியர். கண்ணகி கதையை நம்மில் பலர் அறிந்திருந்தாலும், நாம் அதனை அணுகாத கோணத்தில் நமக்கே மீண்டும் அறிமுகம் செய்கிறது இப்படைப்பு.
நிறைய வரலாற்றுத் தரவுகள், கதாபாத்திரங்கள் தங்களுக்குளே நிகழ்கிற உரையாடல்களின் பெரும்பகுதியாக வாசகனுக்கு தரப்படுகிற போதிலும், அது வறட்சியான உரை போலன்றி, அதற்கு முற்றிலும் மாறாக வெகு சுவாரசியமான ஒரு பொழுதுபோக்குக் கதையைப் படிக்கிற உத்வேகத்தை அளிக்கிறது என்பதனை ஆசிரியரின் படைப்புத்திறனுக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். வரலாற்றுத் தரவுகள் என்று நான் ஒற்றைப் பதத்தில் சொல்லிவிட்டு கடந்து விட்டாலும், அதௌ நாவலுக்குள் இயங்குகிற தளமும் விரிவும் மிக பரந்தது. சங்க கால இலக்கியங்களில் இருந்து சரியான இடங்களில் நாவலெங்கும் பரவிக் கிடக்கிற மேற்கோள்கள் எல்லாம் சங்கப் பாடல்களை அப்படியே மேற்கோளாகத் தரப்படாமல், அவற்றின் உரைகள் அர்த்தங்கள் என எளிமைப் படுத்தப்பட்ட வடிவிலேயே இருப்பது பழம் இலக்கிய அறிமுகமில்லாத வாசகனைக் கூட ஈர்க்கிறது. இதன வழியே சங்க இலக்கியங்களை, குறைந்தது சிலப்பதிகாரத்தையேனும் தேடிக் கற்ற வேண்டும் என்ற உந்துதலையும் அது வாசிப்பு அனுபவத்தின் வாயிலாக தருகிறது.
இலக்கிய மேற்கோள்களை தருகிற அதே வேளையில், அந்தந்த காலகட்டங்களில் அதனை ஒட்டிய வணிக-பொருளாதார வரலாற்று தரவுகளை சரியாக பொருத்திக் காட்டுவதன் வழியே பேசப்படுகிற, முன்வைக்கப்படுகிற அனைத்துக் கருத்துக்களும் பல்பரிமாணங்கள் உடையனவாக மாறி விடுகின்றன என்பது சிறப்பு. கதையைச் சொல்லும் உத்தி மிகச் சாதாரணமானதே. ஆனால் இப்படைப்பின் நோக்கம் நிச்சயம் முதலிலேயே சொன்னதைப் போல இலக்கிய வடிவம் சார்ந்த பரிசோதனை முயற்சி அல்ல. மாறாக நம் மண்ணில் நாமறியாவண்ணம் நிகழ்ந்து கொண்டிருக்கிற ஒரு பெருவணிக ஆக்கிரமிப்பை இலக்கியப் பிரதியோடு இணைத்து அது பேசுகிற காலகட்டத்தை, கண்ணகி தொன்மத்தின் வரலாற்றுப் பார்வையோடு மீளவும் புதிதாய் கட்டுடைத்துப் பார்ப்பதே.
என் பார்வையில் பொதுப்புரிதலில் இதுவரை நாம் உள்வாங்கி இருந்த பல விடயங்களை முற்றிலும் புதிதான வெளிச்சம் பாய்ச்சுகிற வகையில் பல இடங்கள் வந்தது மிக முக்கியமான திறப்பாக மனதிற்குப் பட்டது. குறிப்பாக கண்ணகியை புரட்சிப் பெண்ணாகக் கருதுகிறீர்களா என்று ஒரு கதாபாத்திரம் கேட்க அதற்கு வருகின்ற மறுமொழியில் , ”ஆணாதிக்கம் வரையறுத்த எல்லைக்குள்ளேயே கண்ணகியின் கோபமும், மாதவியின் துறவும், மணிமேகலையின் துறவும் இருக்கிறது…” (பக்:222), “கண்ணகி பாண்டியன் நெடுஞ்செழியனை தண்டித்தது உண்மையானால் அவள் தான் உட்பட மாதவி, மணிமேகலை என்று மூவருடைய வாழ்க்கையையும் சீரழித்த கோவலைனையும் தண்டித்திருக்க வேண்டும் (ப:223) போன்ற இடங்கள் பல அடிப்படையான நியாயவாத தர்க்கங்களை முன்வைக்கின்றன.
இவை அல்லாமல் சமகால அரசியல் சமூக விமர்சனங்களையும் மிக கூரான மொழியிலேயே பல இடங்களில் பார்க்க முடிகிறது. “தீர்ப்பு பாட்டுக்கு இருக்கிறது. அரசு தன் போக்கில் போய்கொண்டு இருக்கிறது. வியாபாரம் தன் வழியே நடந்து கொண்டே இருக்கிறது. இந்தியா… எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. “ (ப:91), “வெளிநாட்டு மூலதனம் இருக்கும் இடங்களில் இந்திய அரசு ஈவிரக்கமில்லாமல் தான் நடந்து கொள்கிறது”. (ப:95) போன்ற இடங்களில் கட்சி சாய்வின்றி நேரடியான மொழியிலேயே அரச நிர்வாகம் குறித்த விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. போலவே மத அரசியலை அதன் காலகட்டத்தோடு இணைத்து தர்க்கப்பூர்வமாக அலசுகிற இடங்களையும் (ப:191 இல் வருகிற ஊழ்வினை குறித்தும், மறுபிறவி குறித்தும் வருகிற சமணப்பார்வைகள் குறித்த விமர்சனங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.) வாசகனின் கவனத்தை ஈர்க்கிற இடங்களாக நிச்சயம் இருக்கின்றன.
மிக மிக எளிய மொழிநடையில், தீவிரமான கள ஆய்வுகளின் பயனாகத் தனக்குக் கிடைத்த தகவல்களை அழகாய் ஒரு கதைக்குள் கோர்த்து, ஆசிரியர் தேர்ந்த ஒரு வாசிப்பை நல்கி, அதன் வழியே அறியாத பல புதிய செய்திகளயும், அறிந்ததாய் நினைத்திருக்கும் செய்திகளுக்குள் பல புதிய கோணங்களை அடையாளப்படுத்துகிறார்.