-வருணன்
 
கடந்த வாரம் நமது முன்னோர்கள் பின்பற்றிய வழக்கங்கள் அவர்களது காலச் சூழலோடும், வாழ்வியலோடும் இயைந்து இருந்தன எனவும், அவற்றுள் பல நாம் இப்போது நினைப்பதைப் போல வெறும் மூடனம்பிக்கைகள் அல்ல என்றும் பார்த்தோம். அவற்றைப் புரிந்து கொள்ளும் நோக்கில் சில எடுத்துக்காட்டுகளையும் பார்த்தோம். மேலும் சில எடுக்காட்டுகளை இப்பதிவில் நாம் காணலாம்.
 
# மாலை நேரத்தில் கீரை சாப்பிடக் கூடாது.
கீரைகள் (Greens) பொதுவாகவே அதிக நார்ச்சத்து கொண்டவை. இது போன்ற உணவுகளை சீரணம் செய்ய நமது சீரண மண்டலம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே கீரை போன்ற உணவுகளை காலையிலோ மதிய உணவிலோ உட்கொள்வதே நல்லது. மாலையில் உட்கொண்டால் அது செரிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். மின்சாரம் இல்லாத காரணத்தினால் அக்காலத்தில் மக்கள் வெளிச்சம் மங்கிய உடனே வீடடைந்து விடுவது வழக்கம். எனவே வெகு சீக்கிரமே அவர்கள் உறங்கும் பழக்கமும் அவர்களிடத்தில் இருந்தது. பழந்தமிழர்கள் பெரும்பான்மையானோர் உடலுழைப்பை பெரிதும் வேண்டும் தொழில்களைச் செய்து வந்ததால் அவர்களுக்கு ஓய்வு இன்றியமையாதாக விளங்கியது இயல்பே. மாலை வேளையில் கீரை உண்டால் அதனை செரிக்கும் பொருட்டு அதிக இரத்தம் சீரண மண்டலத்திற்குப் பாயும். அதே நேரம் உறங்க ஆரம்பித்தால் சீரணம் மந்தப்பட்ட, இறுதியில் அசீரண கோளாறில் கொண்டு நிறுத்தும்.
 
 
# புளியமரத்தடியில படுக்கக் கூடாது. படுத்தால் பேயடிக்கும்.
இதுவும் பலரும் அறிந்த ஒன்றே. இது சொல்லப்பட்ட விதம் வேண்டுமானால் மூடநம்ப்பிக்கையை வளர்க்கும் விதத்தில் இருக்கிறது என்று நாம் சொல்லலாம். ஆனால் அதன் பின்னால் இருக்கும் காரணம் முழுக்க அறிவியல் பூர்வமானது. பொதுவாக மரங்கள் ஒளிச்சேர்க்கையின் (photosynthesis) போது மட்டுமே கரியமில வாயுவை (Carbon dioxide) எடுத்துக்  கொண்டு பிராணவாயுவை (Oxygen) வெளிவிடும். ஆனால் ஒளிச்சேர்க்கை செய்யாத பொழுதுகளில் மனிதர்களைப் போலவே பிராணவாயுவை சுவாசித்து கரியமில வாயுவை வெளிவிடும். இது பள்ளிக் கூட அறிவியல். பிற மரங்களைக் காட்டிலும் புளிய மரங்கள் வெளிவிடுகிற கரியமிலவாயுவின் அளவு அதிகமாக இருக்கும். எனவே புளிய மரத்தடியில் படுக்கும் ஒரு மனிதர் அதிகமாக கரியமிலவாயுவை சுவாசிக்கும் நிர்பந்தம் ஏற்படும். அதனை தடுக்கவே இவ்வாறான பயமுறுத்தல்கள் செய்யப்பட்டன.(இவ்வாதம் தவறெனச் சொல்வதும் உண்டு. இது குறித்து தீர்க்கமான ஆய்வு முடிவுகள் இருப்பதாக தெரியவில்லை)
 
# குழந்தைகள் உண்ணும் போது) உட்கொள்ளும் உணவில் கடைசி வாய் உணவில் தான் அத்தனை சத்துக்களும் இருக்கும். எனவே அதனை கண்டிப்பாக உண்ண வேண்டும்.
 
Mom-feeding-her-kid
 
இது அறியியல் பூர்வமாக முற்றிலும் தவறான கருத்து என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் இது ஏன் சொல்லப்பட்டது எனும் பின்னணியை நாம் அறிய வரும் போது இதன் உள்ளர்த்தத்தினை நாம் புரிந்து கொள்ளலாம். சிறுவயது முதலே உண்ணும் உணவினை மதித்து கிடைத்த உணவினை வீணடிக்காமல் உண்ண வேண்டியதன் அவசியத்தை விளையாட்டுத்தனமான குழந்தைகளுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. எனவே இப்படி சொல்வதன் மூலம் அவர்களுக்கு குழந்தைப்பருவம் முதலே உணவை வீணடிக்காமல் உண்ணும் நல்ல பழக்கம் உருவாகும்.
 
# திருமணமான புதுத் தம்பதிகள் ஆடி மாதத்தில் பிரிந்து இருக்க வேண்டும்/ ஆடி மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது.
 இது சிலருக்கு (ஏனெனில் இதன் உண்மை காரணத்தை பலரும் அறிவர்) குழப்பும் ஒரு முட்டாள் தனமான வரட்டு விதியாகக் கூட தெரியலாம். புதிதாக மணமான இளஞ்சோடிகளிடையே உடலீர்ப்பு உச்சத்தில் இருப்பது மிக இயல்பானதே. ஆடி மாதத்தில் அவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு பெண் கருத்தரித்தால் பத்து மாதம் கழித்து பிரசவ காலம் ஏறத்தாழ சித்திரை மாதத்தில் தான் இருக்கும். சித்திரை மாதமோ, கோடை காலம். கடும் வெயிலடிக்கும் புழுக்கமான அச்சுழல் புதிதாக பிறக்கும் குழந்தைக்கும், அந்த இளந்தாய்க்கும் நல்லதல்ல. பல உடல் உபாதைகளுக்கு இருவருமே ஆளாக நேரிடும்.
இதனைத் நாசூக்காக தவிர்க்கவே இன்றளவும் மணமான பெண்ணை, புகுந்த வீட்டிலிருந்து, ஆடி மாதத்திற்கு அழைத்துத் செல்லும் வழக்கம் ஒரு சடங்கு போலவே கடைபிடிக்கப் படுகிறது.
இது போல இன்னும் இன்னும் பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். நமது முன்னோர்கள் பல மூட நம்பிக்கைகள் (superstitions) உடையவர்களாக இருந்தார்கள். ஆனாலும் அதே வேளையில் அவர்கள் தம் வாழ்வில் கடைபிடித்த எல்லா பழக்கங்களையும் நாம் அதே முத்திரை இட்டு விட முடியாது. அதனைச் வலியுறுத்துவதே இரு பகுதிகளாக வந்திருக்கும் இப்பதிவின் நோக்கமும்.