-வருணன்
 
நமது மூதாதையர்கள் அல்லது முன்னோர்கள் தங்களது வாழ்க்கை முறையை (lifestyle) தாம் சார்ந்திருக்கும் நிலத்தோடும், அது சார்ந்த இயற்கை அமைப்பின் அடிப்படையிலேயே வகுத்துக் கொண்டனர். இப்போது நாம் அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப முன்னேற்றம் காரணமாக பல விதங்களில் நாகரிகம் அடைந்த ஒரு முன்னேறிய ஒரு வாழ்க்கைமுறையை கடைபிடிக்கிறோம் என நினைத்துக் கொள்கிறோம். அது உண்மை எனும் போதிலும், அதற்காக நாம் ஒரு வகையில் பெருமைப் பட்டுக் கொள்ளலாம் எனும் போதிலும் அதனைக் காரணங்காட்டி நமது முன்னோர் பாமரத்தனமான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று சொல்வது எவ்விதத்திலும் நல்லதல்ல.
நாகரிகம் பேசும் நம்மில் பலர் நமது முன்னோர்கள் தங்களது வாழ்க்கை மூட நம்பிக்கைகள் நிறைந்தது என்றும், அவர்களின் வாழ்க்கை ’முற்றிலுமாக’ வரட்டுத்தனமான சம்பிரதாயங்களால் ஆனது என்ற அபிப்ராயம் மிகப் பரவலாக இருக்கிறது. இந்த அபிப்ராயம் தவறு. முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தின் வாழ்க்கை முறையோடு பிணைந்த பல பழக்க வழக்கங்களை கடை பிடித்து வந்துள்ளனர். அதற்கு அடுத்தடுத்து மனித வாழ்க்கைத் தரமும் சூழலும் பல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் கண்ட பிறகும் அதே பழக்கங்களை காரண காரியம் அறியாமல் ஒரு சடங்கு போல கடைபிடிக்க ஆரம்பிக்கும் போது தான் அப்பழக்கவழக்கங்கள் மூட நம்பிக்கைகளாக மாறுகின்றன.
 
Rural Life 1
 
 
இப்போது மூட நம்பிக்கைகள் என நாம் கருதும் ஒரு சில பழங்கால பழக்கவழக்கங்கள் எந்த வகையில் அக்கால மனித வாழ்க்கைச் சூழலின் அடிப்படையோடு தொடர்புடையதாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயல்வோம். நாம் பரவலாக மூடப்பழக்கமாக அறிய வருகிற சில விசயங்களையும், அவ்வாறு முன்னோர் செய்ததற்கான சூழ்நிலை சார்ந்த காரண விளக்கங்களையும் (சொல்லப்படுவதன் அடிப்படை நோக்கத்தினை) காணலாம்.
 
# இருட்டின பிறகு எண்ணெய் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கக் கூடாது.
மிக மிக பிந்தைய காலத்தில் தான் நமது வீடுகளில் மின்சார வசதி வந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாக சூரியன் மறைந்த பிறகு, மிக மங்கலான விளக்கு வெளிச்சத்தில் தான் முன்னிரவு வரை தமது வேலைகளை மக்கள் செய்ய வேண்டிய நிலை இருந்தது. எனவே இருள் சூழ்ந்த பிறகு எண்ணெய் கொடுக்கப் போய் ஒரு வேளை கை தவறி அது விழுந்து எண்ணெய் சிதறினால் அதில் வழுக்கி விழுந்து அடிபடக்கூடிய சாத்தியம் உண்டு.
 
# தலைவிரிக் கோலமாய் பெண்கள் எப்போதும் வீட்டில் இருக்கக் கூடாது / வீட்டின் கூடத்திற்குள் தலைவாரிடக் கூடாது.
பெண்கள் தலைவாரும் போதோ, அல்லது கூந்தலை முடியாமல் இருக்கையிலோ உதிரும் முடிகள் வீட்டிற்குள் விழுவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கூடத்தில் அமர்ந்து உணவருந்தும் பழக்கம் காலங்காலமாக நம்மிடையே இருக்கிறது. எனவே கீழே கிடக்கும் உதிர்ந்த முடிகள் உணவுப் பொருட்களுடன் கலந்து விட வாய்ப்புண்டு.
 
#  அந்தியிலோ, இரவிலோ வீட்டைப் பெருக்கி வெளியே குப்பையைத் தள்ளக் கூடாது. அப்படி செய்தால் வ்விட்டிலிருந்து லட்சுமி வெளியேறி விடுவாள்.
தொன்று தொட்டு எதிர்காலத்திற்கு என செய்யப்படும் சேமிப்பில் தங்கத்தில் முதலீடு செய்வது பரவலாக இருந்து வருகிறது என்பதே நடைமுறை யதார்த்தம். அந்தியிலோ, இரவிலோ வீட்டை சுத்தம் செய்யும் போது, ஒரு வேளை ஏதேனும் அளவில் சிறிய தங்க நகையோ அல்லது சிறு முத்து போன்ற விலை மதிப்புள்ளவை ஏதேனும் கிடந்தால் கவனக் குறைவாக அதனையும் சேர்த்தே குப்பையோடு குப்பையாக வெளியே தள்ளி விட வாய்ப்புண்டு. அதனாலேயே இவ்வாறு சொல்லப்பட்டது. இங்கு லட்சுமி வெளியேறி விடுவாள் என்பது ‘அந்த நகையைத் தான்’ குறிக்கிறது என்பதனை சொல்லத் தேவையில்லை.
(இன்னும் சிலவற்றை அடுத்த வாரம் காண்போம்.)