கல்வி தொடர்பான உரையாடல்கள் நம்மிடையே தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளன. இதன் மீது நாட்டமுடையோர், அக்கறை காட்டுவோரின் எண்ணிக்கையும் குறைவே எனும் போதிலும், சமூக முன்னேற்றத்தின் பால் தீவிர அக்கறை கொண்ட எல்லோரும் கல்வி குறித்தும் சிந்திக்கத் தவறுவதே இல்லை என்பது ஆறுதலான விடயமே.. இந்த சூழலில் இந்தியாவில் கல்வியின் வரலாற்றை நாம் தொடர பல்வேறு மதங்களின் தோற்ற வரலாறுகளை தொடர்வதே எளிமையான வழியாக இருக்கிறது. பல உலக மதங்களின் தாயகமான இந்தியாவில் மதங்கள் தோன்றி வளர்ந்த அதே வேளையில், அம்மதங்கள் சார்ந்த கல்வி முறைகளும் சேர்ந்தே வளர்ந்தன. அவற்றில் சாதக பாதகங்களும் சேர்ந்தே இருந்தன என்பதை மறுக்க முடியாது. உதாரணமாக வேத கால கல்வி முறையில் கல்வி கற்பதில் வர்க்க பேதங்கள் மிக முக்கிய காரணியாக இருந்ததை நாம் அறிவோம். கல்வியானது ஒரு குறிப்பிட்ட வர்கத்தினரின் உரிமைச் சொத்தாக ஆக்கப்பட்டதையும், ஏனையவருக்கு அது மறுக்கப்பட்டதும் நாம் அறியாதது அல்ல.
உலக வரலாற்றில், குறிப்பாக மேற்குலக வரலாற்றில் பதினேழாம் நூற்றாண்டு Age of Reasoning என்றும் அதனைத் தொடர்ந்த பதினெட்டாம் நூற்றாண்டு Age of Enlightenment என்றும் வருணிக்கப்படுகிறது. இக்காலகட்டத்தில் தான் அறிவியல் குறித்த மானுட புரிதல் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு ஒரு பெரும் நகர்வைக் கண்டது. அதன் விளைவாக நாம் கண்டடைந்ததே தொழிற் புரட்சி. குறிப்பாக அச்சு இயந்திரங்களின் வரவுக்குப் பிறகு கல்வித்துறையில் நிகழ்ந்த முன்னேற்றம் ஒரு மாபெரும் பாய்ச்சலே. சிந்தனையும், அறிவும் ஒரே இடத்தில் தேங்காமலும். ஒரே நபருக்குள் சுருங்காமலும் பெரும் விரிவுற்றது இந்த காலகட்டத்தில் தான்.
இந்தியாவைப் பொருத்தவரை பலதரப்பட்ட கல்வி முறைகள் புழக்கத்தில் இருந்திருந்த போதிலும், ஆங்கிலேயரின் காலனியானதற்குப் பிறகு பலதரப்பட்ட மாற்றங்களுக்கு உள்ளானது. ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு தங்களின் அதிகார மட்டத்தில் ஆங்கிலம் தெரிந்த இந்தியர்கள்- தங்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் தாங்கள் இடும் ஆணைகளையும் செவ்வனே நிறைவேற்றிடவும்- உதவியாளர்களாக மிக அதிகமாக தேவைப்பட்டனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அறிமுகம் செய்த கல்விமுறை குறித்து நாம் சிந்திக்கையில் உடனடியாக நம் மனதில் தோன்றும் ஒரு பெயர் மெக்காலே தான்.
 
Macaulay's Address
 
மெக்காலே பிரபு 1835 ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் நாள் பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒரு உரை நிகழ்த்தியதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தி உண்டு. அந்த உரையில் அவர் ‘நான் இந்தியாவின் எல்லா திக்குகளிலும் மேற்கொண்ட பயணங்களில் ஒரு யாசகனையோ, திருடரையோ கண்டதில்லை. இந்தகைய ஒரு வளம் கொழிக்கும் நிலத்தையும், பாரம்பரியமிக்க அற மதிப்பீடுகளை கொண்ட உயர்ந்த பண்புகளையுடைய மனிதர்களையும் பார்த்ததில்லை. இந்த நிலையில் நம்மால் ஒரு போதும் இந்திய நிலத்தை நமது ஆளுகையின் கீழ் கொண்டுவர முடியாது என்றே தோன்றுகிறது. அப்படி நாம் இந்தியாவை நமது ஆதிக்கத்திற்குள் கொண்டு வருவதற்கு அவர்களுடைய ஆதார மையமாக இருக்கின்ற ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை சிதைத்தல் அவசியம். அதற்காக நான் அவளுடைய தொன்மையான கல்வி முறைக்கும் கலாச்சாரத்திற்கும் பதிலியாக நாம் ஒரு கல்வி முறையைப் புகுத்த வேண்டும் எனும் யோசனையை முன்மொழிகிறேன். இந்தியர்கள் பிரித்தானியாவிலிருந்து வரும் சகலமும் தம்முடைய நாட்டில் இருப்பவற்றைக் காட்டிலும் சிறப்பானவை என்றும் தமதுடையடதை விடவும் மேன்மையானதெனவும் நினைப்பார்களேயானால் அவர்களின் சுயமதிப்பை அவர்கள் இழந்து போவார்கள். அதன் விளைவாக தமது மரபான கலாச்சாரத்தைத் தொலைப்பார்கள். அப்படியொரு நிலையில், உண்மையிலேயே நாம் நினைப்பது போல, நமது மேலாதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு தேசமாக இந்தியா மாறும்.’
இந்த தகவல் குறித்த குழப்பங்கள் இருப்பதாலேயே ஒரு செய்தி உண்டென முன்னரே குறிப்பிட்டேன். உண்மையில் குறிப்பிட்ட அந்நாளில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் மெக்காலே பிரபு உரை நிகழ்த்தினாரா என்பதை உறுதி செய்யும் தகவல்களோ தரவுகளோ காணக் கிடைக்கவில்லை. சில அதிகாரப்பூர்வமற்ற இணையப் பக்கங்களில் இது குறித்து நாம் வாசிக்கக் கிடைக்கிறது. இப்படி ஒரு செய்தியை பரப்பியதே தீவிர தேசியவாதிகளாக இருந்த சில இந்தியர்கள் தான் என்ற கூற்றும் உலவுகிறது. (மார்ச் நான்கு, 1835 இல் இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது இவ்விடத்தில் நினைவுகூறத்தக்கது.)
எது எப்படியிருப்பினும், இந்தியாவில் மெக்காலே கல்விமுறையின் தாக்கத்தை நாம் நிச்சயம் மறுத்திட முடியாது. அக்கல்வி முறை இந்தியர்களை தமது சிந்தனையில், செயல்பாடுகளில் ஆங்கிலேயர்களாக மாற்றியிருந்தது. அதே வேளையில் அவர்களை சுயசிந்தனை அற்றவர்களாகவும், சுய அடையாளங்களைத் தொலைத்தவர்களாகவும் ஆக்கியிருந்தது. சுதந்திர இந்தியாவிலும் இதே மெக்காலே கல்விமுறையை அப்படியே அடியொற்றித் தான் நமது நடப்பு கல்வி முறைகளை கட்டமைத்துள்ளோம். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ராஜாராம் மோகன்ராய் போன்ற இந்திய அறிஞர்கள் மேற்கத்திய கல்வியை பெரிதும் ஆதரித்தனர் என்பது உண்மைதான். இருப்பினும் அவர்கள் அக்காலத்திய இந்திய சூழலில் மலிந்து கிடந்த சமூகப் பிற்போக்குத்தனங்கள், சாதிய அடக்குமுறை போன்ற எண்ணற்ற சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சனைகளுக்கு ஒரே மாற்றாக மேலைநாட்டு கல்வி தான் இருக்க முடியுமென தீவிரமாக நம்பினர். இந்த நம்பிக்கையின் பின்னணியில் தான் நாம் இது போன்ற ஆதரவுகளைப் பார்க்க வேண்டும்.
 

இக்கட்டுரைக் குறுந்தொடரின் நோக்கம் குறைகளைச் சுட்டிக் காட்டுவது அல்ல. மாறாக நமது கல்வி முறைகளில் நிலவி வரும் சில முரண்களை அவதானிப்பதே ஆகும்.

 
(தொடரும்…)