கல்வியின் நோக்கம் குறித்த புரிதல்

 
“ Education is not preparation for life; Education is life itself” – John Dewey

கல்வியின் நோக்கம் (The Scope of Education) குறித்து நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறையும் புரிதலும் இருக்கும். எல்லா விசயங்களிலும் மானுடப் பார்வை வேறுபட்டுத் தான் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில விடயங்கள் குறித்த புரிதல்களில் நாம் ஒருசில பொதுதன்மைகள் இருப்பதை கண்டுகொள்ள முடியும். பின்காலனிய இந்தியாவில், குறிப்பாக எழுபதுகளின் துவக்கம் முதலே இந்தியர்களின் கல்லாமை சீராகக் குறையத் துவங்கியது. தேசம் முழுவதும் பரவலாக கல்விக்கூடங்களும், கல்லூரிகளும் துவங்கப்பட்டு அதிகமான எண்ணிக்கையில் இந்தியர்கள் கல்வியறிவு பெறுவதற்கு வழிவகை உண்டானது.
கல்வி என்பது தகவல்களின் திரட்சி என்பது மட்டுமல்ல. கற்றல் செயல்பாடு என்பது முயன்று பெற்ற அந்த தகவல்களை வழியே வாழ்க்கையின் சாரத்தை கண்டு கொள்வதேயாகும். வாழ்க்கைக்கானது கல்வி எனும் நிலைப்பாடு சமீப காலங்களில் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆசிய பிராந்தியத்தில்- குறிப்பாக சீனா, இந்தியா, கொரியா போன்ற நாடுகளில் கல்வியைக் குறித்த புரிதல் முற்றிலும் வேறு தளத்திற்கு மாறி விட்டது. உலகமயமாக்கலுக்கு பின்னரும், தகவல் தொழிற்நுட்பப் புரட்சியின் வாயிலாக கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் பல துறைகளிலும், அத்துறைகளுக்குத் தேவையான கல்வித் தகுதியுடைய இளையோருக்கு அதிகமான வேலைவாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் மிகக் குறிப்பாக மத்தியத்தர வர்க்கத்தினர் கல்வியை தங்களின் குழந்தைகளின் எதிர்கால பொருளியல் தேவைகள் தன்னிறைவு அடைய ஒரு உத்திரவாதமாகவே அணுகுகின்ற போக்கு அதிகரித்தது. சிறந்த கல்விக் கூடங்களில் பிள்ளைகளை தங்கள் சக்திக்கு மீறிய கட்டணங்களில் கூட படிக்க வைக்கவும், அதன் வழியே ஊர்ஜிதப்படுத்தப்பட்ட பாதுக்காப்பான எதிர்காலத்தை அவர்களுக்கு வழங்குவதாகவுமே அவர்களின் மனப்போக்கு இருக்கிறதை நாம் கண்கூடாகக் காணலாம்.
 
Purpose for learning
 
சுருங்கச் சொன்னால் கல்வியென்பது ஒரு தனிமனிதனின் பாதுக்காப்பான எதிர்காலத்திற்கான முதலீடாக மட்டுமே பார்க்கின்ற பார்வையே முந்தைய தலைமுறையினருக்கும், அவர்கள் வழி இந்த தலைமுறையினருக்கும், வழிவழியாக இப்புரிதல் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ’நல்லா படிக்கணும். அப்படி படிச்சாதான் நல்ல வேலை கெடச்சு கைநெறைய சம்பாதிச்சு பெரிய ஆளா வரலாம்’. இது மிகச் சாதாரணமான நாம் கேட்கக்கூடிய அன்றாடப் பேச்சின் ஒரு மாதிரி. இத்தகைய கருத்தாக்கங்கள் பொருள்மைய நவீன வாழ்க்கை முறையின் ஒரு சிந்தனைத் தொடர்ச்சியே அன்றி வேறல்ல. இம்மனோபாவம் இந்தியாவில் மட்டுமல்ல, பல்வேறு வளரும் நாடுகளிலும் பொதுவாகவே காணப்படுகிறது என்பதையும் நான் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
இறுகிய பாடத் திட்டங்கள்
காலனிய இந்தியாவில் ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட மெக்காலே கல்வி முறையின் அடிப்படை நோக்கம் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளில் ஒத்தாசையாக இருக்கக் கூடிய வகையில் உதவியாளர்களை உருவாக்குவதே. இன்னும் பரந்த பார்வையில் இதனை சொல்வதென்றால், அக்கல்வி முறையில் பயின்ற அனைவரும் பிறப்பால் இந்தியர்களாகவும் சிந்தனையால் ஆங்கிலேயர்களாக மாற்றம் பெற்றனர். அவர்கள் பெறாதது சுய சிந்தனையை மட்டுமே. மனிதரின் வாழ்க்கைமுறை அவர்கள் வசிக்கும் நிலவியல், கலாச்சாரம், பண்பாடு சார்ந்தே கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களது வாழ்க்கைத் தேவைகளும் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. உதாரணமாக விளைநிலங்களுக்கு அருகில் வாழும் மனிதர்களுக்கு வேறெதையும் விட விவசாயத்தின் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வதே அடிப்படையான தேவையாகும். போலவே எல்லா மாணவர்களின் ஆர்வமும் திறமைகளும் பன்முகத் தன்மை வாய்ந்தவை. எனவே அவர்களுக்குப் பொதுவாக வழங்கப்படும் அடிப்படைக்கல்வியோடு கூடவே தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவிடும் வழிவகையும் இருத்தல் வேண்டும். இவ்விடத்தில் இயற்பியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ஒரு பொன்மொழி நினைவிற்கு வருகிறது. அவர் ஒரு மேதமை வாய்ந்த ஒரு இயற்பியலாளர் என்பதையும் தாண்டி ஒரு மனிதநேயம் மிகுந்த ஒரு சிந்தனையாளரும் கூட. கல்விச் சூழலின் முரண்களை மிக அதிகமாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அவர் , “எல்லொரும் அறிவாளிகளே! ஆனால் ஒரு மீனின் திறனை அதன் மரம் ஏறும் திறமையைக் கொண்டு அளக்க முற்படுவீர்களேயானால், அம்மீன் தன் வாழ்நாள் முழுவதும் தான் எதற்கும் உபயோகமற்றவன் என்ற நினைப்பிலேயே வாழ்ந்துவிடும்”, என்கிறார். எத்தகைய உண்மை?
 
Everybody is a genius
 
எல்லா மாணாக்கரின் திறன்களையும்  ஒரே அளவுகோல் கொண்டு அளவிடும் சாத்தியங்களையே நடப்பு கல்வி முறை வழங்குகிறது. வெறுமனே வகுப்பறைகளில் போதிக்கப்படும் பாடங்களை சிறப்பாகக் கற்கும் திறனுள்ள மாணாக்கரை புத்திசாலிகள் எனவும், ஏதேனும் பிற திறன்களை தாமே முயன்று ஒரு மாணவர் வளார்த்துக் கொண்டிருப்பினும் ஏனையோரைப் போல அவர் பாடங்களைக் கற்கும் திறனைப் பெற்றிருக்காவிட்டால் அவரை முட்டாள் எனவும் முத்திரை குத்தும் வழக்கமே இன்றும் நடைமுறை யதார்த்தமாக இருக்கிறது.
குழந்தைப் பருவத்தின் சுகமான நினைவுகளாய் எண்ணற்றவை இருந்திட, ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளி செல்லுதல் குறித்த நினைவுகள் மட்டும் கசப்பானவையாக இருப்பதேன்? ஏன் கற்றலை அவர்கள் சுமையாகக் கருதுகின்றனர்? இன்னும் நமது பால்ய கால நினைவுகளை திருப்பிப் பார்த்தால் ஒரு விடயம் புலப்படும். நம்மில் பலருக்கு துவக்கத் தயக்கங்களைக் கடந்ததும் ஆரம்பக் கல்வி கற்றதில் நிறைய சுக நினைவுகள் இருக்கும். எனக்கு அப்பருவத்தில் எண்களையும், எண்ணுவதையும் முதன்முதலில் எனது ஆசிரியர் கற்பித்த பொழுது அன்று மாலையே கற்றவற்றை நடைமுறைப்படுத்திப் பார்த்தேன். கடந்து செல்லும் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூக்கள், வாகனங்கள் என எதிர்கொண்ட அத்தனையும் எண்ணும் கண்களுக்கு தப்பவில்லை. எவ்வளவு ஆனந்தமான தருணங்கள் அவை. காலையில் ஆசிரியர் கற்பித்ததை புரிந்து கொண்டேன் என்பது ஆனந்தம்; அப்படி கற்றுக் கொண்ட பாடத்திற்கும் அன்றாட வாழ்க்கைக்குமான நேரடித் தொடர்பைப் கண்டுபிடித்தது பேரானந்தம். இது நிச்சயம் எனது கற்கும் ஆர்வத்தை மேம்படுத்தியதோடு அல்லாமல் சிறப்பாகக் கற்கவும் தூண்டுகோலாகவும் அமைந்ததை புரிந்து கொள்ள முடிகிறது. இது நம் சகலருடைய அனுபவமுமே.
ஆனால் கற்றலின் அடுத்தடுத்த படிநிலைகளைக் கடக்கையில் நடப்பதென்ன? கல்வி ஏணியில் ஒரு மாணவர் ஏற ஏற அவரது புரிதல் சுருங்குகிறது. அவருக்கு விருப்பமற்ற பல அவசியமெனத் திணிக்கப்படுவதும், விரும்பிக் கற்கும் சிலவற்றை ஆழமாகக் கற்கும் அவகாசம் மறுக்கப்படுவதுமே வாடிக்கையாகிறது. இது படிப்படியாக கற்கும் ஆர்வத்தை குறைத்து நாளடைவில் கற்கும் திறனையும் மங்கச் செய்கிறது. இருப்பினும் கற்க வேண்டிய நிர்பந்தங்களை மாணவரின் குடும்ப மற்றும் சமூக நெருக்கடிகள் வழங்கிக் கொண்டே இருக்கின்றபடியால் தொடர்ந்து ஆர்வம் இல்லாத சூழலிலும் கற்றே ஆகவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார். கற்றல் என்பதே பெருஞ்சுமையாகிறது. எதற்கு இவையெல்லாம் கற்கிறோம் என்பதே தெரியாமல் தான் இங்கு கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் பெருவாரியான சந்தர்ப்பங்களில் நடக்கிறது. மாணவர்களுக்காக கல்வித் திட்டம் எனும் நிலை மாறி வடிவமைக்கப்பட்ட கல்வித் திட்டத்தின் சட்டகத்திற்குள் மாணவர்கள் திணிக்கப்படுகின்றனர். இவ்விடத்தில் நாம் ஏன் பாடத் திட்டத்திலேயே புறப்பாட நடவடிக்கைகள் (extra-curricular activities) இருக்கிறதே? எனும் கேள்வியை எழுப்பலாம். ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். அதே வேளையில் அவை யாவும் இன்றைய கற்பிக்கும் சூழலில் சம்பிரதாயத்திற்காக மட்டுமே கற்பிக்கப் படுகின்றன என்ற உண்மையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
‘நாம் கல்விச் சாலைகளில் கற்றுக் கொண்ட எல்லாவற்றையும் மறந்து போன பிறகு நமது மனதில் எது எஞ்சியிருக்கிறதோ அதுவே கல்வியின், கற்றலின் சாரம்’ என்பது நாமறிந்த மற்றொரு பொன்மொழி. இதனை நிகழ் யதார்த்தத்தோடு நாம் பொருத்திப் பார்த்தோமேயானால் நாம் நமது எதிர்கால சந்ததியினருக்கு வழங்கிக் கொண்டிருக்கும் கல்வி எவ்வளவு உள்ளீடற்றதாக இருக்கிறதென எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.